Sunday, August 07, 2011

இணைய உலகில் வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரு அன்றைக்குக் கொஞ்சம் முறைப்பாகவே இருந்தார். அவருடைய கையில் வாள்கள் மாறி மாறி சுழன்றவண்ணம் இருந்தன. 

நான் உள்ளே நுழையாமல் ஜன்னல் ஓரமாக ஒண்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நல்ல வேளை நான் வந்தது தெரியாது. இல்லையென்றால், 'வீரமாக வாள சுழட்டுவது எப்படி?' என்று க்லாஸ் எடுக்க ஆரம்பித்துவிடுவார். 

நீங்கள் நன்றாக வாள் சுழட்டினாலும் பத்தாது அவருக்கு. வீரமாகச் சுழட்ட வேண்டும். 

நான் ஒரு தடவை வெள்ளந்தியாக அவரை 'வீரமாகச் சுழட்டுவது என்றால் முட்டாள்தனமாகக் கோபப்பட்டுச் சுழட்டுவதா?' என்று கேட்கப் போய், அவருக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. 

'ஏய் த்ரோகி! நீ ஜாக்ஸன் துரை ஆள்தானே?' என்று வாள் நுனிக்கு என்னை இரையாக்க வந்துவிட்டார். நல்ல வேளையாக 23ஆம் புலிகேசியின் ஆஸ்தான கொல்லனிடம் சொல்லி எல்லா வாட்களையும் மாற்றி வைத்ததால் கொஞ்சம் தைரியமாக நானும் பதிலுக்கு வசனம் பேசினேன். 

'மிஸ்டர் வீர்! உங்கள் வாள் நுனியால் என் உடலின் தோலில் சின்ன கீரல் போட்டுப் பாருங்கள். அதில் சிகப்பு ரத்தம் தெரிந்தால் நான் உங்கள் ஆள். நீல ரத்தம் என்றால் ஜாக்ஸன் ஆள்' என்றதும் கொஞ்சம் அடங்கினார். 

ஆனால் சிவாஜி மாதிரியெல்லாம் பேசவில்லை. எங்க ஸ்கூல் வாத்யார் மாதிரிதான் இழுத்து இழுத்து பேசினார். 

சரி இப்ப வாள் பயிற்சிக்கு வருவோம். ஒரு சமயம் 'பொருமுக அந்தர வீச்சு' என்னும் பழங்கால நவீன முறைப்படி இரண்டு வாட்களையும் அவர் அந்தரத்தில் விட்டெறிய அது எல்லாம் தொபக்கட்டீர் என்று வாசலில் வந்து விழுந்து தரையில் குத்திட்டுச் சுழன்றது. 

பார்த்தேன் இதான் சாக்கு என்று இரண்டு வாட்களையும் மடக்கி கண்காணாத இடத்தில் சீக்கிரம் ஒளித்து வைத்து விட்டு வேறு ஒரு வழியாக ஒன்றும் தெரியாதது போல் வீருவை நோக்கி வந்தேன். அதற்குள் வெளியில் வந்து மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தார். 

'என்ன சார்! தேட்றீங்க?' 

'என்னிரு வாள்.' 

'அவாள் ஆகாயத்துல போறதைப் பார்த்தேனே' 

'யார்?' 

'அந்த வாள் இரண்டும்' 

'யாரோ அவாள் என்றீர்' 

'அந்த வாளுக்குப் பன்மை அவாள்தானே?' 

'உம்முடைய குறும்புக்கு ஒரு நாள் பாடம் புகட்டப் போகிறேன்' 

'ஹி ஹி கோவிச்சுக்காதீங்க சார்' 

'நான் எத்தனை முறை கூறுவது? சார் என்று அசிங்கமாக அந்நியனின் மொழியில் கூறாதீர்கள் என்று. கொஞ்சம் கூட வெள்ளையன் மொழியில் பேசுகிறோமே என்று வெட்கமாயில்லை?' 

'சாரி சார்' 

'மறுபடியும்..' 

'பழக்கமாப் போச்சு சார்' 

.....

'சரி சார். ஏதோ அர்ஜண்டா வரச்சொன்னீங்களாமே? என்ன விஷயம்?' 

'அதுவா? நீர் முன்னரே கூறினீரே இணைய உலகம். அதனுள் நாம் படையெடுக்க முடிவு செய்து விட்டோம்' 

'அப்படியா? கங்க்ராட்ஸ். நெட் கனெக்க்ஷன் வாங்கிட்டீரா?' 

'கங்க மன்னனின் பேரை இப்பொழுது எடுக்க வேண்டாம். உமக்கு எச்சரிக்கிறேன். ஆமாம் என்னைப் பார்த்தால் உமக்குக் கிண்டலாய் இருக்கிறதா?' 

'ஏன் சார்? திடுதிப்பென்று கோபப்பட்றீங்க?' 

'பின்ன? யாம் ஒரு புது உலகையே படையெடுத்து ஜயிக்க நினைத்தால் நீர் நட்டுவனாரையும் கனகத்தையும் வாங்கிவிட்டீரா என்று நக்கல் அடித்தால், ஜாக்கிரதை என் கோபம் அபாயமானது.' 

'ஐயோ நீங்க ரொம்ப சைல்டா இருக்க்கீங்க' 

'மீண்டும் எச்சரிக்கிறேன் ஸ்ரீசைலத்து மன்னனைப் பற்றிய பேச்சு இங்கு வேண்டாம்' 

'ஓ... அதுவா.? சார் சைல்டு என்றால் குழந்தைன்னு ஆங்கிலத்துல அர்த்தம். நீங்கக் குழந்தையா இருக்கீங்கன்னு சொன்னேன்'. 

'அப்படியா சொன்னீர்! அந்த இழவைத் தமிழிலே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?..ஆனால் என் தேவியும் அப்படித்தான் அடிக்கடி சொல்வாள், குழந்தை என்று' 

'தெரியும்...நந்தவனத்துல டூயட் பாடின போதுதானே? சாரி...காதல் கலந்தோட்டப் பாடல் பாடிய போதுதானே?' 

'காதல் கலந்தோட்டமா? அந்தக் கண்ராவியெல்லாம் கிடையாது. மன்னன் வெறும் ஊதாரி போல் பெண்களோடு ஆடிக்கொண்டிருப்பான் என்று நினைத்தீரா?' 

'சரி அதை விடும். இணைய உலகத்துள் எப்படி ப்ரவேசிக்கப் போகிறீர்?' 

'அதற்குத்தான் சுரங்கத் தானாதிபதி வராஹ பாண்டியை வரச்சொல்லியிருக்கிறேன்' 

'சுரங்கமா? எதற்கு?' 

'என்னையா? மண்ணாந்தையாக இருக்கிறீர். பல மைல்களுக்கப்பாலிருந்து சுரங்கம் தோண்டி இணைய உலகின் பலம் குறைந்த வாசலுக்குள் நுழைந்து விட்டால் அப்புறம் என் வாள் வீச்சைப் பாரும். ஹோ பல கோடி தலைகள் உருளும்; பந்தாட நவகோடி கைகள் நீளும்;..' 

'ஐயோ ஐயோ....என்னய்யா இணைய உலகுள் நுழைவது என்றால் நிஜ உலகு என்று நினைத்து விட்டீரா?' 

'ஓ மாய உலகா? அதற்கும் வழி உண்டு.....ஜய் ஜக்கம்மாஆஆஆஆஆஅ....' 

'சூ...சும்மா இப்படிக் கத்தக் கூடாது. தெருக்கோடியில் ஜக்கம்மா கருவாட்டுக் கடை போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். காதில் விழுந்தால் 'டேய் பேமானி! யார்ரா என்னைப் பேர் சொல்லிக் கூப்புட்றது கய்தே...கஸ்மாலங்....நருக்கிப் புடுவேன் நறுக்கி....' என்று பத்ர காளியாய் விளக்குமாத்துக் கட்டையை எடுத்துக்கொண்டு வந்தால் அப்பறம் உம்ம பாடு பேஜாராப் பூடும்' 

தடால் என்று வீரு கீழே விழுந்து வணங்கினார். 

'என்னய்யா பண்றீரு?' 

'என் தாய் ஜக்கம்மா உங்கள் தெரு மூலையில் உட்கார்ந்து கருவாடுக் கடை போட்டு அமர்ந்திருக்கிறாளா? என்ன பெரிய மனிதர்கள் நீங்கள் அவள் அருள் பெறுவதற்கு?' 

'சரி கிழிஞ்சுது....மேல சொல்லுங்க. இணைய உலகம்ங்கறது நிஜ உலகம் இல்ல. கணினிக்குள்ள தெரிகிற மின் வெளி நிழல் உலகம்.' 

'ச..ச.. என்ன மனிதர்கள் நீங்கள் வெட்கமில்லாமல்...' 

'ஏன் சார் இந்த வெட்கம்?' 

'பின்ன கணிகையின் உள்ளே தெரிவதையெல்லாம்...சீ சீ.....' 

'என்னது கணிகையா? ஓ.....சரி சரி...சமத்து...கணினி ஸ்வாமி கணினி....கணிகை இல்லை' 

'அப்படி என்றால்?' 

'அதாவது அந்தக் காலத்துல மாய மந்திரக் குளிகை மாதிரி இந்தக் காலத்துல மின் திறனில் கணக்கும் எழுத்தும் சித்திரமும் சலனமும் காட்டும் மாயப் பெட்டி' 

'ஓஹோ! மந்திரவாதிகளின் பொழுதுபோக்கு மரப்பாவையோ?' 

'அதெல்லாம் இல்ல சார். கேளுங்க. இன்னிக்குத் தகவல், தொடர்பு எல்லாம் இந்தப் பொட்டியை வைத்துக்கொண்டுதான் உலகத்தில் நடக்கிறது.' 

'புரிகிறது சூழ்ச்சி....பரங்கியரின் சதி வேலையும் புரிகிறது.....' 

'வீரு சார்! நிகழ்காலத்துக்கு வாங்க. இன்னிக்கு பலம் என்பதே வாள் என்பதில் இல்லை. பேனாவிலும் கூட இல்லை. தகவல், தொடர்பு, விளக்கம் இதில்தான் இருக்கிறது.' 

'ஓ வெறும் மந்திரிகளின் வேலை. மாமன்னனின் பணி அதுவென்றால் இழுழுழுழ்க்கு...' 

'நீ எவ்வளவு ழுழுழுழ்க்கினாலும் சரி. அந்தக் காலம் இப்பொழுது இல்லை. இது தகவல் காலம். இன்று பேரரசன் என்பவன் சாதாரணக் குடிமகன்' 

'சீ வெட்கம்...குடிகாரப் பயலை மன்னன் ஆக்குவதா?' 

'ஐயோ.....குடிமகன் என்றால் சாதாரண தேச ப்ரஜை' 

'ஓ அப்படி அரசியல் பாஷையில் சொல்லுமே தெளிவாக' 

'சரி வாரும் போய் நட்டுவனாரையும், கனகத்தையும்....ஓ சாரி....நட் கனக்ஷனை வாங்கிவிடுவோம்.' 

'நான் வருவதா? தளபதியை அனுப்பினால் கைது செய்து கொண்டு வந்து நிறுத்துகிறார்..' 

'தளபதியெல்லாம் ஏற்கனவே நெட்கஃபேயில் வீடியோ கேம்ஸ்ஸில் மும்முரம். நீர் இப்படியே மஞ்சளைரைத்தாயா வசனம் பேசிக்கொண்டிருந்தால் அவர் கில்லாடியாகி ஆட்சியைப் பிடித்து விடுவார்' 

'அப்படியா? சொல்கிறீர். அதான் சில நாளாய் அவரைக் காணவில்லை. கேட்டால் ஒரு சின்ன காளை மாட்டில் ஏறி உட்கார்ந்து கடும் வேகமாய்ப் போகிறார். அதுவோ பின்னால் சாணத்திற்குப் பதில் புகையாய் விட்டுக்கொண்டு போகிறது' 

'ஓ புல்லட்டா?' 

'புல்லக்கு எதற்கு?' 

'ஐயோ தேவுடா! புல்லட் என்றால் நீங்கள் பார்த்த நவீன வண்டி. சரி வாரும். கிளம்பும். சூட் போட்டுக்கிறிரா? இப்படியேவா?' 

'நான் என்ன பாவம் செய்தேன் சூடு போட்டுக் கொள்ள?' 

'சரி சரி இப்படியே வாரும்.' 

ஒரு வழியாய்ப் போய் கனக்ஷன் வாங்கினோம். கையெழுத்துப் போடும் இடத்தில் பேனாவில் போட மாட்டேன் என்று வாளை எடுத்துக் கட்டை விரலில் கீறி ரத்தத்தில் கையெழுத்திட்டார். ஆஃபீஸே பயந்து போய், அழகுப்பொண்கள் அலறி. முகம் வெளிறி, டீம் லீடர் கெஞ்சாக் குறையாக ' சார் ப்ளீஸ் அவரிடம் பேனாவில கையெழுத்து வாங்கிவிடுங்கள்' என்று சொல்ல, எனக்கு ஒரு உத்தி -- 

'வீரு சார்! அந்நியனின் ரத்தத்தில் கையெழுத்திட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே.' 

'ஆமாம் எங்கு போவது?' 

'உமக்காகவே இந்தக் குப்பியில் நிரப்பி வந்தேன். பூந்து விளையாடும். நீல ரத்தம்' 

'ஆஹா...வீராதிவீர சூராதிசூர தீர பராக்ரம....என மனம் அறிந்து ந்டந்த, மதியூகியான, மந்த்ராலோசனா வல்லப...' 

'போதும் போதும் ஆடோகாரன் லேட்டாச்சுன்னு சத்தம் போட்றான் பாரும்...' 

ஒரு வழியாய்ப் போட்டுவிட்டு அந்த என்ஜினீயரும் வந்து ஃபிக்ஸ் செய்துவிட்டுப் போனார். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டுக் கற்றுக்கொடுக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. 

ஆனால் திடீரென்று ஆளைக் காணவில்லை. ஒரு நறுக்கு ஓலை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். 

'நான் இணைய உலகினுள் போயிருக்கிறேன். வென்று மீளுவேன். அந்த ஜாக்சன் துரை உள்ளே எங்கோ போய்க்கொண்டிருந்தார். கூப்பிடக் கூப்பிட நிற்காமல் ஓடினான் கோழை. விட்டேனா அவனை. பிடித்து வந்து மீண்டும் அவனைத் தூஉக்கிலிடும் நாள் வெகு தொலைவில் இல்லை. நீங்கள் செய்த இந்த உதவிக்கு எவ்வளவு ஜன்மம் எடுத்தாலும் என்ன கைம்மாறு செய்வேன்? இனி என்னுடைய ஆஸ்தான சிம்மாசனத்தை உம் இஷ்டத்துக்கு யாருக்கு வேண்டுமானாலும் நீர் கொடுக்கலாம். ஆனால் நீர் மட்டும் அதில் உட்கார்ந்து விடாதீர். ஏனெனில் உட்காரும் இடத்தில் ஆணி இருக்கிறது. யாரிடமும் சொல்லாதீர்' 

இவரை எங்கு போய்த் தேடுவது? முதலில் ஜாக்ஸன் துரை எங்கே என்று பார்க்க வேண்டும். அவரோடு சட்டையைக் கோத்துக்கொண்டு நிற்பார். அதுவரையில் சிம்மாசனம் காலி. யார் வேண்டுமானாலும் உட்காரலாம். ஆனால் என்ன வீருவைப் போல் நீங்கள் வீரமானவரா என்பதுதான் தகுதி. 

***  

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*