அகல்யாவின் கற்பிழத்தலைப் பற்றி காலம் நெடுக பேசுகிறார்கள். யாராவது காட்டில் இருந்த வேறொரு முனிவரிடமோ, அல்லது அரசன் ஒருவனிடமோ, அல்லது ரிஷி குமாரன் ஒருவரிடமோ உறவு கொண்டிருந்து அதனால் அவளுக்கு இந்தப் பெயர் என்றாலும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கு இந்திரனிடம் கற்பு இழந்தாள் என்று கூறப்படுகிறது.
அதையே தாருக வனத்தில் நிர்வாணமாகச் சிவபெருமான் சென்று ரிஷி பத்தினிகளை மயங்கச்
செய்தது உயர்ந்த தத்வார்த்தமான ஒன்றின் ஸிம்பாலிஸமாகப் பார்க்கப் படுகிறது.
கோபியரின் காதலும் கண்ணனிடத்தில் ஈடுபாடும் உயர்ந்த பக்திநிலையைக் குறிக்கும்
அவஸ்தைகளாகப் பார்க்கப் படுகிறது.
அனைவரும் தேவர்கள் என்ற பிரிவைச்
சேர்ந்தவர்களே.
ஆனால் அகல்யாவின் விஷயத்தில் ஏன் அது 'கற்பிழந்தாள்' என்று பெரும் மானக்கேடாகச்
சித்திரிக்கப்பட வேண்டும்?
அரசனிடமோ, ,முனிவனிடமோ, வேறு மானிடர் யாரிடமோ உறவு என்றால் இந்தக் களங்கக்
குற்றம் புரிந்துகொள்ள முடியும்.
இங்கு உறவு என்பது அந்தக் காலத்தில் கடவுள் என்று கருதப்பட்ட, மானிட மெய்மை அல்லாத ஒரு தத்துவ வடிவினால் ஆய உருவத்திடம்தானே!
மற்ற உதாரணங்களில் எல்லாம், தத்வார்த்தமாக ஸிம்பாலிஸம் என்றால் அகல்யா
விஷயத்தில் மட்டும் அது அப்படியே காமத்தனமான நடவடிக்கை ஆகிவிடுகிறதா?
சிந்தனை செய் மனமே!
வழிவழியாக எல்லாருமே அடிப்படையைக் கோட்டை விட்டுவிட்டு, ஆகாயத்தில் குழி
பறித்துக் கொண்டிருக்கிறார்கள் சொற்களால், யோகி, புதுமைப் பித்தன், அவர்களுக்கும் முன்னாடி எல்லாரும்.
இப்படித் தங்கள் சொல் வலைகளில் தாங்களே மாட்டிகொண்டு திண்டாடும் வினோத
சிலந்திகள்தாமோ நம்ம எழுத்தாளர்கள்!!!
தேவன் என்பது 'திவ்' என்னும் வேர்ச்சொல்லடியாக பிறக்கும் சொல்.
திவ் என்பது, ஒளி, முதலிய பல பொருள் கொண்டது.
ஒளிவடிவினன் ஆகையாலே தேவன் எனப்படுகிறான்.
ஒளிவடிவம் என்றால் அங்கு நரம்பு இல்லை. எலும்பு இல்லை, தசை இல்லை. உடல் என்ற
நமது ஃபிஸியாலஜி கிடையாது.
தாருக வனத்திலாவது இந்திரஜாலம் போல் தான் வேண்டும் உரு கொண்டு வந்தார்
பெருமான்.
கோகுலத்தில் அவதாரமாக மனித உடல் எடுத்துப் பிறந்தார் பரமன்.
இங்கு இந்திரன் தேவன் என்னும் பொழுது ஒளி உருவன் ஆயிற்றே!
பின் எப்படி அங்கு காமம் உடலுறவு என்று பேசமுடியும்?
*
அகல்யா என்ற இந்தக் கதையானது வெறும் கதை என்ற அளவிற்குப் புரிந்துகொள்ள முடியாதது.
தேவர்கள் என்ற தத்துவங்கள், மன நிலைகள், யோக தத்துவமான உண்மைகள் என்பதை வைத்தே இவற்றைப் புரிந்துகொள்ள இயலும்.
முக்கியமாக இந்த விதத்தில் ஸ்ரீ அரவிந்த கோஷ் அவர்களின் வேத யோக தத்துவ விளக்கமே இந்தக் கதைகளின் தாத்பர்யங்களைப் புரிந்துகொள்ள பல சமயங்களில் உதவுகிறது என்றும் உணர்த்துவதற்காகவும் இந்த இடுகையை இங்கே இட்டேன்.
இந்த அகல்யா விவாத விஷயத்தில் இது ஏற்கனவே என்னால் இனி வெளிவர இருக்கும் என் காவியத்தில் பரிசீலனை செய்யப்பட்ட பார்வைகள்.
ஒரு பெண் ஒரு தெய்வத்திடம் ஈடுபட்டாள் என்பது பழங்காலம் தொட்டே என்ன காரணத்தாலோ இழிவாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அது அடிப்படையிலேயே பொருந்தவில்லை. ஒரு பெண்ணின் போக்கு தம் கருத்துக்கு ஒத்துவரவில்லையேல் அவளைக் கேவலப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கின் தடயமாக உள்நுழைந்துவிட்டதோ என்பது என் ஐயம். ஸ்ரீராமனின் வார்த்தைகளையும் கூர்ந்து நோக்கின் அவரும் அவ்வாறு வருந்தியிருப்பது புலனாகும்.
தேவன் என்பவன் ஒளியுருவானவன் என்றால் மனித உடல் அமைப்போ, பரிவர்த்தனைகளோ அங்கு நிகழ இடமில்லை. அதுவும் இந்திரன் தேவாதி தேவன். ன் என்று ஆண்பால் விகுதி வந்ததால் மட்டுமே தேவன் என்பதை ஓர் ஆள் போல் நினைத்துப் பேசுதல் பொதுமக்களின் பேதைமை. இந்த அடிப்படையான பேதைமையைக் காலம் தொட்டு பெரும் எழுத்தாளர்கள் கூட உணராமல் வாதத்தின் மேல் வாதம் எனக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
ஸ்ரீஅரவிந்தரின் யோக உளவியல் சார்ந்த புரிதலும், வேத நெறி சார்ந்த விளக்கங்களுமே இந்த அபத்தக் கதையை என்றைக்குமாக விளக்கி இனிவரும் காலத்திற்கும் இதன் உண்மையான மறைபொருளை விளக்க வேண்டும் என்பது என் நோக்கம்.
அகல்யா கதை என்பது ஸ்ரீராமாயண காலத்தில் நடந்ததுதானா? இல்லை என்று ஸ்ரீராமாயணமே கருதுகிறது என்றும் சொல்லலாம். அதுவுமின்றி ரிக்வேதத்திலும், மற்ற சில புராணங்களிலும் அகல்யாவைப் பற்றிச் சில குறிப்புகள் கிடைக்கின்றன.
நான் சொல்ல வருகின்ற கருத்தே -- அந்தக் காலத்து கற்பு நெறி பற்றிய கருத்து, இது அது, அவள் தெரிந்து செய்தாளா, ஏமாந்து போய் தன் கணவன் என்று நினைத்துக்கொண்டு ஏமாந்தாளா? -- இந்தக் குப்பைக் கருத்துகள் எதற்கும் நான் மதிப்பளிக்கவில்லை.
ஏன் இந்த மாதிரி ஆய்வுகளைக் குப்பை என்று சொல்கின்றேன் என்றால், அடிப்படையே தப்பு; அபத்தம். அப்புறம் என்ன வேண்டிக்கிடக்கிறது அச்சுப் பிச்சு ஆராய்ச்சி எல்லாம்?
வேதங்கள் சார்ந்த யோக, பக்தி ஈடுபாடுகள், தவ முனைப்பு என்பதை அகல்யாவின் இந்திர ஈடுபாடு உணர்த்துகிறது.
எப்படி சிவனிடம் அகத்துறை செறிந்த பக்தி ஈடுபாடு நாயகி பாவம் என்பதாக பக்தி இலக்கியங்கள் பின்னர் பேசினவோ, அப்படித்தான் வேதக் கடவுளர் ஈடுபாட்டில் தேவராஜனாகிய இந்திரனிடம் ஜீவன் கொள்ளும் காமம் ஆகிய பக்தி, யோக நிலை என்பது அகல்யாவின் இந்திர பக்தியைக் காட்டும் ஈடுபாடு.
எப்படி விஷ்ணுவிடம் பக்தர்கள் காமம் கொண்டு ஈடுபட்டது உயர்ந்த நாயக நாயகி பாவமான பக்தி வழி என்று ஆகமங்கள் கூறினவோ, அப்படித்தான் வேதங்கள், வேதக் கடவுள்கள் தீவிர ஈடுபாட்டில் இருந்த கால கட்டத்தில் அதில் ஈடுபட்ட பக்தியைக் காட்டும் உதாரணம் அகல்யா.
ஒரு வழிபாட்டு முறை வழிபாட்டுச் சமுதாயம் மாறி வேறு ஒரு வழிபாட்டுச் சமுதாயம் ஆட்சி பெரும் போது, உயர்வாகக் கருதப்படும் போது, முந்தைய பக்தி ஈடுபாடு மதிப்பிழக்கச் செய்ய்யப்படுகிறது.
சைவம், வைஷ்ணவம் என்ற இரு பக்தி நெறிகளின் நடுவில் இத்தகைய மதிப்பிழக்கச் செய்யும் உத்திகள் நடைபெறாமல் போனதற்குக் காரணம் காலம் பிற்பட்டும் போனமை. அடுத்து இரண்டுமே ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நெறிகள் என்பதால், இவ்வாறு அமையவில்லை.
ஆனால் அகல்யா விஷயத்தில் நடந்ததோ என்ன? வேத நெறியின் ஈடுபாடு, வேதக் கடவுளர்பால் கொண்ட பக்தி என்பது, அதுவரை தேவாதிராஜனாகக் கொண்டாடப்பட்ட இந்திரன் என்ற கடவுள் வடிவம் ஆட்சியிழக்கச் செய்யப்பட்டு, வேதக் கடவுளரில் விஷ்ணுவுக்கும், சிவனுக்குமாக ஈடுபாடு என்ற நெறிகள் உச்சம் பெருகின்றன.
அதுவும் ஆகமங்கள் என்ற பெரும் வழிபாட்டு வாய்ப்பாட்டின் மாற்றமும் நிகழ்கிறது.
ஆகமங்கள் முன்னிறுத்தும் வேதக் கடவுளர் சிவனும் விஷ்ணுவும்.
எந்த ஆகமமும் முன்னிறுத்த முனையாத வெறும் வேதக் கடவுள் இந்திரன்.
இந்திரனின் தம்பி, உபேந்திரன் என்று விஷ்ணு முதலில் கூறப்பட்டுப் பின் இந்திரனிலும் மிக்குயர்ந்த கடவுள் என்று பக்திக்கு இலக்காகிறார்.
அநேகமாக இந்திரனை கீழிறக்குவதில் விஷ்ணு நெறி, (வேதக் கருத்துகளும், ஆகம நிச்சயங்களும் ஊடுகலந்தது) தீவிரமாக இயங்கிற்று எனலாம்.
இதற்கென்றே சைவம் காத்திருந்தது போன்று, இந்திரன் மதிப்பிழந்தவுடன், அந்த விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் அடிமுடி காணப்பட முடியாதவர் சிவன் என்று சைவ ஆகம ரீதியான தன் சிவ ஈடுபாட்டை முன்னிறுத்துகிறது. எனவேதான் நாயன்மார்களின் பாடல்களில் நாம் அதிகம் காண்பது இந்த அடிமுடி தேடிய கதை.
சைவத்திலும், வைணவத்திலும் நாம் காணும் பெண் மன்நிலயின் அடிப்படையில் எழுந்த பக்தி ஈடுபாடு பெரும் ஆன்மிக, யோக முக்கியத்துவம் வாய்ந்ததுவாய்க் கொண்டாடப் படுகிறது.
ஆனால் வேத நெறியின் உச்சத்தில், வேதக் கடவுளரின் உன்னதமான தேவராஜனிடம் வேத நெறியினர் கொண்ட பக்தி ரீதியான, பெண் மனநிலையின் அடிப்படையில் எழுந்த ஈடுபாடு, ஆகம பலத்தை எதிர்கொள்ள முடியாமல் போகவே, அகல்யா இந்திரனிடம் கற்பிழந்தாள் என்ற அபத்தக் கதையாக ஆக்கப்பட்டது.
This absurdity should have been employed purposely to discredit the previously prevalent devout preoccupation of the Vedic cultural and devotional community. The story is just a tool towards changing the axis of devotion and it served no other purpose and is meaningful in no other terms.
திருவாய்மொழிக்கான வியாக்யானங்களில் ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறார்கள். திருவாய்மொழியில் தொடக்கத்தில் சில பாட்டுகள் வரை மிகவும் ஈடுபட்டு, உயர்ந்த தத்வார்த்தங்களைத் தன்னிடத்தே பொலிந்து விளங்கும் உயரிய நூல் என்று கொண்டாடியபடி கேட்டுக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் புலவர், நம்மாழ்வார் பாடிய அகத்துறைப் பாடல்கள ஆரம்பித்தவுடன், "என்ன இது! காமுகர் வார்த்தையாய் இருக்கிறது!" என்று அந்நியப்பட்டுச் சில நாள் வராதிருந்துவிட்டார் அந்தப் பாடல்கள் முடியும்வரை - என்று ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. அது காமுகர் வார்த்தை இல்லை என்பதற்கு ஆசாரியர்கள் காட்டும் விளக்கம் இங்கு பகவத் காமமே குறிக்கப்படுகிறது என்பதாகும்.
எதற்கு இதைக் கூறுகின்றேன் என்றால் காமம் கெழுமிய கடவுள் பக்தி என்பது ஒரு சங்கேத மொழி. யோக மொழியில் சொன்னால் சூன்ய சம்பாஷணை. அதை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது இழிவான உடல் காமப் பேச்சாகத் தோன்றும்.
உலகம் எங்கணும் தோன்றிய மிஸ்டிக் நெறிகளில் இந்த கடவுள் காமம் என்ற மொழி பயன்படுத்தப் படுவது போன்றே வேதக் கடவுளரில் தலைவனான இந்திர வழிபாட்டிலும் இந்த மிஸ்டிஸிஸம் இருந்ததை அடுத்து ஆட்சி பெற்று உயர்ந்த பக்தி நெறிகள் discount செய்யும் முயற்சியே இந்த அகல்யா கற்பிழத்தல் என்ற அபத்தக் கதையாகும்.
இதினுடைய அபத்தம் இந்திரன் யார் என்று சற்று யோசித்தாலேயே புலப்படும். இந்திரன் தேவ ராஜன். தேவன் என்றாலே அவன் மனிதன் அன்று. அவனுக்கு உடல், ரத்தம், தசை, தாகம், பசி, ஓர் இடத்தை நிரப்பிக் கொண்டிருத்தல் என்ற வடிவம் கிடையாது.
ஒளி உருவினன் என்பதுதான் தேவனின் உருவம்.
காமம் என்பதோ ஃபிஸியாலஜி அடிப்படையில் உடல் அமையப் பெற்ற உயிரினங்களில் மட்டும், ஏற்படும் இனக்கவர்ச்சி என்னும் திசுக்களில் உண்டாகும் பயோ எதிர்வினை. இனப்பெருக்கம் என்ற நோக்கத்திற்காக இயற்கை இந்த இணைவிழைச்சு என்பதை வைத்திருக்கிறது.
அடிப்படையில் இந்த இயற்கை தூண்டும் திசுக்களின் உசுப்பல் நடந்த பின்னர்தான், மனித உயிர்கள் அதை தம் மனம், உணர்ச்சிகள் என்பன கொண்டு, மேலே பூச்சுகளாய் நெகிழ்வுகளைக் கற்பிக்கின்றன. அடிப்படையான ஃபிஸியாலஜியே இல்லை என்னும் தேவன் என்பவனிடத்தில் ஒருத்திக்குக் காமம் வந்தது; அந்த ஒளி உருவாலாகிய தேவ வடிவத்திற்கும் மானிடப் பெண்ணின் பால் உடல் இச்சை வந்தது என்பதெல்லாம் அபத்தங்களிலும் அபத்தம்.
இந்த அபத்தக் கதைகளின் ஆரம்பகால நோக்கமே ஒரு பக்தி நெறி தலைதூக்கி முன்னிருந்த பக்தி நெறியொன்றை வழ்க்கத்திலிருது நீக்கியிருக்கிறது என்பதில்தான் நிறைவேறியிருக்கிறது.
எவ்வளவு காலம்! காலம் காலமாக நம் நாட்டுப் பண்டிதர்களும், அறிவு ஜீவிகளும், தற்கால எழுத்தாளர் பிரம்மாக்களும் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களோ!
<< Home