Sunday, December 13, 2009

திருமங்கை ஆழ்வார்! -- 1

On 12/1/09, shylaja <shylaja01@gmail.com> wrote:
வேடுபறி மற்றும் கலியனைப்பற்றிய  சீரார்ந்த தகவல்களை மோகனரங்கன்  வந்து கூறும்படி  கேட்டுக்கொள்கிறேன்!
 
 
வேடுபறிக்கு   நாள்  இருக்கிறதே.  இப்பொழுதே  கம்பு  கழியைத்  தூக்கிண்டு  என்ன  பண்ண?  
 
இன்று  கலியன்   நக்ஷத்திரமா.     நாம்  சொல்வதைவிட    ஸ்ரீபெரியவாச்சான்   பிள்ளை     சொல்லிக் கேட்பது  விசேஷமல்லவா?   அவர்    அந்தக்  காலத்து   மணிப்ரவாளத்  தமிழில்   பேசுகிறார்.     அதுவே  புரியும்.  இருந்தாலும்   அது  நமக்குப்  புரியாதுன்னு  ஒரு  பிரமையை    ஏற்படுத்தி  வைத்துக்கொண்டு  இருக்கிறோமே!  அதனால்     என்  அரைகுறைத்   தமிழில்  தரப்பார்க்கிறேன்.---- 
 
உலகத்தில்   நிழலும் வெயிலும்   இருப்பதைப்  போல்   ஆத்மாவிற்கும்  நிழலும்  வெய்யிலும்  உண்டு.     ஆத்மாவிற்கான    வெய்யில்     ஐம்புலன்   இன்பங்களான   உலக  விஷயங்கள்.   உலக  விஷயஙக்ளில்    ஒருவன்  நாட்டம் கொண்டு அலையும் வரை  அவன்   ஆத்மாவை   வெய்யிலிலே   போட்டவன் ஆகிறான்.    ஆத்மாவிற்கு    எது  வெய்யிலோ    அது    உடலுக்கு    நிழல் போல்    சுகமாகத்  தோற்றுகிறது.     ஆத்மாவோ    வெய்யிலில்  கிடந்து   துடிக்கிறது.    ஸம்ஸாரமாகிய   வெய்யிலில்.    ஒண்ட  நிழல்  இன்றி அலையும்    ஆத்மா.     அப்பொழுது   அதற்கு     விரிந்த  கிளையும்,   படர்ந்து   அட்ர்ந்த    இலைக்  கூட்டமும்,     கதிர்    நுழையா     தண்ணிழலுமாக,   கனி  குலுங்க நிற்கிறது    ஒரு     தரு.    அதுதான்     வாசுதேவ    தரு..  அதன்   நிழல்  பகவத் விஷ்யமாகிற     வாசுதேவ  தருச்  சாயா 
 
திருமங்கையாழ்வார்     நெடுங்காலம்     உடம்பை நிழலிலே  வைத்து    ஆத்மாவை  வெய்யிலிலே    போட்டவர்..     ஆத்மாவை   வெய்யிலிலே   போடுதல்  என்றால்  முதலிலேயே   பகவத்  விஷயத்தில்     இழியாமை.     பகவத்  விஷயமே  நிழல்.     இந்த   வாஸுதேவனாகிய    தரு நிழல்    பார்த்த  பார்த்த  இடத்தில் எல்லாம்     நிழலாய்  இருக்கும்.     எங்கும்  ஒக்க   வியாபித்துத்  தானே  ஏக  நிழலாய்  இருக்கும்.    வேறு  நிழல்   காண  ஒண்ணாது.  (ஸர்வத்ராஸௌ    வஸதி,   ஸமஸ்தஞ்ச   அத்ர  வஸதி).  அதி    குளிர்த்தியும் இன்றி  அதி    வெப்பமும் இன்றி    இருக்கும்.    தானே  ஏறிட்டுக் கொண்ட  நரகமொத்த  நெருப்பையும்   அவிக்க  வல்ல நிழல்.    ஜீவன்   ஒதுங்க  வேண்டிய   தனக்கு  ப்ராப்தமான  நிழல்   அன்று  என்று  இந்த  நிழலைச்  சொல்ல  ஒண்ணாது.    அல்லது   இந்த   நிழல்  துக்கத்தை  நிவர்த்திக்க   ஒண்ணாது  என்றும்   சொல்ல  முடியாது.    பின் ஏன்    ஜீவன்  இந்த   நிழலில்    ஒதுங்குவதில்லை?       விளையாட்டில்    மும்முரமாக    இருக்கும்  குழந்தையைத்  தாய்    உண்ண  வா என்று  அழைத்தால்     குழந்தை  விளையாட்டுத்  தீவிரத்தில்,   தனக்கு   நன்றாகப் பசித்தாலும்,   'எனக்குப் பசியே  இல்லை.  வயிறு  ஏதோ வலிக்கிறது.  அவ்வளவுதான்'  என்று  சொல்லி   ஓடிப்போவதைப்  போல,    எப்பொழுதும்  இந்த  நிழல்   நீக்கமற  எங்கும்    நிறைந்து   அனைவருக்குமாகப்  படர்ந்து   இருந்தாலும்       'நான்  நிழலில்  ஒதுங்க  மாட்டேன்'  என்பாரை     எதுவுமே  செய்ய முடியாதே!  
 
அதுபோல   நெடுங்காலம்    விஷயங்களில்   ஈடுபாடு   என்ற    வெய்யிலில்    திரிந்த    ஆழ்வாரிடம்    பகாவனின்   தண்ணருள்   பாய்ந்தது.   
 
  'இவர்     கண்ணால்    காணுகின்ற  விஷயங்களுக்கு    அவ்வருகு    அறியாதவராய்   இருக்கிறார்.  எனவே  இவருக்கு    நம்மை    மற்ற  விஷயங்களைப்  போலே    இவர்  கண்ணுக்கு விஷயம்  ஆக்கினால்    விரும்பேன்  என்று  சொல்லமாட்டாதவர்  இவர்.'  
 
 என்று  பகவான்  நினைத்து    உகந்தருளின   நிலங்களாகிற   திவ்ய   தேசங்களில்     வந்து     சாந்நித்யமாக இருந்தார்.   இந்த  ஆழ்வாராகிய     கலியனை   ஆட்கொண்டார்.    தம்முடைய     அருமை  பெருமைகளைக்  காட்டிக்கொடுத்தார்.     நிழலில்  ஒதுங்காமல்  இருந்தவரை    பகவானாகிய   தம்மை விட்டுப்    பிரிந்திருக்கவொண்ணாத  படி   இவரைப்  பண்ணித்     தம்மை  நன்கு  அனுபவிக்கச் செய்தார்.    அது  மட்டுமா?     இங்கே    இருந்தாலும்    ஆழ்வாரின்    தனமை    பரமபதத்தில்   உள்ளவர்களின்   தன்மையைப் போன்று  ஆக்கினார்.     அந்த  பரமபதத்தையும்   இவர் பெறும்படி  செய்தார்.    இதுவே   கலியன்  ஒலிமாலை   அனைத்தாலும்  நாம்  அறிந்து கொள்ளும்     செய்தி.  (குணானுபவம்  தொடரும்)
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்