Monday, August 01, 2011

ஸ்ரீஹயக்ரீவர் ஸ்தோத்திரம் -- 2

23)

ஸஞ்சிந்தயாமி ப்ரதிபா43சா1ஸ்தா2ந்

ஸந்து4க்ஷயந்தம் ஸமய ப்ரதீ3பாந் |

விஞ்ஜாந கல்பத்3ரும பல்லவாப4ம்

வ்யாக்2யாந முத்3ரா மது4ரம் கரம் தே || 



மேதையாம் திரிகளில் சுடர்காலும் 
சித்தாந்த தீபங்கள் ஒளிகூடும் 
தூண்டிடும் கரவிரல் நினதாகும் 
ஞானவடிவாம் கற்பகத் தருவின் 
தளிரொளி மிகுஎழில் தடக்கையினில் 
வியாக்கியான முத்திரை விளங்குமெழில் 
நின்திருக் கரம்என்றும் தியானிப்பனே.

*

(அதாவது கற்பனை எப்படி என்றால், விஞ்ஜாந மயமான ஒரு கற்பகத்தரு. அந்தத் தருவில் பூத்துக்குலுங்கும் பூவிதழ் ஒளி போல் திருக்கரவிரல். அந்த விரல் சித்தாந்த தீபங்களை ஒளி மங்காமல் தூண்டிவிடுகிறது, விரல் நுனி மட்டும் அசைவது தெரியாமல் அசைந்து. அந்த சித்தாந்த தீபங்கள் எந்தத் திரியில் எழுகின்றன? மேதைமை என்ற திரியில். தூண்டிவிடும் அந்த தளிர் விரல் இருக்கும் கரமோ வ்யாக்யாந முத்ரையை அணிந்து ஞான பிரதாநம் செய்கிறது. அந்தத் திருக்கரத்தை சதா சர்வ காலமும் தியானிக்கின்றேன் என்றபடி. )

***


24)

சித்தே கரோமி ஸ்பு2ரிதாக்ஷ மாலம்

ஸவ்யேதரம் நாத2 கரம் த்வதீ3யம் |

ஜ்ஞாநாம்ருதோத3ஞ்சந லம்படாநாம்

லீலாக4டீ யந்த்ர மிவாச்ரிதாநாம் || 




அக்ஷமாலை யதுவிளங்க 
அருள்தருமுன் வலதுகரம் 
அமுதமாம் ஞானத்தையே 
அகழ்ந்தெடுக்கும் ஊற்றமிகு 
அடியார்தம் அயர்வகற்ற 
அகழ்ந்திரைக்கும் ஏற்றமதாய் 
அருள்பொழியும் அக்கரமே 
அடியேன் தன் சிந்தையதே. 

*** 

(குறிப்புகள் -- போன ச்லோகத்தில் ஒரு கரத்தின் விரலானது ஜ்ஞாநமாம் கற்பகத்தருவின் மொட்டவிழ்ந்த இதழ் போல ஒளிகொண்டதுவாய் நெகிழ்ந்து, மேதையாகிய திரிகளில் தூங்கும் சுடர்களான சித்தாந்தங்களை அந்த விரல்கள் தூண்டிவிடுவதால் மேலும் நன்கு ஒளி மிகுந்து காணப்படுகின்றன என்று கூறினார். 

இந்த ச்லோகத்திலோ என்னில், மற்ற ஒரு கரத்தை சிந்தையில் வைப்போம் என்கின்றார். அந்தக் கரம் என்ன செய்கிறது? 

அடியார்கள் ஜ்ஞாநமாகிய அமிர்தத்தை ஆழத்திலிருந்து பெற்றுப் பயனடைய மிகுந்த பிரயாசைப் படுகின்றனர். 

அதைப் பார்த்து அக்ஷமாலையை அணிந்துகொண்டிருக்கும் வலது திருக்கரம், அருள் சுரக்கும் அபிநயத்தைக் காட்டியபடி, ஞானாமுதத்தை அடியார் சிரமமில்லாமல் ஆழத்திலிருந்து பெற வசதியான ஏற்றம் இரைக்கும் யந்திரம் போன்று இருக்கிறதாம். 

அந்த வலது திருக்கரத்தை தியானம் செய்கின்றார் ஸ்வாமி.) 

*** 


25)

ப்ரபோ34 ஸிந்தோ4: அருணை: ப்ரகாசை1:

ப்ரவாள ஸங்கா4த மிவோத்3 வஹந்தம் |

விபா4வயே தே3வ ஸபுஸ்தகம் தே

வாமம் கரம் த3க்ஷிணம் ஆச்ரிதாநாம் || 




விளங்கிய ஞான விரிகடலில் 
விடியற் செவ்வொளி திரண்டதென 
பவழத் திரளென ஏந்திநிற்கும் 
புத்தகம் விளங்கும்நின் இடக்கரமே 
வலக்கர மேயது வலம்தருமே 
அடியடைந் தார்கட்கு அருள்கரமே 
ஆழ்ந்திடு வேனதில் பெருமானே ! 

***


(குறிப்புகள் --- வாமம் கரம் தக்ஷிணம் -- என்ற இந்தச் சொற்றொடரின் கவிநயம் அறிவது சுவை பயக்கும். 

வாமம் -- இடது. 

தக்ஷிணம் -- வலது; வலம்; வலிமை 

எனவே 'தே வாம கரம்' -- உனது இடக்கரம் -- வலக்கரமாகவும் திகழ்கிறது. 

புத்தகம் ஏந்திய நின் இடக்கரம் அருணோதயம் தாங்கிய விடியல் போல் திகழ்கிறது. 

உண்மையில் நூல் என்பதுவே ஞான உதயத்தின் முன்னெழும் அருணோதயம் போன்றது அன்றோ! 

அந்த நினது இடக்கரமே வலக்கரமாகவும் திகழும் சிறப்புதான் என்னே! 

வலத்தைச் செய்வது, வலிமையைத் தருவது வலக்கரம் அன்றோ! 

கரம் என்றால் செய்வது என்ற பொருளும் உண்டு. 

பெருமானுக்கு இடக்கரமாகத் திகழ்வது அடியார்க்கு வலம் புரியும் கரம் வலக்கரமாகவும் திகழ்கிறது.) 



26) 

தமாம்ஸி பி4த்த்வா விச1தை3ர் மயூகை2:

ஸம்ப்ரீணயந்தம் விது3ஷச் சகோராந் |

நிசா1மயே த்வாம் நவபுண்டரீகே

1ரத்3 க4நே சந்த்3ரமிவ ஸ்பு2ரந்தம் || 




இருள்கிழித்து விளங்குமொளிக் கதிர்கள்தம்மில் 
இன்புறும்நல் அறிஞர்களாம் 
சகோரப்புட்கள் 
கார்கால மேகமிடை 
விளங்காநிற்கும் 
தண்ணிலவின் வெண்ணொளிபோல் 
அன்றலர்ந்த 
தாமரையின் அகம்வீற்ற 
ஐயநின்னைத் 
தெளிவுறவே அகக்கண்ணால்
காண்பனுள்ளே. 

***

27)

தி3சந்து மே தே3வ ஸதா3 த்வதீ3யா:

3யா தரங்கா3 நுசரா: கடாக்ஷா: |

ச்ரோத்ரேஷு பும்ஸா மம்ருதம் க்ஷரந்தீம்

ஸரஸ்வதீம் ஸம்ச்ரித காம்தே4நும் ||



அலைபுரண்டு வருகின்ற 
தயைதன்னைத் தொடர்ந்தே 
அடியொற்றி வருமுன்றன 
அருட்பார்வை கள்தம்மால் 
அடியவர்கட்கு எப்பொழுதும் 
அளிக்கும்தெய் வப்பசுவாய் 
கலையறிந்தார் கேள்விகளில் 
பொழியமுத வாக்கெனவே
எம்பெருமான் சரஸ்வதியை 
எனக்கருள வேண்டுவனே. 

***



28)

விசே1ஷவித் பாரிஷதே3ஷு நாத2

வித3க்34 கோ3ஷ்டீ ஸமராங்க3ணேஷு |

ஜிகீ3ஷதோ மே கவிதார்கிகேந்த்3ராந்

ஜிஹ்வாக்3ர ஸிம்ஹாஸந மப்4யுபேயா: ||




சிறப்புற அறிந்தார்தம் அவைதிகழ்ந்தார் நடுவினிலும் 
வாதப்போரிட் டெதிர்த்துவரும் வல்லவர்தம் அணிகளிலும் 
கவியினிலும் தர்க்கத்திலும் இந்திரராய் 
இருப்போரை 
வெற்றிகொள விரும்புமெந்தன் நாவின்முன் னென்றென்றும் 
வீற்றருள்வாய் அரியாசன மென்றேயெம் பெம்மானே. 
***


(குறிப்புகள் -- மூலத்தைச் சாதாரணமாக அர்த்தம் கொள்ளும் விதம் பொருள் உரைத்து எழுதும் நூல்களில் ஒரு விதத்தில் காண்கிறது. 

அதாவது விசேஷமாக அறிந்தவர்கள் பாரிஷதர்களாக, அதாவது மத்யஸ்தர்களாக இருந்து நடத்தும் வாதப் போர்களில் கவிதார்க்கிகேந்திரர்களை எதிர்த்து வெற்றி கொள்ள விரும்பும் என் நாவின் நுனியில் சிம்மாஸனமிட்டு ஐயனே தாங்கள் அமரவேண்டும் -- என்பது தான் சாதாரணமாகக் காணும் பொருள். 

ஆயினும் இங்கு ஒரு சிறப்புப் பொருள் இருப்பதைக் காணலாம். 

அதாவது ஸ்வாமி இரண்டு பிரிவினரைப் பற்றிப் பேசுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. 

விசேஷ வித்துக்களாய், சிறப்புற அறிந்தாரின் சபை ஒன்று. சிறப்புற அறிந்தார் என்றும் ரசிகர்களாய், கவியின் ஆழங்களில் மூழ்கக் கூடியவர்கள். அவர்களுடைய சபைகளில் கவீந்திரராய் இருப்போரைத் தம் கவிதையின் மகத்துவத்தினாலும், தம் ஆழமான ரசனையின் சிறப்பாலும் வெற்றி கொள்ளக் கருதுகிறார் ஸ்வாமி. அங்கு நடப்பது ரசனையின் போர். 

அதுவே தர்க்கத்தில் வல்லுநர்களாய் தார்க்கிகேந்த்ரர்களாய் இருப்போரை வாதப் போர் அணிகளில் வெற்றிக்கொள்ளவும் ஸ்வாமி விரும்புகிறார். 

கவீந்திரர்களை வெல்லும் முறை வேறு. 

தார்க்கிகேந்திரர்களை வெல்லும் முறை வேறு. 

ஒன்றில் இதயத்தின் தோய்வு வெற்றியைத் தரும். 

மற்றதில் அறிவின் கூர்மை வெற்றியைத் தரும். 

இரண்டு இடங்களிலும் தமக்கு வெற்றியே அருள ஸ்ரீஹயக்ரீவர் தம் நாவின் நுனியில் சிம்மாஸனமிட்டு அமர்ந்தருள வேண்டும் என்பது ஸ்வாமியின் ப்ரார்த்தனை. 

Swami Desikan's earnest prayer is to excel in the qualities of Heart as well as in the qualities of Head.

இந்தப் பொருளும் கொடுக்கும்படியாகத் தமிழாக்கத்தை அமைத்திருக்கிறேன். திருதிரு போல்வார் வித்வான்கள் யாரிடமாவது காட்டி அபிப்ராயம் கேட்டு எழுதினால் உதவியாக இருக்கும்) 

*** 


29)

த்வாம் சிந்தயந் த்வந்மயதாம் ப்ரபந்ந:

த்வாமுத்3க்3ருணந் ச1ப்த3மயேந தா4ம்நா |

ஸ்வாமிந் ஸமாஜேஷு ஸமேதி4ஷீய

ஸ்வச்ச2ந்த3 வாதா3ஹவ ப3த்34 சூ1ர : ||




நின்னை என்றும் நினைந்தவாறே 
நின்மயமாய்ச் சரணடைந்தவாறே 
மந்திரமயன் நினைச்சொல்லொளியால் 
என்றென்றும் ஏற்றித் தொழுதவாறே 
வாதப் போர்த்தொடர்ச் சபைகளிலே 
வீறுகொண்டெழுந்த சூரனென 
விரும்பியவாறு நான் திரிதரவே 
அருள்செயல் வேண்டும் ஐயனே நீ! 

*** 


30) 

நாநாவிதா4நா மக3தி: கலாநாம்

ந சாபி தீர்த்தே2ஷு க்ருதாவதார: |

த்4ருவம் தவாநாத2 பரிக்3ரஹாயா:

நவம் நவம் பாத்ரமஹம் த3யாயா: ||




பலவிதக் கலைகளுக் குறைவிட மல்லேன் 
புனிதராம் துறைகளில் படிந்தவ னல்லேன் 
புகலிட மற்றவர்க் கோர்புகல் பிழையா 
நித்தமும் நின்தயை பாய்ந்திடும் இலக்காய் 
நவநவ மாமொரு பாத்திரம் யானே. 

*** 

(குறிப்புகள் -- ந சாபி தீர்த்தேஷு க்ருதாவதார: -- புண்ணிய தீர்த்தங்களில் குடைந்தாடியவன் அல்லேன் என்பது மேம்போக்கான பொருள். ஆனால் தீர்த்தங்கள் என்பது உண்மையில் ஆசார்யர்கள், மஹான்கள் ஆகிய புனித இடங்கள் என்று பொருள். 

தீர்த்தம் ருஷி ஜுஷ்ட ஜலே குரௌ -- என்பது அமரகோசம். 

புனிதராம் துறைகளில் படிந்தவ னல்லேன் -- என்னும் வரியில் இரண்டுவித பொருளும் துலங்கக் காணலாம். 

புனிதர் ஆக்கும் துறைகளில் படிதல், 
புனிதராகிய துறைகளில் படிதல் --- 

ஆகிய இரு பொருளும் தோன்ற அமைந்துள்ளமை அறிக. ) 

***



31)
அகம்பநீயாநி அபநீதி பே4தை3

அலங்க்ருஷீரந் ஹ்ருத3யம் மதீ3யம் |

சங்கா களங்கா பக3மோஜ்ஜ்வலாநி

தத்வாநி ஸம்யஞ்சி தவ ப்ரஸாதா3த் || 



நீதியற்ற வாதங்களால் நிலைகுலையாமல் 

ஐயமென்னும் அழுக்ககல ஒளிமிகுந்திடவே 

நனிசிறந்த தத்துவங்கள் நின்னருளாலிங்கு 

நித்தமுமென் இதயத்தில் அணிவிளங்குகவே. 


***



32) 


வ்யாக்2யா முத்3ராம் கரஸரஸிஜை:

புஸ்தகம் ச1ங்க2 சக்ரே

பி3ப்4ரத்3 பி4ந்ந ஸ்ப2டிக ருசிரே

புண்டரீகே நிஷண்ண: |

அம்லாந ஸ்ரீ: அம்ருத விச1தை3:

அம்சு1பி4: ப்லாவயந் மாம்

ஆவிர்பூ4யாத3நக4மஹிமா

மாநஸே வாக3தீ41: || 



ஞானம் விளக்கும் முத்திரையும் 

அருள்நூலும் திருவாழித் திருச்சங்கும் 

தாமரைக் கரங்கள் தாங்க 

விண்டலர்ந்த படிகத்தின் வடிவமென 

எழிலார்ந்த வெண்டாமரைமீதே 

குன்றாத பேரொளியும் 

குறையற்ற பெருமையதும் 

திகழ்ந்திடவே வாக்கின் ஈசன் 

அமுதேய்க்கும் வெண்ணிறத்துத் 

தண்கதிரால் அடியேனும் அமிழ்ந்திடவே 

தமியேன்தன் மனத்தடத்துத் தோன்றுகவே. 


***


33) 


வாக3ர்த2 ஸித்3தி4 ஹேதோ:

பட2த ஹயக்3ரீவ ஸம்ஸ்துதிம் ப4க்த்யா |

கவிதார்க்கிக கேஸரிணா

வேங்கடநாதே2ந விரசிதாமேதாம் || 



கவிகளுக்கும் வாதமிடும் தார்க்கிகர்க்கும் 

கானகத்துத் திரிதருமோர் சிங்கம்போன்றான் 

வேங்கடநாதனவன் வரைந்ததுவா மிதனை 

வாக்கும் பொருளும் பேறா யடைந்திடவே 

பரிமுகத்து நற்புகழைப் பக்தியுடன் ஓதுகவே. 


*** 

** 

(ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் தமிழாக்க 

ஆறங்கம் கூற அவதரித்த நற்கலியன் 

மாறன் யதிராசன் மாமுனிவன் வேதாந்தச் 

சீருரைக்கும் தேசிகனே காப்பு.) 

***

**