Monday, November 28, 2022

கணக்குப் புத்தகம்

எங்களுடையது இரயில்வே குடும்பம். சிறு வயதில் தந்தையும், அவர் நண்பர்களும் சொல்லும் போது அந்தச் சூழல்கள் அப்படியே வெர்ச்சுவல் ரியாலடியாகச் சூழ்ந்து கொள்ளும். விவரிப்பையே மேடையாக்கி, சொற்களையே நாடக மாந்தர்களாக்கிச் சுழல விடுவதில் கைதேர்ந்தவர் தந்தை. அமெச்சூர் நாடகக் குழுக்கள் மூலம் அசகாய நாடகங்களை அநாயாசமாக மேடையேற்றிக் காண்பிப்பது அவருடைய குறுங்களிகளில் ஒன்று. இரயில்வே ஆபீஸ், அதாவது 1950கள், 1960, 1970 களில் இருந்த நிலைமையில், ஒரு பிரம்மாண்டமான அரங்கம் போல் காட்சியளிக்கும். உத்தரத்தைப் பார்க்க நன்றாகத் தலையைப் பின்புறம் மடித்துப் பார்த்தால்தான் பார்க்க முடியும். அவ்வளவு உயரம். வாட்டமும், ஓட்டமும் அகலமும் கொண்ட ஆபீஸ் நுழைந்தாலே ஓர் இனம் தெரியாத அடக்கம் உண்டாகும். மிக அகலமான லெட்ஜர்கள். விரித்தால் கழுத்திலிருந்து முண்டம் போல் மேலே நீட்டிக் கொண்டிருக்கும். மீதமுள்ள ஆள் யூகம்தான். இதில் நீளமான இரும்புக் கரங்கள் கீழே இறங்கி சீலிங் ஃபேன்களைச் சுழலப் பிடித்துக் கொண்டிருக்கும். எந்தக் காலத்தில் போட்ட ஃபேன்களோ, மாறாத சத்யங்களாய்ச் சுழன்று போதிய காற்றைத் தந்து கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் சத்தம். அது எப்படி மெஷின் சத்தம் இரைச்சல் என்னும் அந்தஸ்தைக் கடந்து அழகிய சுநாதமாகக் கால ஓட்டத்தில் தன்னை மாற்றிக் கொண்டது என்பது இன்னும் புரியாத புதிர். சங்கர் கபேயில் நல்ல டிபன், காபி. வந்து உட்கார்ந்து நண்பகல் நேரம், அமைதியில், சுராஅவளி கணக்கான ஃபேன் சுழல் நாதங்களில் விழுந்து, மனம் அறிதுயிலின் ஏழாம் படித்தர நிலைக்குப் போகாதிருந்தால்தான் ஆச்சரியம். காலம் காலமாகச் சுழலும் காற்றாடி ஏதோ இரகசியத்தை ஓயாமல் பல குரல்களில் சொல்ல முயற்சி செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை. பக்கத்தில் உள்ள ஜங்க்‌ஷனில் வண்டி வந்து நிற்கும் ஒலி, புறப்படும் ஜண்ட வரிசை, ஊதுகுழலின் பதங்கள் இப்பேர்ப்பட்ட ஒரு நண்பகல் நேரம். ஒரு காட்சி. முதல் நாள் யாரோ சக தொழிலாளர் ஜேம்ஸ் என்பவர் போய்விட்டதால் அனைவரும் போய் வந்ததைப் பற்றிப் பேச்சு மெல்ல ஆரம்பிக்கிறது. 

சார்! நீங்க வந்திருந்தீங்களா நேத்திக்கு, ஜேம்ஸ்.. இதற்கு? 

வந்தேனே... பாவம் சிறுவயது... கொஞ்சம் குறைத்துக் கொள் என்றால் கேட்டாத்தானே.... 

நீங்க போயிருந்தீங்களா .. அங்க பார்க்க முடியலையே.. 

கொஞ்சம் லேட்டா வந்தேன்.. போகாம இருக்க முடியுமா... 

அங்க ஏதும் கடனைப் பத்திப் பிரஸ்தாபிக்கலையே... 

ச.. ச.. கடனைப் பத்திப் பேசறா இடமா அது? அப்படியே வரலைன்னாலும் போயிட்டுப் போறது.. பாஅவம் நல்ல பையன்... 

ஆமாஅம்... நம்ம சின்னக்குட்டி அண்ணாச்சி வந்தாரா? கண்ல காஅணலியே... 

(சின்னக்கூட்டி அண்ணாச்சி நன்றாகத் தன்னை பெரும் இராட்சத லெட்ஜர்களில் புதைத்துக் கொண்டார். லெட்ஜர்கள் இன்னும் பெரிதாக இருந்திருக்கலாம் என்பது அவரது அபிலாஷை.) 

அவர் அந்த மாஅதிரி இடத்துக்கெல்லாம் வரமாஅட்டாரு.. 

ஏன்... நம்ம கூட வேலை பார்த்த கிளர்க்... நாம போகலைன்னா..  

அப்படியில்ல சார்... அதுல சில பிரச்சனை இருக்கு 

சின்னக்குட்டி அ: ராமநாதா! நீ பேசாம வேலை பார்க்க மாட்ட? எனக்கு இங்க டோடலிங் விட்டுப் போறது... 

அமைதி... மைதி..  ராட்சத ஃபேன்களின் சுருதி சுத்தமான லய சுரங்கள்... கோடியில் ஒருவர் காபிகாஅரப் பையனுக்குச் சில்லறை கொடுக்கும் சின்ன பேச்சு தவிர, பெரும் லட்ஜர்கள் பக்கங்கள் திரும்பும் சிணுங்கல்கள் தவிர, பக்கத்து ஜங்க்‌ஷனில் லைன் மாறும் ஓசை தவிர, திடீரென ப்ளாட்பார்ம் அனௌன்ஸ்மண்ட் தவிர, இவையெல்லாம் பழகிப் போனதால் அமைதியின் கணக்கிலேயே சேர்ந்து போனதைத் தவிர, சத்தம் இல்லாத சரசரப்பு. மீண்டும்ம்... 

என்ன பிரச்சனைன்னு சொல்ல மாட்டேங்கிறியே... 

அது சார்... வேண்டாம் சொன்னா அண்ணாச்சி கோச்சிப்பார்... 

(இப்பொழுது அண்ணாச்சியிடமிருந்து எந்த எச்சரிகையும் இல்லை. பதிலாக லெட்ஜரின் மீது தெரிந்த அண்ணாச்சியின் தலை மயிர் உள்ளே நன்றாக மறைந்து ஆளே தெரியாஅமல்... ) 

சொல்லுப்பா... வெத்தலை மாத்திரம் தந்துட்டு சுண்ணாம்புக்கு அழும்பு பண்றியே.... 

அது சார்... அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போனா, சித்திரகுப்தன், கையில கணக்குப் புத்தகத்தோட வந்துருப்பான்.... 

யோவ் என்னாய்யா சொல்ற... 

கேளுங்க... அந்தக் கணக்குப் புத்தகத்தை வைச்சுக்கிட்டுத் திரிவான். அந்த நேரம் பாஅர்த்து அண்ணாச்சி அங்க போய்ச் சேர்ந்தார்னா,... அடட இங்க ஒரு உருப்பிடி விட்டுப் போச்சுப் போலயே என்று நினைவுக்கு வந்துடும்... அதான் நம்ம சின்னக்குட்டி அன்ணாச்சி.. ஒரு உஷார்க்குத்தான் அங்கல்லாம் வரதில்ல... எதுக்கு நாமே வலுவுல போய் நாபகப் படுத்திக்கிட்டு... 

சின்னகுட்டி அ: ... த பாரு.... 289654... 289656.. த பாரு ராமநாதா... வயசானவங்கதான் போகணும்கிறது இல்ல.. சின்ன வயதுலயும் சம்பவிக்கும்... ஆமாம்... ஏதோ க்யூ சிஸ்டம்னு நினைச்ச்சுக்காத... இருக்கற கணக்கைப் பாருடே... அப்பறமாஅ சித்திரகுத்தன் கணக்கைப் பார்க்கலாஅம்... 

ரயில் ஓசைகளையும் மீறி, ராட்சத ஃபேன் ஓசைகளையும் மீறி, அசைக்க முடியாத கட்டித்தட்டிப் போன நிசப்தத்தையெல்லாம் மீறி அந்த செக்‌ஷன் எங்கும் ஒரே சுருதியில் எழுந்து பரவும் சிரிப்பொலி... அந்தச் சிரிப்பொலிக்கு நடுவிலும் தெளிவாக... 

சித்திரகுத்தன் கணக்குப் புத்தகத்தோட திரிவானாம்.... மனுஷனை... 

அந்தத் தெளிவான வசனத்தை அமுக்கியபடி மீண்டும் பரவும் சிரிப்பொலி... 

***