இயற்கையின் டூல் பாக்ஸ்
எது பக்தி என்று கேட்டுக்கொண்டு ஆரம்பித்தேன்.
இப்பொழுது எது ப்ரபத்தி என்று கேட்டுக்கொண்டு நிற்கிறேன்.
முட்டாளுக்கு முட்டின இடமெல்லாம் மதிற்சுவர் என்ற கணக்காய் ஆகிவிட்டது போலும்!
நமக்கும் ஏதாவது தெய்வ க்ருபை, சமாதி தியான அவஸ்தை, ஏதாவது தெய்வ ப்ரத்யக்ஷம் அப்படி இப்படீன்னு இருந்தாலாவது நன்னா இருந்திருக்கும்.
நம்ம விஷயத்துல அதெல்லாம் ஒன்றும் இல்லை. அதே பழைய நொண்டியடித்தான் அறிவுதான், நூல் நுழை புலன் தெரி கல்விதான்.
சொல்லமுடியாது. அப்படி ஏதாவது ஏற்பட்டாலும் அதையும் நான் அது என்ன எப்படி என்று நோண்டிக் கேள்வி கேட்பேனோ என்னவோ!
எப்படியோ சிம்ம நடையோ யானை நடையோ நான் என் நடைலதான் நடந்தாகணும்.
அதாவது எதுக்குச் சொல்கிறேன் என்றால் பக்தி என்பது அடிப்படையிலேயே அப்ராக்ருதம்.
அதாவது இயற்கையின் கட்டத்துக்குள்ள வரலை. அதுதான், இயற்கையில் எந்த உதாரணம் எடுத்து அதை வைத்து அளந்து பார்த்தாலும், அதுக்கும் மீறி இது நுனி நீட்டிக்கொண்டு இருக்கிறது.
அப்ராக்ருதம் என்றவுடன் ஆரம்பித்து விடாதீர்கள். வாய்யா வந்தாய்யா வழிக்கு, அப்ப சூப்பர் நேச்சுரல்னு ஒப்புக்கொள்கிறாயா? என்றெல்லாம் அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.
நான் கொஞ்சம் பொல்லாதவன். ஒரு வார்த்தையைக் கொண்டுவந்து நுழைக்கின்றேன் என்றால் நீங்கள்தாம் ஜாக்கிரதையாக இருக்கணும். அவசரப்பட்டுக் காலை வைத்தீர்கள் எனில் அது வேற உலகத்துக்கு இழுத்துண்டு போய்விடும்.
இந்த அப்ராக்ருதம் என்கிற வார்த்தை இருக்கிறதே இது மிகவும் டெக்னிகலான வார்த்தை காவிய சாஸ்திர வட்டாரங்களில்.
த்வனி கொள்கையைத் தந்த ஆனந்தவர்த்தனர், அதற்கு வ்யாக்யானம் எழுதின அபிநவ குப்தர், மற்றும் பல காவிய சாத்திரக் காரர்கள், ஜகந்நாதபண்டிதர், போஜராஜன் ஆகியோர் எல்லாம் காவியத்தின் ரஸானுபவத்தின் உள் இயல்பு யாது என்பதை விளக்க இந்த அப்ராக்ருதம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
அதாவது கவிதையை ரசிக்கும் போது உன்னத ரஸானுபவம் என்பது ரசிகனின் சைதன்யத்தில் எத்தகைய தனமை கொண்டதாய் இருக்கிறது?
சமயத்தில் கவிதையில் இருக்கும் நிகழ்வைப் பார்த்தால் வெளி உலகத்தில் நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு நிகழ்வாகவும் கூட இருக்கலாம். அப்படி என்றால் அது வெளி உலகில் நாம் அனுபவிக்கும் போது பெறும் உலக அனுபவம் மாதிரிதானே இருக்க வேண்டும், பல உணர்ச்சிகளை எழுப்பிக்கொண்டு.?
உதாரணத்திற்கு ஒரு காட்டில் நாம் சிங்கத்தை நேரடியாக எதிர வேண்டிய துர்பாக்கியம். என்ன அவஸ்தை! என்ன ஓட்டம்! என்ன பீதி, வயிறு கலங்கி, மனம் கலங்கி, உயிர் என்பது என்ன பாடு படுகிறது.!
கவிதையிலும் நாம் சிங்கம் ஒன்றை மிகத் துல்லியமாகப் பார்க்கிறோம் என்று கொள்வோம். உடனே உலக அனுபவம் மாதிரியா இருக்கிறது நம் ரஸானுபவம்? ஒரே மகிழ்ச்சி! வியப்பு! ஆழ்ந்த ஈடுபாடு. கிட்டத்தட்ட அந்தச் சிங்கத்தோடு கூடவே நிற்கிறோம். ஏன்? அந்தச் சிங்கத்தினுள் கூட நாம் உள் நுழைந்து விடுகிறோம். கிடைத்த இரையையும் அது ஏனோ தொடாமல் செல்வதைக் கண்டும், அதற்கு அது சொல்லும் காரணத்திற்காகவும் கண்ணீர் விடுகிறோம்.
எனவே காவியக் காரர்கள் இந்த ரஸானுபவம் என்பதே அப்ராக்ருதம் என்று முடிவு கட்டுகிறார்கள்.
அதற்காகத்தான் சொல்லவந்தேன், பக்தி என்பதே பார்க்கப்போனால் அப்ராக்ருத ஆஹ்லாத ரஸானுபவம் தானோ? அப்ராக்ருத -- இயற்கையின் விதிகளுக்கு உட்படாத, ஆஹ்லாத -- உள் எழுந்து புறம் பொசிந்த காவிய உவகை.
பக்தி ரஸாம்ருத சிந்து என்ற நூலை ஸ்ரீ ரூப கோஸ்வாமி என்பவர் எழுதியிருக்கிறார். ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் சிஷ்யர்களில் ஒருவர் இந்த ரூப கோஸ்வாமி.
பக்தி என்பதுதான் காவிய ரஸ அனுபவம் என்பதில் மிகவும் சிறந்த வகை என்று சித்தாந்தம் செய்கிறார்.
நான் அங்கெல்லாம் போகப் போவதில்லை. ஆனால் பக்தி என்பதை விளக்க இயற்கையின் டூல் பாக்ஸ் பத்தாது என்பது என்னவோ பலமாக நெருடிக்கொண்டிருக்கிறது.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
<< Home