Tuesday, August 16, 2011

தேசியம் -- 1

நாடு சுதந்திரம் அடைந்த தினம். 

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம். 

அது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம், 

என்ற தேசிய உணர்வு எழுந்து அதன் முழுப் பலன் கண்ட நாள். 

பல சமஸ்தானங்களாய், பல தனி அரசுகளாய், இருந்த பாரத நிலப் பரப்பு தன்னை பண்பாட்டின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில், சமுதாய விழுப்பங்களின் அடிப்படையில் ஒரே நாடாக உணர்ந்து வந்தது எனிலும், அரசியல் ரீதியாக, ஆட்சியின் ஓட்டம் ரீதியாக, சட்டம், ஒழுங்கு. ஆட்சியில் மக்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் ரீதியாக ஒரே நாடாகத் தன்னை நடைமுறையில் கண்டது ஆங்கில ஆட்சியில். குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் அஞ்சல் தகவல் தொடர்பு, நெடுந்தொலைப் பயண வசதி ஆகிய தொழில், தொடர்பு முன்னேற்றங்கள் இந்தியா ஒரே நாடு என்னும் நடைமுறையை வலுப்படுத்தின. 

ஆங்கிலத்தால் நாட்டிற்குள் நுழைந்த பல வித உலகக் கல்விகள், மானுடத்துறை சித்தாந்தங்கள் நாட்டில் புதிய அறிவு விழிப்பையே ஏற்படுத்திவிட்டன. மாற்றம், பெரும் மாற்றம், வேர் முதல் மாற்றம் என்பது நாள் விதியாக நிலவியது. 

மதத்துறையிலும் ஏதோ சொன்னார்கள், பின்பற்றுகிறோம் என்பது மாறி, வழிவழியாக வந்த மதக் கருத்துகளையே அறிவின் திறத்தால் ஆய்ந்து அலசிப் பார்க்கும் புது யுக அறிஞர்கள் பெருகினார்கள். 

ஆனால் நாடு என்பதற்கு முக்கியமான தேசியம் பற்றிய கல்வியைப் பெற்றிருக்கிறோமா? 

பெறவேண்டும். ஆம் இந்தக் கல்வி இல்லாமல் ஒரு தேசம் என்பது தன்னை முற்றிலும் உணர இயலாது. த்ன்னுணர்வு முழுமையடையாத தேசம் சிறக்காது. 

இந்தத் தேசியக் கல்வி என்பதை நன்கு வலியுறுத்துகிறார் சகோதரி நிவேதிதா. 

India is evolving a new civilization. New ideals and new methods have already made their appearance. Already she is projecting herself upon new developments in many different directions. The great danger of such an era is the loss of moral stability which it is apt to involve. For the aim and effort of civilization is always to maintain the supremacy of the moral faculty. And in periods of violent transition, the tendency is, by the breaking of old bonds and associations, to make the moral scum and wreckage of society come to the surface, and take the lead. (The Complete Works of Sister Nivedita, Vol 3, pp 465) 


இங்கு குறிப்பிடப்படுவது முக்கியமாகத் தேசியம் பற்றிய கல்வி. அதாவது education in nationalism. அத்தகைய தேசியத்தைப் பற்றிய கல்வியில் முக்கியமானது citizenship awareness.  


தேசியம் அதாவது Nationalism என்பது 

----மண், மரபு, நினைவு, பண்பாடு, உள்செறிவு, எதிர்காலக் கனவு, நிகழ்கால ஊக்கம், பண்டைய சிறப்புகளை நன்கு உணர்ந்த அடிப்படையில் வேர்விட்டு எழுந்த தெளிந்த மதி---- 

ஆகிய இவையெல்லாம் நன்கு பொருந்திய மன எழுச்சி. 

தெய்வ பக்திக்குப் பக்கத்தில் வருவது இந்த தேச பக்தி ஆகிய தேசியம். 

தெய்வ பக்தியானது, தெளிந்த ஞானமும், தீரமான வைராக்கியமும் கூடச் சேர்ந்து செழிக்கவில்லையேல் தானும் சோர்ந்து போய் வெறும் உணர்ச்சிகளாய் விழுந்துவிடும். 

உணர்ச்சிகளுக்கு என்று வினோதமான குருட்டுக் கண் உண்டு. -- எங்கே பள்ளம் என்று பார்த்துத் தள்ளிவிடும். 

அதாவது உணர்ச்சிகள் என்பவை ஒரு வித கபந்தங்கள்.-- தலை வயிற்றுக்குள் இருக்கும் ஜன்மம். 

ஆனால் பக்தி என்பது விசுவரூபம். -- கூடவே ஞானமும், வைராக்கியமும் செழித்தால். 

ஸ்ரீமத் பாகவதத்தில் பக்தி என்ற பெண் நிர்கதியாக நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தாள். நாரதரைப் பார்த்து வார்த்தை சொல்லுமிடத்தே, 'ஐயா! நாரதரே! திராவிட தேசத்தில் உதித்த நான், நவத்வீபத்தில் புத்துயிர் பெற்றுவிட்டேன். ஆனால் என் மக்களாகிய ஞானம், வைராக்கியம் இரண்டும் கிழடு தட்டிப் போய், தூக்கமும், தொய்வுமாய்க் கிடக்கின்றன. ஏதாவது வழி இருந்தால் சொல்லும்' என்று அழுததாகத் தற்குறிப்பேற்ற அணி திகழும் கதையாகச் சொல்லியிருக்கிறது. அதாவது ஞானம், வைராக்கியம் கூடவே செழிக்காத பக்தி, நாளாவட்டத்தில் உணர்ச்சிகளாக மாறிவிடும். 

விண்நெடு பார்வை மாறி மண்படு பார்வையாகிவிடும். 

அதேபோல்தான் தேச பக்தி விஷயத்திலும். 

----மண், மரபு, நினைவு, பண்பாடு, உள்செறிவு, எதிர்காலக் கனவு, நிகழ்கால ஊக்கம், பண்டைய சிறப்புகளை நன்கு உணர்ந்த அடிப்படையில் வேர்விட்டு எழுந்த தெளிந்த மதி---- 

ஆகிய இவை பொருந்தித் திகழும் வரை தேச பக்தி என்பது உலகிற்கே ஒளியூட்டும். 

வெற்று சொந்த நாட்டு கர்வமாகவும், தன்னாட்டுப் பீத்தலாகவும் உணர்ச்சி அளவில் விழுந்து விட்டால் பிறகு பார்வையில் உலகம் சிதறிப் போகும். 

எனவேதான் நாடு சிறக்க வேண்டுமானால் குடிமகற் கல்வி என்பது ஓங்க வேண்டும். குடிமகற் கல்வி என்பதே தேசியம் பற்றிய கல்வி. 

தேசியத்திற்கான ப்ரார்த்தனையாக, தேச பக்தர் ஒவ்வொருவரின் அன்றாட உள்ள ஊக்கமாகத் திகழ சகோதரி நிவேதிதா இந்த தேச பக்தி த்யானத்தை வரைந்திருக்கிறாள். 

I believe that India is one, indissoluble, indivisible. 

National unity is built on the common home, the common interest and common love. 

I believe that the strength which spoke in the Vedas and Upanishads, in the making of religions and empires, in the learning of scholars, and the meditation of the saints, is born once more amongst us, and its name today is Nationality. 

I believe that the present of India is deep-rooted in her past, and that before her shines a glorious future. 

O Nationality, come thou to me as joy or sorrow, as honour or as shame! Make me thine own! 

(The Complete Works of Sister Nivedita, Vol 4, pp 205) 



சகோதரி நிவேதிதா தந்திருக்கும் தேசியத்தின் ப்ரார்த்தனை மிகவும் பொருள் செறிவு உடையது. அதைப் பகுதி பகுதியாக நாம் ஆழ்ந்து பார்த்தல் அவசியம். 


I believe that India is one, indissoluble, indivisible.  


இந்தியா என்பது ஒன்று. 

இந்தியா என்பது மாற்றமுடியாதது. 

இந்தியா என்பது பிரிக்க முடியாதது. 

இதைத் தன் நம்பிக்கையாக எவன் போற்றுகிறானோ அவனே இந்திய தேசத்தின் குடிமகன். 

இந்தியா என்பது ஒன்று என்பதைப் புரியவைக்க முடியும். யாருக்கு? 

இந்தியாவின் ஒன்றாகும் தன்மையை, ஒற்றுமையை, ஏகத்வத்தைத் தம் நம்பிக்கையாய்க் கொண்டு போற்றும் குடிமகனுக்கு ஏன் இந்தியா ஒன்று என்பதை நன்கு புரிய வைக்க முடியும். 

அதேபோல்தான் இந்தியா என்பது மாற்ற முடியாதது. 'ஒன்று அன்று தனித்தனி' என்று அதன் தேசமாகிய இயல்பை மாற்ற முடியாதது என்பதைத் தேசத்தின்பால் நம்பிக்கை பூண்டு போற்றும் குடிமகர்க்குப் புரியவைக்க முடியும். 

அதேபோல்தான் பிரிக்க முடியாதது இந்தியா என்னும் கருத்தும் தேசத்தில் நம்பிக்கை கொண்ட குடிமகர்க்கு விளங்க வைக்க முடியும். 

ஆனால் தேசமா? இதை மறுக்கிறோம். ஒன்றா? எப்படி? மாறாததா? பிரிக்க முடியாததா? எங்கே நிரூபி என்று அடிப்படையில் தன் தேசத்தையே மறுத்துக் கேள்வி கேட்கும் ஒருவருக்கு, இவற்றை என்ன விளக்கினாலும் பயனின்றிப் போயொழியும். 

இந்திய தேசம் என்பதைத் தம் நம்பிக்கைக்கு உரிய போற்றும் இலக்காக ஆக்கிக்கொண்ட தேச பக்தர் ஒருவருக்குச் சில கேள்விகள் எழலாம். 

இந்தியா ஒன்று என்றால் பழங்காலத்தில் பல நாடுகளாய் இருந்ததே! பல ராஜ்ஜியங்கள், பல அரசுகள் என்று இருந்ததே! ஒரு காலத்தில் பல அரசுகளாக இருந்தது இப்பொழுது ஆங்கில ஆட்சிக்குப் பின் ஒன்று என்று ஆகியதா? 

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பல தேசங்கள் தம் நிலப்பரப்பும், ஆட்சியும், பண்பாட்டுப் பரப்பும், மரபின் பரப்பும் ஒன்று போலவே அமைந்து காலம் நெடுக வரும். 

ஆட்சிகள் மாறி மாறி அமைந்தாலும் அதை ஒரு தேசமாகக் காலம் நெடுக ஒரே தன்மை கொண்டதாகக் கருதுவது மாறிச் செல்லும் அதன் ஆட்சிகள் அடிப்படையில் அன்று. 

மாறாத அதன் பண்பாடு, வழிவழியான மரபு, சமுதாய நினைவு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பண்டைய சரிதங்கள் ஆகிய இவையே ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு ஒரே தேசமாகத் தொடர்ந்து அடையாளம் காணப் படுவதற்கு ஏதுவாகும். மேலை நாடுகள், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதற்கான உதாரணங்களைக் காண்லாம். 

இந்தியாவில் இமயம் தொட்டுக் குமரிவரை, ஆஸேது ஹிமாசலம் பண்பாடும், மரபுகளும், மக்கள் நம்பிக்கைகளும், பண்டைய சரிதங்களும் ஒன்று போலவே அமைந்து இந்த நிலப்பரப்பை ஒரே தேசமாக இனங்காணும் வகையில் தொடர்ந்து வந்திருக்கிறது. 

இந்தத் தொடர்ச்சி இன்று நேற்று அன்று பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமுதாய, பண்பாட்டு மெய்மையாக இயன்று வந்துள்ளமையைத் தான் புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. 

"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் 
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் 
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் 
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் 
கீழ்து, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் 
நீர்நிலை நிவப்பின் கீழு மேலது 
ஆனிலை உலகத்து ஆனு மானாது 
உருவும் புகழும் ஆகி விரிசீர்த் 
தெரிகோன் ஞமன்ன் போல வொரு திறம் 
பற்றலி லியரோ நிற்றிறஞ் சிறக்க..." 
(புறநானூறு 6) 

என்னும் வரிகளில் மன்னனின் புகழ் சிறக்கப் பாடும் புலவருக்குத் தன்னைப் போல் தம் பண்பாட்டுப் பரப்புதான் நாவில் வந்து நிற்கிறது. 

பாடும் பொழுதே பண்டைய சரிதங்கள்தாம் வரிகளில் வருகின்றன.( தொடுகடல் -- சகரரால் தோண்டப்பட்ட கடல்). 

வடக்கில் இமயமும், தெற்கில் குமரியும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களும் இன்று போல் அன்றும் மக்கள் நெஞ்சில் தம் பூமியின் வரையறைகளாக நிலவுகின்றன. 

மக்களின் நம்பிக்கைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. மேலே ஆனிலை உலகம் (கோலோகம்) வரை உன் புகழ் சிறக்கட்டும் என்று பாடும் புலவர், 'பாரத நாடு பழம் பெரு நாடு, நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்' என்று தானே உணர்த்துகிறார்? 

புறநானூறு 17 ஆம் பாடலில் 

"தென்குமரி வடபெருங்கல் 
குணகுடகட லாவெல்லை 
குன்றுமலை காடுநாடு 
ஒன்றுபட்டு வழிமொழியக் 
கொடிது கடிந்து கோல்திருத்திப் 
படுவதுண்டுப் பகலாற்றி 
இனிதுருண்ட சுடர்நேமி 
முழுதாண்டோர் வழிகாவல.." 

என்னும் வரிகளிலும் புலவருக்கு இயல்பாக வருவது தம் பண்பாட்டுப் பூமியாகிய பாரதமே என்பது நன்கு புலனாகிறது. 

மதுரைக் காஞ்சியிலும் மாங்குடி மருதனார் பாடுகையில், 

"தென்குமரி வடபெருங்கல் 
குணகுட கடலா வெல்லைத் 
தொன்று மொழிந்து வழிகேட்ப 
வெற்றமொடு வெறுத்தொழுகிய 
கொற்றவர்தம் கோனாகுவை.." 

பண்பாட்டு பூமியின் எல்லைகள்தாம் தம்மைப் போல் அவர் நினைவில் துலங்குகின்றன. 

இதில் நன்கு கவனிக்க வேண்டியது 'தொன்று மொழிந்து' என்று அந்தத் தொன்மைக் காலத்திலேயே புலவர் பாடுவாராயின் பாரத பூமியின் ஒற்றுமைக்குப் பழமையின் எல்லையை எப்படி நாம் யூகிக்க முடியும்? 

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் -- என்று பாரதி பாடுவதுதான் எவ்வளவு நியாயமானது! 

எனவே இந்தியா ஒன்று என்பதும், மாறாதது, பிரிக்க முடியாதது என்பதும் இன்று நேற்றன்று, தொன்னெடுங்காலம் தொட்டே மக்கள் நினைவில் ஆழப்பதிந்தது. 

இந்த மாறாத உண்மையையும் சந்தேகிக்கும் தேசியமற்ற மனப்பான்மை மாறி பாரத நாடு பழம்பெரும் நாடு நாம் அதன் புதல்வர் என்ற உண்மையைப் போற்றிப் பேணும் ஊக்கமே இங்கு நம்பிக்கை எனப்படுவது. இது உண்மையில் தன்னம்பிக்கை. 



National unity is built on the common home, the common interest and common love. 


நேஷனல் யூனிடி -- வெறும் ஒற்றுமை, மண்ணின் பால் பற்றின் காரணமாக எந்த இனத்தார்க்கும் இயற்கையில் ஏற்பட்டுவிடுவதாகிய ஒன்று கூடும் தன்மை அன்று இங்கு சொல்லப் படுவது. இது தேசிய உணர்வு செழிக்கும் ஒற்றுமை. 

அதாவது நல்ல குடிமகர்களிடத்திலே ஏற்படுவதாகிய தேச பக்தியினால் ஏற்படும் ஒற்றுமை. 

அது யார் நல்ல குடிமகர்கள் என்பது? 

முதல் வாக்கியம் சொன்னோமே 

I believe that India is one, indissoluble, indivisible.  


இந்த வாக்கியத்தின்படி தேசத்தின் ஒற்றுமையில் இயல்பான நம்பிக்கையும், தெளிந்த உறுதிப்பாடும் கொண்டோர், அத்தகையோர் நல்ல குடிமகர்கள். citizens. 

இந்த குடிமகர்கள்தாம் நேரடியாக நாட்டைக் காப்பதிலும், ஆள்வதிலும் உணர்வு ரீதியான உரிமை பூண்டவர்கள். ஏனெனில் இத்தகையோர் தாம் என்ற உணர்வைத் தம் தேசம் என்பதில் கரைத்தவர்கள். இத்தகைய குடிமகர்களிடத்தில் தோன்றும் தேசிய உணர்வு என்பது விளங்கும்படியான ஒற்றுமையைத் தான் இங்கு நேஷனல் யூனிடி என்கிறார் சகோதரி. 

இத்தகைய தேசிய ஒற்றுமை என்பது எதை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப் பட்டிருக்கிறது? 

அதாவது ஒரு தேசம் என்பதற்கு மூன்று அம்சங்கள் அமைந்துள்ளன. என்னென்ன அவை? 

ஒரு தேசம் அதன் குடிமகர்க்கு பொதுவான வீடாக இருக்க வேண்டும். ஒரு கூரையின் கீழ் தங்குவதால் மட்டும் அந்த இடம் அவாறு தங்குவோர்க்கு வீடாக ஆகிவிடுவதில்லை. அது சத்திரமாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு கட்டடம் ஒரு குறிப்பிட்ட பேருக்கு எப்பொழுது வீடாக ஆகிறது? 

அன்பு, அக்கறை, ஒருவர் நலனில் ஒருவர் கவனம் கொள்ளுதல், அனைவரது நலன்களையும் தம் கவனத்தில் கொண்டு கவலைப் படும் நபர், கண்ணுக்குத் தெரியாமல் ஆனால் தம் உணர்வால் மட்டும் உணரப்படுவதாகிய தம் வீட்டின் மொத்த நன்மைக்காக ஒவ்வொரு நபரும் தம் சௌகரியம், நலன் ஆகிய அனைத்தையும் இயல்பான முனைப்போடு விட்டுக்கொடுப்பதைத் தம் உவகையாகக் கொள்ளும் இயல்பு -- இவையெல்லாம் சேர்ந்து ஓரிடத்தில் இருந்தால் அதைத்தான் வீடு -- Home -- என்று கூற இயலும். வீட்டில் எவரும் பயம் கொள்ள வேண்டியதில்லை. பயம், கவலை, பிச்சல், பிடுங்கல் என்றபடி அனைத்தையும் விட்டுவிட்டு சுதந்திரமாக இருக்கும் இடத்தைத்தான் வீடு என்பது குறிக்கிறது. 

இது சம்பந்தமாக பாரதியார் எழுதுவது சகோதரி நிவேதிதாவின் சொற்களுக்கு விளக்கம் எனலாம். 

" தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர். வீட்டுப் பழக்கந்தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்கியன்; வீட்டில் பொறுமையுடையவன் நாட்டிலும் பொறுமை யுடையவன்....... 

குடும்பம் நாகரிகமடையாவிட்டால் தேசம் நாகரிகமடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிட்டால் தேசத்தில் விடுதலை இராது..... 

வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான  அச்சங்களில்லாமல் விடுதலைப்பட்டு வாழத் தகுந்த இடத்துக்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். விடத்தக்கது வீடு என்ற பிற்கால உரை ஒப்பத்தக்கதன்று.... 

வீடு துயரிடமாவதற்குக் காரணம் விடுதலையும் அன்பு மில்லாமையே." 

(கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், ஒன்பதாம் தொகுதி, பதிப்பு: சீனி விசுவநாதன், பக் 510-511) 

மேலும் தேசம் என்பது குடிமகர்களுக்கு இயல்பான வீடாகமட்டும் இருப்பதில்லை. அவ்ர்களுக்கு உரிய பொது ஈடுபாட்டுக் கேந்திரமாகவும் இருப்பது. 

தம் செயல்களால் தேசத்திற்குச் சிறப்புகள் ஏற்படவேண்டும் என்பதும், தம் தேசம் சிறந்து விளங்குவதற்கான அக்கறையும் ஈடுபாடும் குடிமகர்களின் செயல்பாடுகளில் விளங்கும். 

அவ்வாறு ஈடுபடுவது ஏதோ பலவந்தத்தின் காரணமாகவோ என்றால் அன்று. தம் தேசம் என்ற இயல்பான அன்பினால் உந்தப்பட்டே விளையும் வெளிப்பாடுகளாய் அமைவன. 

ஒரு தேசம் தன் குடிமகர்களைத் தெய்வங்களாகக் கருதி உபாஸிக்க வேண்டும் என்று ஸ்ரீவால்மீகி ராமாயணம் எடுத்துக் காட்டுகிறது. 

தேசம் என்பது இங்கு ஆள்பவர்களைக் குறிக்கும். யார் ஆள்கிறவர்கள்? அதே குடிமகர்களில் சிலர்தானே. எனவே தேசிய உணர்வை நன்கு அமைவுறச் செய்வதான தேசியம் பற்றிய கல்வி எங்கு அடிப்படையாக செழிக்கின்றதோ அங்குதான் நல்ல ஆட்சியாளர்களும் உருவாவார்கள். 

எனவேதான் சகோதரி நிவேதிதா கூறுவது தேசிய ஒற்றுமை எதன் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்றால் தேசம் பொதுவான வீடாகத் திகழ்வதிலும், குடிமக்ர்களின் பொது ஊக்கமாகத் தேசம் திகழ்வதிலும், அனைத்து குடிமகர்களும் தம் அன்பின் கோயிலாகத் தம் தேசத்தை உணர்வதிலும் கட்டமைக்கப் படுகிறதுஎன்பதாகும். 

National unity is built on the common home, the common interest and common love. 

*** 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்