அறிவும் பித்தும் (தொடர்ச்சி)
கணிதம், அளவையியல், தத்துவம் இதனூடே நெளிந்து, குழைந்து, தழைத்து, நசுங்கி பல அனுபவங்களுக்குள்ளாகும் வாழ்க்கைகளை 'லாஜிகாமிக்ஸ்' நன்றாகவே சித்திரம் ஆக்குகிறது, படங்களாலும், சொற்களாலும்.
ரஸ்ஸல் தன் கருத்துகளால் பலரைச் சந்திக்கிறார் என்று ஆசிரியர் குழாம் சமயத்தில் நடக்காத சந்திப்புகளையும் பக்கங்களில் நடந்ததாகக் காட்டும் பொழுது அந்த உத்தி ரீதியான பொய்மை பல மெய்மைகளை வெளிச்சம் பெய்து காட்டுகிறது.
விட்கன்ஸ்டைனின் கருத்துலகம் ரஸ்ஸலின் ஊன்றுகோலைப் பிடித்து எழுவது. ஒரு நிலையில் ரஸ்ஸலின் ஆயிரக்கணக்கான பக்கங்களின் உழைப்பையே வ்யர்த்தம் ஆக்குவது. ஆனால் ஒன்று ஒன்றை இல்லையாக்கிவிடுமா? விஞ்ஞானம் இல்லை என்று தூர எறிந்து போனாலும், கலை ஒவ்வொன்றின் முக்கியத்வத்தை உணர்ந்து பேணிக்காக்கும்.
இந்தக் கருத்தை அடித்து வீழ்த்தி அந்தக் கருத்து, அந்தக் கருத்தை அடித்து வீழ்த்தி மற்றொன்று என்று போகும் விஞ்ஞான முன்னேற்றம் ஒரு நிலையில் மிகச் சரியான ஒற்றை வழி என்பதே கிடையாது என்று நிதானிக்கும் நிலை வரலாம் என்பதை கணித இயல் ஆய்வுகளில் மூழ்கிய அறிஞர்களின் வாழ்வுகளிடை அவர்களின் பரிமாற்றங்களில் வைத்துக் காட்டும் போது க்ளைமாக்ஸின் இருள் கூம்பில் ஒரு நிதர்சனம் மெல்லத் தெரியத் தொடங்குகிறது.
அறிவின் கறாரான துறைகளான கணிதம், அளவையியல் ஆகிய துறைகளில் ஆழ்ந்து போகும் பெருசுகளின் வாழ்க்கைகளிலோ மன நோய்ச் சிக்கல்கள். உளத்தின் விஷப்பிளவு வேதனைகள். உலக சிக்கல்கள் அனைத்தையும் ஒற்றைச் சமன்பாட்டில் தீர்க்க வழி தேடும் புண்ணியவான்களின் அன்றாட வாழ்க்கைகள் சமனபாடு குலைந்து தடுமாறும் அவலங்கள். எந்தத் துறையானாலும் மனிதன் தன்னுடையது எதையேனும் பலி தந்துதான் தன் நோக்கத்தை அடைய வேண்டியிருக்கிறது.
மனித குலத்திற்கு நெருப்பு கொண்டுவந்த ப்ரொமித்யூஸ் பாறைகளிடைக் கட்டுண்டு, பருந்துகள் கொத்த நொந்துதான் ஆகவேண்டும் என்ற காலத்திலிருந்து, ஹிட்லரின் சர்வாதிகார அழிகர உலக ஆட்டத்தில், அவன் அனுப்பும் செய்திகளை ரகசியக் கட்டை உடைத்து ஆராய, புதிர்நீக்கி யந்திரங்களைக் கண்டுபிடித்து அதன் மூலம் கணினிகள் ஏற்பட வழிவகுத்த ஆலன் டூரிங், ஓரினச்சேர்க்கை இச்சைக்காக வலுக்கட்டாய மருத்துவம் ஆஸ்பத்திரியில் அடைக்கப்பட அதனால் மனம் நொந்து தற்கொலைக்குப் போன இன்று வரையும் -- மனிதன் தரவேண்டிய பலி மாறுவதில்லை.
எல்லாவற்றையும் பிளந்துகட்டி யோசித்த விட்கன்ஸ்டைன் தன் கோடிக்கணக்கான டாலர் சொத்தை வேண்டாம் என்று தன் சகோதரிகளுக்குக் கொடுத்துவிட்டு எங்கோ ஆல்ப்ஸ் மலைப் பள்ளத்தாக்கில் பள்ளிக்கூடத்து வாத்தி உத்யோகம் பார்க்கப் போனான் என்று வியக்கும் அதேகணம், அவன் அங்கு சிறந்த கல்வி கற்பிக்கும் முறையாகக் கண்டது 'வாத்யார் பிரம்பு'தான் என்பதை நாம் அறியும் பொழுது எங்கோ பெரும் மலையிலிருந்து உருட்டிவிட்டது போல் உணர்கிறோம்.
சரி அதற்கு மாற்றாக ரஸ்ஸல், தன் வீட்டையே புதிய கல்வி போதிக்கும் வழியை பரிசோதிக்கும் தளமாக ஆக்கித் தன் மகனையும் சேர்த்து அனைவருக்கும் தானும் தன் புதிய மனைவி டோராவும் ஆசிரியர்கள் மட்டுமே என்று சொல்லி, சுதந்திரம் என்பதே கல்வி வழி என்று ஆக்கினாலும், நிதர்சனத்தில் கல்வி வழி தோற்றது, பெற்றோரின் பாசம் இன்மையால் மகன் மனப் பிளவிற்கு ஆளானான் -- இதுதான் கடைசியில் கண்ட பலன்.
அறிவின் ஆகப்பெரிய கறார்த்தனத்திற்கும் டேக்கா கொடுக்க வல்லமை பெற்றது நிஜ வாழ்க்கை -- இதைத்தான் பெரும் பாடமாகக் கற்கின்றனர் கற்பிக்க நினைத்த வல்லுநர்கள்.
"செப்படி வித்தைகள் செய்த பின்னும் - கோடி
சென்மம் எடுத்துச் சிறந்த பின்னும்
எப்படி வாழ்வது என்பதே யிங்கு
யார்க்கும் விளங்கா ததிசயமே"
என்று பாடுகிறார் திருலோகம்.
ஆன்மிகமும் தவமும் காட்டில் கண்மூடி அமர்ந்த நிலையில்தான் உண்டு என்று நம்பும் நாம், மேலை நாடுகளின் வரலாறுகளில் அறிவுத் துறையிலும் வாழ்வின், உலகின் பொருள் காண வேண்டி எத்தனை விதங்களில் தியாகமும், கடுந்தவமும் புரிந்திருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டால் நம் பூனைக்கனவு நீங்கும். அதற்குக் கைக்கெட்டிய வழிதான் இந்த லாஜிகாமிக்ஸ்.
***
<< Home