O Nationality, come thou to me as joy or sorrow, as honour or as shame! Make me thine own!
பக்த சரித்ரங்களில் வரும். கடவுள்பால் காதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகாந்திரத்தில் வரும்.
சிலருக்குத் தீவிரத் துயரத்தில் வரும். சிலருக்கோ வாழ்க்கையில் அவமானம் அடைந்து நிற்குங்கால் வரும். சிலருக்கு அதீத சந்தோஷத்தில் உதயம் ஆகும். சிலருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய பகுமானங்கள் கிடைக்குங்கால் ஏற்படும்.
கடவுள் ஒருவரைத் தன்பால் ஈர்க்க எந்த வழியை வைத்திருக்கின்றார் என்பது முதலிலேயே புலப்படுவது கடினம்.
பெருகிய வெள்ளத்தில் தன் காதலியைப் பார்க்க ஓடினான். அடித்துச் சென்ற வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடித்தது காமம். கிடைத்தது ஒரு புணை. அதைக் கரையில் போட்டுவிட்டு ஓடினான். வாசல் செம்மியிருந்தது. பால்கனியின் வழியே அவள் முனகும் விரக கீதம் கேட்டது. கொட்டும் மழை. வழுக்கும் பிடி. மாட்டிக் கொண்டால் அவமானம். ஆனால் அதிருஷ்டம் ஒரு கைப்பிடியை அந்த நேரத்தில் பார்த்துத் தொங்க விட்டதுதான் என்ன ஆச்சரியம்! மழையில் அந்தப் பிடியும் வழுக்கினாலும் பரவாயில்லை கண நேரத்தில் ஏறி பால்கனியில் குதித்துப் பஞ்சணைக்கு விரைந்தான். பாவை வியந்தாள். தன் விரகத்தால் தான் காணும் பிரமை என்று சிரித்தாள். ஊர்ஜிதம் செய்தான் உன்மத்தன். உள்ளம் கலங்கினாள். எப்படி வந்தாய் இந்த அசுர வெள்ளத்தில்? வா எனக்குக் காட்டு என்று கூட்டிச் சென்றாள் மழைக் குப்பாயம் கவிழ்த்து.
இதோ அந்தப் புணை என்றான். அங்கே ஒரு பிணம் கிடந்தது. அதோ பிடிக்க விழுந்த கயிறு என்றான். பிளந்த வாயில் பல் வெறித்துச் செத்துக் கிடந்தது பாம்பு.
'அடப்பாவி! இந்த ஆற்றாமையா? இதைக் கடவுளிடம் நீ காட்டியிருந்தால் இந்நேரம் தரிசனமே கிடைத்திருக்குமே!' என்றாள் பேதை.
பந்தக் கட்டுகள் அறுந்தன. பாதி இரவில் பகல் ஒளி படர்ந்தது. பாவங்கள் பட்டுப் போயின. பதிதன் பக்தனாய்ப் பாவையை வணங்கினான். என் குருவே! பிறவித் தளையறுத்தாய். பேறு தந்தாய். பித்தனைப் பக்தனாக்கிய பெருமாட்டி! என் இதய நன்றி இனி எப்பிறவிக்கும். -- என்று சொல்லித் திரும்பினான்.
தெரியாது. எவர் எப்பொழுது தேசியத்தின் தரிசனம் பெறுவர் என்று. ஆங்காரத்தில் தன் நாடு பற்றிப் பேசுவான். ஆனால் சுகப்பணம் கண்ணை மறைக்கும். காட்டிக் கொடுப்பான். காலத்திற்கும் பழி சுமப்பான்.
நாடாவது மண்ணாவது என்று துச்சம் பேசுவான். ஆனால் பாரத தேவியின் தரிசனம் பெற எதோ ஒரு சூழ்நிலை உருவாகும். நீங்கள் எல்லாம் கண்ட்ரி ப்ரூட்ஸ் என்று யாரோ சொல்ல இவனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வரும்.
ரோசம் ஆக்ரோஷம் ஆகி, நாட்டின் தீவிர தேச பக்தனாக ஆகிவிடுவான்.
இல்லையேல் மகத்தான மரியாதை உலக அரங்கில் கிட்டும். இவன் நாட்டை வைத்து ஒரு முக்கியப் புள்ளி இவனைப் புகழ்ந்து தள்ளுவார். பார்ட்டி நேரத்தில் அமர்ந்து பேசுங்கால் அவர் சொல்லித்தான் தன் நாட்டின் பெருமை புரியும். அடுத்த நாள் முதல் பேர்வழி தேசியச் செம்மல்.
ஆம். தேசியத்தை நாம் நாடிப் போகிறோம் என்பது அரைப்பங்கு உண்மை. மீதி உண்மை தேசியம் நம்மை நாடி வரவேண்டும். எந்த வழியிலும் அது வந்து நம்மைத் தொற்றலாம். மகிழ்ச்சி, துயரம், அவமானம், கௌரவம் எந்த வழியிலும் நேர்ந்து விடலாம்.
ஆனால் நமக்கு வேண்டியதெல்லாம் தேசியத்திற்கு ஒவ்வாத மனப்பான்மையைப் புறந்தள்ளுவதும், வருகின்ற தேசிய எழுச்சியை வரவேற்பதும்தான்.
O Nationality, come thou to me as joy or sorrow, as honour or as shame! Make me thine own!
I believe that India is one, indissoluble, indivisible.
National unity is built on the common home, the common interest and common love.
I believe that the strength which spoke in the Vedas and Upanishads, in the making of religions and empires, in the learning of scholars, and the meditation of the saints, is born once more amongst us, and its name today is Nationality.
I believe that the present of India is deep-rooted in her past, and that before her shines a glorious future.
O Nationality, come thou to me as joy or sorrow, as honour or as shame! Make me thine own!
(The Complete Works of Sister Nivedita, Vol 4, pp 205)
ஆன்ற குருமணி உணர்த்தியதைச் சான்ற கவிமணி பாடக் கேண்மின்.
"நூறு கோடி நூல்கள் செய்து
நூறு தேய வாணர்கள்
தேறு நுண்மை கொள்ள விங்கு
தேடி வந்த நாளினும்
மாறு கொண்டு கல்வி தேய
வண்மை தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கு முண்மை யொன்
றிறைஞ்சி நிற்பள் வாழ்கவே!"
"இதந்த ருந் தொழில்கள் செய்
திரும்பு விக்கு நல்கினள்
பதந்த ரற் குரியவாய
பன் மதங்கள் காட்டினள்
விதம்பெ றும்ப னாட்டினர்க்கு
வேறொ ருண்மை தோற்றவே
சுதந்திரத்தி லாசை யின்று
தோற்றி னாள்மன் வாழ்கவே!"
"கணமெனு மென்றன் கண்முனே வருவாய்
பாரத தேவியே கனல்கால்
இணைவிழி வால வாய மாஞ் சிங்க
முதுகினி லேறி வீற்றிருந்தே
துணைநினை வேண்டு நாட்டினர்க் கெல்லாந்
துயர்கெட விடுதலை யருளி
மணிநகை புரிந்து திகழ் திருக்கோலங்
கண்டு நான் மகிழ்ந்திடு மாறே."
"தண்ணீர்விட் டோவளர்த்தோம்?
சர்வேசா, இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்!
கருகத் திருவுளமோ?
எண்ணெமெலா நெய்யாக
எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ணவிளக் கிஃது
மடியத் திருவுளமோ?
ஓரா யிரவருட
மோய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த
மாமணியைத் தோற்போமோ?
தர்மமே வெல்லுமெனுஞ்
சான்றோர்சொற் பொய்யாமோ?
கர்ம விளைவுகள்யாங்
கண்டதெல்லாம் போதாதோ?
........
இன்பச் சுதந்திர நின்
இன்னருளாற் பெற்ற தன்றோ?
அன்பற்ற மாக்க
ளதைப் பறித்தாற் காவாயோ?
.....
நெஞ்சகத்தே பொய்யின்றி
நேர்ந்ததெலா நீதருவாய்
வஞ்சகமோ எங்கள்
மனத்தூய்மை காணாயோ?"
(பாரதியார் கவிதைகள், திரு சீனி விசுவநாதன் பதிப்பு)
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
<< Home