Sunday, December 13, 2009

”வாரும் ஓய் எழுத்தாளரே” -- 1

திரு  சிதம்பரம்  ரகுநாதன்    கம்யுனிஸச்  சிந்தனையாளர்.     நல்ல  கவிஞர்.    புதுமைப்  பித்தனின்    உற்ற  நண்பராக  இருந்து    விளங்கியவர்.   சாடல்  கவிதைகள்   சிலவற்றை     இவரும்  புதுமைப்  பித்தனும்  இணைந்து  எழுதியதுண்டு என்பர்.    கம்யூனிஸ   சித்தாந்தத்தின்    சமுதாய   அக்கறையின்  சீற்றத்தை   இலக்கியத்தில்   வெளிப்பட  வைத்தவர்களில் இவரும் ஒருவர்.     சில  கண்மூடி  சித்தாந்திகளைப்  போல    நம்  நாட்டுப்  பண்பாட்டையெல்லாம்   பழிப்பதும்    தூற்றுவதும்தான்     கம்யூனிஸ  பக்தி    என்ற  எண்ணம் கொள்ளாமல்     நாட்டுப்  பண்பாடு,   இலக்கியம்,  கம்பன்,  பாரதி,  என்று  அனைத்திலும்    புதிய  சித்தாந்தக்  கருத்துகளின்    சாயைகளைக்  கண்டு   எடுத்து   ஆணித்தரமாக   மேடைகளில்   கூறியவர்.
 
1946ல்    இவர்   எழுதிய   ஒரு  கவிதை.     அன்றைய   எழுத்தாளன்    என்ன   நிலைமையை     எதிர்கொண்டான்   என்பதைப்   படம்  பிடிப்பதுவாய்  இருக்கிறது      இவருடைய    'வாரும்  பிள்ளாய்  எழுத்தாளரே! '   என்ற  இந்தக்  கவிதை.
 
எழுத்தாளன் என்பவன்    அன்றிலிருந்து  இன்று  வரை    ஏதோ    கனவு  கர்வத்தில்  இருப்பவன்.     அப்படியெல்லாம்   இப்ப   இல்லை  சார்  என்று  நீங்கள்   எழுத்தாளர்  அல்லாதவர்களைப்  பார்த்துச்  சொல்கிறீர்கள்.     சுற்றுப்புறச்   சூழலையும்  கொஞ்சமாவது   பார்க்க  வேண்டாமா?    எழுத்தில்   ஏதேதோ  உலகைக்  கட்டியெழுப்பும்    படைப்புத்திமிர்     புடைக்க    நடந்தாலும்    வயிற்றைக்  கழுவுதல் என்ற     கடமையோ  பாரமோ     வாழ்க்கையின்   இயல்பு  அமைப்போ    ஒன்று  தீராமல்  இருக்கிறதே!       எழுத்தாளர்  மாநாடு    மண்ணின்  மீது   பற்க்கும்   பிரச்சனைகளைப்  பற்றித்தான்  பேசுகிறதே   அன்றி    மண்ணில்   கால்  ஊன்றி  நின்று    எழுத்தாளனின்  அன்றாடப்  பிரச்சனையைப்  பேசாதது  ஏன்?    வானத்துக்  கற்பனைகள்  கொண்டுதரும்    எழுத்தாளன்    வாழ நடக்க வேண்டியது இந்த மண் தானே !    வானத்துக்  கற்பனைகள் வேண்டுமானாலும்    மசியைப்  புசித்தே     ஏடுகளில்   நிரந்தரமாய்   வாழ்ந்துவிட  முடியும்.    ஆனால்    கற்பனையின்  மாராசன்     கும்பி  எரிச்சலை    எத்தனை  தேமா புளிமா   கருவிளங்காய்    போட்டும்    தீர்க்கமுடியாதே!    
 
சுய  புத்தி  வந்த    ஓர்   எழுத்தாளன்    மற்றொரு  எழுத்தாளனுக்கு   இடித்துரைக்கின்றான்.      கூப்பிட்டால்     மாநாட்டு  வேலை  இருக்கிறது.    இப்பொழுது   பேச   நேரமில்லை   என்று    சொல்லிப் போகிறான்   அசடு.     ஓய்!!!  
 
"என்ன  அவசரம்   வே! 
ஏங்காணும் பறக்கின்றீர்? 
சென்னை  மாநாட்டுக்குச் 
செல்கின்ற    வீறாப்போ?  
 
வாரும்    'வே !  
வந்து  உட்காரும்   
நீர்தாமோ    எழுத்தாளர் ?"  
 
என்ன  அப்படிக்  கேட்டுப்புட்டீங்க?    யார்னு  தெரியாதா?    
 
"கட்டுக்கதை   யென்று  
கவியென்று,   கீரவம்ச 
வெட்டும்   புலியென்று  
வீம்பிட்டு,    பத்திரிக்கைக் 
குட்டம்    நிறைத்து   
குளப்பாசி  வண்ணத்தில்   
அட்டையிட்டு,   அழகாக 
அச்சிட்டு,    நூலென்று   
கொட்ட மடித்துநிதம் 
கும்மாளம்   போட்டாடும்  
நீர்தாமோ    எழுத்தாளர்?"  
 
"நெஞ்சைச்  சுட்டறுத்து,  
நினைவை  வறுத்தெடுத்து,  
எஞ்சியதை    வார்த்தைகளில் 
இறுத்து   வடிகட்டி,  
புஞ்சிரிப்பு   காதல்  எனும்  
போதைப்பொடி   கலந்து  
கதையென்றும்    கவியென்றும்  
கதைத்து,    தமிழணங்கைச்  
சிதையேற்றும்   உம்முடைய   
சிறப்பெல்லாம்    நாமறிவோம் !  
.......................................... 
..................................
மாநாட்டுப்   பந்தலிலே  
மனசைப்  பறிகொடுத்து 
வானாட்டைத்  தானிடிக்கும்  
வாய்ப்பந்தல்  போடாதீர் !  " 
 
என்னமோ    சொல்கிறீரே!    எழுத்து  எழுத்து  என்று      உம்முடைய   செயல்  என்ன?    அதே   கோர்ட்   வாசலே  பழியாய்க்  கிடக்கும்    வழக்கு    வாய்தா   என்றலையும்    ஒருவன் கூட    தன் மனசை    அடமானம்  வைப்பதில்லை.     ஆனால்  ஒரு  எழுத்தாளன் என்ன  செய்கிறான்..... 
 
"கச்சேரி    வாசலிலே  
கணக்கு,   புரோநோட்டு, 
குச்சுக்கு   ஒத்தி,  
குடிமனைக்கு    அடமானம்  
வச்செழுதும் மாராசன்  
மனசை,   பேனாவைப்   
பிச்சைப்  பிழைப்புக்காய்  
பேரங்கள்  பேசவில்லை !"  
 
"நீரோ ---- 
உம்மை,   உம்பேனாவை  
ஊத்தைக்  கருத்துக்களை,  
உள்ளத்தை,     அச்சகத்துப் 
பெம்மான்    திருவுளத்துப்  
பிரியத்துக்கு   ஒத்தி  வைத்துச்   
சன்மானம்   ஏதுமின்றிச்   
சலியாது  உழைக்கின்றீர் !  
 
"வரகரிசிச்   சோற்றுக்கும்   
வழுதுணங்காய்   வாட்டுக்கும்  
முரமுரெனப்   புளித்த  
மோருக்குமாய்த்  தவித்து,  
கும்பிக்  கொதிப்பைக்   
குறைக்கக் கவிபாடி  
அம்புவியில்  வந்துதித்த  
அவ்வைப்  பெருமகளும்,  
 
" ' நெற்கொண்டு   போமளவும்  
நில்லாயோ ?'    என்றுரைத்துச் 
சொற்கண்டானும்     உமக்குச்  
சொந்தம்தான்!  
 
ஆனாலும்   
 
இது-----  
 
ஈசன்   படியளக்கும்  
இதிகாச   லோகமல்ல ! 
ரேசன்படி    யளக்கும் 
ரெண்டுகெட்ட   காலமய்யா ! "  
 
என்ன    யதார்த்தத்தை    அப்படியே   கொதிக்கக்  கொதிக்க    எழுத்தில்  கொண்டுவர      ஒரு  துணிச்ச்ல்   வேண்டுமல்லவா? 
வயிற்றெரிச்சலுக்கு   என்று  ஒரு  வேகம்  வந்துவிடும்.   பெரிய  இலக்கியத்  துணிச்சல்  எல்லாம்  தேவையில்லை.   எனினும்    வான்மாரிப்  பந்தலிலே   தேன்மாரிப்  பெய்யும்  எழுத்து  மட்டுமே   எழுத்து  என்பது  போய்    குமுறும் எரிமலையின்     கொழுந்தும்    ஒரு  ஆக்ரோஷ    அழகுடன்    வெளிப்படுவது     ஒருவித    இலக்கியத்  துணிச்சல் இல்லாமல்  ஆகிற  கார்யம் இல்லையே. 
 
பாவம்    எழுத்தாளர்     என்ன  செய்வார்!    ஐயா   நான்    என்  வாழ்க்கையைப்  பணயம்  வைத்து     கலாச்சாரம்,  தமிழ்மரபு,      பண்பாடு    எல்லாவற்றையும்    காப்பாற்ற   நினைக்கின்றேன்    என்று  சொல்ல  வாயெடுக்கத்தான்  ஆசை.   ஆனால் சொல்ல     வாய்  திறக்குமுன்     தொடர்கிறது     ரகுநாதனின்    பேனா  (தொடரும்)
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
----------------------------------- 
 
>ரங்கன்,
 
ரொம்ப அருமை சி.ரகுநாதனின் கவிதையும் உங்கள் கொமெண்டரியும்.
 
இப்போதெல்லாம் ஓரளவு சன்மானம் கொடுக்கிறார்கள் என்றுதான் கேள்வி.
எழுத்தாளர்கள் இந்த அளவு ஏழைகளாக இல்லை. ஆனால் இதனால் எழுத்தாளனின்
தரம் உயர்ந்து விட்டது என நான் சொல்லவில்லை. பொதுவாகவே இந்தியாவில்
வறுமை கொஞ்சம் குறைந்திருக்கிறது. "நீருயர" எழுத்தாளனும் உயர்ந்திருக்கிறான்.
 
ஆனால் வறுமையில் அல்லவா வீறுகொண்ட பாடல்கள் பிறக்கின்றன!
"சொல்லடி சிவசக்தி!" என்று அதட்டுகின்ற வீரம் வறுமையில் விளைவதல்லவா!
 
ரெ.கா.