Thursday, May 02, 2019

சத்சங்கம் காண்போம்

சத் சங்கம் என்பது என்ன என்றால் திருக்கோவலூர் இடைகழி.

ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்க இடம் தந்து, இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்க விரிந்து, நால்வரும் நல்ல கூட்டுறவாய் ஆகும் உணர்வு ஸ்தானம் என்பதுதான் சத் சங்கம்.

சாதுக்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு தெய்வம் முன்னாலேயே வந்து துண்டு போட்டு உட்கார்ந்துவிடுகிறது. 


ஆன்மிகத்தின் முதல் நுழைவாயிலே சாது சங்கம் தான்.

சத் சங்கத்தின் மஹிமை சொல்லும் அளவன்று.

பகவத் பாதர்கள் பாடும்பொழுது 'சத் சங்கத்தினால் பற்றுகளின் சங்கம் விட்டுப் போகிறது. பற்றுகள் விட்டால் நிலைத்த தத்துவம் தூய மனத்தில் தெரிகிறது. தத்வ தரிசனத்தால் வாழும் போதே ஒருவன் முக்தி அடைந்தவனாய் ஆகிவிடுகிறான்'.

விண்ணுலகை மண்ணுலகில் கொண்டு வரும் வல்லமை சத் சங்கத்திற்குத்தான் உண்டு.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் நம் அகந்தை என்னும் காளியன் தலையில் ஆடி அடக்கும் பரம்பொருளின் அடிகள்தாம் சாதுக்கள் சங்கம்.

ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஓர் உரையில் கூறுவார் --

"சொந்த பந்தம் இல்லை. நண்பர்கள் கூட்டம் இல்லை. கூட துணைக்கு ஆளில்லை என்று ஏன் வருத்தப் படுகிறாய்? சாதுக்களின் நூல்களை எடுத்துப் படி. அதில் தோய்ந்திருக்கக் கற்றுக் கொள். பாகவதத்தை எடுத்துப் படி. சுகர் வந்து அருகில் அமர்ந்து உன்னிடம் பேசுவார். உன் கஷ்டங்களையெல்லாம் கேட்பார். சமயத்தில் உனக்கு வேண்டிய வழிகளைக் காட்டுவார். ஸ்ரீராமாயணத்தை எடுத்துப் படி. ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் சங்கம் உனக்குக் கிட்டும். ஸ்ரீஹனுமானின் சஹவாஸம் உனக்குக் கிட்டும்."

ஸ்ரீ ப்ரேமிகள் சத்தியத்தைத்தான் பேசியிருக்கிறார்.

அந்தக் காலத்திலாவது நூல்கள் மட்டும்தான். ஆனால் நம் காலத்திலோ சத் சங்கத்திற்கு எவ்வளவு சௌகரியங்கள் !! அடேயப்பா !!

கலிகாலத்திற்கு என்று சர்வ மங்களமான முகம் ஒன்று உண்டு. அதைத் தேடிப்பிடித்துப் பார்க்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் சத் சங்க மஹிமை.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்னும் நிமாய் பண்டிதர். அவரிடம் போனால் மஹாபாவம், பிரேமை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

துளஸிதாஸரிடம் போனால் ஸ்ரீராம நாம மஹிமை என்ன என்று புரியும்.

துக்கா ராம், விட்டோபா, மீராபாய் என்று எவ்வளவு மஹான்கள் !!!

இந்த விதத்தில் சினிமா நல்ல அருந்துணையாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் காலப் படங்கள்.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்னும் நிமாய் பண்டிதரைப் பற்றி அருமையான படங்கள் 'நடேர் நிமாய்' என்பதும், 'நீலாச்சலத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்' என்பதும்.


பிருந்தாவனத்தே கண்டோமே - என்கிறாள் ஆண்டாள்.

ஸ்ரீகிருஷ்ணனுடைய வீக்ஷண்யம் பட்டவாறே வெறும் நெருஞ்சிக்காடாய் இருந்த ப்ருந்தாவனம், பசுகு பசுகு என்று அறுக்கத்தொலையாத பசும்புல் மண்டிய நிலமாக ஆகிப்போயிற்று - என்கிறார்கள் வ்யாக்யானக் காரர்கள்.

ப்ருந்தாவனத்து மண்ணைக் கொண்டு வந்து தக்ஷிணேஸ்வரத் தவத்தோட்டத்தில் போட்டுக் கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

நாம் பார்த்தால் நமக்கு அங்கு ஓடும் கார், பஸ், ஒய்யாரமாகச் சாய்ந்திருக்கும் குரங்கு இவை கண்ணில் படுகின்றன. 

ஒன்றுமில்லை அகக்கண்ணை மூடிக் கொண்டுவிட்டோம். திறக்கவும் மறந்துவிட்டோம்.

உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உள் நின்று அறியும் பிரான் ஊதி மலர்த்தும் பொழுது

'போது மலர்ந்தோங்கி வரட்டும் - கண்ணா
போதுதயமாகி வரட்டும்'

என்று அகக்கண் மலரும். மலர வேண்டும். மலரட்டும். விருந்தாவனத்தைக் காணும் அகக்கண் மலர்த்தும் மந்திரம்தான் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தந்த மஹாமந்திரம்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே!

அந்த மஹாமந்திரத்தை மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டிருந்தால் போதும், அகக்கண் தானாக மலர்ந்து ப்ருந்தாவனத்தையும் அதில் அவனையும், அவனே காண ஏங்கும் பிரேமையின் மஹாராணியையும் நமக்குத் தரிசனம் செய்து வைக்கும் என்கிறார்கள் அவ்வாறு கண்டு காலம் எல்லாம் களித்து வந்திருக்கும் பெரியவர்கள்.

***