கவி தைத் தேர்
இடம் பிடிக்க வேண்டுமெனில்
வடம்பிடிக்க வாருங்கள்
அரங்கன் தேர் அசைகிறது
ஒப்பனையாய் வைத்தபரி ஒய்யாரப் பாய்ச்சலில்
ஊரெல்லாம் கூடிவந்த ஒத்துழைப்பில்
ஊமையின் உதடசையும்
ஊன்றுவிழி இமையசையும்
ஊர்க்கோடி முக்கினிலே முட்டடித்து
மூங்கில் கழி கெட்டித்து
மூலப்பெரும் பாழை
முக்காலக் கோலடித்து
மூண்ட படைப்பின் மூலச்சுருதி வாங்கி
மூச்சடங்கி பேச்சடங்கி
மூளும் உயிரடங்கி
மேல் வார்த்த தோலின் ஆர்ப்படங்கா
கார்வைதொனி தானசையும்
அடிவயிற்றில் மூச்செடுத்து
அண்டத்தின் வேரை
ஆதிமுதல் அடிபோட்டு
அந்தத்தை முடிபோடும்
அழியாத விதியை ஆர்த்துவரும் தாம்பிழுத்து
குலநீர்மை ஒன்றாகி
கூடியெழும் கோவிந்தா குரல்முழக்கில்
கொட்டும் வேர்வையினில்
குடமுழுக்கு ஆன குலமொன்றாய்
அரங்கன் தேர் அசைகிறது
அவன் கிடந்த மண்ணில்
ஆற்றின் இடைக்குறையில்
ஆய்ச்சிக்கை தாம்பிற்கு
அஞ்சி அச்சுதனார்
ஆயிரவாய் அரவணைப்பில்
அறிதுயிலும் அரங்கத்தில்.......இடம் பிடிக்க.....
(எனது கவிதை நூல் உணர்வின் உயிர்ப்பு, தமிழினி, நவம்பர் 2002, பக்கம் 27 )
<< Home