காமிக்ஸ் என்ற கலை வடிவத்தில் வாழ்வின் சிக்கல்களைத் தரலாம் வரிசைக் கட்டமிட்ட வடிவ அணிகளாய்.
ஆனால் அளவையியல், கணிதம், தத்துவம் ஆகிய முயங்கும் நுண்ணிய கருத்துத் தளங்களில் புழங்கிய மனிதர்களின் வாழ்வையும், கருத்தையும் அவர்களின் உணர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு இப்படிக் காமிக்ஸ் ஆக்குவதென்றால் கொஞ்சம் தைரியம் வேண்டும்.
ஆக்கினது மட்டுமின்றி, அதை மிகவும் மயித்தைப் பிடிக்கும் விறுவிறுப்புடன் அமைப்பதென்றால் உண்மையில் அந்த நபரோ, குழுவோ மிகவும் பாராட்டுக்குரியவர்களே.
பெட்ராண்ட் ரஸ்ஸலின் வாழ்க்கை வளர்ச்சியையும், அவர்தம் கருத்துப் பரிணாமங்களையும் இப்படி கதைபடச் சித்திரத் தொடராக ஆக்கித் தந்திருக்கிறார்கள்
Apostolos Doxiadis, Christos H. Papadimitriou ,
Alecos Papadatos , Annie Di Donna
என்ற இந்த குழு.
ஆக்ஸியம்ஸ்(axioms) என்பதை எதிர்த்து முதலில் சிந்தித்தவர்களில் ஒருவர் ரஸ்ஸல். மிகவும் சரியாக நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான அணுகுமுறையாக கணிதம் அமைய வேண்டுமானால் அதில் அடிப்படையில் அமைந்து வரும் 'நிரூபணம் தேவையில்லாத தன்னைப் போல் வாஸ்தவமாகக்' கருதப்படும் ஆக்ஸியம்ஸ் உள்பட நிரூபணங்களுக்கு உட்படுத்தியாக் வேண்டும் என்று சொன்னவர் ரஸ்ஸல்.
செட் தியரியைக் கண்டுபிடித்த காண்டர், பூலேயின் கணித வாய்பாடுகளுக்கு மேல் கணிதத்தைக் கொண்டு சென்ற கோட்லப் ஃப்ரெக், இன்னும் பலர் பிற்றைய வாழ்வில் உளவியல் ரீதியான மருத்துவத்திற்கு ஆளானார்கள் என்பது யதேச்சையானதா என்பதை நூலாக்கக் குழுவின் வாதப் படிவங்கள் நூலுக்குள்ளேயே அமைக்கப்பட்டு சித்திர நூலுக்கு பெரும் ஆழத்தை ஏற்படுத்துகிறது.
தத்துவ இயல் அறிஞர் ஆல்ப்ரட் வொயிட் ஹெட்டின் ஊக்கம் ரஸ்ஸலின் ஆக்கங்களுக்குப் பக்கபலமாய் இருந்திருக்கிறது. விட்கன்ஸ்டைன்னின் வளர்ச்சிக்கு ரஸ்ஸலின் ஊக்கம் அமைந்திருக்கிறது.
உணர்ச்சியற்ற கணிதம் என்பது வெளியிலிருந்து நாம் காணும் தோற்றப் பிழை. அதில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளுக்கும் ரத்தமும், சதையும் இருக்கிறது என்பதை நூல் நன்கு நம் மனத்தில் பதிய வைக்கிறது.
'தன்னில் தான் அடங்காதவை அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய கோளத்தில் போட்டு வைப்போம். இப்பொழுது இந்தக் கோளம் தன்னில் தான் அடங்கிய ஒன்றா? இல்லையே. அப்படியென்றால் தன்னில் தான் அடங்காதவை என்ற தொகுதியுள் சேர்ந்து விடும் தானே! அப்படி சேர்ந்து விட்டால், தன்னில் தான் அடங்காதவை எல்லாம் இந்தக் கோளத்துள் அடக்கம் என்ற நியதியின் படி தன்னில் தான் அடங்கியதாய் ஆகிவிடும் தானே?'
இதுதான் குத்து மதிப்பா சொன்னா ரஸ்ஸல் புதிர் சிக்கல் என்பது. (Russell Paradox) இதன்படி ஸெட் தியரியே கேள்விக்குள்ளாக ஆகிவிட்டது.
கோட்லப் ஃப்ரெக், ஸெட் தியரியை வைத்துத் தாம் எழுதிய அல்ஜீப்ரா பற்றிய தம் நூலின் இரண்டாவது பாகத்தை முடித்து வெளிக்கொணரும் நிலையில் இந்த ரஸ்ஸலின் மறுப்பால் தம் கொள்கை முழுவதும் அடிப்படை அற்றதாக ஆக்கப்பட்டதை உணர்ந்து கோட்லெப் ஃப்ரெக் உடனே பதிப்பகத்தாரிடம் போய் அச்சுக்கு ரெடி செய்த அத்தனை அச்சுக் கோப்பையும் அழித்து விடும் படி சொல்லிவிட்டார். பதிப்பகத்து நல்ல மனிதர் கெஞ்சிக் கேட்கவே, சரி என்று நூலை அச்சடிக்கச் சொல்லிவிட்டு கடைசி பக்கத்தில் தம் நூல் வெளி வரும் நிலையில் ரஸ்ஸலின் மறுப்பு வெளிவந்து அதனால் தம் நூல் அடிப்படையற்றதாக ஆகிவிட்டதாக வெளிப்படையாகக் கூறினார். (இதெல்லாம் பார்த்து ஆச்சரியப் படவில்லை என்றால் என்ன பயன்?)
நூலாக்கியோர் வாயிலாகவே கேட்பதற்கு யூ ட்யூபிலும் மூன்று பகுதிகளில் இந்தச் செய்தி இருக்கிறது.
ஒரு நல்ல நூல். அளவையியல், கணிதம், தத்துவம் ஆகியன ஒன்று சேரும் தளத்தில் ஆழ்ந்த வேலை செய்து தம் வாழ்வை ஈடுபடுத்திய தற்கால விஞ்ஞான அறிஞர்களின் வாழ்வும், கருத்தும் -- அனைத்தும் சேர்ந்து ஒரு புதிய கலைப் படிவத்தில் ஒரு புதிய முயற்சி.
முயற்சி புதிது எனினும் ஈடுபாடும், திறமையின் வெளிப்பாடும் நூலைப் பெரும் வெற்றியாக்கித் தந்திருக்கிறது.
***
<< Home