Tuesday, March 08, 2016

நிர்வாண ஷட்கம் - மொழிபெயர்ப்பு

னம் புத்தி அகங்காரம் சித்தம் நானில்லை
செவிநாக்கு மூக்குக் கண் எதுவும் நானில்லை 
வான்மண்ணும் இல்லை வளிதீயும் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

பிராணன்என்றதும் இல்லை பஞ்ச வாயுக்கள் இல்லை 
ஏழுதாதுக்களும் இல்லை பஞ்ச கோசங்கள் இல்லை 
வாக்குகை காலும் இல்லை அன்றி குறிகுய்யம் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

வெறுப்புவிருப்பெனக்கில்லை பற்றுமோகங்கள் இல்லை 
மதம் எனக்கில்லை மற்று மாச்சரியம் இல்லை 
தர்மார்த்த காம மோக்ஷங்கள் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

புண்ணியபாபங்கள் இல்லைநான் சுகம்துக்கமில்லை 
மந்திரம்தீர்த்தம் இல்லைநான் வேதயக்ஞங்களுமில்லை 
உணவும்நானில்லை உண்ணப்படுவதும் உண்போனும் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

இறப்பின் அச்சம் எனக்கில்லை ஜாதிபேதங்கள் இல்லை 
தந்தை எனக்கில்லை தாயில்லை பிறவி இல்லை 
சுற்றம் இல்லை நண்பரில்லை குரு இல்லை சீடன் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான் 

விகல்பங்கள் அற்றோன்நான் வடிவற்ற ரூபன் 
விபுவாய்க் கலந்தெங்கும் அங்கத்துள்ளாகி 
என்றென்றும் ஒன்றாமெனக்கு முத்திபந்தங்கள் இல்லை 
சிவம்நான் சிவம்நான் 
சிதானந்த உருவாகி நிற்கின் றதேநான். 

***
(தமிழாக்கம் - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்) 

*

Thursday, October 02, 2014

புத்தகங்களோடு ஒரு டூயட்.. 1

உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். வேறு யார் காதுக்கும் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

புத்தகங்களை நீங்கள் எதற்குப் படிப்பீர்கள்? ஏதாவது தகவல், எதைப் பற்றியாவது அறிந்து கொள்ள... இப்படித்தானே? 

ஆனால்.. பொழுது போகவில்லை என்றால், மனம் ஏதோ மாதிரி தொய்வாக இருந்தது என்றால், யாரிடமும் எதுவும் பேசாமல், அக்கடா என்று போய், நூல்கள் இருக்கும் அறைக்குள் புத்தகங்களை இன்னது என்று நோக்கமின்றி ராண்டமாக எந்தப் புத்தகத்தையாவது எடுத்து வைத்துக்கொண்டு அதில் ஏதாவது டாப்பிக்கில் ஈடுபாடு ஆகி உள்ளே தன்னை மறந்து போகும் பழக்கத்திற்கு என்ன என்று சொல்லலாம்? 

ஐயோ அது என்ன என்னவெல்லாமோ உலகத்திற்கு ஆளைக் கடத்திக்கொண்டு போய்விடும். அப்புறம்.. மனத் தொய்வாவது மண்ணாங்கட்டியாவது... 

ஆம் என் அனுபவம் இது. சமயத்தில் ஒரு வாரம் எல்லாம் எங்கோ ஊருக்குப் போகிறாற்போல் படு ஜரூராக முனைந்து லீவு போட்டுவிட்டு, நான் உண்டு, என் இடம் உண்டு என்று புத்தகங்களுடன் மொத்த வாரத்தையும் ஓட்டியிருக்கிறேன். இத்தனைக்கும் அந்த வாரம் முடியும் பொழுது முடிந்து விட்டதே என்று என் கண்களில் கண்ணீருடன்..! 

நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. தெரியும். ஆனால் என்ன சொல்வது? அசல் கிறுக்கு, புத்தகப் பைத்தியம் ஒன்றிடம் நீங்கள் என்னதான் எதிர்பார்க்க முடியும்? 

இன்னொரு பரம ரகசியம். இது ஸ்ட்ரிக்ட்லி சீக்ரட்... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ். நான் அவ்வப்பொழுது புத்தகங்களுடன் டூயட் ஆடுவதுண்டு. ஸ்ஸ் இப்பொழுதுதானே சொன்னேன். சீக்ரட் என்று. அதற்குள் இரைந்து சிரிக்கத் தொடங்கினால்....! ஆமாம். சமயத்தில் புத்தகங்களை நான் சீண்டுவேன். சமயத்தில் புத்தகங்கள் என்னைச் சீண்டும். சில்மிஷத்தில் யார் ஜயிப்பார் என்பது நிச்சயமில்லை. யார் ஜயித்தாலும் ஆனந்தமதான். அதுமட்டுமன்று. புத்தகங்கள் என்னைப் பார்த்து கண்ணடிப்பதும் உண்டு. ஐஅய்யோ... எல்லாம் இழுத்துக்கட்டி ஜாக்கட் போட்டு தேமே என்று இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா... எல்லாம் படு விஷமம்.... என்னை மாதிரி ஆள் மாட்டிக் கொண்டால் அவை பண்ணும் கிண்டல் இருக்கிறதே....! 

நான் வேண்டுமென்றே சில புத்தகங்களின் பக்கமே திரும்புவதில்லை. தெரியும். பார்த்தால் ஆளை லேசில் விடாது என்று. ஆனாலும் அவை விட்டால்தானே. சீழ்கை அடிக்கும். 

நீங்கள் சந்தேகப் பர்வை பார்ப்பது தெரிகிறது. எல்லாம் வயசுக் கோளாறு... காலா காலத்தில் கலயாணம் பண்ணிக்கொண்டு சமத்தாக இல்லை என்றால் இப்படித்தான்.. என்றும் முணுமுணுக்கிறீர்கள். 

ஐயோ பிராமிஸ். நீங்கள் நினைப்பது போல் எல்லாம் இது வயசுக் கோளாறு இல்லை. Books beckon you sometimes என்று அனுபவஸ்தர், ஆங்கிலேயர் ஒருவர் சொன்ன போது நான் நம்பவில்லை. ஆனால் இப்பொழுது அவை பண்ணும் கலாட்டாவில் மாட்டிக்கொள்ளும் போதுதான் அவர் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும் என்று தோன்றுகிறது. 

சரி எனக்கேன் வம்பு? நடந்ததை எழுதுகிறேன் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

இந்த இழையை My Duet with the Books என்று சொல்லலாம். 

டூயட் என்றால் ஒலியும் ஒளியும் மட்டும்தானா? ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது என்பது டூயட் இல்லையா? எதையும் ஒரே மாதிரிதான் அர்த்தம் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். 

இதில் ஒரு கண்டிஷன் - மற்ற புத்தகங்கள் அறிமுக இழைகளில் செய்தது போல நானாக எந்தப் புத்தகத்தையும் குறிப்பாகப் படிக்க எடுத்துக் கொண்டு விமரிசனம் என்று செய்ய மாட்டேன். என்னைச் சீண்டி, தூண்டி, தன்னைப் படிக்க இழுத்த புத்தகங்களை அல்லது புத்தகத்தை அல்லது புத்தகத் தொகுதிகளை அப்படியே நடந்தது நடந்தவண்ணம் சொல்லிவிடுவேன். நீங்கள்தான் நான் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்களே... அப்புறம் எனக்கேன் வம்பு... 


ரஷ்ய நாடகப் பள்ளிகள்

வாங்கிய போது நன்கு ஒரு தடவை பார்த்துவிட்டு வைத்தது. அப்புறம் சில தடவைகள் ஒன்றிரண்டை எடுத்துத் துருவியதுண்டுதான். ஆனாலும் வரியடைவே நன்கு முன்பின் நியாய விஸ்தரமாகப் பார்ப்பதற்கு, திருப்தியாக நேரம் கிடைக்காமல்தான் இருந்தது. 

என்ன அப்புறம் வரவேயில்லை இந்தப் பக்கம் என்பது போல் அந்தப் புத்தகங்களின் செட் சன்னமாக ஒரு குரல் கொடுத்தவண்ணம் இருந்ததை நானும் இதோ வருகிறேன் இதோ வருகிறேன் என்று தள்ளிக் கொண்டிருந்தேன். நேற்று எதையோ தேடப் போக இந்த செட் புத்தகங்கள் பிடித்துக்கொண்டு விட்டன. 

அதாவது இந்தப் புத்தகங்கள் எல்லாம் வானத்து நட்சத்திர மண்டலம் மாதிரி. சிலது ஒரு கூட்டமாகத்தான் இருக்கும். சில புத்தகங்கள் பார்த்தால் எப்பொழுதும் தன்னந்தனியாகத்தான் இருக்கும். சில நூல்கள் எப்பொழுதுமே இரட்டையர். சிலது மும்மூர்த்திகள். சில புத்தகங்களோ நல்லவர்கள் நால்வர் என்பது போல். சில நூல்கள் நின்னொடும் ஐவரானோம் டைப்பு. சில புத்தகங்களோ கார்த்திகை உடுக்குழாம் ஒப்ப அறுவர். சப்த ரிஷி மண்டலம், அஷ்ட திக்கஜங்கள், நவ ராத்திரிகள், தச அவதாரங்கள் என்பது போல் புத்தகங்களிலும் சொல்லிக்கொண்டு போகலாம். அதாவது வால்யூம்களோ அல்லது சமபந்தமான நூல்களோ அந்த அந்த எண்ணிக்கையில்தான் தம்முள் ஒரு முழுமையாக அமையும். இதற்கு மாய மந்திர காரணங்கள் ஏதேனும் உண்டோ என்று என்னைக் கேட்காதீர்கள். அப்படித்தான் அனுபவம் பேசுகிறது. 

நீங்களே பாருங்கள்- நாடகம் சம்பந்தமான ஓர் ஏழு நூல்கள் எப்பொழுது பார்த்தாலும் என் நூலகத்தில் ஒன்றாகவே இருக்கின்றன. எவ்வளவோ இடப்பெயர்வு, அடுக்கல் விளைவு, கட்டு வித்தை எல்லாவற்றையும் அவை அனுபவித்தாகிவிட்டன. ஆனாலும் அந்த ஏழு எப்பொழுதும் சப்த ரிஷி மண்டலம் போல ஒன்றாகவே நகர்கின்றன. ஒன்றாகவே சுடர்விட்டு என்னைச் சீண்டுகின்றன. 

நூல்களுக்கு வருகிறேன். 

1) Howard Barker's Theatre of Seduction, by Charles Lamb, Harwood academic publishers, 1997 

2) Meyerhold speaks, Meyerhold rehearses, by Aleksandr Gladkov, Tr by Alma Law, harwood..., 1997 

3) Yury Lyubimov at the Taganka Theatre, 1964 - 1994, Birgit Beumers, harwood..., 1997 

4) Elements of Performance, Pauline Koner, harwood..., 1993 

5) Moscow Performances, The New Russian Theater, John Freedman, 1991 - 1996, harwood..., 1997 

6) The Arab in Israeli Drama and Theatre, Dan Urian, Tr by Naomi Paz, harwood..., 1997 

7) Spanish Theatre 1920 - 1995, Volume 7, Part 3 of Contemporary Theatre Review, Issue ed., Maria M Delgado 

ஏன் இவை ஒரு சேர இருக்கின்றன என்பதற்கு ஒரு நியாயம் இருப்பதாக நினைக்கிறேன். அனைத்தும் நாடகத்தை மேடை நிகழ்த்து மெய்மை அல்லது உருவக உலகம் என்ற வகையில் ஒட்டியோ வெட்டியோ பார்க்கின்றன. 

மேடை என்றாலே வளைத்து அதற்கென்று ஒதுக்கிய இடம். அதற்குள் நுழைய வேண்டுமெனில் உங்களுக்கு வேண்டியது அனுமதிச் சீட்டு அன்று. அதற்கேற்ற கலை உணர்வு கூர்த்த மனம். அது இல்லாமல் நீங்கள் எவ்வளவு குறைந்த காசிலோ அல்லது அதிக விலை கொடுத்தோ சீட்டைப் பெற்றாலும், இல்லை ஓசியில் பார்த்தாலும், தண்டச் செலவிற்கான வவுச்சராகத்தான் உங்கள் கணக்கேட்டில் அது பதிவாகும். 

நாடக அரங்கம் என்பதில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று காணப்படும் இடம். மற்றொன்று காணும் இடம். 

காட்டும் இடம், காணும் இடம் ஆகிய இந்த முனைகளுக்குள்தான், இந்த இரண்டிலுமோ அல்லது இந்த இரண்டின் இடைப்பட்ட வெளியிலோ அல்லது அனைத்தையும் உள்ளடக்கி இவற்றில் தானடங்கா ஒரு மீப்பொது தளத்திலோதான் நாடகம் நிகழ்த்து மெய்மையில் வெளிப்படுகிறது. 

இதை Ortega எழுதிய Idea del teatro என்னும் நூலில் வரும் வரையறை மிகத் தெளிவாகச் சொல்கிறது என்கிறார் Stephen G H Roberts. 

Theatre is a building which has an organic inner form made up of two organs - auditorium and stage - set out in such a way as to fulfill two opposite but connected functions: seeing and being seen. 

மயக்கும் நாடகத்தகவு என்னும் பொருள்பட Theatre of seduction என்பதைச் சொல்ல வருகின்ற சார்லஸ் லாம்ப், இந்த நாடகக் கொள்கையையே தாம் ஹோவர்டு பார்கர் அவர்களுடைய நாடகங்களைப் புரிந்து கொள்ள சிரமபட்டு, அவரது நாடகங்களைப் புரிந்து கொள்ள வேண்டியே பிரத்யேகமாக உருவாக்கிய நாடகக் கோட்பாடு என்கிறார். சார்லஸ் லாம்பிற்கு ஊக்கத் துணை (Baudrillard) போத்ரிய்யார்ட் அவர்களின் Seduction மயக்குதல் பற்றிய கோட்பாடு. 

Seduction is that which extracts meaning from discourse and detracts it from its truth. 

என்கிறார் போத்ரிய்யார்ட். 

ஓர்டேகா கூறுவது தியேட்டர் என்பது நனவின் மெய்மையிலிருந்து ஒரு வித தப்பித்தல். இந்த escapism மனிதனுக்கு அவசியம் தேவை. அதை நாடகம்தான் தியேட்டர்தான் தர முடியும் என்பது ஓர்டேகாவின் கருத்து. 


ஹோவர்ட் பார்க்கரைப் பற்றி யூட்யூபிலும் நிறைய லிங்குகள் உள்ளன. அவருடைய வலைத் தளமே இருக்கிறது. 

ஜான் ஃப்ரீட்மன் ஐந்து வருஷங்களில் ரஷ்யன் தியேட்டரில் நிகழ்ந்த நிகழ்த்துகலைகள் பற்றிய தமது விமரிசனங்கள், கருத்துகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தரும் போது ஒரு சன்னல் திறந்து மாஸ்கோவின் கலைக் காற்று வீசுகிறது. 

பாலின் கோனர் எழுதிய Elements of Performance மிக அருமையான நிகழத்துகலைக் குறிப்புகளை உள்ளடக்கிய நூல். அதன் துணைத் தலைப்பு கூறுவது இந்த நூல் நடனம், நாடகம், குழு நாட்டியம் ஆகியவற்றுக்கான வழிகாட்டி நூல் என்பது. அவர் போதித்த அம்சங்களை அவரே தமது நிருத்தியத்தில் எவ்வண்ணம் பொதிந்து காட்டுகின்றார் என்பதைக் காண இச்சுட்டி -- http://danceinteractive.jacobspillow.org/dance/pauline-koner?utm_source=Virtual+Pillow+Views+-+November+2013+-+FINAL&utm_campaign=VP+Views+-+Nov+2013&utm_medium=archive 

சங்கீதக் காரர்களைக் குறித்து அவர் சொல்லும் போது When musicians use the interval between movements as a rest rather than a transition, the flow of the composition is fragmented. - மிகவும் பொருள் பொதிந்த வாக்கியம். 


யூரி ல்யுபிமோவ் என்னும் ரஷ்ய நாடக வித்தகர் கூறும் ஒரு வாக்கியம் - 

The most interesting thing in art is the unconscious process. Analysis starts later... 

அவரைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கிய பிர்ஜிட் ப்யுமர்ஸ் கூறுகிறார் - 

When I started my research in Moscow, the name Lyubimov was taboo: his productions were shown, but there was no indication of a director in the programmes; his picture and name were removed from all new editions of theatre histories. 

ஏன் அவருடைய நாடக உழைப்புகளைப் பற்றி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்? கூறுகிறார் பிர்ஜிட் ப்யூமர்ஸ் - 

His productions are tied not to the system under which they were created, but to the society he lived in and to the audience he played to...his work over thirty years reflects the development of humanist and spiritual values in Soviet and post- Soviet Russia. 

மேலே கவிந்த கம்யூனிஸ சித்தாந்தக் கட்டுப்பாட்டின் செயல்படுத்தும் இரும்புக் கரங்களாக ரஷ்யாவில் கலை நாடகத் துறை தணிக்கை அமைப்புகள் செயல்பட்ட போது பல நாடக சித்தாந்த வளாகங்களும் அதன் ஆட்சியைக் கீழ்ப்படிந்துதான் தம்முடைய இருப்பைத் தகக் வைத்துக் கொண்டன. ஆனல் ல்யுபிமோவின் வெற்றி அதை நிராகரித்து மேலமைப்புகளின் ஆடுபாவையாக கலை ஆகிவிடாமல் மக்களின் மனசாட்சியின் துணைவனாக நாடகக் கருத்தியல் வளாகம், தகங்க வளாகமாவது அவ்வண்ணம் யதேச்சையான உள்ள வெளிப்பாடாக செயல் பட வைத்தமை ஆகும். தகங்கா தியேட்டர் அதனாலேயே தான் இருக்கும் இடத்தின் பெயரை ஏற்றது. பெரிய இடத்துப் பெயர்களைச் சுமப்பதற்குப் பதிலாக. 

அவருக்கு ஊக்கத் துணை பெட்ரோல்ட் ப்ரெச்டின் கருத்துகள். 

தியேட்டரைப் பற்றி ல்யுபிமொவ் கூறுவது -- 

We must not forget for a minute that we are in the theatre, we must not try to act with untheatrical means, we must not imitate reality; then the feeling of truth and of life on stage will be stronger, and the spectator will believe us... 

மாறும் மனித வாழ்க்கையின் வேகத்தை தியேட்டர் புறக்கணித்து விட முடியாது. தகவல் பெருக்கம், தொடர்புத் தொழில் நுணுக்கமும் சுலபமான பயன்பாடு வழிகளும் மனித வாழ்க்கையின் அடிப்படை துரிதத்தைப் பற்றிய மேடை மீதான உருவகத்தை மாற்றியே ஆகும். நீளமான தனிமை மொழிப்பெருக்குகள், மணிக்கணக்கில் இருவர் கலந்துரையாடுவது போன்றவை வாழ்க்கையின் அடிப்படைத் தன்மைக்கே விரோதமாக உணரப்படும். 

சித்தாந்தங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் சித்தாந்தங்கள்  இருக்கின்றன என்பதை தகங்க தியேட்டரின் மூலம் வெளிக்காண்பித்தவர் யூரி ல்யுபிமோவ். அதனால் 1984ல் நாடு கடத்தப்ப்ட்டார். கோர்பசேவின் பெரஸ்டோரிகவினால் மீண்டும் ரஷ்யாவிற்கு 1988ல் வந்தார். 


ஓர்டேகா சொன்னதற்கு நேர் எதிர் போன்று இருக்கிறது மெயர்ஹோல்ட் என்னும் பிரபலமான ரஷ்ய நாடகாசிரியரின் கொள்கை. anti-illusionist கோட்பாடு, மயக்கத்தின் எதிரான, முரண்களை மூடி மறைக்காமல் மனித கவனத்தில் ஆழமாக சுழல விடும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது மெயர்ஹோல்ட் என்பவருடைய தியேட்டர் பள்ளி. 

அலெக்ஸாண்டர் க்ளாஸ்கவ் எழுதிய நூலை மொழிபெயர்த்த அல்மா லா கூறுவது - It would be difficult to exaggerate the influence the Russian theatre director, Vsevolod Meyerhold has had on the twentieth-century theatre. He was a tireless innovator with a boundless imagination who, in the words of Lee Strasberg, "exhausted almost every theatrical device and phase of theatre that could possibly be imagined". 

புரட்சிக்கு முந்தைய, அதாவது 1917க்கு முன்னரே நாடகத்தில் பெரும் பங்கு வகித்த மெயர்ஹோல்ட் பிறந்தது 1874. புரட்சியால் ஈர்க்கப்பட்டவர் 1918ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து கலைகளைப் புனரமைக்கும் கம்யூனிசக் கனவில் ஈடுபட்டார். 1924ல் கனவுகள் கலையத் தொடங்கின. புரட்சியின் கொதிப்பு அடங்கி நிதானம் எழுந்த காலமாக அமைந்தது. ஆயினும் 1934 தொடங்கி ஸ்டாலினுடைய வெறுப்புக்கு ஆளானார் மெயர்ஹோல்டு. அவருடைய முந்தைய பெருமைகள் போலிட்புரோவின் கலைக்கரங்களாக செயல்பட்ட விமரிசனக் காரர்களால் மதிப்பிழக்க வைக்கும் நடவடிக்கைகள் அதிக அளவில் நடக்கத் தொடங்கின. கடைசியில் கைது செய்யப்பட்டு, மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டார். 

ஒரு நல்ல நாடக மேதை கம்யூனிச புரட்சிக்குத் தன்னை பலி கொடுத்து, அதனால் கலை மேதைமையும் பலியாகும் படி நேர்ந்து, கடைசியில் தன் உயிரையும் பலி கொடுத்த பரிதாபம் மெயர்ஹோல்ட். 

பாலின் க்ரோனர் கூறியதைப் போன்றே ஓரிடம் மெயர்ஹோல்ட் சொல்வது - 

Even in the pauses you have to know how to maintain the tempo of the dialogue. 

அவருடைய ஆத்மா எவ்வளவு தூரம் புரட்சிக்குப் பலியாகிவிட்டது என்பதற்கு ஓர் உதாரணம் - 

The rank of Soviet actor should be just as honorable as the rank of Red Army soldier. 

சில முக்கியமான ஒன்லைனர் அவருடைய மொழிகளில் = 

The voice of tragedy must be detached. Tears are inadmissible. 

An object held in the hand is an extension of the hand. 

A distinctly spoken line will pierce a wall of any thickness. 

***

Thursday, August 07, 2014

கற்றலும் நம்பிக்கையும்

பழைய மரபுகளைப் பற்றி ஆர்வம் கொண்டு அதைக் கற்பவர்கள் கட்டாயமாக அந்த மரபுகளைத் தம் வாழ்நெறியாகத்தான் கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை.பண்டைய நெறிகளைக் கற்று அறியும் ஆர்வம்தான் போதிய காரணம். ஆனால் பழம் மரபுகளில் பெரும் நம்பிக்கை கொண்டு அவற்றைத் தம் வாழ் நெறியாகவே கொள்பவர்கள் அறிவதற்காக மட்டும் அந்த மரபுகளில் தோய்வது இல்லை. அந்த மரபு சார்ந்த நெறிகள் சொல்லும் உலகம் அப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு இன்றும் உண்மையான ஓர் உலகமாக ஒரே உலகமாகப் போய் விடுகிறது. அந்த மரபு சொல்லும் உலகக் கோட்பாடுதான் 'தி உண்மை' என்ற கடும் கருதல் விரதத்திற்குத் தங்களை ஈடு கொடுத்துவிடுகின்றனர். அப்படி, சொல் செயல், மனம் எல்லாவற்றையும் ஒரு நெறியில் காவு கொடுத்து, அதில் தன்னையே இழக்கும் வெறியான மனப்பான்மைக்குத்தான் பண்டைய நெறிகள் பெரும்பான்மையும் நம்பிக்கையாளர்களை மறைமுகமாகவோ நேரடியான ஆணைகள் மூலமாகவோ ஊக்குவிக்கின்றன. எனவே ஒரு நம்பிக்கையாளராக மத மரபுக் கருத்துகளைப் பயில்வோர் ஒரு விதத்தில் Probation for religious exclusivism if not fanaticism என்ற நிலையில் தம்மைப் பெய்து விடுகின்றனர். 

ஆனால் பண்டைய மத நெறிகளையும், பண்பாடுகளையும் மனித குல கருத்து, பண்பாட்டுப் பங்களிப்பு என்ற விதத்தில் அறிய ஊக்கம் கொண்டு ஆழ்ந்து கற்கும் ஆர்வலர்கள் தங்கள் அறிவு நிலைப்பாட்டை, அறிவின் ஆற்றலால் புரிந்துகொள்ள வேண்டிய Rational Standpoint என்பதை ஒரு நாளும் கைவிடுவதில்லை. மக்கள் பொதுவாக இந்த இருவேறு அணுகுமுறைகளிடையே உள்ள வித்யாசத்தை உணர்வதில்லை. 

To study an ideology doesn't mean believing in it. 

Believing need not mean studying one's faith. 

இதில் அறிவு ரீதியாகப் பண்டைய மரபுகளைக் கற்போர் பெரும்பான்மையும் அந்த மரபு சார்ந்த கருத்துகளைச் சிறிதும் மாற்ற முற்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அந்த நெறிகள் அவர்களுக்கு subjects of study. 

எனவே அவர்கள் விஞ்ஞான அணுகுமுறையில் மிக கவனமாக தங்களுடைய மனச்சாய்வுகள், மன விருப்பங்கள், வெறுப்புகள் ஆகியன சிறிதும் தாங்கள் கற்க எடுத்துக்கொண்ட மரபுக் கருத்துகளைப் பாதித்துவிடாத வண்ணம் ஜாக்கிரதையாக இருக்கின்றனர். 

ஆனால் நம்பினால் போதும், மிகத் துல்லியமாகக் கற்க வேண்டிய தேவையில்லை என்ற மறைமுகச் சலுகை மனப்பான்மை நிலவும் நம்பிக்கை வட்டாரங்களைச் சார்ந்த பெரும்பாலோர் தங்களுடைய சொந்த நம்பிக்கையாக கொண்ட நெறிகளையே புகழ், லாபம், சக கூட்டாளி மக்களுடைய துதிபாடுதல் ஆகியவற்றுக்கு இரையாகி,-- 'எல்லாம் நம்முடைய நம்பிக்கை நெறிதானே, எப்படி மாற்றிச் சொன்னால் என்ன, நமக்கு இல்லாத உரிமையா, என்ன பார்க்கப் போனால் அதே நெறிகளை மக்களிடையே நம்மோடு சேர்த்துப் பிரபலப்படுத்த வேண்டிதானே செய்கிறோம். எல்லாம் சரிதான் -- என்ற சுயமாகச் செய்து கொள்ளும் சௌகரிய மயக்கம் காரணமாகத் துணிந்து இஷ்டப்பட்ட போக்கில் எழுதத் துணிகின்றனர். 

இது ஒரு வினோதமான முரண்பாடாகத்தான் தோன்றுகிறது. 

அறிவு நெறியின் சுயக் கட்டுப்பாடு பண்டைய மரபுகளைத் துல்லியமாக உள்ளது உள்ளபடி வழங்க முடிவதையும், நம்பிக்கைக்குத் தம்மை அர்ப்பணித்தவர்களாகச் சொல்லிக் கொள்வோர் தமது மூல நூல்களின் ஆசிரியன்மர்களின் கருத்துகளையே விகாரப்படுத்தி, மாற்றி, அடியோடு வேறுபடுத்தி, அவற்றைத் தமது புகழீட்டுவதற்கான கருவி கரணங்களாகப் பயன்படுத்தத் துணிவதையும் பார்க்கும் போது இந்த வினோத முரண்பாடு உள இயலில் வேர்விட்டிருப்பது புரியும். 

எனவேதான் நான் பண்டைய நெறிகளைக் கற்கும் போது அறிவு நெறியாளர்கள் கற்று ஆய்ந்து எழுதிய நூல்களை மிகவும் விரும்பிப் படிப்பது. நம்பிக்கையளர்கள் எழுதியவை என்றால் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் அந்த நூல்களை நான் பயன்படுத்துவேன். 

ஆனால் பண்டைய காலங்களில் அதாவது சில நூர்றாண்டுகள் முன் வரையில் கூட இந்தத் தொல்லை இல்லை. அந்த ஆசிரியர்களும் நம்பிக்கை உலகத்தைச் சார்ந்தவர்கள், இன்னும் தீவிரமகச் சார்ந்தவர்கள் என்றாலும் கூட அவர்களிடத்தில் பெரும்பாலும் உண்மை இருந்தது. சான்று நூல்களையும், மூலக் கருத்துகளையும் கையாள்வதில் பெரிதும் மரியாதையும், உண்மைக்குப் புறம்பாக எழுதுவது கூடாது என்பதில் சுய கௌரவம் அடங்கிய ஒரு self-discipline என்பதும் நிலவியது. ஆனல் சமீப காலங்களாகத்தான் நம்பிக்கை வட்டாரங்கள் பெரிதும் உணர்ச்சிக் கொந்தளிப்பு வட்டாரங்களாகப் போய் விட்டன போலும். விளைவாக தரம் என்பது தரைதொடு நிலைக்கு வந்துவிட்டதோ! 

ஈச்வரோ ரக்ஷது ! 

***

Friday, August 01, 2014

Sane Attitude Towards Life

ஊருன்னா எங்க ஊருதான். இதெல்லாம் என்ன ஊரு? எங்கு பிறந்து வளர்ந்த மனிதரும் இதைத்தான் சொல்கின்றார்கள். எங்களுடைய சுற்றம், எங்களுடைய உற்றார், எங்களுடைய நண்பர் - இவர்க்கு இணை இந்த உலகிலேயே இல்லை. ‘நீங்க நம்மாளா?’ சொன்னவுடன் ஒரு கேண்மை. 

ஏன் மனிதர்களுக்கு இப்படி ஓர் அவநம்பிக்கை இந்த உலகின் மீதும், இந்த உலகில் கூடப் பிறந்த மக்கள் மீதும். வேற்று நாடு என்றதும் ஓர் எதிரியான எண்ணம், ஓர் ஜாக்கிரதை, சந்தேகம். வேற்று நாடு என்று வேண்டாம். வேற்று இனம், வேற்று மாகாணம், வேற்று மொழி - என்ன மாற்றம் வந்து விடுகிறது நம் மனத்தில்! 

நம்மவர்கள் >< அவர்கள் இந்த விஷ நுகத்தடியில் சிக்கி நம் நல்லெண்ணங்கள் பாழாவதுதான் எத்தனை எத்தனை! 

அதாவது நம்மவர்கள் மத்தியில் கவலை இல்லாமல் தன்னிச்சையாக இருக்கலாம் என்பதும், மற்றவர்கள் என்றால் இயல்பாய் இருக்க முடியாது என்பதும் இந்த விஷ சிக்ஸாவிற்கு நாம் சொல்லும் காரணம். 

ஆனால் எந்த நாடாய் இருந்தால் என்ன? எந்த ஊராய் இருந்தால் என்ன? எந்த மொழி, எந்த இனமாய் இருந்தால் என்ன? ஒருவருக்கு ஒரு தீமை வரவேண்டும் என்றால் அது இன்னாரால்தான் வரவேண்டும் என்று இல்லையே. பிறர் தர வருவது அல்லவே தீமையும், நன்மையும். பின்? 

நாம் செய்த வினைகள், அவற்றின் பயன்கள் அன்றோ பின் ஒரு காலத்தில் வினைப்பயன்களாக வந்து ஊட்டுகின்றன. 

வந்து சேர வேண்டிய வினைப்பயன் எல்லா கதவுகளையும் மூடினாலும் உள்ளிருந்தே கிளம்பி அன்றோ வந்து எய்தும்! 

மேலும் மக்களே! வாழ்க்கையில் நோவதும், பின்னர் அந்த நோவு தணிந்து மாறுவதும், நோய், முதுமையின் தளர்ச்சி போன்றவையும், அது போன்றே சாதல் என்பதும் இனிமேல்தான் நாம் புதிதாக முதன்முறையாக அனுபவிக்கவா போகிறோம்? இல்லை மக்களே இல்லை. 

எனவே வாழ்க்கையை ஆஹா மிக இனியது என்று கொண்டாடாதீர்கள்! 

அது போல் வாழ்க்கையை ஐயோ மிகவும் இன்னாதது என்று சினம் கொள்ளாதீர்கள். 

நீங்கள் பயிற்சிக் கூடத்தைப் பள்ளியறை என்று நினைத்து மயங்குகிறீர்கள். அதனால் சில சமயத்தில் வெறுத்து பாழும் பள்ளம் என்று வெறுக்கிறீர்கள். இல்லை இல்லை. வாழ்க்கை வாழ்க்கைதான் மக்களே! 

நன்றாக நினைத்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும். 

யாதும் ஊரே 
யாவரும் கேளிர் 

தீதும் நன்றும் பிறர்தர வாரா. 

நோதலும் 
தணிதலும் 
அவற்றோரன்ன சாதலும் 
புதுவதன்றே! 

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே. 

முனிவின் இன்னாது என்றலும் இலமே. 

நீங்கள் மின்னல் மின்னி வானம் இடித்து மழை பெய்து மலையின் சிரங்களில் வந்து இறங்கி, பின்னர் பல அருவிகள் ஒன்று கலந்து மேட்டிலிருந்து பள்ளத் தாக்குகளில் வரும் பொழுது வேகம் கூடி பெரும் வெள்ளமாக, பெருக்கெடுத்த வற்றாத நதியாக வரும்பொழுது அதில் ஒரு புணை, நீந்த உதவும் கட்டை, அந்த ஓட்டத்தோடு அதன் வேகத்தோடு அதன் திசையில் எல்லாம் உருண்டு, பிரண்டு முற்றிலும் நதியின் வசத்தில் தன் கதி என்று வருகின்ற அந்தப் புணையைப் பார்த்திருக்கிறீர்கள் தானே? அந்த மாதிரிதான் ஆருயிர் என்பது பண்டைய வினைகளின் கூட்டு வேகம் ஆகிற ஊழ், முறை எனப்படும் நியதியின் வேகத்திற்கு ஆட்பட்டு வாழ்க்கையில் ஒரு புணை போல் மிதந்து வருகிறது. 

ஒவ்வோருயிரும் ஏதோ தான் சுதந்திரமாக நடப்பது போல் தோன்றினாலும் அத்தனைக்கும் பின்னால் இயக்க வேகமாக இந்த முறை அல்லது விதி அல்லது ஊழ் இருக்கிறது என்பதைச் சாதாரணமாக மக்கள் உணர்வது இல்லை. மிகவும் ஆழ்ந்து தியானிக்கும் திறன் வாய்க்கப் பெற்ற திறவோர் காணும் தத்துவக் காட்சியில்தான் இந்த உண்மை நமக்கும் காணக் கிடைக்கிறது. 

மின்னொடு வானம் 
தண் துளி தலைஇ ஆனாது 
கல் பொருது இரங்கு 
மல்லற் பேர் ஆற்று 
நீர் வழிப்படூஉம் புணைபோல் 
ஆருயிர் 
முறைவழிப் படூஉம் என்பது 
திறவோர் காட்சியில் தெளிந்தனம். 

எனவே மக்களே! இதனால் ஒரு தெளிவுக்கு வந்திருக்கிறோம் யாம். என்னவென்று கேட்கிறீர்களா? 

அவரவர் வினைப்பயன் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் புணைபோல் இயங்கும் உயிர்கள்தாம் அனைவரும் என்பதால் ஒரு மனப்பான்மை எமக்கு ஏற்பட்டுவிட்டது. பெருமையில், மாட்சியில் மிகப்பெரியவர் என்போரை ஏதோ மனிதரால் முடியவே முடியாத அருமையான வியப்பு போல் யாம் கருதிப் பார்ப்பதில்லை. 

அதைவிடவும் முக்கியமாக மாட்சியில் சிறியோரை, பெருமையில் குறைவு பட்டோரை, ஊரறிந்த புகழ் கிட்டாமல் அடக்கமாக இருக்கும் எளியவர்களை இகழ்தல் என்பது யாம் ஒரு காலும் நினைப்பதில்லை. 

ஆகலின் 
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே 
சிறியோரை இகழ்தல் 
அதனினும் இலமே. 

புறநானூறு, 192ல் கணியன் பூங்குன்றனார் கூறியதை விட ஒரு sane attitude towards life  என்பது என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்! 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Tuesday, June 03, 2014

Ayn Rand பற்றிய நூலொன்று எழுதலாமா?

என்ன! தலைப்பே வித்யாசமாக இருக்கு என்று பார்க்கிறீர்களா?

நூல் எழுதினால் எழுத வேண்டியதுதானே! அயின் ரேண்ட் பற்றிய நூல் ஒன்று எழுதலாமா என்று என்ன கேள்வி?

காரணம் நெடுநாளாக ஓர் எண்ணம். என் ஆசாரியர்களில் முதன்மை அணியில் திகழ்பவர்களில் Aristotle ம், Ayn Rand ம் அடக்கம்.

நான் பிறந்து வளர்ந்த ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த நுட்பங்களையே எனக்குப் புரிய வைத்தது அரிஸ்டாடில்.

அரிஸ்டாடிலை எனக்குப் புரிய வைத்தது அயின் ரேண்ட்.

எனவே அவர்களின் சந்நிதானங்களில் நான் ஒரு வித பரவசத்தை அடைகிறேன்.

ஆனாலும் எப்பொழுதும் போலவே நான் மிகவும் மதிக்கும் இடங்களில் சிறிதும் தயக்கமின்றிச் சுதந்திரமாக என் ஐயங்களையும் விமரிசனங்களையும் வெளியிடுவது என் வழக்கம்.

கேள்வி கேட்காத வழிபாட்டுணர்வு என் இயல்புக்கு விரோதமானது. என் அறிவுக்கு முழு சுதந்திரம் அளித்துச் சிறிதும் தயவு தாக்ஷிண்யம் இல்லாமல் ஒருவரின் கருத்துகளைச் சிந்தித்துப் புரிந்து கொள்வதுதான் அவர்களுக்கு நான் காட்டும் உயர்ந்த பக்ஷ மரியாதை. நான் அறிந்த வழிபாடும் இதுவே.

இந்த என் இயல்பு எந்தக் கூடாரத்திலும் வழமையான ஆட்களுக்கு என்பால் ஒருவித வெறுப்பைத்தான் சம்பாதித்துக் கொடுக்கிறது என்றாலும் நான் என் வாழ்க்கையில் அனுபவத்தில் அறிந்த நன்மை இதுவேயாகும். கருத்தியல் ரீதியான முன்னேற்றமும் எனக்குக் கைகூடாக இதனால் மட்டுமே கிடைக்கிறது. பெரும் மேதைகளின் அறிவுச் செறிவையும் இந்த வழியினால்தான் என்னால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அப்படி இருக்கும் பொழுது அயின் ரேண்ட் பற்றி நூல் எழுதலாமா என்று யோசிப்பதும் கேட்பதும் ஏன் என்ற கேள்வி இங்கு பொருத்தமானதுதான்..

எந்த ஒரு மேதையைப் பற்றியேனும் எடுத்தவுடன் தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ எதிர்மறையான கருத்துகளால் மட்டுமே அணுகுவார் என்றால் அது நிச்சயம் அயின் ரேண்ட் பற்றித்தான் எனலாம்.

காரணம் அவர் எடுக்கும் நிலைப்பாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமுதாயங்கள் எடுத்து வந்திருக்கும் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறான, மாறான, தெள்ளத் தெளிவான, சிறிதும் விட்டுக் கொடுக்காத நிலைப்பாடு. அது மட்டுமன்று. மிகவும் சரியாக நியாய ரீதியாக விவாதிக்கப்பட்டு முன் வைக்கப்படும் நிலைபாடும் கூட.

நீங்கள் அவர் கருத்துகளை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் வழக்கப்படியான கருத்துகளின் கலந்துகட்டிகளில் எதையாவதும் ஒரு கையால் ஏற்றுக் கொள்வது என்பது முடியாது. இதுவா அதுவா - Either Or -  என்னும் கறார்தன்மை பூரணாமாக நிறைந்தது அவருடைய அணுகுமுறை.

அவர் பெண். ஆனால் பெண்ணியம் என்று வழமையான நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்.

ஆண்களின் ஆதிக்கம் என்பதை அர்த்தமற்றது என்று காண்பிப்பதில் தன்னிகரில்லாதவர்.

'சுயநலம்' என்பதைத் தத்துவ ரீதியாக நிலைநாட்டியவர். ஆனால் சுய இச்சைகளின் கண்மூடித்தனத்தைக் கண்ட துண்டமாகக் கண்டித்து எறிந்தவர்.

Individuality என்பதைக் கோயில் கட்டி வைத்தவர். ஆனால் ஆங்காரத்தால் ஆடும் தன் மமதைக்குச் சிறிதும் இடமில்லை என்று காண்பித்தவர்.

கடவுள், மதம் என்பதை அதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்துடன் அடிவேர் மிச்சமின்றிக் கடிந்து எறிந்தவர். ஆனால் உண்மையான ஆன்மிகம் அவர் தத்துவத் தெளிவில் துலங்கக் காணலாம்.

பிறர் நன்மைக்காகத் தன்னை அழித்துக் கொள்வது என்ற altruism என்பது எவ்வளவு பேதைமையும், புன்மையும் நிறைந்தது என்பதை விண்டு விளக்கி என்றைக்குமாக ஒழித்துக் கட்டியவர்.

காப்பிடலிஸம் என்பதைப் பெரும் தத்துவ சாஸ்திரமாக வளர்த்தெடுத்தவர்.

கம்யூனிஸம் என்பது தத்துவ ரீதியாக அவர் எழுத்துகளிலேயே மடிந்து விட்டது எனலாம்.

இப்படி இருக்கும் ஒருவரை எப்படி யார்தான் முழுமையாக ஏற்று ஒப்பிவிட முடியும்?

இத்தனையையும் அவர் சாதித்தது ஒரே ஓர் அடிப்படைக் கருத்தை மட்டுமே முற்றிலும் அதன் தத்துவார்த்தக் கடைக்கோடி வரை பிசகாமல் கைக்கொண்டதனால் மட்டுமே எனலாம்.

அந்த அடிப்படைக் கருத்து - 'பகுத்தறிவு'.

ஆனால் அவரை முதலில் எதிர்ப்பது பகுத்தறிவு வாதிகளே. காரணம் அவர் பகுத்தறிவு வாதத்தின் முழு வீச்சுவரை போகின்றார். பகுத்தறிவுவாதிகளுக்கோ பகுத்தறிவு என்பது தாம் கைக்கொண்ட ஒரு சித்தாந்தம் அல்லது மதம் என்பது மாதிரிதான். அதுவும் பிற சித்தாந்தங்களுக்கு எதிர் நிலையாக.

அப்படிப் பார்த்தால் பகுத்தறிவு என்பதையே முற்ற முழுக்க ஒரு தரிசனம் என்ற வகையில் பூரணமாக வளர்த்தெடுத்தவர் அயின் ரேண்ட்.

ஆனால் அவர் பேரை சொன்னதும் அன்றிலிருந்து இன்றுவரை எங்குமே ஆக்ரோஷமான எதிர்ப்புகளும், பழிப்புகளும், சாடல்களும் விமரிசனங்கள் என்னும் பூச்சில் குவிக்கப்ப்படும்.

Derisive remarks and slandering will camouflage as pedantic criticism on her.


*** 

அயின் ரேண்ட் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், அவருடன் பழகி வாழ்ந்த பல நண்பர்களின் நினைவுகள் ஒலிப் பதிவுகளையும் இந்தத் தளத்தில் வைத்துள்ளனர். 
-- http://www.aynrand.org/site/PageServer?pagename=about_ayn_rand_aynrand_biography

கருத்துகளைப் பற்றி மிக ஆழமாகவும், உண்மையாகவும் அக்கறை கொண்டு தம் கருதுகோள்களைத் திறமையான முறையில் நாவல், கட்டுரைகள் என்ற இரு வடிவிலும் வடித்த சிறந்த தத்துவ அறிஞர் அயின் ரேண்ட். 

ஆனால் முறை சார்ந்த தத்துவ இயல் படிப்பு வளாகங்கள் அவரையும், அவர் தத்துவத்தையும் மிகவும் அலட்சியம் செய்ய முயன்று தோற்று இப்பொழுது சிறுகச் சிறுக கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். 

பழைய புராண மொழியில் கூறுவதாய் இருந்தால் - கலிகாலத்தை இன்னதென்று தோலுரித்துக் காட்டியவர். அவர் காட்டிய அளவிற்குப் புராணங்களே சரிவர வகிர்ந்து காட்டவில்லையோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. 

அயின் ரேண்ட் அவர்களின் தத்துவம் என்ன? அவர் அந்தத் தத்துவத்திற்கு அளித்த பெயர் Objectivist Philosophy. 

அப்ஜெக்டிவிஸ்ட் எபிஸ்டமாலஜி அதாவது அறியும் நெறி என்பது என்ன? 

அவர் கூறிய Rational Self-interest என்பது யாது? 

அவர் ஏன் Reason என்பதை மறுக்க இயலாத ஒரே அறிவு நெறியாகக் கருதினார்? 

அத்தனையையும் ஓர் ஆறு மணித்துளி அவகாசத்தில் அவர் பேச்சிலேயே பதிந்து வைத்திருக்கும் யூட்யூப் அருமையான அனுபவம்! 

http://www.youtube.com/watch?v=WfUvpztmPtc&feature=player_embedded#

தனக்கென வாழா பிறக்குரியாளர் - இந்தக் கருத்து தெரிவிக்கும் கருத்து அல்ட்ரூயிஸம் என்னும் சுயநலத்தைப் பிறர்க்காக பலிகொடுத்தல். 

ஆஹா என்ன உயர்ந்த லட்சியம் என்று தோன்றுகிறதா? 

ஆனால் இது மிக மோசமான Evil என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா? 

இந்த யூட்யூபில் அயின் ரேண்ட் அதை விளக்குவதைப் பார்க்கலாம் 

http://www.youtube.com/watch?v=51pMod2Aaso 


1959ல் மைக் வேலஸ் அயின் ரேண்ட் பேட்டி என்பதுதான் முதல் பேட்டியாகத் தெரிகிறது. 

அதில் 27 மணித்துளிகளில் மைக் வேலஸ் கேட்க அயின் ரேண்ட் தம் கருத்துகளை விளக்குகிறார். 

http://www.youtube.com/watch?feature=endscreen&v=1ooKsv_SX4Y&NR=1 


காபிடலிஸம் என்றால் என்ன என்று தெரியாமலேயே அதை அதைச் சார்ந்தவர்களே தற்கொலை கணக்காக அழிந்து போக விடுவது என்ன கொடுமை! என்கிறார் அயின் ரேண்ட். 

இதோ அவர் ஆற்றிய அநேகமாக வாழ்வின் கடைசி உரை போலும் - குரலில் சிறிது நடுக்கம் போல் அங்கங்கு முதுமையினால் தெரிந்தாலும் கருத்துகள் மாறாத வலிமையுடன் மாறாத மெய்மையுடன் அதே அழுத்தம் திருத்தமாக - 

http://www.youtube.com/watch?v=A-lptr_0Xck&NR=1&feature=endscreen  


Capitalism என்றால் என்ன?

சொல்லகராதிகளில் அன்றி யாரேனும் காபிடலிஸத் தத்துவம் என்பது என்ன என்று தத்துவார்த்தமாகச் சொல்லியிருக்கின்றனரா? என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

காபிடலிஸத்தைத் திட்டுபவர்களின் வாய்வார்த்தையில்தான் காப்பிடலிஸம் என்றால் என்ன என்ற அபிப்ராயம் பரப்பப் படுகிறது.

ஆனால் நியாய பூர்வமாக நன்கு நிரூபிக்கப்பட்ட அறிவுநெறித் தத்துவத்தின் அடிப்படையில் காப்பிடலிஸம் என்றால் என்ன என்று அயின் ரேண்ட் ஆற்றிய உரைகளின் தொகுப்பை இந்தச் சுட்டிகளில் வரிசையாகக் கேட்கலாம்.

அறிவு சம்பந்தமான உழைப்புகள் எவ்வளவு உண்மையாகத் திருடப்பட முடியாதவை என்பதைப் புரிந்து கொள்ள அயின் ரேண்ட் அவர்களின் கருத்துகளைக் காட்டிலும் சிறந்த உதவி இல்லை. இந்த உரையின் அச்சு வடிவம் அயின் ரேண்டின் காபிடலிஸம் த அன்நோன் ஐடியல் என்ற நூலின் முதல் அத்தியாயமாகத் திகழ்கிறது.

1) http://www.youtube.com/watch?v=U9B2XHQM62g&feature=endscreen&NR=1


2) http://www.youtube.com/watch?v=OGfRUrMzqn8&NR=1&feature=endscreen


3) http://www.youtube.com/watch?v=aMV_6AqIMRI&NR=1&feature=endscreen


4) http://www.youtube.com/watch?v=SliEOvdv7PM&NR=1&feature=endscreen


5) http://www.youtube.com/watch?v=ZDC0OZUcPbY&NR=1&feature=endscreen 

***

ஒரே வினாடிதான் நேரம். ஒன்றே ஒன்றைத்தான் சொல்ல வேண்டும். இதுவா அதுவா என்று யோசிக்க நேரமில்லை. எங்கே சொல்!

உலகின் மிகப்பெரிய இதிகாசம் எது?

என்று யாராவது என்னைக் கேட்டால் என் வாய் தானாகக் கூறுவது ஒன்றை மட்டுமே.

Atlas Shrugged

By Ayn Rand.

இன்றைய விழிப்புற்ற அமெரிக்காவும் அப்படித்தான் நினைக்கிறது போலும்! இதோ --

http://www.youtube.com/watch?v=zVyPdjgBKUg 


புதிய கருத்தை, புது தத்துவத்தை அளிப்பவர் தம் கருத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போனால் எவ்வளவோ உத்தமம் என்றுதான் தோன்றுகிறது.

அதை சமுதாயத்தில் இயக்கமாக மாற்ற ஊக்கம் கொண்டால் மிகவும் நகைச்சுவையான முடிவுகள்தாம் மிஞ்சுகின்றன. சமீபத்தில் ஜே கே யைப் பற்றிய வாழ்க்கை நூல் ராதா ராஜகோபால் எழுதியதைப் படித்த பொழுதும் அதுதான் தோன்றியது.

அறிவு, சுதந்திரம், தனித்துவம், கட்டளைக் குரல்கள் எதற்கும் கீழ்ப்படியாமை என்று ஆரம்பித்துக் கருத்துலகில் முரண்பாடற்ற பெரும் அமைப்பாய் எழுபவை இயக்கமாக ஆகும் பொழுது என்ன முரண் நகையாகி நிற்கின்றன. முரே ரோத்பேர்ட் என்னும் ஆசிரியர், லுட்விக் வான் மைஸஸ் கழகத்தின் அறிஞர் எழுதும் இந்த சமுதாய இயல் கட்டுரை அயின் ரேண்ட் கருத்துகளின்பால் எழும்பும் இயக்கம் பற்றிய முரண் நகையை அலசுகிறது.

http://www.lewrockwell.com/rothbard/rothbard23.html  


அயின் ரேண்ட் அவர்கள் அமெரிக்காவுக்கு உபதேசம் என்று ஆற்றிய உரை அன்றைக்கும் அதைவிட இன்றைக்கும் பொருந்துகிறதோ.!

அமெரிக்காவுக்கு மட்டும்தான் பொருந்துமா? இல்லை அனைவருக்கும்தானா?

கன்ஸர்வேடிவ்ஸ் நிலைப்பாட்டை விமர்சிக்கும் பொழுது அயின் ரேண்ட் ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறார். காப்பிடலிஸம் ஏன் சரி என்றால் கன்ஸர்வேடிவ்ஸ் கூறுகின்றார்களாம் - 'வழிவழியாக நமது ஸ்தாபன முன்னோர்கள் தொடங்கி வந்து கொண்டிருக்கும் சித்தாந்தம்; அதனால் அதுவே சரி' என்று. அத்தகைய நிலைப்பாடு அறிவுக்குப் பொருந்தாது என்பது அயின் ரேண்ட் அவர்களின் விமரிசனம்.

அதாவது காப்பிடலிஸம் சரியான தத்துவம் என்பதற்குக் காரணமாக பழமை, வழிவழி வந்த பிதிரார்ஜிதம் என்பதெல்லாம் அறிவுக்கு ஒவ்வாத, மெய்மைக்குப் பொருந்தாத வாதங்கள். ஒரு சித்தாந்தம் சரி என்று கொண்டால் அது அறிவு நெறிக்கு எப்படி ஒத்து வருகிறது. அதன்பால் குறைபாடுகள் உள்ளனவா? அல்லது மற்ற சித்தாந்தங்களில் இருக்கும் குறைகளை அது நிவர்த்திப்பதுவாய் இருக்கின்றதுவா? அந்தச் சித்தாந்தம் அதன் அடிப்படைக் கருத்துகள் என்று கூறுவதில் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளனவா? அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் நம்பிக்கையில் சாய்ந்து விடுகிறதா? இவ்வாறுதான் பார்க்க வேண்டுமே அன்றி 'எங்க அப்பா சொன்னா, தாத்தா சொன்னா, அப்பலேந்து அப்படித்தான் பண்ணிண்டு வரோம்' என்பதெல்லாம் பொருந்தாத வாதங்கள்.- என்கிறார்.

அயின் ரேண்டின் நிலைப்பாடு முற்றிலும் அறிவு என்பதில் நிலைகொண்டிருப்பது. நிரூபிக்கக் கூடிய வாஸ்தவம் என்பது அவர்களது அணுகுமுறையின் அடித்தளம்.


http://www.youtube.com/watch?v=oTf6NK0wsiA தமது கருத்துகள் தீர்க்க தரிசனம் ஆவதைத் தாம் விரும்பவில்லை என்றவர் அயின் ரேண்ட்.

அமெரிக்காவின் எதிர்காலம் என்ற  இந்த யூட்யூபில் ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை இன்றைக்கும் அன்றைக்கு அவர் சொன்னதற்கும் --

http://www.youtube.com/watch?v=WkzZch00_jg 


நீ ஒரு குழுவுக்கு அடிமை.

நீ ஒரு கூட்டத்துக்கு அடிமை.

நீ ஓர் இனத்துக்கு அடிமை.

நீ ஓர் ஆளுக்கு அடிமை.

நீ ஓர் ஆண்டவனுக்கு அடிமை.

சமுதாயம்தான் உனக்கு அர்த்தம் தருகிறது.

மதம்தான் உனக்குப் பொருள் தருகிறது.

உன் சக மக்கள்தாம் உன் வாழ்வுக்கு அர்த்தம் தருகின்றனர்.

மேலும் கீழும் பக்கவாட்டிலும் சூழ்ந்தவர்களோடு நீ கொள்ளும் தொடர்புகள் என்ற சூழ்நிலையின்றி உன் இருப்புக்கே பொருள் இல்லை.

இவ்வாறுதான் மனிதரை இதுவரை வளர்த்து வந்துள்ளனர். சமுதாயக் கல்வியில், மத உணர்வுகளில், வழிவழி மரபுகளில், கூட்டு மனப்பான்மை ஆயத்தங்களில்.

ஆனால் தனி மனிதன் என்ற தத்துவம், தனி மனிதனுக்கான நியாயம், தன் இருப்புக்காக யாருக்கும் வரி செலுத்த வேண்டாத தான் என்பதன் சுதந்திரமான நிலை

Individualism

இதற்கு முழுக்க நியாயமும், சாத்திரமும் தந்தவர் அயின் ரேண்ட்.

அவரது நாவல் Fountainhead ஃபில்மாக வந்தபோது அதில் பிரதான கதாநாயகன் Howard Roark வழக்கு மன்றத்தில் தனக்காகத் தான் தன் வாதத்தை வைக்கும் காட்சி.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=BW-cUgZg178#!

*** 

அயின்ரேண்ட் எழுதிய ஒரு வாசகம் கண்ணில் பட்டது. செய்தறியாத பாவம் சிந்தனைதான் என்றால் அதையும் செய்துதான் பார்ப்போமே!

The good, say the mystics of spirit, is God, a being whose only definition is that he is beyond man's power to conceive- a definition that invalidates man's consciousness and nullifies his concepts of existence. Man's mind, say the mystics of spirit, must be subordinated to the will of God. Man's standard of value, say the mystics of spirit, is the pleasure of God, whose standards are beyond man's power of comprehension and must be accepted on faith. The purpose of man's life is to become an abject zombie who serves a purpose he does not know, for reasons he is not to question. 

அப்படி ஒன்றா? இன்னொன்று..... இதையும்....ஹ ஹ... 

For centuries, the battle of morality was fought between those who claimed that your life belongs to God and those who claimed that it belongs to your neighbors - between those who preached that the good is self-sacrifice for the sake of ghosts in heaven and those who preached that the good is self-sacrifice for the sake of incompetents on earth. And no one came to say that your life belongs to you and that the good is to live it. 


சிந்தனை செய்  மனமே! செய்தால்... 


'கடவுள்' என்பதைப் பற்றி அயின் ரேண்ட் எழுதிய அட்லஸ் ஷ்ரக்ட் என்ற நாவலில் வரும் ஜான் கால்ட் பேசிய பேச்சிலிருந்து -- 

They claim that they perceive a mode of being superior to your existence on this earth. The mystics of spirit call it "another dimension," which consists of denying dimensions. The mystics of muscle call it "the future," which consists of denying the present. To exist is to possess identity. What identity are they able to give to their superior realm? They keep telling you what it is not, but never tell you what it is. All their identifications consist of negating: God is that which no human mind can know, they say—and proceed to demand that you consider it knowledge—God is non-man, heaven is non-earth, soul is non-body, virtue is non-profit, A is non-A, perception is non-sensory, knowledge is non-reason. Their definitions are not acts of defining, but of wiping out. 

இதுவும் ஒரு அயின் ரேண்ட் வாசகம் -- 

Every argument for God and every attribute ascribed to Him rests on a false metaphysical premise. None can survive for a moment on a correct metaphysics.

வழ்க்கமாக 'கடவுள்' என்றால் என்ன என்று சொல்கிறார்கள்? 

"God" as traditionally defined is a systematic contradiction of every valid metaphysical principle. The point is wider than just the Judeo-Christian concept of God. No argument will get you from this world to a supernatural world. No reason will lead you to a world contradicting this one. No method of inference will enable you to leap from existence to a "super-existence." 

அயின் ரேண்ட் படித்துக் கருத்துத் தெளிவடையாமல் இருக்க முடியாது. 

*** 


கூகிள் பிளஸ்ஸில் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இடுகையில், பிரியா அவர்களின் பதிலுக்குப் பின்னூட்டமாக நான் எழுதிய வரிகள் -- 

"அயின் ரேண்டின் அப்ஜக்டிவிஸ்ட் தத்துவம் என்பது ரீஸன் என்ற ஒன்றுதான் அறிவுக்கான வழி. அறிவதற்கான மாற்று வழியோ, அறியப்பட வேண்டிய மாற்று மெய்மைகளோ இல்லை என்பது அவருடைய திடமான வாதம். எந்த நாத்திக வாதியும் செய்யத் துணியாத செயலை அயின் ரேண்ட் செய்கிறார். அறிவுக்கு அப்பாற்பட்ட, மெய்மையைக் கடந்த கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை மிக அழுத்தமாகக் காட்டுகிறார். பன்னெடுங்காலப் பாரம்பரியக் கருத்துகளின் நேரெதிர் அவர் காட்டும், ரீஸனை முழு அடிப்படையாக ஏற்று எழும்பும் வாதம். அதில் சிறிதும் இப்படி அப்படி விட்டுத்தரும் அவசியம் அவருக்கு இல்லை. அப்படியே இருக்கிறது என்பது போல் நமக்குப் பட்டாலும் அவர் அதற்குச் சொல்லக் கூடிய பதில் - Check your premises - என்பதுதான். 

ஆனால் வேதாந்தம் என்பது ரீஸனுக்கு உரிய முழு இடத்தையும் அங்கீகரித்து, கடவுள் என்ற ஒற்றை விஷயத்திற்கு மட்டும் சுருதி என்னும் ரெவலேஷன் என்பதை அடிப்படையாகக் கொள்ளும் உபநிடத தத்துவ அணுகுமுறை. அதாவது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் வரம்பு மீறாத பாத்தி கட்டி வைத்து அணுகும் முறை. இதை மிஸ்டிஸிஸம் என்பதனோடும் சேர்க்க முடியாது. ஏனெனில் மிஸ்டிஸிஸம் என்பது மாற்று மெய்மையை ஒப்புவது; மாற்று அறிவு வழியை நம்புவது. வேதாந்தத்தோடு ஒப்பிட வேண்டுமெனில் செயிண்ட் தாமஸ் அக்வினாஸ் அவர்களின் தியாலஜிகல் அணுகுமுறைகளைச் சொல்லலாம். ரீஸனுக்கான பிரதேசத்தில் நம்பிக்கை ஊடு நுழையக் கூடாது என்ற கருத்தினர் அக்வினாஸ். 12 ஆம் நூற் (?). அயின் ரேண்ட் தமக்குப் பிடித்த கருத்தியல்களில் அக்வினாஸின் தியாலஜி துறைப் பங்களிப்புகளைக் குறிப்பிட்ட காரணமே இதுதான். For the greatness of his contributions towards epistemological clearance. 


*** 

அயின் ரேண்டை ஒவ்வொருவர் படிக்க அறிமுகமான தருணம் குறித்துப் பேசுவது ஒரு சுவையான நினைவு போதை. அப்படி, உங்களுடைய முதல் அறிமுகம் அயின்னின் நூல்களோடு எப்பொழுது? 

என்னுடைய அறிமுகம் மிகவும் எதேச்சையானது. ஸ்ரீரங்கத்தில் ரயில்வே டாக்டராக இருந்த (1981 களில்)kasiviswanathan v  அவர்களது மேஜையில் அட்லஸ் ஷ்ரக்டு என்னும் நூல் இருந்தது. நூலைப் புரட்டிப் பார்த்தால் பின்னட்டைப் பிளர்ப்பில் a metaphysical novel என்று போட்டிருந்தது. முன்னரே பேராசிரியர் திரு சி எஸ் கமலாபதி அவர்களின் உள இயல் உரைகளில், திருச்சியில், அயின் ரேண்டின் The Virtue of Selfishness பற்றிக் கேட்ட நினைவு. சரி இந்த ஆசிரியர் அப்படி என்ன எழுதியிருக்கிறார் என்று அறிய ஆவல். டாக்டர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். நண்பர் ஒருவர் கொடுத்த நூல் இது. இன்னும் ஒருவாரத்தில் கண்டிப்பாக தர முடிந்தால் கொண்டு சென்று படியுங்கள் என்றார். உட்கார்ந்து ராப்பகலாகப் படித்து முடித்தேன். உடனே பழம் புத்தகக் கடையில் சென்று ஒரு பிரதியும் வாங்கிவிட்டேன். அப்பொழுது, ஏன் இப்பொழுதும், ஸ்ரீரமண மகரிஷியின் விசாரம் அதில்தான் என் ஊற்றம் அதிகம். a clean approach என்று அதை நான் கருதுவது. ஒரு வாரம் முடித்துப் பின் கொடுக்கப் போகும் போது, டாக்டரிடம் சொன்னேன்: 'டாக்டர்! இந்த நூல் என்னுடைய முழு சிந்தனையையும் வேர்முதல் மாற்றம் செய்துவிட்டது. இனி நான் பழைய நானுக்குத் திரும்ப இயலாது' என்று. அவர் ஆச்சரியத்துடன் கூறினார்: 'ஆன்மிகப் பாதை என்பதில், ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர் என்று ஆர்வம் மிக்க நீங்கள் இப்படிக் கூறுவது, புத்தகங்கள், கருத்துகள் எப்படி மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்று காட்டுகிறது' என்றார். அதெல்லாம் பண்டைய நினைவுகள்! 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

Wednesday, May 21, 2014

வெட்டிப் பொழுது (சிறுகதை)

பஸ்ஸுக்கு நின்றால் அது லேசில் வந்து விடுகிறதா? அதுவும் கையில் லைப்ரரியில் தவணை தேதி கடந்து புதுப்பித்து அதுவும் கடந்து, அதன் சகிப்பு நாள்களும் முடிந்து, ஒழுங்கு மரியாதையா கொண்டு வந்து கொடுக்கறியா இல்லையா என்ற கடுப்போலையும் வந்து, சரி தீராது என்று அள்ளிக் கொண்டு போய் நின்றால்...அந்த நேரம்தான் கொஞ்சம் கூட்டம் குறைவு. உட்கார இடம். ஓரு நான்கு தடவையாவது பார்த்திருப்பேன், ஊரன் மகிழ்நனின் ஒரு பெரும் தேர் வரும் ஓசையாவது கேட்கிறதா என்று சங்கத் தலைவிக்குப் போட்டியாக! ம்..ம்...சங்க காலத்து தேரே வந்து விடும் போல... 

நீங்களும் பஸ்ஸுக்குத்தான் நிக்கிறீங்களா..... 

பார்த்தால் பாவம் நல்ல மாமி. மிகக் களையான மங்களகரமான முகம். தாய்மையைப் போற்றுவோம் என்று பாரதி சொன்னதற்கேற்ப கொஞ்சம் வாய்த் துடுக்கை அடக்கிக் கொண்டேன். ‘ஆமாம்மா...எங்க வருது....எவ்வளவு நேரம்..’ 

எதிலயாவது காலேஜுல ப்ரொபஸ்ரா இருக்கீங்களா.... 

இல்லம்மா.... குமாஸ்தா உத்தியோகம்.... 

ஓ இல்ல இவ்வளவு புஸ்தகம்லாம் லைப்ரரி புஸ்தகமா கொண்டு போறீங்களே.... 

ஆமாம்மா படிப்புல ஆர்வம். கொஞ்சம் எழுத்து. ஆய்வு, கவிதை என்று சொந்தப் பொழுதுகள் ஓடுகின்றன. 

ஓ நீங்க ரைட்டரா..... 

வேண்டாம் வாய்த்துடுக்கு வேண்டாம்.....அது தெரியாதும்மா ஆனால் எனக்குப் பிடித்த விஷயங்களை பத்திரிக்கைகளிலும், நூல்களாகவும் எழுதுவதில் ஒரு திருப்தி. 

பாருங்க...ஒரே தெருவுலதான் இருக்கோம்..ஆனால் இவ்வளவு டேலண்ட் இருக்கற உங்கள மாதிரி ஆட்களையெல்லாம் தெரிஞ்சுக்காம லைஃப் ஓடிண்டுருக்கு.... 

பஸ்ஸும் வர வழியா காணோம்....நீங்க என்னம்மா பண்றீங்க....கணவர் என்ன பண்றார்... 

நான்லாம் அடுப்படியே கதின்னு வாழ்க்கை ஓட்ற கூட்டம்தான் சார். எங்க கணவர் பெரிய ஐ டி கம்பெனியில் ரொம்ப உசந்த் உத்யோகம்....சதா வேலை...நான் கூடத் திட்டுவேன்..ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் கம்ப்யூட்டரே கதின்னு இருக்கீங்க...கொஞ்சம் ஜெனரல் புத்தகங்களையும் படிங்கோ..அக்கம் பக்கத்துல பேசுங்கோ...இப்படி மின் உலகமே கதின்னு இருக்காதீங்க என்று திட்டுவேன்... ம்..ம் எவ்வளவு திட்டினாலும்.... பத்து நி கழிச்சுதான் என்ன சொன்னே என்று கேட்பார்...சரி நானும் விட்டுட்றது. பாவம் நமக்கு ஏன். அவர்களின் அவசரம் எங்களுக்குப் புரியாது. நீங்க ஒரு நாள் அவரைக் கண்டிப்பா சந்திக்கணும். எல்லாத்துலயும் இண்ட்ரஸ்ட் உண்டு. மனிதர்களை மதிப்பார். ஆனால் என்னமோ கம்பெனி, கம்ப்யூட்டர்...அதுவும் கையிலேயே இப்ப கணிணியைக் கொண்டு வந்து விட்டார்களா....எப்பப் பார்த்தாலும் ஏதோ ரேகை ஜோஸியம் பார்க்கறவன் மாதிரி.... 

குபீல்ல்ல் என்று சிரித்து விட்டேன்....ச...என்ன வொண்டர்ஃபுல் சென்ஸ் ஆஃப் ஹ்யுமர்... 

ஏன் சிரீக்கிறீங்க? 

இல்ல...உங்க கணவரை ஒரு சோடா பாட்டில் கண்ணாடி போட்ட ரேகை ஜோஸியர் மாதிரி உட்கார்ந்து...கற்பனை பண்ணிப் பார்த்தேன்.... 

ச ...ச நன்றாக இருபபர்...பாவம் அவர்களின் வேலை உலகம். 

யா...சாரி....நீங்க சொன்ன நகைச்சுவையான விதம்.... 

இல்க்ல இல்ல பரவாயில்ல ஆனால் நீங்க ரெண்டு பேரும் ஒரு நாள் சந்திக்கணும். அவருக்கு அது நல்லது. ஒரு நாள் அவர் ஃப்ரீயா இருக்கும் போது வாங்க...நான் சொல்லி வைக்கிறேன்...அதுவுமில்லாம ஒரே தெருவுல இருந்துண்டு ஒரு ரைட்டரை அவர் தெரிஞ்சுக்கலன்னா...... 

ஒன்றும் அவருக்கு நஷ்டம் இல்லை விடுங்க. ஆனால் நீங்க சொன்னதற்காக நிச்சயம் சொல்லுங்கோ..எப்ப அவருக்கு சௌகரியமோ..பார்த்துஇ சந்திக்கலாம்.. தெருமுனையில் ரயில், புஷ்பக விமானம், ட்ராம் எல்லாம் கலந்த கலவையாக வண்டி வரும் தோற்றம். அவசரம் அவசரமாக கிளம்பி விட்டோம். 

பின்னர் கோவில் வாசலில் ஒரு நாள், தம்பதிகளைக் காணும் வாய்ப்பு. இவர்தான் நான் சொன்னேனே... ஷ்யூர் ஷ்யூர் ஷீ வாஸ் டெல்லிங் மீ அ லாட் அபௌட் யூ... ஒன் டே வீ ஷுட் மீட். இட் வில் பி மை ப்ளஷர்...என்று அவசர அடியில் ஐ டீ பெரியவர் அழைப்பு விடுத்துப் பிரிந்தது.... 

ஒரு ஞாயிறு மாலை. எதற்கோ வெளியில் போய்க் கொண்டிருந்தவனை ஒரு குரல் சார்....இப்ப ஃப்க்ரீயாத்தான் இருக்கார்...இப்பப் போனீங்கன்னா, உங்களுக்கு நேரம் இருந்தா, சாரி....நன்னா பேசிண்டு இருக்கலாம்.... ஓகே மாமி நிச்சயமாக. 

ஏதோ கர்டிஸிக்குத்தான் சொன்னேன். மாமி அவசர அவ்சரமாக தாம் சுலோகா கிலாஸ் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு விரைந்து விட்டார். ஆனால் மாமியின் சுலோகா வகுப்பின் மீதான அக்கறை பரிட்சைக்கு விரையும் மாணவியின் கவலையைப் போன்றதாக இருந்தது. 

சரி போய்த்தான் வருவோமே. பாவம் இவ்வளவு பெரியவர்கள் ஏதோ அக்கறையில் சொன்னால், அதற்கு மதிப்பு அளித்தால் என்ன.... 

வீடு பெரிய பாலஸ் கெட்டப்பு. உள்ளே போனால் ஹாலிலேயே ஐ டி உட்கார்ந்திருந்தார். மாமி சொன்னபடி கையில் ரேகைக் கண்ணாடி...ஓ சாரி கணிணி....மனிதர் தலையை அதற்குள்ளேயே விட்டுவிட்டார். ...சார் சார்.. 

ஒரு கால்.....யா யா ஷ்யூர்......புட் அப் தட் வொர்க்கிங்ஸ்.. நோ நோ...ஜஸ்ட் மெர்ஜ் த பூல்...கால் ஃபார் த டீம்.. நோ மேன்....இஃப் யூ டூ அ ராண்டம் செக்..... 

சரி முடியட்டும் என்று அமைதியாய் உட்கார்ந்தேன். கால் முடிந்தப்பறம் கணிணி கையும் கண்ணும்...... 

ஆனால் விட்டு விட்டு கைங்கைங்கைங் கக்க்கங்யிங் என்று சில சில்மிஷ ஓசைகள் போல் கணிணியில் கேட்டுக் கொண்டே இருந்தன. எனக்கு அந்த ஓசைகள் என்னமோ பொருந்தாதது மாதிரி ஒரு ஃபீலிங். ஒரு க்யூரியாஸிடி...அப்படி ஒரு பக்கமாய் வ்யூ தெரிகிறதா என்று பார்த்தேன்....ஐ வாஸ் ஸ்டன்டு. 

ஐ டி நான் குறுகுறுப்பாக சந்தேகித்ததற்கேற்ப வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. பெரிய ராட்சசன் ஏதோ பாறையைத் தூக்கி எதன் மீதோ போடுகிறான். அவன் போட்ட பாறை விழுவதற்குள் இவர் எதையோ நகர்த்தி விட்டால் ஒரு சத்தம் இல்லை பாறை அதன் மீது விழுந்து விட்டால் அந்த அணில் பிள்ளை சத்தம். எனக்கு ஒரு ஆர்வம் இந்த மனிதர் எவ்வளவு நேரம்தான் நாம் வந்திருப்பதைக் கவனிக்காமல் அதை நோண்டிக்கொண்டு இருப்பார் என்று கவனிக்க. ஒரு முக்கா மணி நேரம் ஆகிவிடும் போல் இருந்தது. நல்ல வேளையாக வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவர் வந்து கதவைத் திறந்ததும்தான் அவர் அந்த உலகத்தை விட்டு வந்தார். ‘நீங்க?...’ என்று கொஞ்சம் புரியாமல் விழித்தார். நான் இன்னார் என்று ஞாபகம் படுத்திவிட்டு கடந்த அரைமணிக்கும் மேலாகக் காத்திருப்பதாகச் சொன்னேன். ‘அடடா! நீங்கள் கூப்பிட்டிருக்கலாமே....’ இல்ல சார் கூப்பிட்டுப் பார்த்தேன். நீங்க கணினியில் மும்முரமாக வேலையாக இருந்தீர்கள். சரி அதுதான் பொறுமையாக... 

ஆமாம் சார்! என்ன பண்றது.....கம்பெனி வேலை... ஏகப்பட்ட டிஸிஷன் மேகிங்......ப்ளானிங்.....எல்லாருக்கும் சமயத்துல வீட்டிலிருந்தே மேனேஜ் பண்ணுவேன். என்ன பண்றது ஒரெ டென்ஷன்...பாருங்க வேலை மும்முரத்துல நீங்க வந்ததைக் கூடக் கவனிக்காமல் நான் கம்ப்யுட்டரில் இருக்கிறேன் என்றால்...ஹி ஹி சாரி....என் மனைவிக்குத் தெரிந்தால் மிகவும் கோபித்துக் கொள்வாள்......சொல்லி விடாதீங்கோ...உங்களைப் பத்தி அன்னிக்கு... 

பரவாயில்ல சார்... நோ ப்ராப்ளம்.... 

என்ன சாப்பிட்றீங்க.. ஏதாவது கூல்ட்ரிங்ஸ்..... மனைவி வரவரைக்கும் காப்பி டீ எனக்கே கிடைக்காது.... 

ஒன்றும் வேண்டாம் சார். இங்கதான் வீடு. ஜஸ்ட் வாண்டட் டு மீட் யூ அட் ஹர் இன்ச்டன்ஸ்.... 

ஓ ரியலி குட் குட்.....நீங்க ஏதோ பத்திரிக்கையில் இருக்கறதா... 

இல்ல சார் பத்திரிக்கை இல்ல வங்கியில் குமாஸ்தா... சும்மா திருப்திக்கு பத்திரிக்கையில் கட்டுரைகள், நூல்கள் எழுதுவது இவ்வளவுதான். 

ஓ அப்படியா? ஏதாவது...எனி ஹெல்ப் யூ வாண்ட்? தாராளமா சொல்லுங்கோ.....ஆக்டுவலி...கம்பெனியில் சில சமயம் வெளியாட்களைக் கூப்பிட்டுப் பேச வைப்போம். நீங்க ஆர்வம்னா ஐ கேன் ரெகம்ண்ட் யூ... தே வில் பே யூ மச்.... 

இல்ல சார் நோ ப்ராப்ளம்...நான் அவ்வளவா பேச்சுக்குப் போறதில்ல...ஒன்றும்ம் தேவை கிடையாது... ஐம் க்வெயிட் ஹாப்பி.... 

ஓ கிரேட்...ஏதாவது உங்க புத்தகம் வெளியிடணும்னா கூட ஐ நோ சம் கம்பெனிஸ்...அவா இந்த மாதிரி அல்லொகேட் பண்ணி வச்சிருக்கா....சோஷல் ஸ்பெண்டிங் என்கிற வகையில்...ஐ கேன் புட் யுவர் ப்ரொபோஸல்.... 

இல்ல சார்... ஒன்றும் கவலைப் படாதீர்கள். ஏதாவது என்றால் நிச்சயம் சொல்கிறேன். இப்பொழுது நான் பார்க்க வந்தது நிஜமாவே சும்மாதான். 

ஓ..ஓ இருவரும் சிரித்துவிட்டோம். கொஞ்சம் அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. தாம் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர், இந்த மனிதனுக்கு தம் அருமையே தெரியவில்லையே....என்று மனத்திற்குள் நினைத்திருக்கலாம். 

பரவாயில்லை. அவர் உலகத்தில் அவர் மகிழட்டுமே. அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என்று நான் கிளம்பிவிட்டேன். தம்முடைய விசிட்டிங் கார்டு கொடுத்தார். அந்தக் கார்டின் தன்மையே அவருடைய ரேங்க்கைக் காட்டிக் கொண்டிருந்தது. தூரத்தில் கைக்கணினியில் அழைப்பு கேட்டது. நானும் கிளம்பி விட்டேன். 

எதை வெட்டிப் பொழுது என்பது? மாமி என்னடா என்றால் சுலோகா கிலாஸ் என்று அக்கறையாக நேரத்தைச் செலவிட்டு கிட்டத்தட்ட 150 சுலோகங்கள் மனப்பாடம் என்கிறார். வீட்டு வேலை போக மிச்ச நேரத்தைப் பார்த்து பார்த்து Quality Time ஆக ஆக்கிக்கொண்டிருக்கிறார், தன்னளவில். ஐ டி கணவன் கம்பெனி அக்கௌண்ட்ஸ், டிஸிஷன் மேகிங் என்று நண்பர்களிடம் பேசிய நேரம் போக வீடியோ கேம் பூதத்தோடு டூயட். ஆனால் அதையும் தம் கம்பெனி பிஸி டைம் என்பதாகத்தான் சொல்லுகிறார். நிச்சயம் ஒரு நாளில் பல மணி நேரங்கள் பூதத்தோடு அல்லது வேறு கேம்ஸோடு சல்லாபம்....காலத்தைச் சாப்பிடும். ஆனால் மாமியோ தாம் ஒன்றும் அறியா அடுப்பங்கரை; மாமாவோ ஆல்வேஸ் பிசி ஐடீ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஐ டீ காரருக்கோ என்னைப் பார்த்தால் வெட்டிப் பொழுது போல் படுகிறது. ஆமாம் திறமையைக் காசாக்காமல் போனால், ஆஃபர் நேருக்கு நேர் சொல்லியும் வேண்டாம் என்று போனால் அவருடைய பிரம்ம சுவடி அவருக்கு அதை வெட்டிப் பொழுது என்றுதான் காட்டுகிறது. 

ஆனால் எது எப்படியோ...அந்த மாமி வெட்டிப் பொழுது போக்குகிறார் என்று எனக்கு நினக்கத் தோன்றவில்லை. 

பார்த்தீங்களா....இருந்தாரா... 

ஹாங் நன்ன பேசிண்டு இருந்தோம். ஆனால் அவர் மிகவும் பிஸி மேன். அப்புறம் சாவகாசமாகப் பேசலாம் என்று சொல்லியிருக்கிறோம். 

ஐயோ.,..அவர்தானே! அந்தக் கைக் கணினியில் உட்கார்ந்தார்னா பொழுதன்னிக்கும் கம்பெனி டிஸ்கஷன், கணக்கு, ஓயாம பேச்சு....ஏதேதோ கேல்குலேஷன்...எனக்கு என்ன புரியறது அதெல்லாம்....உங்க கிட்ட நன்றாகப் பேசினாரோல்லியோ.... 

ஆஹா...அதெல்லாம் வொண்டர்ஃபுல்..ஆனால் உங்க காப்பியத்தான் குடிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. 

என்னது? நான் தான் சுடச்சுட காப்பிப் போட்டு ஃப்லாஸ்குல வெச்சிட்டு அவர்கிட்ட சொல்லிட்டு வந்தேனே..அதான் அவர் கம்பெனியில் உட்கார்ந்தார்னா அப்புறம் எதுவுமெ நினைவுக்கு இருக்காது....நீங்க இன்னொரு நாள் வாங்கோ... 

நிச்சயம் உங்க காப்பிக்காகவே வருகிறேன். 

ஐயோ..நான்லாம் வெட்டிப் பொழுது போக்கற பொம்மனாட்டி..என்னைப் போய் சொல்கிறீர்களே.... 

வெட்டிப் பொழுது என்ற வார்த்தையில் தலையில் நின்று கொண்டு அந்தப் பூதம் கையில் பாறாங்கல்லை ஏந்திக் கொண்டு ஐ டீ எப்பொழுது அசருவார் என்று முறைத்துக்கொண்டிருந்தது. 

***

Sunday, March 09, 2014

மொழி - Mozhi - விமரிசனம்

2007ல் வந்த படம்தான். ஆனால் சமீபத்தில்தான் பார்த்தேன். எவ்வளவு cinema shrewdness என்று நீங்களே பார்த்துக் கொள்ளலாம். எனக்கு அவ்வளவாக சினிமாக்கள் பிடிப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. 

'மொழி' என்ற திரைப்படத்தைத்தான் பார்த்தேன். அன்பே சிவம், நண்பர்கள் என்ற வரிசையில் மிக அற்புதமான படம் 'மொழி'. பெரிய ரில்லீஃப். தமிழ்ப் படத்திற்கென்று, ஏன் பல மொழிப் படங்களிலும் இருக்கும் சினிமாத்தனம் இல்லாத கண்மலரும் காவியமாக பிரகாஷ் ராஜ் தந்திருக்கிறார். யாருடைய நடிப்பும் மாற்றுக் குறைந்ததில்லை என்று இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் சொல்லலாம். A real morning blossom on the celluloid! கோஷிஷ் படத்தைச் சின்ன வயதில் பார்த்துவிட்டு அழுகையோ அழுகை என்று அழுதிருக்கிறேன். ஆனால் இந்தப் படம் கோஷிஷ் படத்தோடு பல வகையிலும் போட்டிப் போட்டுக் கொண்டு நிற்கிறது. செயற்கையான சினிமாத்தனம் தலை காட்டும் காட்சி பிரம்மாநந்தம் கரப்பு சீன், காதல் வந்து விட்டது என்பதைக் குறிக்க பல்ப் எரிய விட்டுக் காட்டுவது. 

ஜோதிகாவின் சொல்லில்லா நடிப்பு, இரு புலனற்ற வெளியின் நிசப்தம் அல்லது வெறுமை என்பதைக் கண்களில் காட்டும் திறன், பாத்திரத்திற்கேற்ற கினஸ்தடிக்ஸ் எல்லாம் மிகக் கவனமாக, அருமை. 

பிருதிவிராஜ் நடிப்பு நன்று. ஆனாலும் முகம் பாவங்களைத் தவற விடுகிறது. The face has to be toned up for more and frequent changes of expressions. 

பிரகாஷ் ராஜ் கேட்கவே வேண்டாம். He becomes literally the character. 

ஸ்வர்ணமால்யா எல்லா உணர்ச்சிகளுக்கும் ஒரே முக பாவம்தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. There is a perpetual 'what' expression in the face.

எம் எஸ் பாஸ்கரின் ரசிகனாக மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது. அருமையான நடிப்பு, ப்ரொபஸராக வந்து.

ஆனால் படத்தின் மூலம் மொழி >< மௌனம், இசை >< சைகை ஆகிய சிமியாடிக் சமிக்ஞைகளை  மிகத் திறமையாக இலக்கியத் தரத்துடன் காட்சியில் அமைக்க முடியும் என்று சவாலாகக் காட்டியிருக்கிறார் ராதா மோகன். நன்றி என்று சொல்லத் தோன்றுகிறது. 


***