Tuesday, October 04, 2022

இரசித்துப் போ ராஜாவே!

என்னப்பா.. எப்படி இருக்கே... ரொம்ப வருஷம் ஆயிடுத்தே.. 

ஆமாம் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க... 

என்னவோப்பா... ஆமாம். இன்னும் அந்த இடத்துக்கேலாம்.. போறியா.. 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘எந்த இடம் சார்?’ 

இல்லப்பா... இந்த ராமகிருஷ்ண மடம் அது இதுன்னு போயிண்ட்ருந்தியே... 

நல்ல வேளை சார்.. நீங்க கேட்பதைப் பார்த்தா.... ராமகிருஷ்ணர் எப்பவும் உண்டு சார். 

ஏதோ நீ கூட... அங்க... சேரணும்னு... லேசா நினைவு... அப்புறம் திருந்திடேன்னு கேள்விப்பட்டேன்... 

சரி. இனிமேல் வாக்குவாதம் செய்ய இடமில்லை. இது ஒரு ப்ரக்ருதி, பார்த்து ரசிப்பதுவே உத்தமம் என்ற முடிவுக்கு வந்தவனாய்... 

ஏதோ... உங்க புண்ணியத்துல சார்... 

என்ன இப்ப என்ன பண்ணிண்ட்ருக்க... 

ஒன்றும் ஸ்பெஷலா இல்ல சார்... 

படி. நிறைய படிக்கணும். ஆன்லைன்ல பார்த்தீன்னா ஏகப்பட்ட புஸ்தகம்... குமுதம், ஆனந்த விகடன், அது இதுன்னு இங்கிலீஷ்ல எல்லா மேகஸைன்ஸ்உம் இப்ப ஆன்லைன்ல கிடைக்குது. தினசரி எல்லாம் இ காப்பி போட்றாங்க.... 

சரி சார். முயற்சி பண்றேன். நீங்க என்ன சார் செய்து கொண்டிருக்கீங்க... 

நான்... பயங்கர பிஸிப்பா... நேரமே கிடையாது. 

ஓ ஏதாவது ஃபேக்டரி எதுனாச்சும்... 

ஃபேக்டரியா... அதெல்லாம் கிடையாது. ஏகப்பட்ட வாட்ஸப் க்ரூப்ல இருக்கேன். அதஎல்லாம் பார்க்கரதுக்குள்ளயே நேரம் பறந்துடும்... இதைத் தவிர பல ஸம்ப்ரதாய க்ரூப்ஸ் இருக்கு. ஏதாவது கிரந்தம் எடுத்துச் சொல்லிண்டே இருப்பா... கிட்டத்தட்ட எல்லாத்துலயும் இருக்கென். 

ஐயோ... அதுல எல்லாம் இருந்தாலே போதுமே சார். அவங்க சொல்றத எல்லாம் கேட்டு அதில் ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சிண்டாலே.. 

எது? அதெல்லாம் நான் எதுவும் கமெண்டே போட மாட்டேன். எல்லா க்ரூப்பிலயும் கண்டிப்பா சொல்லிட்டேன். தோ பாருங்கோ நான் கமெண்ட் போட மாட்டேன். லைக் அது இதுன்னும் போட மாட்டேன். ஆனா படிப்பேன். சைலண்டா படிக்கறதோட சரி. 

இல்ல சார் நீங்க கமெண்ட் போட்றதுதானே சார் மரியாதை.. அவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிச்சு அதை எளிமையா மக்களுக்குச் சொல்லணும்னு வாட்ஸப்பு க்ருப்புனு வந்து சொல்லும் போது... குறைந்த பட்சம் கமெண்ட் கூடப் போட மாட்டேன் என்பது... 

தோ பாரு... நான் கேட்டனா வாட்ஸப்பை? இல்லை மொபைல் இருந்தாத்தான் உண்டுன்னு நானா கேட்டேன். கால மார்றம். அதுவா கிடைக்கிறது. அவாங்க படிச்சு க்ருப்புன்னு வந்து சொல்ரா... நான் படிக்கிறேன்... என்னால முடிஞ்ச் அளவு அவ்வளவுதான்... 

படிக்கிறீங்க.. படிச்சேன். இது எனக்குப் புரிந்தது என்று உங்க அபிப்ராயத்தை கமெண்டா போட்றதுதானே மரியாத? 

எனக்கு அதுக்கேல்லாம் நேரம் கிடையாதிய்யா... கமெண்ட் போடலைன்னு வெளியில தள்ளனும்னா தள்ளிக்கோ... நீ இல்லன்னா எவ்வளவோ க்ரூப்பு... ஐ டோண்ட் கேர்... 

அப்ப நல்லா பொழுது போக்கறீங்க... மொபைல் ஒத்த விரல் தேய்ச்சு தேய்ச்சு காலம் போரதுன்னு சொல்லுங்க... 

ஆச்சு... இப்ப சாயந்த்ரம் நாலு மணி ஆயிடுத்துன்னா அவர்.. அந்த வகுப்பு வந்துடும்... ஒரு மணி சரியா இருக்கும். 

அந்த வகுப்பில் நோட்ஸ் சந்தேகம் ஏதாவது... 

தோ பாரு... நான் தான் சொல்லிட்டேனே.. கேள்வி கேட்கற அளவுக்கு நான் புத்திசாலி இல்ல... 

இல்லை சார். நீங்க புரிந்ததைக் குறித்து அவரைப் பாராட்டி உங்கள் நன்றியைத் தெரிவிக்கலாமே... 

அ..அ .. அப்ப மத்தவா பாராட்டணும்னுதான் நீ வகுப்பு எடுக்கிறியா? கடவுள் தொண்டாத்தானே செய்யற... அப்பறம் ஏன் பாராட்டுக்கு எதிர்பார்க்கற... 

நான் இவர்களையெல்லாம் நம்பி பாவம் எத்தனை அறிஞர்கள் கஷ்டப்பட்டு உழைச்சு அதை டெக்னாலஜி மூலமா எளிமையா தரலாமேன்னு கொடுத்தா இந்த மாதிரிப் பைத்தியங்க எல்லாம் சேர்ந்துண்டு... ஏதேதோ பேசிக்கிட்டு... - என்று சிறிது யோசனையில் ஆழ்ந்து போனேன். 

என்னப்பா டென்ஷன் ஆயிட்டியா... 

சும்மா சொல்லு... உன் அபிப்ராயம்.... 

இல்லை சார். வாழ்க்கையில் சிறுவயதிலிருந்தே ஒரு தெளிவான முடிவு எடுத்துட்டேன் சார். 

என்னது? 

அசடுகள், கிறுக்குகள் விஷயத்தில் பார்த்து ரசிப்பதோடு சரி. நோ வாக்குவாதம் என்று. 

விருட் என்று போய்விட்டார். ஏனோ அந்த நேரம் பார்த்து சுஜாதாவின் ‘நில்லுங்கள் ராஜாவே’ நாவலட் ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேளை ‘இரசித்துப் போ ராஜாவே’ என்றும் சொல்லாமோ என்று தோன்றியது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***