வரவர எழுதுவதற்கே பெரும் வெட்கமாக இருக்கிறது. ஒரு ஞானம் இல்லை; ஓர் அனுஷ்டானம் இல்லை; நாத்திகன் என்னை ஒப்பிட்டால் பரம ஸாத்விகன். ஏதோ இரண்டொரு நூல்களைப் படித்த கோளாறு நாமும் எழுதலாமே என்று அசட்டு தைரியத்தைக் கொடுத்து என்னைக் காலத்திற்கும் அவமானப்பட வைக்கிறது.
இப்பொழுது எனக்குத் தோன்றுகிறபடி பார்த்தால் பேசாமல் எதையும் கல்லாது, எதையும் எழுத்து வம்புக்கே போகாமல், ஏதோ தானுண்டு, தன் வேலை உண்டு, அன்றாடம் ஏதோ ராமா கிருஷ்ணா என்று எப்பொழுதாவது நினைத்துப் பார்த்துவிட்டு உலகத்தில் ஒழுங்காகப் போகும் ஜீவன் கொடுத்து வைத்தவன்.
என்னைப் போல ஆசாமிகள் வெறும் இரைச்சல் இடுகின்ற பேர்வழிகள். என்ன யோக்கியதை இருக்கு என்று நானும் கிருஷ்ணனைப் பற்றி எழுதத் துணிகிறேனோ! ஒரு வேளை யாராவது கோமாளிகள் இருந்துகொண்டே இருக்க வேண்டும் போலும்!
மதுராவுக்கெல்லாம் வந்த பிற்பாடு ஸ்ரீகிருஷ்ணன் தன் அணுக்கத் தோழனை அழைத்து, 'போய் கோகுலத்தில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள். கோபிகள், கோபர்கள் எல்லாம் சௌக்கியமா? அம்மா அப்பா எப்படி இருக்கின்றார்கள் எல்லாம் பார்த்து வந்து சொல்லு. இதை நீ செவ்வனே செய்துவிட்டால் நீ அடிக்கடி கேட்கும் முக்தி நிலை உனக்குத் தந்துவிடுகிறேன்' என்று சொல்லி அனுப்புகிறான்.
தோழனும், 'ஆஹா! அதற்கென்ன? போய்வந்தால் போகிறது' என்று கிளம்பி கோகுலம் நெருங்கியதும், ஸ்ரீகிருஷ்ணனே வந்து விட்டது போல் அனைவரும் ஓடிவந்து தேரைச் சூழ்ந்து கொண்டு அன்பைப் பொழிகின்றனர். ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி விசாரிக்கின்றனர். அவன் இப்பொழுது என்ன செய்கின்றான்? எங்களை நினைக்கின்றானா? என்றெல்லாம் கேள்வி. ஒருவர் மாறி ஒருவர்.
பலர் ஒன்று சேர்ந்து உடனே ஸ்ரீகிருஷ்ணன் எப்படி உட்காருவான், எப்படி நடப்பான், எப்படிப் பார்ப்பான் என்று சொல்லிக் கொண்டே வந்தவர்கள் அவன் நினைவில் ஓ என்று அழுகின்றனர்.
ஒருத்தி ஒரு மயிற்பீலியைச் சூடியபடியே உத்வேகமாக அங்கிருந்து வந்து, 'ஹோ அன்பர்களே! ஏன் அழுகின்றீர்கள்? நான் இங்குதானே உள்ளேன். நான் எங்கு போனேன்?' என்று தன்னை ஸ்ரீகிருஷ்ணனாகவே நினைத்துக் கொண்டு குழல் ஊதுகிறாள்.
இன்னொருவள் அவளை ஸ்ரீகிருஷ்ணா என்று விளித்தபடியே அணுகி 'உனக்கு வெண்ணெய் பிடிக்குமே, பால் பிடிக்குமே, தயிர் என்றால் ஒரு கட்டு கட்டுவாயே, பாலில் செய்யும் இனிப்புகள் இதோ உனக்காகச் செய்து செய்து நித்தமும் வீணாகப் போகிறது. இந்தா உண்பாய். நீ உண்ணும் போது உன் கன்னத்தில் குழி விழுமே, அதைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது?
ஓ! உன் தோழன் உண்டால்தான் நீ உண்பாயா? வாருங்கள் தோழரே! ஸ்ரீகிருஷ்ணனின் தோழமை பெற்ற நீர் எவ்வளவு பெரியவர்! அந்த இந்திரன், பிரம்மா, சிவன், ஏன் எங்கள் நந்தபோபரைவிடவும் நீரன்றோ பெரியவர்.
இதோ ஸ்ரீகிருஷ்ணன் குழந்தை. பாவம் அவன் உண்டு எவ்வளவு நாள் ஆகிறதோ! அங்கு ராஜ்ய பாரம் எல்லாம் உணவு உண்ணக் கூடப் பாவம் குழந்தைக்கு நேரம் இருக்காதே.
இங்கு கன்று காலிகள் எல்லாம் அவன் சொன்ன பேச்சைக் கேட்கும். அங்கோ முரட்டு மனிதர் ஆயிற்றே! குழந்தையை சதா அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுக் கேட்டு நச்சரிப்பார்களே! வாருங்கள் இப்பொழுதாவது ஸ்ரீகிருஷ்ணன் நன்கு உண்ணட்டும்.'
என்று கூறி அழைக்கிறாள்.
வந்த தோழரோ நெளிகிறார். அம்மா......ஸ்ரீகிருஷ்ணன் நகரத்தில் அன்றோ இருக்கிறார் அம்மா ...மகாராஜாவாக என்று சொல்ல வாய் வரவில்லை. தொண்டை அடைக்கிறது.
அவள் யாரைப் பார்த்து ஸ்ரீகிருஷ்ணன் என்று மயிற்பீலி சூட்டினாளோ அவளைப் பார்த்தால் அசல் ஸ்ரீகிருஷ்ணன் போலவே இருக்கிறது. அதே மந்தஹாஸம். அதே குறும்புப் பார்வை!
ஒரு கணம் தானே ஆடிப்போய், ஸ்ரீகிருஷ்ணன்தான் தன்னையும் அனுப்பிவிட்டுக் கூடவே பின்னோடேயே தானும் வந்துவிட்டான் போலும் என்று பிரமித்துக் கிருஷ்ணா என்று கூவப் போனார்.
ஸ்ரீகிருஷ்ணனாகத் தன்னை உணர்ந்த அந்தப் பெண் திடீரென்று முக பாவம் மாறி ஆக்ரோஷமாக ஆனாள்.
'ஏண்டி பைத்தியம்! உனக்கு அறிவில்லை. நாம் எல்லாம் ஒன்றும் அறியாத சேரிப் பெண்களடி! மட்டி ஜனங்களான கோபிகள். மகாராஜாவின் முன் அவர் திருமுகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது. தலையைக் குனிந்தவாறே மண்டியிட்டு வணங்கி அவர் எழலாம் என்று சைகை செய்ததும் எழவேண்டிய பஞ்சைப் பனாதைகளடி! நீ என்ன பழைய கிருஷ்ணன் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாயா? அவர் தோழர் வந்திருக்கிறார். மரியாதையாக வணக்கம் செய்து வழிவிட்டு விலகி, அவரைத் தொந்தரவு படுத்தாமல் போங்கள்.
நமக்கு உறவு நம்மோடு பிறந்த விதி. அது ஒன்றுதான் எந்த மதுராவுக்கும் போகாமல் நம் கூடவே பிரியாமல் இருக்கும். பைத்தியக் காரி! நாகரிகர் ஒருவர் வந்தால் நடந்துகொள்ளும் முறை கூடத் தெரியாது.?'
என்று கத்தியவள் ஹோ என்று அழத் தொடங்கிவிட்டாள்.
'ஐயா தோழரே! ஏனய்யா நீரும் கதறி அழுகிறீர்? என்ன ஆயிற்று சொல்லும்? ஏன் உம்மையும் விட்டுப் பிரிந்து போனானா அந்த வஞ்சகன்? அவனுக்கு அதுதான் கைவந்த கலையாயிற்றே! சொல்லும். ஏன் விம்முகிறீரய்யா?
ஏய் பாரடி! இந்தத் திருட்டுக் கிருஷ்ணன் செய்ததை. பாவம் நாம் தான் பஞ்சைகள். அவன் நாகரிகத்திற்கு நம்முடன் நட்பு வைத்தால் அது அவனுக்கு அந்தஸ்துக் குறைச்சல். பரவாயில்லை. நம்மை விட்டுப் பிரிந்தான் குழந்தை. ஆனால் இவருக்கென்ன? இவரும் நாகரிகர்தானே? இவரோடு பழகினால் அவனுக்கு மதிப்புக் குறைச்சலா? ஆனால் தோழரே! அது ஏதோ இப்படிச் சில சமயம் செய்யும். ஆனால் சம்த்துதான். நீர் அவனைப் பற்றிக் குறைவாக எண்ணிவிடாதீர்.
எங்கள் கிட்டு உண்மையில் சம்த்துச் செல்லக் குட்டி. ஆனால் சமயத்தில் செய்யும் சேஷ்டைகளும், குறும்பும், கொனஷ்டைகளும் தாங்காது. மானத்தை வாங்குவதுபோல் நன்றாகத் திட்டினால் 'ஹீ' என்று வெள்ளையாகச் சிரித்துத் தொலைக்கும். அப்பாவியா அடப்பாவியா என்று ஒன்றும் தெரியாது. நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன். தானாக வந்து உங்களிடத்தில் நைச்சியம் பண்ணி அன்பான அன்பு பொழியும் பாருங்களேன்.!'
தோழருக்கு இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தாங்கவில்லை. தரையில் விழுந்து 'கோ' என்று புரண்டு அழத் தொடங்கிவிட்டார்.
இத்தனையும் கோகுலத்தின் நுழைவாயில் கட்டத்திலேயே நடக்கிறது. இன்னும் தேரைப் பிரித்துக் கட்டவில்லை. குதிரைக்குக் கூட கொள்ளும் புல்லும் போடவில்லை. வந்தவரும் சிரம பரிகாரமும் ஆகவில்லை. என்ன பண்பாடற்ற ஜனங்கள்!
சரி வந்தவராவது கொஞ்சம் பொறுங்கள். குளித்து முழுகிவிட்டு வருகிறேன். சாவகாசமாகப் பேசுவோம் என்று சொல்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அவரும் காலம் காலமாக இந்தக் கோகுலமே கதி என்று திரிபவர் போல் அழுகிறார் சிரிக்கிறார், மரக்கிளையில் ஏறி ஊஞ்சலாடுகிறார். அவர்களோடு காலாறக் கொஞ்ச தூரம் போல நடந்துவிட்டு வருகிறார்.
இந்தத் தோழர் எவ்வளவு நாள் தங்கினார் என்று அவருக்கே நினைவில்லாத பொழுது சொன்ன சுகருக்கோ, என்னைப் போல் ஒரு வெறும் வாயாடிக்கோ நினைவு இருக்கும் என்று எதிர்பார்க்கலாமோ?
ஆனால் எப்படியோ மீண்டு வந்து ஸ்ரீகிருஷ்ணனின் அரண்மைனையை அடைந்தவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவராய்த் தம் ஜாகைக்குப் போகும் பொழுது ஸ்ரீகிருஷ்ணனுக்குத் தாங்கவில்லை.
'நண்பா! சொன்னபடி உனக்கு முக்திப்பேறு தருகிறேன். அதெல்லாம் சொன்ன சொல் தவற மாட்டேன்.'
'கிருஷ்ணா! என்ன சொல்கிறாய்?'
'என்னப்பா! நீதானே முக்தி முக்தி என்று எப்பொழுது பார்த்தாலும் தொணப்பிக் கொண்டிருந்தாய். இதோ உன் சொத்து அது.'
'கிருஷ்ணா! ஒரு சின்ன விண்ணப்பம்.'
'என்ன?'
'இனி மறந்தும் தூக்கத்திலும் கூட நான் முக்தி என்று சொன்னால் காதில் போட்டுக் கொள்ளாதே. அதெல்லாம் எனக்கு வேண்டாமப்பா.'
'என்னது! முக்தி வேண்டாமா? பின்?'
'இல்லை கிருஷ்ணா! சொல்கிறேன் என்று கோபிக்காதே. நீ கூட என்னைக் கவனிக்காமல் அசட்டை செய்தாலும் பரவாயில்லை. உனக்கும் ஏகப்பட்ட ராஜ்ய காரியங்கள் இருக்கும். நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.
ஆனால் ஸ்ரீகிருஷ்ணா....எப்படிச் சொல்வேனப்பா.....நினைத்தாலே மயிர்க்கூச்செறிகிறது...சொல்லா நாவும் குளறுகிறது.....அந்தக் கோபிகளைப் பார்த்த பிறகு....கிருஷ்ணா.....ஓ....அந்த ப்ரேமை...அந்த பாவம்....அந்த அகண்ட ஏக்கம்....கிருஷ்ணா..... அந்த ப்ரேமையை மட்டும் எனக்குக் கொடு கிருஷ்ணா....முக்தி உன் விண்ணகப் பதவி,....ஏன் நீ கூட...எல்லாம் யாருக்கு வேண்டுமோ அவர்களுக்குக் கொடு. ஆனால் எனக்குக் கொடுக்க வேண்டும் என்று நீ ஏதாவது கருதினாயானால்...ஓஒ... அந்த ப்ரேமை...கோபிகளைப் போன்றதான பாவம்...அதைக் கொடு....அந்தக் கோபிகைகளின் நிழலில் எந்நாளும் நான் இருக்கும்படிச் செய்துவிடு.....இதை நீ மறுத்தால் இதற்கு மாற்றாக நித்ய நரகத்தையே தந்துவிடு.'
ஸ்ரீகிருஷ்ணன் விக்கித்து நின்றான். அவன் நினைவுகள் சுழன்றன. நிற்கவும் நடுக்கமுற்றவனாய்த் தன் தோழனைப் பிடித்தவாறே தூணில் சாய்ந்து கொண்டான். கண்கள் தாரை தாரையாக் கண்ணீரைப் பெருக்கின. ஸ்ரீகீதை சொன்னவாய் குழறியது.
'முக்தி வேண்டுமானால் தரலாம்.....பக்தி கூட தரலாம்......என்னைக் கூட தந்துவிடலாம்...ஆனால் ப்ரேமை....அந்த ப்ரேமை.....தோழரே! தயவு செய்து என்னை ஸ்ரீகிருஷ்ணனிடம் அழைத்துப் போவீரா? அவன் என்னைக் காண்பானா? அவனையே வாழ்வாகக் கொண்ட ராதை வந்திருக்கிறேன் என்று சொல்லும். இல்லை இல்லை நீர் ஏன் சொல்ல வேண்டும்? உண்மையான அன்பு இருந்தால் அவன் இந்நேரம் இங்கு வந்திருக்க மாட்டானா? அவன் அவ்வளவு கொடியவனா நண்பரே!'
ஸ்ரீகிருஷ்ணனின் பேச்சைக் கேட்டு திக் பிரமை பிடித்து பேச்சு மூச்சு அறைந்து நின்றான் தோழன்.
எங்குமுளன் கண்ணன்....ஆனால் இப்பொழுது எங்கு உளன் கண்ணன்?....இங்கா?...அன்றேல் அங்கா?....... ப்ரேமையில் ஆழ்ந்து தம்நிலை மறந்து நினைவிழந்து கிடந்தனர் இருவரும். எவ்வளவு நேரமோ தெரியவில்லை.
ஆனால் அதே நேரம் இன்னொருவரும் நினைவு தப்பி விழுந்தார் ஸ்ரீரங்கத்தில். சுவாமி நம்பிள்ளை. யாரோ ஒருவர் வந்து சொன்னார்களாம். -- அகளங்க நாட்டாழ்வான் கால்த்திலே. இடையன் ஒருவன் பாலைக் களவு கண்டதாகவும், அந்த இடையனைக் கட்டி அடித்தார்கள் என்றும் யாரோ வந்து சொல்ல நினைவிழந்து விழுந்தார் நம்பிள்ளை -- என்று சொல்கிறார் சோமாசியாண்டான்.
ஆனால் ஒரே ஒரு பாவி மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் குண்டுக் கல்லாய் இருந்தபடி எழுதிக் கொண்டிருக்கிறான் முழு நினைவுடன். வெட்கம்........!
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
<< Home