Monday, November 11, 2019

உணர்வெனும் பெரும்பதம்

கவிதைகளில் பெரும்பாலும் ஒரு சொற்றொடர் ஈர்ப்பெல்லாம் கொண்டு விளங்கும். படித்தபின் மனம் அதைச்சுற்றியே வரும். வெறும் நேரத்திலும் வாய் அதை அசை போடும். சங்கப்பாடல்களில் அத்தகைய சொற்றொடர்களையே அந்தப் பாடல்களுக்குப் பெயராக வைத்திருக்கின்றனர். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் முதல் பாட்டு. அதில் அத்தகைய ஒரு சொற்றொடர். பாட்டு என்னவென்றால் 

வாடினேன், வாடி...
வருந்தினேன் மனத்தால்..
பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன்
கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி ஓடினேன். ஓடி.....
உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம்
தெரிந்து, நாடினேன்
நாடி, நான்
கண்டு கொண்டேன் நாராயணா என்னும்
நாமம்.

இந்தப் பாட்டில் 'உணர்வெனும் பெரும்பதம்' மிக அருமையான சொற்றொடர். உணர்வு என்னும் பெரிய பதம்-- இந்த இடத்தில் பெரியவாச்சான் பிள்ளை காட்டுகின்ற பொருள் மிக அருமையானது. அவர் காட்டுகின்ற மேற்கோள் ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் 11வது ஸ்லோகம் விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாநமார்ஜிதம் ப்ராப்தம் என்றால் அயத்ந லப்தம் தானாகவே முயற்சியின்றி கிடைத்தது என்று பொருள். விஜ்ஞானமாகிய இந்த உணர்வு முயற்சியின்றி தானே கிட்டுகின்ற ஒரு ஸ்தாநம், ஒரு நிலை; இந்த உணர்வால் வேறு ஒன்று அடையப்படவேண்டியது என்று இல்லாமல் இந்த உணர்வே சென்றடைய வேண்டிய பெருநிலை. சென்றடையும் வரை உணர்வு இல்லாமலா இருக்கிறோம்? அஃதன்று. தானே கிட்டவேண்டிய ஒரு நிலையை முயற்சியால் சாதிக்க நினைப்பது, தானே பெரும்பயனான ஒன்றை மற்றொன்றை அடையும் சாதனமாக நினைத்தல், இவை நீங்கி உணர்வை உள்ளபடியே உணர்வது, அதுவே 'தெரிந்து' என்பது.