கலை -- விக்டர் ஹ்யூகோ
மனித விஷயங்களில், அது மனித விஷயமாக இருக்கின்ற அளவிற்கு, கலை என்பது ஒரு வினோதமான விதிவிலக்கு.
இங்கு மண்ணில் எந்த ஒன்றினுடைய அழகும் அது துல்லியமான உயர்ந்த பட்ச தரத்தை அடைவதில் இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் இந்த தன்மை அமையப் பெற்றிருக்கிறது. பெருகுதல், வளர்தல், பலமடைதல், லாபம் பெறல், சிறிது முன்னேறுதல், இன்றைக்கு நேற்றைவிட அதிக தகுதி பெறுதல்; இதுதான் மகத்துவம், இதுதான் வாழ்வும். கலையின் அழகே இந்த மாதிரியான தரமதிப்பீட்டில் முன்னேற்றம் என்பதற்கு ஆட்படாதிருத்தலில்தான் இருக்கிறது.
நாம் ஏற்கனவே கண்டது போன்று இந்த அடிப்படையான கருத்துகளை வலியுறுத்துவோம்.
மகத்தான கலைப் படைப்பு என்பது எக்காலத்துக்குமாக இருந்துவிடுவது. முதலில் வந்த கவி கொடுமுடியிலேயே வந்துவிடுகிறான். நீங்கள் வேண்டுமானால் அவனுக்குப் பின்னர் அந்த கொடுமுடியை ஏறி அடையலாம். அவன் அடைந்த உயரம்தான். அதற்குமேல் செல்ல வழியில்லை. ஆஹா! நீங்கள்தான் தான்தேயா? ரொம்ப நல்லது. ஆனால் அதோ உயரத்தில் தள்ளி அமர்ந்திருப்பவர், அவர்தான் ஹோமர்!
முன்னேற்றம் இருக்கிறதே, அதனுடைய இலக்கு மாறிக்கொண்டே இருக்கும், அதன் படித்தர நிலைகள் எப்போதும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும், அதனுடைய தொடுவானம் தள்ளி தள்ளி நகர்ந்துகொண்டே இருக்கக்கூடியது. இலட்சியம் என்பது அவ்வாறில்லை.
இப்பொழுது, முன்னேற்றம்தான் விஞ்ஞானத்தின் நோக்கவிசை; இலட்சியம் என்பது கலையின் உற்பத்திஸ்தானம்.
எனவேதான் சொல்லுகிறோம் உயர்ந்தபட்ச தரத்தை எட்டுவது விஞ்ஞானத்தின் ப்ரத்யேகமான இயல்பேதவிர, கலைக்கு அல்ல.
ஒரு பேரறிஞர் மற்றொரு பேரறிஞரை விஞ்சிவிடலாம்; ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனை மறைத்துவிடுதல் ஒருபோதும் இல்லை.
<< Home