Friday, January 19, 2024

ராம்போலாவின் துளஸி நிழல் - இரண்டாம் பகுதி

எசமானின் தொண்டரா

அன்றேல் எசமானின் எசமான்

தொண்டரா நீரும் ராம்போலா?

எசமான் ராமன்

எசமானுக்கு எசமான் ராமநாமம்

எத்தனை துணிவு

அல்லது பணிவின்

பெருமையோ இஃது ராம்போலா?

நாமமும் வஸ்துவும் ஒன்றிற்கொன்று

தாச பாவம் கொண்டதாமோ ராம்போலா?

 

ரா என்பதும் என்பதும்

ஜீவனும் பிரம்மமும்

சேர்ந்த ஐக்கியம்.

நரநாராயணம்

இரட்டையில் ஒருமை

வரம் தரும் வாரிதி

பாவக் காட்டைக் கரிக்கோடாக்கும் 

பாவனத் தழல் கொழுந்து 

 

ராமநாம பிரியை என்பதினால் 

தன்னில் பாதியாய்க் கொண்டனன் 

பார்வதி தேவியைப் பரமசிவன் 

ராமநாம ரஸத்தால் கணபதி 

முதல்மரியாதை அடைவது நிதர்சனம் 

 

ராமநாம தீபம் திகழந்திட 

உள்மனைக்கட்டும் இடைகழியும் 

வெளி முற்றப் பரப்பும் ஒளிசேரும். 

உண்மைதானே ராம்போலா? 

பின் எப்படித் தானோ கள்ளர் வந்து 

உள்ளம் பொய்த்துக் 

கன்னக் கோலும் இட்டுக் கருத்தினில் 

புகுந்தனர் சொல்வாய் ராம்போலா? 

ராமநாமம் சொன்ன கள்வனும் 

முனிபுங்கவம் ஆனகதையும் 

பொய்த்திடலாகுமோ ராம்போலா? 

 

எய்த்து இளைத்து இன்னலில் சோர்ந்து 

எய்ப்பு வந்து நலியுமுன் இங்கே 

உய்வகை செய்யும் உதவியை உந்தன் 

எசமான் கருதச் செய்திடுவாய்

அவர் எசமானும் அருள்செய்திடவே 

உள்ளம் வைத்திடு ராம்போலா 

உலகம் வாழ்ந்திட ராம்போலா 

 

ராமநாமத்தின் பொருளினிலே 

சேமம் அடைக செகமெல்லாம். 

தீபம் ஒளிர்க திருமுற்றம் 

யூபக் காலாய் பக்தியினில் 

கட்டிய மிருகம் அகங்காரம் 

உத்தமர் போலே வேடமிட்டார் 

உள்ளிய தீமை போயொழிய 

சோபனமானச் சுடரொளியில் 

சத்திய நாமம் ஜயகோஷம். 

 

*

 

படிக்க கீதை

குடிக்க கங்கை

படுக்க தரையின் மடி

 

வாயில் ராமநாமம்

வயிற்றில் அவன் பிரஸாதம்

மனமெல்லாம்  மாதவனின்

மலர்ப்பாதம்

அவன் குணமெல்லாம்

புனல்பாயும் இதயத்தடம்

 

நடப்பதற்கே கோயில்குளம்

நல்லடியார் உறவுசனம்

வாதமிட  வேதாந்தம்

போதமிகு பொய்த்தூக்கம்

ஓதக் கடலலைகள்

ஓயாமல் ஓதிவைக்கும்

ஓங்காரம்

 

போதாதோ ராம்போலா!

பார்மீது மகராசன்

யாரெனைப் போல் ராம்போலா?

 

துளஸித் தருநிழலில்

துய்யநின் கட்டிலின் கீழ்

உய்வகையாய்க் கப்பம் கட்ட

உவந்து வந்தேன் ராம்போலா!

உன்மத்தன் என்றேனும்

ஒருவாய்ச்சொல் அருளுவையேல்

உள்ளம் இனிக்கும் ராம்போலா! 

திருவுள்ளம்  என்னவோ ராம்போலா! 

 

*

 

ராம நாமத்தில் நீ ஆழ்ந்திருக்க

ராம தியானமே உனைச் சூழ்ந்திருக்க

என்னை நினைவிருக்குமோ ராம்போலா?

என்ன நான் நினைக்கிறேன் ராம்போலா!

எத்தனை நாள் உனை மறந்திருந்தேன்!

எத்தன் நான் என அறிந்துகொண்டேன்.

ஏட்டிக்குப் போட்டி பேசுகிறேன்

எய்க்கவே நன்றாய்த் தெரிந்துகொண்டேன்.

 

ராவணன் தலைகள் பத்தேதான்

அமைதி இராவணம் என் அகங்காரம்

சுமக்கும் சிரம் பல ராம்போலா 

வீழ்த்திட வீழ்த்திட முளைத்திடுமாம்

விழு துளி ரத்தத்தில் உரு எழுமாம்

மாயங்கள் செய்வதில் ஈடிலதாய்

மாயனைத் தவிரவே ஓர்ப்புளதாய்

ஆய பல் தந்திர வல்லரக்கன்

சேயனில்லை என் அகத்தில் உளான்.

அந்தப் புரத்தில் அவன் ஆடல்பாடல்

அறியாமை கூடிக் குலவையாடல்

அத்தனையும் நீ கண்டிருந்தும் - நான்

மெத்தப் படுந்துயர் அறிந்திருந்தும்

அத்தனைப் போலவே அடியாருமோ?

பித்தன் இவன் என்றெண்ணித் தானோ

பரமனும் நீருமே பாராமுகம்?

 

பார்த்துவிட்டாலுமே ராம்போலா

பக்திக்கு இழுக்காயிடுமோ ராம்போலா?

பாவனமான நின் அனுபவத்தில்

பஞ்சையிவன் எங்கு வந்து நின்றான்?

தஞ்சம் என்றாலும் தயங்கி நின்றாலும்

கொஞ்சமும் கருணைக்கு இடமில்லை என்றே

அஞ்சனைக் குமரன் போதித்ததும் இதுவோ?

அண்ணலின் ஆணையோ?

அன்னைக்கும் இசைவோ?

உனக்கும் உகப்போ ராம்போலா?

என்னொருவனைப் புறந்தள்ளி

நீவிர் குடும்பமாய்க் குலவிடும் மகிழ்ச்சியில்

சேவித்துப் போவேன் ராம்போலா

என்னொருவனால்  உங்கள் மகிழ்ச்சியென்றே

என்னகங்காரம் எக்காளம் போடுது ராம்போலா!

 

உன்னை ஒரு கேள்வி நேர்படக் கேட்கவே

என்னை நான் அழைத்து வந்தேன் ராம்போலா!

ராவணன் பவனத்தில் ராக்கொட்டம் அடிக்கையில்

ராமன் கைப் பாணம் அறுத்த ஆபரணம்

ஆடுவோர் ஆட்டத்தை அடக்கிட மீண்டது

என்றுரைத்தாயே எனது ராம்போலா!

என்னை நீ காணாத காரணம் தானே ராம்போலா!

அன்றேல் ராமன் கை அம்பும் உங்கள் கட்சியோ?

பொய்க்காத பாணமும் புரையன் எனைக்கண்டு

மெய்க்காதல் அற்றவன் என்னானால் என்னென்று

அலட்சியம் கொள்வதில் உங்கள் கூட்டணியோ?

 

சந்திரன் களங்கமாய் இருந்திடும் காரணம்

கேட்டவர்க்கு உரைத்திடு ராம்போலா!

அனைத்து உலகமும் அருளினில் புரப்பவர்

அசுரக் குலங்களைச் சரத்தினில் ஒறுப்பவர்

அடியார்க் குழாங்களை அவதரித் தருள்பவர்

செடியார் வினைகளைச் செபித்திடத் துடைப்பவர்

ஆதரவிலாது அரற்றிடுமொரு பயலுக்கு

அருளிடும் இதயம் அற்றதைப் பார் பாரென

மருள்கொண்ட மதியும் காட்டுவதாமென

திருமகள் செவிகொள்ள ராம்போலா

ஒருவன் உரைத்தான் எனச்சொல்லிடு ராம்போலா!

 

*

 

ரங்கத் தீவின் பாலன் வந்தேன் ராம்போலா

பங்கம் உனக்கு பாவன தியானம் ராம்போலா

சங்கம மாமுன் சரித் மானஸம் ராம்போலா

எங்கள் வாடுமுயிரே வாழும் வகையது ராம்போலா

மங்காத ஞானம் மேலெழும் பக்தி ராம்போலா

நீங்காத செல்வம் நிராசை விவேகம் ராம்போலா

அங்கமெலாம் உன் அண்ணல் தழுவியோ ராம்போலா

தங்கம் உருகிய தாமெனச் சுடருதே ராம்போலா

வங்கம் கடலில் முழுகுவ தாமென ராம்போலா

எங்கள் வாழ்க்கையும் இவ்வுலகில் ஆம் ராம்போலா

அங்கொரு நாள் அந்த அண்ணல் மீள்கையில் ராம்போலா

நங்கள் அனுமன் முன்கண்ட பரதனை ராம்போலா

கண்களில் எவ்விதம் கண்டனன் என்று கேள் ராம்போலா

 

அந்தணன் ஆகிய அஞ்சனைக் குமரனும் ராம்போலா 

அஞ்சல் எனச்சொலும் அபயம் எனக்குமோ ராம்போலா 

தஞ்சம் உனைத்தேடி தறுதலை வந்தேன் ராம்போலா 

வஞ்சம் இலாஉளம் நினக்கென்ற தைரியம் ராம்போலா 

பஞ்சம் எங்கணும் பக்திக்கு ஆனதே ராம்போலா 

துஞ்சலும் தின்னலும் அந்தாதி ஆனதே ராம்போலா 

கஞ்சனைக் காய்ந்தவன் கடைச்சொல்லே உன்னடி ராம்போலா 

செஞ்செவே பாதங்கள் சிறுவனால் நோகுமோ ராம்போலா

எஞ்சலிலாத் துயர் எததனையும் பட்டோம் ராம்போலா

விஞ்சுவதாம் பெருவெப்பம் அகங்காரம் ராம்போலா

 

என்னையும் நினைவில் கொண்டனனோ என ராம்போலா

மன்னும் பரதனே மனக்கலக் குற்றனன் ராம்போலா

என்னில் எனைப் போல்வார் எய்தும் நிலையெது ராம்போலா

உன்னில் நிலைபெற்ற உத்தமனைக் கேள் ராம்போலா

உத்திர காண்டத்தில் உரைத்ததில் தவறு ராம்போலா

உள்ளவர் எல்லாம் கண்டனர் என்றாய் ராம்போலா

கள்ள மனத்தநான் கண்டதும் உண்டோ ராம்போலா

அன்றிலை நீயென என்னிடம் உரைக்காதே ராம்போலா

என்றும் இருப்பது உயிரெனில் அன்று நானிலையோ ராம்போலா

சென்றும் வந்தும் செகத்தில் உருண்டேன் ராம்போலா

கன்றுக் குகந்தவன் கன்றிய மனத்தால் ராம்போலா

மன்றில் வைத்தொரு நாளிங்கே கேட்பேன் ராம்போலா

அன்னையும் உடந்தையோ அதைமட்டும் உரைப்பாய் ராம்போலா

என்னையும் அருளினால் பூரணம் குறையுமோ ராம்போலா

எனக்கருளிலையேல் பூரணம் என் தயவன்றோ ராம்போலா

மெனக்கெடல் நீயும் எனக்காக வல்லை ராம்போலா

தினக்கடலாடும் துரும்பெனத் துயருற்றேன் ராம்போலா

அனவரதம்  நின் துளவத் திருநிழல் ராம்போலா

கனவிலும் நனவிலும் கவியருள் காப்பே ராம்போலா ! 

 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

(தொடரும்) 

***

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home