I believe that the present of India is deep-rooted in her past, and that before her shines a glorious future.
"தர்மமே யுருவமாத் தழைத்த பேரரசரும்
நிர்மல முனிவரு நிறைந்த நன்னாடு.
வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
யூரவர் மலடியென் றுரைத்திடு நாடு.
பாரத பூமி பழம் பெரும் பூமி.
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்!
பாரத நாடு பார்க்கெலாந் திலகம்;
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்!
பாரத நாடு பார்க்கெலாந் தெய்வமாம்
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்!
வானக முட்டு மிமயமால் வரையு(ம்)
ஏனைய திசைகளி லிருந் திரைக் கடலுங்
காத்திடு நாடு கங்கையுஞ் சிந்துவும்
தூத்திரை யமுனையுஞ் சுனைகளும் புனல்களும்
இன்னறும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளு மொளிர்தரு நாடு.
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு.
தேவர்கள் வாழ்விடந் திறலுயர் முனிவர்
ஆவலொ டடையு மரும்புகழ் நாடு.
ஊனமொன் றறியா ஞான பூமி
வானவர் விழையு மாட்சியார் தேயம்.
பாரத நாட்டிசை பகர யான் வல்லனோ?
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்."
(பாரதியார் கவிதைகள், சீனி விசுவநாதன் பதிப்பு)
பாரத பூமி பழம் பெரும் பூமி -- இந்த வரியில் கிட்டத்தட்ட பாரத வரலாறே அடங்கியது எனலாம். ஒரு நிலப்பரப்பு எப்பொழுது பூமியாக ஆகிறது என்பதை உணர்ந்தாலே பாரதம் பூமியாக ஆகி வந்த காலத்தைக் கணக்கிடுதல் கடினம்.
ஒரு மரம் எவ்வளவுக் கெவ்வளவு நிலத்தின் ஆழத்தில் தன் வேரைப் படர விட்டு நிற்கிறதோ அத்தனைக்கு அத்தனை அதன் நிலைப்பாடு எதனையும் தாங்கி நிற்கும் வலிமை உடையது.
மேலோட்டமாக வறட்சி ஏற்படினும் தன் ஊட்டத்திற்கு அந்த மரம் ஆழ்நிலை நீர்ப் பற்றிலிருந்து உயிர் பெற்றுத் தழைக்கும்.
பாரதம் என்பதைச் சார்ந்த எந்த பண்டைய நிறுவனமும் ஆத்ம பலத்தில் வேர் கொண்டு எழுந்தது என்று பார்த்தோம். அந்த ஆத்ம ஞானம் பழங்காலத்திலேயே அதனால் திட்ட வட்டமாக வாழ்க்கையின் ஆகச்சிறந்த விழுமியமாகக் கைக்கொள்ளப்பட்டு விட்டது.
எனவே பாரதம் தன் நெருக்கடிக் காலங்களில் எல்லாம் தன் ஆழ்நிலை நீர்ப் பற்றிலிருந்து பெரும் உயிரூக்கம் நித்தியத்தின் நிலைப் பேற்றிலிருந்தே கிடைக்கப் பெறுகிறது.
இதை அந்நிய தேசத்தான் ஒருவன் புதிதாகக் கண்டுபிடித்து வியக்கலாம். ஏங்கலாம். இந்தியாவில் தான் பிறக்காமல் போனோமே என்று வியாகுலம் எய்தலாம். ஆனால் இந்தியக் குடிமகன் என்பவன், அதாவது குடிமகர்க்கு உரிய கல்வியைத் தன் உணர்வின் செறிவாய்க் கொண்டவர், அதாவது தேசியத்தின் திறம்படிந்த திருவாளர் எவரும் புதிதாக இதை அறிந்து கொள்வதில்லை.
தாயின் அரவணைப்பில், தந்தையின் அக்கறையில், ஆசான்களின் ஆன்ற அறிவுரைகளில், மூத்தவர்களின் பாசக் கதைத் தாலாட்டுகளில் அவன் பெறுகின்ற இயற்கையான ஜீவ போதம் இந்தத் தேசியம். அதாவது பாரதத்தைப் பற்றிய உணர்வு மயமான ஒட்டுறவு.
இதைத்தான் சகோதரி நிவேதிதா 'believe' என்ற வார்த்தையை இட்டுக் குறிக்கிறார்.
இது இல்லாததை நம்புவது போன்றதன்று. தன் உள் ஆழ்ந்த உணர்வுப் புலத்தில் கலந்து மிளிரும் ஒன்றை ஒருவர் தெரிவிக்கும் போது எந்தச் சொல்லை இட்டு உரைப்பது என்ற திகைப்புதான் இந்த believe என்ற சொல்லின் பொருள்.
இதைத்தான் பாரதி மிக அழகாக 'நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதிர்!' என்று மீண்டும் மீண்டும் சிவாஜி மகராஜ் வாயிலாகக் கூறுகிறார்.
ஓர் இந்தியர் தேசியவாதியாக ஆவது இல்லை பிரச்சனை. அவர் தம் தேசிய உணர்வைத் தம் நெஞ்சிலிருந்து அகற்றாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதைத்தான் பாரதி திறம்பட மீண்டும் மீண்டும் அகற்றாதிர் என்று எச்சரிக்கிறார்.
ஒருவர் ஆரோக்கியமாக இருப்பது பிரச்சனையன்று. தம் இயல்பான ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டு நோயைத் தன் மீது ஏறிட்டுக் கொள்வதுதான் பிரச்சனை.
அவ்வாறு எந்தச் சூழலிலும் நோய் நம் இயல்பான நன்னிலையைக் கெடுக்காமல் இருக்கத்தான் தடுப்பு மருந்துகளை உட் கொள்கிறோம்.
அது போலத்தான் தேசியக் கல்வி என்பது இந்தியர் உட்கொள்ளும் தற்காப்பு மருந்து. நிஜத்தை மறக்க உட்கொள்ளும் போதையன்று. அந்த போதை உலகம் தழுவிய பார்வை என்பதைப் போலியாகப் போர்த்திக்கொண்டு வந்தாலும் அது போதை போதைதான்.
இது ஒரு வினோதமான அலிபாபா குகை போன்றது. ஒருவர் தம் பழமையை வெறுத்து, ஒதுக்கி, உணராமல் புறந்தள்ளி, எதிர்காலமே போதும் என்று பழமையின்பால் கண்ணை மூடிக்கொண்டு, முன்னேற நினைத்தால், இரட்டைப்பூட்டு என்ன, தொட்ட இடமெல்லாம் பூட்டாகத் தொங்கியபடி முன்னேற்றப் பாதை இருண்டு போய் ஒன்றும் தெரிய மாட்டேன் என்கிறது.
ஆனால் அதே, ஒருவர் தம் பழைமை என்ன என்பதை உள்ளபடி உணர்ந்து, தாமும் தம் முன்னோரும் உலகளாவிய ஒப்பு நோக்கில் பார்த்தால், எல்லா இனத்திலும் இருப்பது போன்றே சில தவறுகள் இருந்திருப்பினும், தம் முன்னோர் சாதனைகள் ஆற்றியிருப்பவை ஏராளம் என்று உணர்ந்து, அந்தத் தெளிவில் அவர் எந்தத் திக்கில் முன்னேறினாலும் அந்தத் திக்கும், எதிர்காலமும் திறக்காத கதவுகள் எல்லாம் திறந்து கொள்கின்றன. அவருடைய எதிர்காலம் ஒளியின் மேய்ச்சல் நிலமாய்க் காட்சியளிக்கின்றது.
இந்த வினோதத்திற்கான மந்திரச் சொல்தான் சகோதரி நிவேதிதா கூறுவது:
<< Home