2011/6/28 selva kumaran
"தன் ஆண்டவனைப் பற்றி நன்கு தெரியும். தன்னை ஒன்றும் செய்ய மாட்டார். என்ற நிச்சயம் ஏற்படுத்திய நிச்சிந்தை அன்று பிரபந்நர் கூறவரும் அம்சம்.
உடையவன் அன்றோ தன் உடைமைக்காகப் பதறுவான். நமக்கு என்ன வந்தது? என்ற 'ஸ்வரக்ஷணத்தில் அந்வயமற்றிருக்கை" மேலே உள்ள இரு வரிகளுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது? புரியவில்லையே.
தன் மீது ஆண்டவன் மிகவும் அன்பு உடையவன். அவன் ஏதாவது தனக்குக் கஷ்டம் கொடுத்தாலும் அது உண்மையில் தனக்கு நன்மை பயக்கும் என்றேதான் கொடுப்பான். எனவே ஆண்டவனை நன்கு தெரிந்த பக்தர் பயப்படாமல் இருக்கிறார். இங்கு தான் என்பது அளவுகோல். தனக்கு எது நன்மை என்பது தனக்கு மிக முக்கியமான ஒன்று. அந்த தன நன்மையை ஆண்டவன் தருவான். தன்னை ஒருபோதும் ஆண்டவன் கைவிட மாட்டான். தன் ஆண்டவனைப் பற்றித் தனக்கு நன்கு தெரியும். இது முல்லாவின் கதையால் கூறப்படுவதாக நாம் அஸ்யூம் செய்து கொள்ளலாம். (காரணம், முல்லாவின் கதைகள் அப்படி ஸிம்பிள் அல்ல. அவை கொஞ்சம் ஏடாகூடமானவை. அது வேறு விஷயம்) மனைவிக்குக் கணவன் தீங்கு கருதான் என்ற பொது உலக வழக்கின்படி, பக்தனுக்கு ஆண்டவன் தீங்கு கருதான் என்ற காரணத்தால், அந்த நிச்சயம் நன்கு மனத்தில் இருப்பதால் பக்தர் தைரியமாக இருக்கிறார்.
ஆனால் பிரபந்நர் கூறவருகின்ற கருத்து முற்றிலும் அலாதியானது. ஒரு ஜீவ வ்யக்தி உயிருக்கு நடுங்கக் கூடிய அனைத்து சூழ்நிலை, உள ரீதியான காரணிகள் அனைத்தும் ஒரு கணத்தில் குவிகின்றன. எப்பேர்ப்பட்ட நிச்சயமும் ஆட்டம் காணும் திடீர் நிகழ்வு, திக்குத் திசையறியா வெருட்டல். நின்று நிதானிக்கும் சூழல் கிஞ்சித்தும் இல்லை. ஆனால் இங்கு பிரபத்தியில் நன்கு நிலை நின்றவருடைய மனப்பான்மை என்ன?
என் ஆண்டவன் என்னைத் துன்பப்பட விடமாட்டான். அவனை நன்கு எனக்குத் தெரியும். எனவே நான் பயப்படாது தைரியமாக இருக்கிறேன் -- இது அன்று பிரபத்தியில் நிலைநின்றவரின் மனநிலை. பின் என்ன?
பிரபத்தியில் நிலை நிற்பவன் முதலில் தன் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றித் தெளிந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறான். இந்த ஸ்வரூப ஞானம் பூரணமாய் இருக்கும் நிலைதான் பிரபத்தி.
தன்னுடைய உண்மையான ஆத்ம இயல்பு என்பது தான் அவனுடைய உடைமை, அவனுக்கு சேஷத்வம் கொண்டவன், அவனுடைய சரீரமாக இருப்பவன். எனவே தன்னைப் பற்றியோ தன் நல்லது கெட்டது பற்றியோ, தன் ஜீவிதம், ஆபத்து நன்மை இதெல்லாம் பற்றியோ தனக்குச் சிறிதும் சம்பந்தமில்லை. இந்த உடலைப் பற்றி உள்ளிருக்கும் உயிரன்றோ கவலைப்படுகிறது. உடம்பா தன்னைப் பற்றித் தானே கவலைப் படுகிறது?
உயிர் ஜாக்ரதா அவஸ்தையில் இருந்தால் உடல் அங்கும் இங்கும் ஏவினபடி அலைகிறது. தூங்கினால் போட்ட இடத்தில் கிடக்கிறது. திடுதிப்பென்று உயிர் மிக உயர்ந்த இடத்திலிருந்து குதி என்றால் உடனே குதிக்கிறது. தான் செய்யும் இத்தனை செயல்களின் பலன்களையும் தானா அனுபவிக்கிறது.? உயிருக்கு உடலாக இருக்கையினாலே இதெல்லாம் செய்து உயிருக்கு அன்றோ அனுபவத்தைத் தந்து நிற்கிறது.
இந்த ஆத்மா உடல் எல்லாம் உள்ளிருக்கும் அவனுடைய உடைமை, உடல், சொத்து. அதனால் நான் உயிர் எனக்குச் சொந்தமானவன் என்று சொல்வதே பெரும் திருட்டு. இதற்கு ஆத்ம அபஹாரம் என்று பெயர். ஆத்மாவைக் களவாடுதல் என்று பெயர்.
நமக்கு சைதன்யம் இருப்பதன் பலனே என்ன என்றால் இவை அனைத்தும், தானும், தன் உடலும், தன் தான் என்று சொல்ல எந்த உரிமையும் இல்லாதபடி அவனுடையது, அவனுக்கே உரித்தானது என்று அநவரதம் அநுஸந்தித்தலே ஆகும்.
எனவே பிரபத்தியில் நிலைநின்றவர் என்ன கருதுகிறார்? என்ன ஏற்பட்டால் என்ன? எது நிகழ்ந்தால் நமக்கு என்ன? இந்த ஆத்மாவோ, உடலோ, ப்ராணனோ, வாழ்வோ எதுவும் என்னுடையது இல்லை. எனக்கு இவற்றில் சிறிதும் என்னுடையது அல்லது என்னுடையதாக ஒருகாலத்தில் இருந்தது என்ற பாத்யதையோ அந்வயமோ கிஞ்சித்தும் இல்லை.
நான் எனது என்ற அனைத்தும் அவன் உடைமையாய் இருக்க எனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் எனக்கு என்ன அக்கறை? மேலும் இந்த சூழ்நிலை மாற்றங்கள், விதியின் மாற்றங்கள் எல்லாமே அவன் உள்ளுயிராய் நிற்க அவனுடைய விபூதியல்லவா இவையெல்லாம்? -- இவ்வாறு பிரபத்தியில் நிலைநின்றவரின் மனநிலைபடி அவருக்குச் சூழ்நிலையின் இக்கட்டே கிஞ்சித்தும் இல்லை. ஏதோ கடற்கரையில் பாறையில் சாய்ந்துகொண்டு காற்று வாங்குவது போல் அமைதியாக இருக்கிறார். இங்கு தான் என்பதே இல்லை, அதாவது தன்னுடையதாகச் சொல்லிக் கொள்ள.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
<< Home