Thursday, May 26, 2011

ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ரம் -- பகுதி ஒன்று

ஜ்ஞாநாநந்தமயம் தேவம்

பல மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல் ஸ்ரீ ஏ எஸ் ராகவன் அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். தமிழ் நாவலாசிரியர். ‘மனிதன்’ என்ற நாவல் அந்தக் காலத்தில் பரிசு பெற்றது. என் தந்தைக்கு இனிய தோழர்.
பேச்சுவாக்கில் கூறினார். ‘ ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை மொழிபெயர்த்துத் தருகிறாயா? கூடவே ஆங்கிலம், விளக்கங்கள் என்று அனைத்தும் எழுதினாலும் நல்லது. நூலாகப் போடலாம் என்று எண்ணம் ‘ ஏகப்பட்ட வேலையில் இதையும் ஏன் இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மறுக்க நினைத்தவன் சரி என்று ஒப்புக்கொண்டு விட்டேன். ஆனால் ஒரு கண்டிஷன். என் கையெழுத்து எனக்கே புரியாது. எனவே நீங்கள் நான் சொல்லச் சொல்ல எழுதுவதாய் இருந்தால் மொழிபெயர்க்கலாம். கூடவே நாம் அதைச் சிறிது சிறிதாக ரசிப்பதற்கும் தோதாக இருக்கும் -- என்றேன். மனிதர் நல்ல ரசிகர். ஆஹா என்று ஒப்புக்கொண்டு விட்டார். (ஏன் கையெழுத்து? கணினியில்தானே தட்டப் போகிறீர்? என்றெல்லாம் கேட்கப்படாது. அந்த ஸ்தோத்திரத்தைக் கூடச் சேர்ந்து ரசிக்க எனக்குக் கூட்டாளி தேவை. அதற்குத்தான் இந்த ஏமாத்துவேலை. பாவம் அந்தக் காலத்து மனிதர். ஏமாந்தார். பலன் -- இருவருக்கும் பல பொன்னான பொழுதுகள்.

‘இவ்வளவு கவிநயமா இருக்கிறது இதில்? ஏதோ சின்ன வயசிலேந்து மனப்பாடமா நெட்டுரு போட்டுப் பாராயணம் சொல்றதுன்னு நினைச்சா இவ்வளவு பரிமாணங்கள்!! இவ்வளவு கருத்துச் செறிவுகள்!!’ என்று வாய்க்கு வாய் வியந்துகொண்டிருந்தார். இப்படி அநியாயமாக முதியவர்களை வேலை வாங்குவதில் நான் சமர்த்தன். கூட ரசிப்பதற்கு ஓராளை தேத்துவதற்கு இவ்வளவு பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் போகப் போக எப்படிக் காலத்தை ஓட்டப் போகிறேனோ தெரியவில்லை. சரி நாமோ அதற்கு நாயகமே? இன்று அந்த அசகாய சூரத்தனம் நிறைவு பெற்றது. திரு ஏ எஸ் ஆருக்கும், எனக்கும் ஒரு நல்ல திருப்தி. இன்னும் பல தடவை பார்க்க வேண்டும். நூலாவதற்கு முன் சில பரிஷ்காரங்கள் செய்ய வேண்டியன உள்ளன. ஆனால் ரசனையின் நேரங்கள் முடிந்து விட்டனவே என்று எனக்குச் சின்ன ஆதங்கம்.

தூப்புல் பிள்ளை என்றும், வேதாந்தாசாரியர் என்றும், வேங்கட நாதன் என்றும், ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் என்றும் ஸ்ரீவைஷ்ணவ உலகம் குலவாநின்ற பெரியவர் தேசிகன். வடமொழி, பிராக்ருதம், மணிபிரவாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் நூல்கள் இயற்றிய வள்ளல். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் மிக நுணுக்கமாக உள்பொதி கருத்தாய்க் கூறிச்செல்வர். பின் வந்தோர்க்குச் சில சமயம் பொருள் விளங்க சிரமப்படும். ஆனால் தேசிகரோ தமக்குத் தோன்றுமவையெல்லாம் எழுத்தில் விளக்கமாக இட்டு வைத்துவிடுவர்.






நல்ல காவியத் திறமை கொண்ட வடமொழி பத்யங்களை அருளியவர். அத்வைத பரமான பத்ய நாடகம் பிரபோத சந்த்ரோதயம் என்பதைப் போலவே விசிஷ்டாத்வைத பரமான நாடகமாக சங்கல்ப சூர்யோதயம் என்பதை எழுதியவர் சுவாமி தேசிகன்.






அவர் தம் ஆரம்ப காலங்களில் வித்யைக்கு அதிபதி தெய்வமான ஸ்ரீஹயக்ரீவரை உபாஸனை செய்தே பெரும் வித்வத்தும், கவி சாமர்த்தியமும் பெற்றதாகக் கூறுவர்.






ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரத்தில் தம் உபாஸனா மூர்த்தியினிடத்தில் தமக்குள்ள ஈடுபாட்டை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.






இனி ஸ்ரீஹயவதந ஹேஷா ஹலஹல த்வனி நம்மைக் காப்பாற்றட்டும்.






*






திருமல்கு தன்மை வேங்கடநாத ஆசிரியன்


கவிகட்கும் தார்க்கிகர்க்கும் சிங்கமெனத் திகழ்வோன்


வேதாந்தக் குரவரிலே விஞ்சு புகழாளன்


எப்பொழுதும் சந்நிதியாய் என்னுளத்தில் விளங்குகவே.






ஸ்ரீமாந் வேங்கடநாதா2ர்ய:


கவிதார்க்கிக கேஸரீ |


வேதா3ந்தாசார்ய வர்யோ மே


ஸந்நித4த்தாம் ஸதா3 ஹ்ருதி3 ||






***






1)






ஜ்நாநாநந்த3மயம் தே3வம் நிர்மலஸ்ப2டிகாக்ருதிம் |


ஆதா4ரம் ஸர்வவித்3யானாம்


ஹயக்3ரீவ முபாஸ்மஹே ||






ஞானமா னந்தமே உருவா னவனை வானவனை


மாசெலா மகற்றும் படிகமாம் துய்யநல் வடிவினனை


வித்தைகள் அனைத்தும் விளங்குமாதாரம் ஆனவனை


பரிமுகன் அவனையே பத்தர்யாம் தொழுதுப் பணிந்திடுவாம்.






***


2)


ஸ்வத: ஸித்3த4ம் சுத்3த4ஸ்ப2டிகமணி


பூ4ப்4ருத் ப்ரதிப4டம்


ஸுதா4ஸத்4ரீசீபி4ர் த்3யுதிபி4ரவதா3த


த்ரிபு4வனம் |


அநந்தைஸ்த்ரையந்தைரநுவிஹித


ஹேஷா ஹலஹலம்


ஹதாசேஷாவத்3யம் ஹயவத3ந


மீடீமஹி மஹ: ||










தன்னருளால் தான்தோன்றித்


தூயஒளிப் படிகமணிப்


புவிதாங்கும் வெண்மலையாய்


அமுதொத்தக் கதிரொளியால்


மூவுலகும் விளக்கமுற முழுக்காட்டி


அளவற்ற மறைமுடிகள்


அனவரதம் ஹலஹலவென்


கனையொலியால் ஆர்ப்பரிக்க


அனைவரது தீங்கெல்லாம்


எஞ்சாமல் அகன்றிடவே


பரிமுகத்துப் பேரொளியைப்


பரிந்துநாம் வேண்டித் துதித்திடுவோம்.






*






3)


ஸமாஹார: ஸாம்நாம் ப்ரதிபத3ம் ருசாம் தா4ம யஜுஷாம்


லய: ப்ரத்யூஹாநாம் லகரிவிததிர் போ3த4ஜலதே4: |


கதா2 த3ர்ப க்ஷுப்4யத் கத2க குல கோலாஹல ப4வம்


ஹரத்வந்தர் த்4வாந்தம் ஹயவத3ந ஹேஷாஹலஹல: ||










சாமகான இசைதொக்கப்


பெருநிறைவாய்


இருக்குவேதச் சொற்கள்தம்


உட்பொருளாய்


யசுர்வேதப் பெருநிலையாய்த்


தடையடங்கித் தாம்மறையக்


காரணமாய்


போதமாம் கடலெழுந்த


தொடரலைகள் தாமாய்ப,


பரிமுகரின் ஹலஹலவாம் கனைப்பொலிதான்,


வாதச்செருக்கெழுந்து


கலக்கவரும் வாதியரின்


ஓசையினால் தானெழுந்த


உள்ளத்துக் காரிருளை நீக்குகவே.






***


4)






ப்ராசீ ஸந்த்4யா காசித3ந்தர் நிசாயா:


ப்ரஜ்ஞா த்3ருஷ்டே ரஞ்ஜநஸ்ரீரபூர்வா |


வக்த்ரீ வேதா3ந் பா4து மே வாஜிவக்த்ரா


வாகீ3சாக்2யா வாஸுதே3வஸ்ய மூர்தி: ||






அகவிருள் கடியப்


புலர்ந்திடும் கிழக்கின்


அற்புத சந்தியது


உணராப் பொருளை


உணர்த்தும் புதுமை


உணர்வின் விழிகட்கே;


வேதப்பொருளை விளக்குகின்ற


வாக்கின் கடவுளெனா


வாசுதேவ மூர்த்தியான


பரிமுகர் தோன்றுகவே.






***


5)


விசுத்3த4 விஜ்ஞாந க4ந ஸ்வரூபம்


விஜ்ஞாந விச்ராணந ப3த்3த4 தீ3க்ஷம் |


த3யா நிதி4ம் தே3ஹ ப்4ருதாம் சரண்யம்


தே3வம் ஹயக்3ரீவமஹம் ப்ரபத்3யே ||






துய்யபெரும் உணர்வொன்றே


தன்னியல்வடிவாய் ஆனோன்


உணர்நலத்தை உவகையுற


அருள்விரதம் பூண்டோன்


கருணையெனும் அருஞ்செல்வம்


உறையுமிடம் அவனே


உடல்சுமந்த உயிர்கட்கே


ஓர்புகலாய் ஆனோன்


பரிமுகத்தெம் பெருமானைப்


பணிந்திடுவேன் சரணெனவே.






***


6)


அபௌருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை:


அத்3யாபி தே பூ4திம் அத்3ருஷ்ட பாராம் |


ஸ்துவந்நஹம் முக்3த4 இதி தவயைவ


காருண்யதோ நாத2 கடாக்ஷணீய: ||






எவராலும் இயற்றொணாது இயன்றவேதம்


எடுத்தியம்பச் சொல்விரிவு எல்லாம்கூட்டி


இன்றுவரை முயன்றாலும் எல்லைகாணா


உன்பெருமைத் துதிகற்க முயலுமென்னை


நன்று இவன் நனி சிறியன் என்றுகொண்டு


நின்கருணை நோக்கிற்கே இலக்காக்குகவே.






***






7)


தா3க்ஷிண்யரம்யா கி3ரிச1ஸ்ய மூர்தி:


தே3வீ ஸரோஜாஸந த4ர்மபத்நீ |


வ்யாஸாத3யோSபி வ்யபதே3ச்1ய வாச:


ஸ்பு2ரந்தி ஸர்வே தவ ச1க்திலேசை1: ||






தென் திசை நோக்கும் அழகில் அமர்ந்திடும்


தக்கிணாமூர்த்தி தானும்


தாமரைப் பூவினில் தானமர்ந் தோனுடைத்


தேவிதர்ம பத்தினியும்


வியாசர்முதலிய விளங்குநல் வாக்கின்


விறலுடை முனிவர்களும்


விளங்குவதும் இங்கு உன்னருள் சக்தியின்


திவலையொன் றாலன்றோ!






***






8)


மந்தோ3Sப4விஷயந் நியதம் விரிஞ்சோ


வாசாம் நிதே4 வஞ்சித பா4க3தே4ய: |


தை3த்யாபநீதாந் த3யயைவ பூ4யோSபி


அத்4யாபயிஷ்யோ நிக3மாந் ந சேத் த்வம் ||






கலைச்செல்வத் துறைவிடமே


தைத்தியர்கள் கொண்டொளித்த


வேதத்திரள் மீட்டும் விரிஞ்சற்கே


தயைகொண்டு பெருமான்நீ


போதித்து மறுபடியும்


புகன்றிருக்க வில்லையெனில்


பாக்கியம் இழந்தென்றும்


மந்தமாய் உழன்றிருப்பன்


நான்முகக் கடவுளன்றோ !


-






9)


விதர்க்கடோலாம் வ்யவதூ4ய ஸத்த்வே


ப்3ருஹஸ்பதிம் வர்த்தயஸே யதஸ் த்வம் |


தேநைவ தே3வ ! த்ரித3சே1ச்வராணாம்


அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதி4ராஜ்யம் ||














ஐயத்தினால் மன ஊசலாட்டம்


அறவேயொழித்து பிரகற்பதியைக்


கலக்கமின்றிநன் னெறிதன்னில்


நிலைபெற்றிடநீ செய்ததனால்


முப்பத்துமூவ ரமரர்களின்


முற்காலவாட்சி முறைகெடாமல்


இடரின்றியென்றும் தழைத்திடவே


எம்பெருமான்நீ செயுமருளே !






10)






அக்3நௌ ஸமித்3தா4ர்ச்சிஷி ஸப்த தந்தோ:


ஆதஸ்தி2வாந் மந்த்ரமயம் ச1ரீரம் |


அக2ண்ட ஸாரைர் ஹவிஷாம் ப்ரதா3நை:


ஆப்யாயநம் வ்யோம் ஸதா3ம் வித4த்ஸே ||














சமித்துநிறைத்து ஏழ்புரியாய்


வளர்ந்தெழும் வேள்வித்தீயதனில்


மந்திர மயமாம் உடல்கொண்டு


சுருக்கமற்ற விரி சுவை நிறைந்தே


சொரியும் முதன்மை அவிசுகளால்


வான்நிறை தேவர் குழாத்திற்கே


தாம்கொள நிறைவே தருபவன்நீ!






***






(அர்ச்சாவதாரத்தின் அர்ச்சை (ஜ்யோதிஸ்) என்ற சொல்லும் வேள்வியின் அக்நி மந்த்ர ரூபமும் தம்முள் தொடர்புடையன என்று ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையிலும், வேள்வி வழிபாட்டை ஆகமங்கள் அனைவருக்கும் கோவில் அர்ச்சா ஸ்வரூபம் என்பதால் உரிமையாக்கியது என்று ஹிந்து மதம் இழையில் நான் குறிப்பிட்டதற்கும் இங்கு சான்றுக் குறிப்பைக் காணலாம்)










11)






யந்மூல மீத்3ருக் ப்ரதிபா4தி தத்வம்


யாமூல மாம்நாய மஹாத்3ருமாணாம் |


தத்வேந ஜாநந்தி விசு1த்3த4ஸத்வா:


தாம் அக்ஷராம் அக்ஷர மாத்ருகாம் த்வாம் ||






விளங்கித் தோன்றும் பிரபஞ்சத்தின்


வேர்க்காரணமும் எதுவொன்றோ


வேதங்கள் என்னும் பெருமரங்கள்


விளங்கியெழுந்த வேரெதுவோ


தத்துவ அறிவினால் தூயர்களும்


சத்துவமிக்கச் சான்றோரும்


அழிவற்ற எழுத்தின் மூலமென


அறிந்தனர் ஓமென உந்தனையே.










12)


அவ்யாக்ருதாத்3 வ்யாக்ருதவாநஸி த்வம்


நாமாநி ரூபாணி ச யாநி பூர்வம் |


ச1ம்ஸந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டா2ம்


வாகீ3ச்வர ! த்வாம் த்வது3பஜ்ஞ வாச: ||










வடிவும் பெயரும் கரந்திடும் மூலப்பகுதியின்


வடிவும் பெயரும் தந்தனை முன்னம் எவையோ


அவையெலாம் அடங்கும் ஈறின் நிலையாய்


நவையறத் துதிக்குமுன்னை


கலைக்கெலாம் கடவுளே !


நன்று நீ உணர்ந்துரைத்த


நினைப்புகழ் வேதங்கள் தாமே.






13)






முக்3தே4ந்து3 நிஷ்யந்த3 விலோப4நீயாம்


மூர்திம் தவாநந்த3 ஸுதா4 ப்ரஸூதிம் |


விபச்சிதச் சேதஸி பா4வயந்தே


வேலாம் உதா3ராமிவ துக்3த4 ஸிந்தோ4: ||














இந்தின் இளம்பிறை இன்நறவி ன்னொளி


உருகி உவப்புற ஆகியதோ


ஆனந்தவமுதின் பெருக்கதுவோ


வள்ளல் பாற்கடல்


திரண்டொரு குழம்பாய்


வண்ணம் கொண்டது நின்னுருவம்


எண்ணம் கொண்டதை ஞானிகள்


உணர்வினில் காண்பதும் தம்முளத்தே.










14)


மநோக3தம் பச்1யதி ய: ஸதா3 த்வாம்


மநீஷிணாம் மாநஸ ராஜஹம்ஸம் |


ஸ்வயம் புரோபா4வ விவாத3 பா4ஜ:


கிங்குர்வதே தஸ்ய கி3ரோ யதா2ர்ஹம் ||














உள்ளம் கருதும் ஞானிகளின்


உள்ளப் பொய்கையில் ஓரரசாய்


வதியும் அன்னம் என நின்னை


நிதமும் உளத்தில் கண்டிடுவார்


எவரோ அவர்க்கே மொழிகள்தாம்


முன்னால் முந்தி முறையாடி


தாம்தாம் என்றே தகுதியுடன்


தாமே தொண்டு புரிந்திடுமே.










15)






அபிக்ஷணார்த4ம் கலயந்தி யே த்வாம்


ஆப்லாவயந்தம் விச1தை3ர் மயூகை2: |


வாசாம் ப்ரவாஹை ரநிவாரிதைஸ்தே


மந்தா3கிநீம் மந்த3யிதும் க்ஷமந்தே ||














வெண்ணொளி திகழ் நின்னுருதனில்


அரைக்கணமேனும் ஆழ்ந்திடுவோர்


தண்புனலென தடுப்பரிதென


வெளிப்படுவெள்ளம் வாக்குகளென


விண்ணிழிபுனல் வெள்கிடுமென


பண்ணிடும்திறல் வல்லவரே.










16)


ஸ்வாமிந் ப4வத்3த்4யாந ஸுதா4பி4ஷேகாத்


வஹந்தி த4ந்யா: புலகா நுப3ந்த4ம் |


அலக்ஷிதே க்வாபி நிரூட4 மூலம்


அங்கே3ஷ்விவாநந்த3து2 மங்குரந்தம் ||


















உள்ளம் கலந்த தியானத்தில்


ஊறிவரும் ஓர் தெள்ளமுதம்


நின்னை நினையும் புண்ணியர்க்கே


நீராட்டம் அது எம்மானே!


கண்ணில் தெரியாது எவ்விடத்தோ


நிலைத்தவே ரூன்றி அங்கமெலாம்


முளைவிட்டெழுந்த மகிழ்வொன்று


புளகம் தொடரப் பூரிப்பாருனை


உள்ளம் கலந்த புண்ணியரே.






***










17)


ஸ்வாமிந் ப்ரதீசா ஹ்ருத3யேந த4ந்யா:


த்வத்3 த்4யாந சந்த்3ரோத3ய வர்த4மாநம் |


அமாந்த மாநந்த3 பயோதி4 மந்த:


பயோபி4 ரக்ஷ்ணாம் பரிவாஹயந்தி ||










உள்ளத்துள்ளே நெடுநோக்கும்


இதயத்தில் நின் தியானத்தால்


வெள்ளமிடும் ஓர் ஆநந்தம்


வெண்ணிலவதனில் அலைபொங்கும்


உள்ளம் மீறும் வெள்ளமதை


கண்வழி சோரத் தாம் உருகி


புண்ணியர் மகிழ்வார் எம்மானே !






***










18)






ஸ்வைராநு பா4வாஸ் த்வத3தீ4ந பா4வா:


ஸம்ருத்3த4 வீர்யாஸ் த்வத3நுக்3ரஹேண |


விபச்சிதோ நாத2 ! தரந்தி மாயாம்


வைஹாரிகீம் மோஹந பிஞ்சிகாம் தே ||


















தடையற்ற பெருமையினாய்!


உன்னடிக்கே உளம்பூண்ட காதலினால்


தம்பெருமை அளவிறந்த ஞானிகளும்


திறல்மிகவே நீகாட்டும் திருவருளால்


அலகிலா விளையாட்டில் ஆட்டிவைக்கும்


மாயம்செய்த் தோகைநின் மாயையென்னும்


பிரகிருதியினைக் கடக்கின்றார் பெருமானருளே!






***










19)






ப்ராங் நிர்மிதாநாம் தபஸாம் விபாகா:


ப்ரத்யக்3ர நிச்ரேயஸ ஸம்பதோ3 மே |


ஸமேதி4ஷீரந்ஸ்தவ பாத3 பத்3மே


ஸங்கல்ப சிந்தாமணய: ப்ரணாமா: ||














முற்பிறவித் தவங்கள்தாம் பலித்தனவாம்


முன்னெப் பொழுதினிலும் பெறற்கரிதாம்


முத்திச் செல்வமதை நத்திநமக் கீயுமதாம்


கருதியதைத் தாமளிக்கும் சிந்தா மணியவையாம்


நின்னுடையத் திருவடியிணைத் தாமரையில்


நித்தமுமென் வணக்கமவை பெருகுகவே.






***










(குறிப்புகள் -- ச்லோகத்தில் சிந்தாமணிகளாகக் கூறப்படுபவை வணக்கங்கள்.






ஆனால் வணக்கங்கள் கருதியதை அளிக்கும் சிந்தாமணிகள் என்னில், முத்தியளிக்கும் வல்லமை என் வணக்கங்களாகிய சிந்தாமணிகளுக்கே உள்ளது என்ற பொருள் ஏற்படும். வணக்கங்களால் உளம் நெகிழ்ந்த பகவானே முக்தி பலம் அளிப்பவன் என்று உட்பொருள்.






ஸ்ரீஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தில் வரும் ‘த்வதங்க்ரிம் உத்திச்ய’ என்ற ச்லோகத்தை வைத்து ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ அஞ்ஜலி வைபவம் என்று செய்திருக்கும் ரஹஸ்ய கிரந்தம் இவ்விடத்தில் காணத்தக்கது.)






***










20)






விலுப்த மூர்த4ந்ய லிபி க்ரமாணாம்


ஸுரேந்த்3ர சூடாபத3 லாலிதாநாம் |


த்வத3ங்க்4ரி ராஜீவ ரஜ: கணாநாம்


பூ4யாந் ப்ரஸாதோ3 மயி நாத2 பூ4யாத் ||










தலையெழுத்து வரிசைகளை


மறையச் செய்யும்


தேவேந்திரர் தலைகளில்கொண்


டாட்டம் கொள்ளும்


நினதுபதக் கமலவிதழ்ப்


பொடியின் துகள்தாம்


என்றென்றுமே என்பக்கலில்


அருள்பொலிக என்ஐயனே.






***










21)






பரிஸ்பு2ரந் நூபுர சித்ரபா4நு


ப்ரகாச1 நிர்தூ4த தமோநுஷங்கா3ம் |


பத3த்3வயீம் தே பரிசிந்மஹே Sந்த:


ப்ரபோ3த4 ராஜீவ விபா4த ஸந்த்4யாம் ||










நூபுர மெனத்திகழ் பரிதியின் ஒளியில்


நீங்கிடும் அறியா மையிரு ளென்றே


ஞானத் தாமரை மலர்ந்திடும் விடியல்


புலரியெழும் நின் திருவடி இணையே


தியானிப்போம் என்றும் உளத்தினில் அதையே.














(குறிப்பு -- இந்த ச்லோகம் சிறிது கஷ்டமானது. உவமை, உவமேயங்களை மாற்றுகிறார் ஸ்வாமி தேசிகன். பரிதி பாத அணிகளின் கிங்கிணியான நூபுரமாக ஆகிறது. பரிதியால் விரட்டப்படும் தமம் ஆகிய அறியாமை இருள்.






அநுஷங்காம் என்பதை நேரே மொழிபெயர்த்தால் தொடர்புடைய என்று வரும். எதற்குத் தொடர்புடைய? எனவேதான் சூழல் என்ற பொருள் வரும்படி மொழிபெயர்த்தேன்.






விடியலில் மலர்வது ஞானம். அது தாமரை. அந்தத் தாமரை மலர வரும் காலை சந்த்யை ஆக இருப்பது திருவடி இணைகள். ஆக திருவடி இணைகள் பரிதியின் ஸ்தானத்தில். மிக லாகவமாக ஸ்வாமி உவமை உவமேயங்களை மாற்றிப் போடும் அழகை ரசிக்க வேண்டும்)










22)






த்வத் கிங்கரா லங்கரணோ சிதாநாம்


த்வயைவ கல்பாந்தர பாலிதாநாம் |


மஞ்ஜு ப்ரணாத3ம் மணிநூபுரம் தே


மஞ்ஜூஷிகாம் வேத3கி3ராம் ப்ரதீம: ||














நின்னடியார் தலையணியாய்


நித்தமும்நின் றிலகுவதாய்


நின்தன்னால் கல்பந்தொறும்


காத்தளிக்கப் பெறுவதுவாம்


செய்யமறைச் சீர்போற்றும்


செப்பறையாய்ச் சேமகமாய்த்


திகழ்வதுநின் இசைஇனிய


மணிநூபுரமெனக் கருதுவோமே.










(குறிப்புகள்--- வேதகிராம் -- வேத வாக்குகள்


த்வத் கிங்கர அலங்கரண உசிதாநாம் -- உன் கைங்கர்ய பரர்களின் தலையை அலங்கரிக்கும் அணியாக இருப்பது செய்ய மறைகள்.






அந்த வேத ஒலிகளாம் பொக்கிஷத்தை நன்கு போற்றிப் பாதுகாக்கும் பெட்டகங்கள் பெருமானது காலில் விளங்கும் மணி நூபுரங்கள்)






***