Thursday, May 02, 2019

நம்மாழ்வார் காதலும் திருக்குருகூர்வரியும்

சமீபத்தில் சில பழம் மாநாட்டு மலர்களைப் பார்த்த பொழுது கண்ணில் பட்டது. ஆழ்வார் திருநகரி பெரியன் வெ நா ஸ்ரீநிவாசன் அவர்கள் பிரசுரித்தது என்று சொல்லிப் பழம் ஏட்டுச் சுவடியில் கண்டபடி ஒரு பிரபந்தம், மாறன் செந்தமிழ் மாநாடு சிறப்பு மலர்,, ஆழ்வார் திருநகரி, 17-2-68 என்னும் மலரில் அச்சிடப்பட்டிருக்கிறது. மிக இனிய தமிழ். விஷயம் நம்மாழ்வார் மீது பாடப்பட்ட காதல் பிரபந்தம். யார் பாடினார்கள் தெரியவில்லை. ஆரம்பமே களை கட்டுகிறது.

சீரார் செழுங்கமலத் தேனே திருமகளே!
வாராழித் தெள்ளமுதின் வந்துதித்த மாமகளே !

மண்மகளாய்ப் பின்னை மடமகளாய் வாழ்சனகன்
பெண்மகளாய் வந்து பிறந்தகுலப் பெய்வளையே!

சிட்டர் மகிழ்ந் தேத்தத் திருப்பல்லாண் டோதியநற்
பட்டர்பிரான் பெற்றெடுத்த பைந்தொடியே ! பாமாலை

பாடிக் கொடுத்தவளே! பாரதியே! பைந்தாமம்
சூடிக் கொடுத்தவளே! தூண்டா மணிவிளக்கே !

தென்னரங் கேசற்கும் திருவேங் கடவற்கும்
மன்னற்கும் சோலை மலைவாழ் அழகற்கும்

ஆலவிடப் பாம்பின் அணைமீது கண் துயிலும்
கோல வடபெருங் கோயி லுடையாற்கும்

மாமால் எனும் பேர் வழுவாமலே யளித்த
பூமாதே! வாழ்வில்லி புத்தூர்க்கு நாயகமே !

மானனையார் தங்கள் வயிற்றில் பிறவாமல்
ஆனதுழாய் நீழல் அவதரித்த ஆரமிழ்தே !

பாமகளே ! ஆழ்வார் பதின்மருக்கும் நன்மகளே !
நாமகளே ! உன்னை நயந்து தொழுதேன் அடியேன். ...

என்று ஆரம்பிக்கிறது இந்தக் காதல் பிரபந்தம். நம்மாழ்வாரைக் குறிப்பிடும் போது,

நான்மறையும் செந்தமிழ் நூல் நாலாகவே விரித்துத்
தான் உலகிலே உரைத்துத் தாபித்த தாளாளன்,
நாவலர்கள் தம்பிரான், நாதமுனி தம்பிரான்,
பூவலயம் போற்று பெரும்பூதூரன் தம்பிரான்,
காமாதி வென்ற கருணேசன், கார்மேனி
மாமால் இதயம் மலக்குதிரு நாவுடையான்,
தக்கிலமே என்றுரைத்த தண் தமிழ்நூற் பாடலிலே
அக்கமலம் பாடவல்லான், ஆழ்வார்கள் தம்பிரான்,
வஞ்சப் பரசமய வாதியரை வென்றபிரான்,
செஞ்சொல் தமிழ்தேர் திருவாய்மொழிப் பெருமாள்
தண்ணார் மகிழ்வாசத் தாமம் அணி மார்பன்,
பண்ணார் தமிழ்ச் சீர்ப் பராங்குச மாமுனிவன்,
செங்கயல்கள் தாவும் திருச்சங்கணித் துறைசேர்
பொங்குதிரை வீசும் பொருநைத் துறையுடையான்,
நாதன், சடகோபன், நாவீறு டையபிரான்,
வேதம் தமிழாய் விரித்த கவிராசன்,
அன்னக் கொடியுடையான், அம்போருகா சனத்தான்,
செந்நெல் கழனித் திருவழுதி நாடுடையான்,
பொங்குமறைத் தமிழ்முனிவன், பொதியமலைக் காவலவன்,
கொங்கலர்பூத் தங்கும் குமரித் துறையுடையான்..

என்று முழுதும் ஊற்றெழுந்த செழுந்தமிழின் உவகைப் பெருக்காய்ப் பாய்கிறது முழு பிரபந்தமும். எந்தக் காலம் தெரியவில்லை. யார் எழுதியது தெரியவில்லை. இது போல் மொத்தம் 155 கண்ணிகள். அததனையும் ஆழ்வார் மேல் அருங்காதலில் ஊறும் நறுந்தேன். 


*
இப்பொழுது ஒரு நூலைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அது என்னவென்றால்... நீங்கள் சிலப்பதிகாரத்துக் கானல் வரிப் பாட்டுகளைப் படித்திருக்கிறீர்கள்தானே! அது போலவே ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி என்று அப்ப்டியே இளங்கோ அடிகள் மீண்டும் யாத்தது போன்று ஒருவர் நம்மாழ்வாரின் பேரில் பாடியிருக்கிறார்.

நூல் - திருக்குருகூர்வரி
பாடியவர் - கி பக்ஷிராஜன், வழக்குரைஞர், திருநெல்வேலிக் கூடல்

நாணல் என்று முன்னம் நான் குறிப்பிட்ட பேராசிரியர் திரு ஏ சீநிவாசராகவன், இவர் எல்லாம் நண்பர்கள் என்று நினைக்கிறேன். சென்னையில் வாழும் ஆங்கிலப் பேராசிரியர் திரு அரங்கநாதன் அவர்கள் திரு பக்ஷிராஜனைப் பற்றிக் குறிப்பிடும் போது சொன்ன நினைவு - சம்பிரதாயத்தில் மிக ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்று. தொடக்கமே பாருங்கள் -

கண்ணன் கருணைத் தனைமொண்டு ககன மணிந்த நீறாடி 

வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்தாய் வாழி தண்பொருநை ! 

வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்த வெல்லாம் தென்பாண்டி

அண்ணல் நெடியோன் அருள்பெறவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

நிலைநின் றிலகு கோலமென நெளிந்து நெளிந்து பாய்ந்தோடி

மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்தாய் வாழி தண்பொருநை!

மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்த வெல்லாம் மால்நின்ற

தலமா குருகூர் வலஞ்செயவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

நிலைவரி -

கருணை அலையெறியக் கரையிரண்டும் ஓடும்
அருளின் இணைநோக்கோ அம்புயமோ காணீர் !
அம்புயமோ காணீர்! அறிவுடையார் சீறூர்க்கே
இம்பர் உயிர்க்கெல்லாம் இறைவந்திங் கெய்தியதே !

முரிவரி -

பொருநையின் கரையிடமே பொழிலிடை மகிழ்நிழலே
திருவுறை அகலமதே திருமணி யிமையொளியே
பருமணி வடவரையே பணையிணை யிருகரமே
இருவிழி யருளொளியே எனையிடர் செய்தவையே

திணை நிலைவரி - 

தன்னுடைய ஆழியும் தனிப்புள்ளும் சங்கமும்
என்னை யருளாதே விட்டாரோ விட்டகல்க!
மன்னும் அவர்பொழிலில் வாழும் அடியீர்காள்
என்னை மறந்தாரை யான்மறக்க மாட்டேனால்!

காரார் நிறத்தானைக் கைக்கொண்டே வேகப்புள்
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் பிறப்போதம் !
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் மற்றெம் மோடீங்
கூரா தொழிந்திலையால் வாழி பிறப்போதம் !

மயங்கு திணை நிலைவரி -

மூரி முல்லை நகைகாட்டி முதிர்செம் பவள வாய்திறந்து
பார்!எத் தனை என் வடிவழகென் றெனைப்பே யாக்கும் பரஞ்சோதீ!
மாரிச் சோரி என்கண்ணீர் மாழ்கிக் குழறும் வாய்மொழிகண்
டாரிவ் வண்ணம் செய்தாரென் றயலார் வினவில் என்செய்கோ?

வேறு

மாழ்கும் மாய மயக்கில் வந்தென்
தாழ்வை யழித்துத் தணந்தார் ஒருவர்
தாழ்வை யழித்துத் தணந்தார் அவர்நம்
ஆழும் அன்பை அறியார் அல்லர்

முகமில்வரி --

சேரல் குருகே! சேரலெம் சிற்றூர்!
சேரல் குருகே ! செரலெம் சிற்றூர் !
ஊரும்புள் ளேகொடியாய் உயர்த்தார்க்கென் நோய்கூறாய்,
சேரல் குருகே ! சேரலெம் சிற்றூர்!

எல்லாம் ஒவ்வொரு மாதிரிதான் காட்டுகிறேன் இங்கு. ஏகப்பட்ட பாடல்கள். கடைசியில் கானல்வரியில் போன்றே கட்டுரை என்னும் பகுதி பின்னி எடுத்துவிட்டார் பக்ஷியார் ! வரிப்பாடல்களே பொதுவாக வீணைக்கு அமைத்துப் பாடுவது. இந்தப் பாடல்களை வீணையில் அமைத்துப் பாடினால் அப்படியே வீடு விள்ளும் விரல் சொடுக்கில் சொகுசாகப் போய் அமர்ந்து கொள்ளும் பாக்கள் இவை. இன்று எத்தனை பேர் இதனை அறிவார்கள்? ஏதோ மலரில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு பக்ஷி பறந்துவிட்டதோ தெரியாது. ஆனால் என் கண்ணில் படவேண்டும் என்று உய்த்த தமிழ்பின் சென்ற பெருமாள்தான் எவ்வளவு கள்ளவிழ்ப் புன்னகையன்!

***