"உம்முடைய ---
வான்முகட்டைக் கிழித்து
வளர்ந்தோங்கும் லட்சியங்கள்
நான்முகனும் கண்புதைத்து
நாணமுறும் படைப்புகள்,
கூனக் கொடுமையினைக்
குடியோட்டி, சமூகத்தை
ஆனைநடை நடக்க
அறிவூட்டும் சித்திரங்கள்,
பண்பாடு, தமிழ்மரபு
பாவம், கலாசாரம்
எல்லாம் இருக்கட்டும்;
இல்லையென யார் சொன்னார்?
அவையெல்லாம் ---
சீவிக்கத் திறனுண்டேல்,
செல்லரித்துப் போகாமல்
பாவிக்கத் திறனுண்டேல்,
பலமுண்டேல், உயிருண்டேல்
சாவைத்தனி யெதிர்த்து
சகத்திலுயிர் தரியாதோ?"
சரி நான் என்னதான் செய்வது? என்று விழி பிதுங்கிய எழுத்தாளனுக்கு 'சோத்துக்கு வழிதேடும்; சொன்னபடி கேளும்; போய்வாரும்' என்று உபதேசம் செய்கிறான் கையைச் சுட்டுக்கொண்ட எழுத்தாளன். அந்த உபதேசம் செய்பவனோ செய்யப்பட்டவனோ யாராவது அதன்படி நடந்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? ம்ம்ம் அந்த வழக்கமே எழுத்தாளப் பரம்பரைக்கே கிடையாதே! இப்பொழுது பரவாயில்லை. இந்த உபதேசத்தைக் கேட்டு அதன்படி நடக்கிறார்கள் எழுத்தாளர்கள். ஆனால் எழுத்துதான் பாவம் அவர்கள் சொல்பேச்சைக் கேட்பதே இல்லை.
இந்த எழுத்தும் ஏந்திழையாளும் ஒன்று. யாரிடம் தங்களை ஒப்படைத்துக் கொள்வார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம்.
வீறுகொண்ட எழுத்துக்கும் வறுமைக்கும் ஒரு கூட்டு இருக்குது அண்ணாச்சி என்கிறார் திரு ரெ கா. அதையும் அவரே கேள்வி பதிலில் விளக்கிவிடத்தான் வேண்டும்.
உண்டியே உடையே என்று உகந்தோடும் இவ்வையம் தன்னொடும் கூடுவதில்லை யான் என்று போகும் பைத்தியங்களில் ஒருவன் (உண்மையான) எழுத்தாளன். நல்ல வேளை இப்பொழுதெல்லாம் பைத்தியம் தெளிந்து எல்லாரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
பாவம் எழுத்தைக்கொண்டு போய் தரதரவென்று ஆஸ்பத்திரியில் அடைத்துவிட்டார்கள். பார்ட் டைமாகப் போய் பார்த்துக் கொள்கிறார்கள். என்ன இருந்தாலும் பழகின பழக்கம் விடுமா ??
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
<< Home