Friday, January 19, 2024

ராம்போலாவின் துளஸி நிழல் - முதல் பகுதி

பல நாட்களாய் இனிமேல் புத்தகங்களை வாங்குவதும் இல்லை. யாரிடமிருந்தும் பெற்று வருவதும் இல்லை என்று முடிவு பண்ணியிருந்தேன். நண்பர் ஒருவர் துளஸி ராமாயணத்தைப் பற்றிச் சொல்லி வட இந்தியாவில் அதன் முக்கியத்துவம் பற்றியும் சொன்னார். சரி சொல்லுகிறாரே என்று அவர் கொடுத்த துளஸி ராமாயணத் தமிழ் மொழி பெயர்ப்பை வீட்டுக்கு வந்த முதல் காரியம் படிக்கத் தொடங்கினேன். ஸ்ரீ ஸ்வாமினாத ஆத்ரேயனின் அருமையான மொழிபெயர்ப்பு.

என்ன ஒரு லாகவமான எழுத்தாளர் ஸ்ரீ ஸ்வாமினாத ஆத்ரேயன்.! முன்னுரையில் துளஸியின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கிறாரே பார்க்கணும் !! ஐயோ ஐயோ பைத்தியமாய் அடித்துவிட்டது . அந்தப் பைத்தியத்தில் எழுந்த பதிவுகள் இவை. ஆம். இலக்கியத்தில் நம்மை மறந்து, நம்மை இழந்து தோய்வதுதானே உணர்வெனும் பெரும் பதத்தை எய்தும் நிலை.! 

’ராம்போலா’ என்பது துளஸிதாஸரின் சிறுவயதுப் பெயர். அவரை அப்பெயரைக் கொண்டே இதில் அழைக்கிறேன். தாய் ஆசையாய்ச் சூட்டிய பெயர் அல்லவா! அப்படி ஒரு ராம்போலா என்னும் துளஸிதாசர் ராமமகிமையில் தம்மை இழக்கக் கூடுமானால் ஏன் ராம்போலாவின் மகிமையில் நம்மை இழக்க முடியாது.? ஆனால் கச்சிதமாக, மடிப்பு கலையாமல் நம்மால் மீண்டு வந்துவிட முடிகிறது. பாவம் துளஸிதாசரால் அப்படி மீண்டுவர முடியவில்லை !

*

ராம்போலா!

எங்கே போனாயப்பா?

முழுப் பல்வரிசையுடன் பிறந்தாயாமே?

சதா ராமநாமச் சொல்வரிசைத் திகழ

உன் அதரம் திறந்தாயாமே?

எங்கே போனாய் ராம்போலா? 



இந்தச் சமுதாயத்தைப் பற்றி

நீ சிரிப்பது உண்மைதான் ராம்போலா!

தெய்வமே வந்து பிறந்தால்

எப்படி இருக்கும் என்று

வாய்ச்சொல் வீசுவார்கள் ராம்போலா.

ஆனால்

உன் முத்துப்பல் வரிசையின் முழுமையில்

ராமநாமம் மிளிரக் கேட்டதும்

என்ன சொன்னார்கள் ராம்போலா?

குழந்தை அமானுடம்!

ஊருக்கு ஆகாது.

ஏதோ தெய்வக்குத்தம்....

தெய்வக்குத்தமாம் ராம்போலா

குழந்தையை வெட்டிப் புதைத்தால்தான் தோஷம் தீருமாமே!

உன் தாய் என்ன பதறியிருப்பாள் ராம்போலா!

தந்தை துபே இறந்து வைகுண்டம் சென்ற பிற்பாடும்

உன் தாய் இறந்தும் எங்கும் செல்லாமல்

சுற்றிச் சுற்றி வந்தாளே ராம்போலா

துளஸிச் செடியை!

சமுதாயத்துக்குப் பயந்து,

கணவனின் ஊமையான உள்வேதனைக்கு

என்னவழி என்று திகைத்து

என்றோ அண்ணன் தந்த ஆறு பொற்காசு

அதைத் தந்து தாதியிடம்

பல்லும் சொல்லும் விளங்கிய

புதல்வனைத் தந்து

அனுப்பினாளே ராம்போலா!



நீ ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தைப்

பாராயணம் செய்தபடிச்

சுற்றிவந்த துளஸிச் செடி

தருவாகி தந்த நிழல்தானே

உன் துளஸிராமாயணம் ராம்போலா!

நீ ராமாயணம் சொல்லச் சொல்ல

நாளும் நாளும் கடைசி வரிசையையும் தாண்டி

முக்காடிட்டு வெண்குஷ்டத் திருமேனியுடன்

ஒருவர் உட்கார்ந்திருந்தாரே யாரவர் ராம்போலா?

ராமனைக் காண நீ ஏங்கின ஏக்கம் அறிந்தவர்தானே அனுமான்?

அடுத்தமுறை வந்தால் எனக்கும் காட்டுவாயா ராம்போலா?

நான் இப்பொழுதே உனக்கு கையில் அடித்துச் சொல்கிறேன்

ராம்போலா!

எந்தக் குறும்பும் பண்ணாமல் இருப்பேன் அப்பொழுது ராம்போலா!



உன் பிறவியில் நிறைந்த பல்வரிசையும்

அதில் திகழும் பிறவி தீர்க்கும் சொல்வரிசையும்

இந்தச் சமுதாயத்தை என்றாவது மாற்றும் ராம்போலா.

காசி விச்வநாதர் உன்னிடம் பேசிய பொழுது

அவர் வாயில் வந்த ராமநாமத்தை நீயும் கேட்டிருப்பாயே ராம்போலா!

நீங்கள் இருவர் சொல்லும் ராமநாமமும்

ஒத்திசையாய் என் காதில்

என்றேனும் விழாதா ராம்போலா? 



வெட்டிப் புதைக்க வேண்டும்

என்ற சமுதாயத்தையே மன்னித்து

வளம் பெருகச் செய்தாயே ராம்போலா?

நான் வெறுமனே வெட்டியாய்த் தானே இருக்கிறேன்

என்னிடம் என்ன கோபம் ராம்போலா?

சிவன் பார்வதியிடம் கூறிய ராமாயணத்தின்

பிரதியைத் தேடிப்போனாயே ராம்போலா?

கிடைத்ததா அது ?

இருக்கிறது என்று மட்டும் சொல்

எப்படியோ தேடிப் பிடித்து வந்துவிடுவேன்

இரண்டு ராம ஜபம் எங்கு ஒத்திசைக்குமோ

அங்குதான் துளஸித் தருநிழலில்

ராம்போலா இருப்பான் என்று.

*

அன்றொரு நாள் உன் குடிசைக்கு வந்தேன்.

ராம்போலா!

அரசர்கள் மான் சிங், தோடர் மால்

அன்போடு உன்னை

உற்றுக் கேட்ட வண்ணம் நின்றிருந்தனர் ராம்போலா!

நான் பயந்துபோய் ஓர் ஓரமாக நின்றேன்

ராம்போலா

குடிசைக்குப் பக்கவாட்டில்

ஒரு கீற்றை லேசாக

விரலால் பிரித்துப் பார்த்தபடி.

அவர்களுக்கு நீ ஏதோ

சொல்லிக்கொண்டிருந்தாய் ராம்போலா !

நன்கு நினைவில் இருக்கிறது இன்றும் ராம்போலா!



'மனத்திற்குள் வைத்துக் காப்பற்றுங்கள்

ராம என்னும் நாமத்தை

அடிக்கடி ஆசையுடன் அதை நினைத்துப் பாருங்கள்

ஏழை தனக்குக் கிடைத்த காசுகளை

எண்ணி எண்ணிப் பார்ப்பதுபோல்.

தனிமையில் உங்கள் உணவு அது;

அனைவரும் கைவிட்டாலும்

அதுவே உங்களைக் காப்பாற்றும்;

முடவருக்கு அதுவே காலாய் முளக்கும்;

குருடருக்கு அதுவே கண்ணாய் ஒளிரும்;

அநாதைக்கோ அதுவே தாயும் தந்தையும்;

ராமநாமத்தை ஜபிக்கும் தோறும்

வறண்ட என் இதயப் பாலைவனம்

பூத்துக்குலுங்கும்; பைம்பொழிலாகும்.'



இப்பொழுது உண்மையைச் சொல் ராம்போலா!

அன்று நீ சொன்னது எனக்குத்தானே?

கீற்று இடுக்கில் கண்ணை இடுக்கி

செவி கொள்ளும் சிறுவன் சிந்தனைக்கென்றே

சிறுநகையோடு சொன்னதுதானே ராம்போலா?

சிரித்து மழுப்பிப் போவது என்ன, ராம்போலா?

நான் இங்கு ஒளிந்திருக்கிறேன் என்று

அந்த நீல வீரன் கையும் வில்லும்

கொண்டு உலவும் போது மட்டும்

சொல்லிவிடாதே ராம்போலா! 



நீல வானம் உருக்கொண்டு எப்படி உலவும்

ராம்போலா?

கோல வானின் மார்வம் மிளிரும்

மின்னலும் வருமோ ராம்போலா?

மின்னலைத் தொடர்ந்து இடியென இளவல்

கடிநடை இட்டு வருவதும் உண்டோ ராம்போலா?

பொடிபட என்வினை படிகொண்ட கீர்த்தி

ராமநாமத்தைச் சொன்னால் போதுமா ராம்போலா?

அடியொடு முடிவரை அண்ணலைக் காண

அமைந்த கண்ணெது ராம்போலா?

கண்டேன் என்ற கபிக்குல வேந்தும்

விண்டேன் என்ற கவிக்குல வேந்தும்

எண் தேனாக இனிக்கும் எனக்கே ராம்போலா!

கண்டேன் என்று நானும் சொல்ல

விண்டேன் ஆவல் விரிநகை உனக்கேன் ராம்போலா? 



விநயம் அற்ற விடலை என்றோ

நியமம் அற்ற நிட்டுரன் என்றோ

தயங்க வேண்டாம் ராம்போலா!

உன் கண்ணின் பாவையுள்

நிழலுரு கண்டாலும்

போதுமெனக்கு ராம்போலா!

நானிருந்தால் அந்த நீல வீரன்

வரத் தயங்குவானோ ராம்போலா?

சேணிருந்தால் பயனிலை என்றே

சேதனன் தேடி வந்தவன் அன்றோ

ராம்போலா?

*

தூங்குகிறாயா ராம்போலா?

நீயா தூங்கிடுவாய்?

ராமநாமத்தை நாவினால் ஜபித்தே

பிரபஞ்சத் துயிலில் விழித்தவன் யோகி

நாம ஜீஹம் ஜபி ஜாகஹிம் ஜோகீ

என்று பாடியதும் நீயன்றோ ராம்போலா?

விளக்கொன்று ஏற்றச் சொல்வாயே

நினைவிருக்கிறதா ராம்போலா?

 

'அகமும் புறமும் விளக்கமுற

அன்பும் பண்பும் துலக்கமுற

வாயெனும் வாசல் படியினிலே

நாவெனும் இடைகழி வழியினிலே

ரத்தின தீபத்தை ஏற்றிடுவாய்

ராமநாமத்தை ஜபித்திடுவாய்'

 

என்ன விளக்கு அது ராம்போலா?

ஏற்றினால் உலகம் தெரியவில்லை?

அந்த ஒளியில் ஒன்றும் புரியவில்லை

இருட்டில் தெரிந்த பொருளெல்லாம்

ஏற்றிய விளக்கில் காணவில்லை.

என்ன விளக்கு அது ராம்போலா?

என்னை விளக்கியது ராம்போலா.

சொன்ன விளக்கு அது ராம்போலா நீ

சொன்ன விளக்கு அது ராம்போலா

நிர்க்குணமாகவும் சகுணமாகவும்

ஒரு விளக்கம் ஆனது ராம்போலா

நிழலும் ஆனது ஒளியும் ஆனது

நிர்மல விளக்கம் ராம்போலா

*

ராம்போலா!

பார்த்துப் பலநாள் ஆச்சுது ராம்போலா.

வேர்த்து விறுத்து விழலுக்கிறைத்துப்

பேர்த்தும் பிழைப்பெனப் போகுது காலம் ராம்போலா!

ஓர்த்து உள்ளம் உன்னடி நிழலில்

சேர்த்து வைத்திட தந்திரம் சொல்வாய் ராம்போலா!

காசியில் திரியும் கைலாய வாசி

பேசிய சூட்சுமம் சொன்னால் என்ன ராம்போலா!

வாசியடக்கி வார்த்தையடங்கி

வனத்தின் இலைபோல் மனமும் அடங்கி

புனரபி கணமும் அவன்பெயர் எழவே

வழியொன்று சொன்னால்

வாழ்ந்து போவேன் ராம்போலா!



ராமன் புகழாம் சரயூநதி

பாயும் கோஸலம் நின் கோசம்

ராமபக்தி எனும் கங்கை நதி

தானும் கலந்து பெருகிவரும்

ராமசகோதரர் போர்வீரம்

மேற்கில் பாயும் சோநநதம்

முந்நதி கூடி முனைந்து வரும்

ஞானம் பக்தி வைராக்கியம்

சென்று சேரும் சாகரமாம்

ராமசொரூப ஸௌபாக்கியம்

பரத சரிதமே பாவனமாக்கும் ஜபயக்ஞம்

சீதையின் சரிதமே நதியின் நீர்மை தானாகும்

ஸ்ரீராமன் புகழாம் சரயூநதி

தோன்றும் பொய்கை நின்கோசம்



சீதாநாதன் என்றொரு யசமான்

துளஸிதாஸன் அவனுக்குப் பணியாள்!



என்றே குவலயமெல்லாம் கேலிபேசும்

என்று சொன்னாயே ராம்போலா?

ஏற்ற யசமான் தகுந்த பணியாள்

என்றே ஏற்றித் தொழுதிடும்

உலகெலாம் இன்று ராம்போலா!



துளஸியின் நிழலில்

குணத்தின் அனுபவக் குடிசையினில்

போக்கிரி ஒருவன்

நுழைந்துவிட்டான் இங்கே ராம்போலா!

அவனையும் திருத்தி

அன்பினில் ஆழ்த்த

அருள் வைப்பாயோ ராம்போலா!

அன்றெனில் எப்படி

ஆண்டவன் இட்டதை

இயற்றியதாகும் ராம்போலா?

*

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

(தொடரும்)


1 Comments:

At 4:25 PM , Blogger Murali Iyengar said...

பொக்கிஷம் ஒன்றை பகிர்ந்தமைக்கு தன்யோஸ்மி

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home