ஒருவரைத் திருத்த வேண்டும் என்றால் அவரிடம் அதற்கான வாய்ப்புகள் சில இருக்க வேண்டும். சிலவற்றுக்காவது அவர் ஈடுபட்டுத் தன்னை அவர் தர வேண்டும். அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவரிடம் சில தன்மைகள் அமைந்திருக்கவேண்டும். திருமங்கையாழ்வாரிடம் அவ்வாறு சில பரிகரங்கள் இருந்தன. என்ன அவை.? உயர்ந்த விஷயங்கள் சொன்னால் அவற்றை உள்வாங்குவாரே அன்றி அவற்றைக் கணடு வெறுத்து ஒதுங்கமாட்டார். அடுத்து உலக விஷயங்கள் நிலைப் பேறு உடையன அல்ல. பெரிய மதிப்புடைய பெருமையும் அவற்றிடம் கிடையா. விஷய சுகத்தை விரும்பும் கலியன் பெரு மிடுக்கர். ஏதோ கிடைத்ததைக் கொண்டு இன்புறும் இயல்பினர் அல்லர். தாம் அனுபவிக்கும் விஷயங்கள் நிலைப்பேறு உடையனவாக இருக்க வேண்டும் என்று அவாவுபவர். அவை சிறுமையோடு சேராமல் பெருமதிப்பனாக இருக்க விழைபவர். (அதனால்தானே எத்துணையோ அழகிகள் இருக்க ஸ்ரீவைஷ்ணவ ஞானம், சிறந்த பக்தியுள்ள மதி இவற்றைக்கொண்ட குமுதவல்லியாகப் பார்த்து அவர் மயங்கியது?) எனவே அவரிடம் உள்ள இந்த அத்வேஷம், விஷயங்களில் உள்ள குறைகளான அலபத்வம், அஸ்திரத்வம் ஆகிய லாகவம் இவையிரண்டும் பரிகரங்களாய் பகவானுக்கு இவரைத் திருத்திப் பணிகொள்ள வாய்ப்பாக இருந்தன.
சரி இவை இவரிடம் இருந்த எதிர்மறையான அனுகூலங்கள். ஆனால் எந்த விஷயத்திலாவது ஒருவன் தன்னை மறந்து, தன்னை இழந்து, தன்னைக் கொடுத்து ஈடுபாடு கொண்டால்தான் அவன் எந்த உயர்ந்த ஆர்ஜவத்திற்கும் தகுதியானவன் ஆவான். இவரிடம் இருந்த இத்தகைய நேர்முறை அனுகூலம் என்பது ராஸிக்யம். நல்ல ரஸிகர். தேர்ந்த ரஸிகர். அதுமட்டுமன்று. ரஸனை இவரை அப்படியே ஆட்கொண்டு முழுக்கடித்திவிடும் அளவிற்கு ரஸிக சிகாமணி. இந்த ரஸிகத்தன்மை பகவானுக்கு இவரிடம் அகப்பட்ட நல்ல பற்றாசு. ஏதோ புழுக்குறித்தது எழுத்தாமாப் போலே ஜீவன் எதேச்சையாக நினைவில்லாமல் செய்தது நன்மையாக முடிய அதை முதற்கொண்டு இவனுக்கு அருள் செய்வதற்கான ஹேதுக்களாய்க் கணக்கில் எழுதிக்கொள்ளும் பிரானுக்கு இது போதாதா? பெரும் வாய்ப்பாயிற்றே!
சரி அநாதிகாலம் இந்த ஜீவன் செய்த பாபத்தை எந்தக் கணக்கில் கொண்டு போட? பார்த்தான் பகவான். அந்த பாபாம்சத்தை நமது கருணைக்கு விஷயம் ஆக்கிவிடுவோம். என்று முடிவு செய்து இவருக்கு பரம கிருபை செய்தார். தனத்தை அள்ளி அள்ளி தனித்தனியாகத் தருவதற்குப் பதில் கிழிச்சீரையோடே தருவார்களே, கட்டிவைத்த பட்டுறையோடே தருவதைப் போல், திருமந்திரம் ஆகிய உயர்ந்த உறையிட்ட அர்த்தவிசேஷங்களை எல்லாம் பொதிந்து திருமந்திரத்தை முன்னாக உபதேசித்துவிட்டார். அறியும் பொருளின் தன்மை தராதரம் எல்லாம் அறிந்து அனுபவிக்கும் பெற்றி உடையவர் ஆயிற்றே கலியன். திருமந்திரத்தைக் கற்றுக் கற்று அதற்குள்ளேயே பொதிந்திருக்கும் எம்பெருமானின் ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவற்றை அடங்கக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து செய்நன்றியில் நெகிழ்ந்தார்.
'அயோகயனான என்னை அது தானே ஹேதுவாக விஷயீகரித்தான்' என்று நன்றியில் மிக்கார் ஆகையாலே ஒரு தடவை சொன்னால் போதாதென்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கூப்பிடுகிறார்.
பகவத் விஷயமே அத்தகையது. அது நமக்குச் செய்யும் நன்மைக்கு நாம் நேர் கொடு நேர் செய்யலாவதும் ஒன்றும் இல்லை. செய்ய வேண்டுவதும் ஒன்றும் இல்லை. பண்ணின உபகாரத்திற்கு நன்றியில் நிறைந்தோராய் இருக்கவேண்டிய இத்தனையே வேண்டுவது. அதுவும் எதற்காக? நாம் அசித் என்பதைவிட வேறுபட்ட ஒன்று என்பதை நிலை நிறுத்திக்கொள்வதற்காக.
எங்கள் கதியே
இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவ ராசா
பொங்கு புகழ்
மங்கையர் கோன்
ஈந்த
மறையாயிரம் அனைத்தும்
தங்குமனம்
நீ
எனக்குத்
தா.
(எம்பார் அருளிய தனியன்)
***
<< Home