Thursday, May 02, 2019

’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா?

பாப்பா பாட்டு என்று ஒரு பாட்டு பாரதி பாடியிருப்பது அனைவரும் அறிந்தது. அதில்

சாதிகள் இல்லையடி பாப்பா  - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய வுடையவர்கள் மேலோர்.

என்ற பாட்டில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியாரின் வரியாகப் படித்துப் பழக்கம்.

ஆனால் திரு சீனி விசுவநாதன் அவர்களது பதிப்பில்

சாதி பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாவம்

என்று வருகிறது. கீழ்க்குறிப்பில் சாதிகளில்லையடி பாப்பா - என்பது 1917ல் வந்த நெல்லையப்பர் பதிப்பு என்கிறார். அப்படியென்றாலும் பாரதியார் இருந்த பொழுதே அவர் சம்மதத்துடன் வந்த பதிப்புதானே அது? கையெழுத்துப் பிரதியில் இருந்தாலும் பாரதியார் பதிப்பிற்குக் கொண்ட பாடத்தைத்தானே பாரதி பாடலாகக் கொள்ள வேண்டும்? இல்லை அவருடைய கையெழுத்துப் பிரதியில் கண்டதுதான் மிக்க சான்று என்றால், அப்படியென்றால் பாரதியார் சாதிகள் உண்டு, ஆனால் அவற்றில் பெருமை இல்லை. உயர்வு தாழ்வு சொல்லக் கூடாது. அவ்வளவுதான் எனும் கொள்கை உடையவரா? சாதிகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தர்ம சாத்திரங்கள் சாதி பற்றிக் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பாரதியின் எண்ணமா? இல்லையெனில் சாதிகள் இல்லையடி பாப்பா என்பதுதான் பாரதியின் முடிந்த எண்ணமா?

பாரதி பாடல்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பிலும்

சாதி பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி யுயர்ச்சிசெய்தல் பாவம்

என்று போட்டிருக்கிறது. அதன் கீழ்க் குறிப்பில் 1917 பரலி சு நெல்லையப்பர் பதிப்பைக் குறிப்பிட்டு, மேற்படிப் பதிப்பில் என்று சுட்டிக்காட்டி

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய வுடையவர்கள் மேலோர்.

என்று பாடலின் வடிவமும் தரப்பட்டு, மேலும்,

" பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர் நெல்லையப்பர்; கவிஞர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்த பதிப்பாதலின் பாரதியார் திருத்திக்கொடுத்த வண்ணமே வெளிவந்தது என்றே கொள்ளுதல் வேண்டும்."

என்றும் மிகத் தெளிவாக அடிக்குறிப்பும் வரையப் பட்டுள்ளது. எனக்கு எழும் சந்தேகம் என்னவெனில் இவ்வளவு தெளிவாக அடிக்குறிப்பில் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பதே பாரதியார் திருத்திக்கொடுத்த வடிவம் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அந்தப் பாடத்தை முக்கியமான பாடல் அமைப்பிற்குள் காட்டாமல் ஏனோ கீழ்க் குறிப்புக்குத் தள்ளியிருக்கின்றனர்? சாதிகளைப் பாரதியார் உடன்பட்டது போன்ற தொனியைத் தரும் வரியான 'சாதி பெருமையில்லை பாப்பா' என்ற வரியை ஏனோ பிரதான பாடல் அமைப்பிற்குள் பெய்துள்ளனர்? பாரதியார் காலத்திற்குப் பின்னர் வந்த பாடல் வடிவம் என்றால் அவ்வாறு கீழ்க் குறிப்பில் காட்டி, பாரதியின் கையெழுத்துப் பிரதியில் என்ன வடிவம் உள்ளதோ அதைப் பிரதானமாகக் காட்டுதல் முறை. ஆனால் இங்கு திருத்தப்பட்ட வரி வடிவம் பாரதி காலத்திலேயே பாரதியாராலேயே திருத்தப்பட்டது என்று அடிக்குறிப்பும் தெரிவித்து விட்டு அவரால் விடப்பட்ட ஒரு வடிவத்தைப் பேணி, பிரதான அமைப்பில் தந்திருப்பது ஏன் என்றே புரியவில்லை.

தஞ்சை திரு தி ந ராமசந்திரன் அவர்கள் தாம் எழுதிய வழிவழி பாரதி என்னும் பாரதியார் பற்றிய நூலில் பாரதியார் எழுதியது சாதி பெருமையில்லை பாப்பா என்பதுதான். சாதியை அழிக்க முடியாது. சாதி வேற்றுமைகளைக் களைய முடியும் சாதியைக் கடக்கத்தான் முடியும் என்னும் பொருள்பட எழுதுகிறார்.

பாரதியாரின் பாடல்களைக் கால வரிசையில் தந்த திரு சீனி விசுவநாதனோ பாடலின் வடிவத்தில் 'சாதி பெருமையில்லை பாப்பா' என்னும் பாடத்தையே முக்கிய பாடமாகக் காட்டிவிட்டுக் கீழ்க் குறிப்பில் 1917ல் வந்த பதிப்பில் பாடமான 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்னும் பாடத்தைக் காட்டுகிறார். அப்படியென்றால் பதிப்பாசிரியராகிய திரு சீனி விசுவநாதன் பாரதியாரின் அறுதியான பாடல் வரி 'சாதி பெருமை இல்லை பாப்பா' என்றுதான் நினைக்கிறார் என்று பொருளாகிறது. அப்படி இல்லையேல் அவர் இந்த வரியைக் கீழ்க் குறிப்பில் காட்டி 1917ஆம் ஆண்டு பதிப்பின் படி 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்னும் வரியை பிரதானமாகக் காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை.

ஆனால் 'பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்' என்னும் நூலில் எழுதும் போது இதே பாப்பா பாட்டைப் பற்றியே ஓர் அத்யாயம் ஒதுக்கி இதன் சிக்கல்களை என்றைக்குமாகத் தீர்க்க வேண்டும் என்று எழுதி வரும் போது புதுமைப் பித்தனின் விமரிசனம் ஒன்றிற்குப் பதில் எழுதுகிறார்.

புதுமைப் பித்தன் 1925 ஆம் ஆண்டு வந்த பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பாப்பா பாட்டில் பதிப்பித்தவர்கள் பலவித மாறுதல்களுக்கு உட்படுத்திவிட்டார்கள் என்றும், பாட்டுகளைச் சரியான பாடங்களுடன் ஏன் பிரசுரிக்கலாகாது என்றும் கேட்டிருந்தாராம். அதற்குப் பதில் எழுதும் போது திரு சீனி விசுவநாதன் கூறுவது:

"புதுமைப் பித்தனின் நியாயமான (?) கேள்வியின் தன்மையைச் சற்றே உரசிப் பார்க்க வேண்டும். ஞான பாநு பத்திரிக்கையிலே பாட்டு பிரசுரமான போது, பதினான்கு செய்யுள்களே இடம் பெற்றிருந்தன. 1917 ஆம் ஆண்டிலே பாட்டைச் சிறு பிரசுரமாக நெல்லையப்பர் வெளியிட்ட போது இரு செய்யுள்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டன. பாட பேதங்களும் இடம் பெற்றன. 1917 ஆம் ஆண்டிஎலே செய்யப்பட்ட பாட பேத மாறுதல்களே 1919, 1922, 1925 ஆகிய ஆண்டுகளிலே மறுபிரசுரமான "பாப்பா பாட்"டில் தொடர்ந்து இடம் பெற்றன. பாரதி காலத்திலேயே நிகழ்ந்துவிட்ட மாறுதல்களுக்கு அடிப்படை உண்மைகளை ஆராயப் புதுமைப் பித்தன் தவறி விட்டார்.; 'இலக்கியத்தைப் பிரசுரிக்க முயலும் முறை வேறு' என்று சொன்னவர், அந்த இலக்கியம் பிரசுரம் செய்யப்பட்ட காலப் பகுதிகளையும் ஆராய முற்பட்டிருக்க வேண்டும்."

இவ்வளவும் புதுமைப் பித்தனுக்குப் பதிலாக எழுதுகின்ற திரு சீனி விசுவநாதன் தாம் பிரசுரித்திருக்கும் கால வரிசையிலான பாரதி பாடல்களில், பாப்பா பாட்டில், 1917 ஆம் ஆண்டில், அதாவது பாரதியார் வாழ்ந்திருந்த காலத்திலேயே வந்த பாடல் வரியின் வடிவமான 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பதை பாப்பா பாட்டில் முக்கியமான பாடமாகக் காட்டாமல், 'சாதி பெருமை இல்லை பாப்பா' என்னும் வரியைக் காட்டியது ஏன் என்று புரியவில்லை.

சரி. பாரதியாரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று அவரது மற்ற பாடல் வரிகளை நாம் கவனித்தால் மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

'முரசு' என்ற பாடலில்,

"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம் - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்"

என்று மிகத் தெளிவாகப் பாரதியார் பாடுகிறார்.

அது போல் 'பாரத தேசம்' என்னும் பாடலிலும் இன்னும் தெளிவாகக் காட்டிவிடுகிறார்:

"சாதி இரண்டொழிய வேறில்லையென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதிநெறியில் நின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்."

ஔவை சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியது வர்ண தர்மத்தை அல்லவே!

இவ்வளவு தெளிவாக பாரதியின் இதயத்தைப் பாரதியே கல்வெட்டாகப் பல இடங்களிலும் தெளிவுறப் பதிந்து வைத்திருந்த போதிலும், ஏன் அவன் கைவிடுத்த பாடம் தலை தூக்குகிறது?

***