Monday, November 11, 2019

சங்கத் தமிழ் மூன்றும் தா!

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை. பிராட்வேயில் பாரி நிலையத்தில் போய்த் தேடி அரிய பழம்பதிப்புகள் சில சங்க இலக்கிய நூல்களையெல்லாம் ஒரு சிறு பண்டிலாகக் கட்டி, பாரிஸ் கார்னரில் பஸ் ஏறினேன். ஏறிப் போய் உட்கார்ந்து, பஸ் கிளம்பும்வரை நூலைப் பார்க்கலாம் என்றால் மேலே வைத்திருந்த பண்டில் அபேஸ்!. நூல்கள் கிடைத்த கிறக்கத்தில் ஏற்பட்ட கவனப் பிசகு. ஆனாலும் ஆற்றவில்லை. மனமோ புலம்பிக் கொண்டிருந்தது. மனப் பாரத்தை இறக்கச் சிறிது கற்பனையைக் கலந்து இதைச் சில ஆண்டுகள் முன்னர் எழுதியிருந்தேன். அதாவது அந்த நூல்களின் கட்டைத் திருடிக் கொண்டு போனவன் ஏதோ என்னவோ என்று பார்க்கையில் என்ன பாடு பட்டிருப்பான் என்று என் கையாலாகாத்தனத்திற்கு ஒரு மாற்று உற்சாகமான தொனியில் எழுதி வருத்தத்தைப் போக்கிக் கொண்டேன். இலக்கியத்தின் பலமே அதுதானே!

அப்போது தி நகரில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தேன். அக்கம்பக்கத்து அறைகளில் இருந்தோர் யாராவது பேச்சுத் துணைக்கு இருந்து கொண்டே இருப்பார்கள். அன்றைக்கு என்று பார்த்து யாரும் இல்லை. சரி தமிழில் சுக்ல யஜுர் வேதம் புத்தகம் வாங்கி நாளாகிறது. ஓர் ஓட்டு ஓட்டுவோம் என்றால், சுருவம், வாஜஸ், சோமம், யூபம் என்று ரகஸ்யப் பேச்சாகப் போய்க் கொண்டிருந்தது. வெளியிலும் மாலை மயக்கம். படிப்பதும் ரகஸ்யம் என்றால், என்னவோ ஒரு மாற்று இருந்தால் தேவலை என்று எண்ணி இரண்டு தெரு தாண்டி இருக்கும் பிள்ளையார் கோவில் வரை போய்விட்டு வரலாம் என்று சென்றேன்.

உங்களுக்கு இப்பொழுதே ஒன்று சொல்லிவிடுகிறேன். பிள்ளையார் எனக்கு ப்ரத்யக்ஷம். அதாவது ஊர்க்கதை எல்லாம் வம்பளக்கும் அளவிற்கு பேச்சுத் தொடர்பு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஏதோ நீங்கள் நல்லவர்கள் ஆகையால் உங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறேன். யாரிடமும் சொல்லாதீர்கள். அப்படி மீறி நீங்கள் சொன்னால் உங்கள் வீட்டில் மூஞ்சூறு வந்து பயமுறுத்தும். ஜாக்கிரதை. இதெல்லாம் தேவ ரகசியம். யாருக்கும் சொல்லக் கூடாது.

போய் அமர்ந்ததும் பிள்ளையார் என்னைக் கண்டுகொள்ளவில்லை. நான் கொஞ்சம் கனைத்து, ஏதோ சுலோகம் எல்லாம் முணுமுணுத்துப் பார்த்தேன். ம் ம் ஆனை முகனார் பாரா முகமாய் இருந்தார். சரி ஏதோ தேவ காரிய அவசரம். ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று நான் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு பல யோசனையில் ஆழ்ந்தேன்.

அப்பொழுது சிறிது நேரம் கழித்து, பூஜகரிடம் ஒரு குரல் கூறியது. அதோ அந்தக் கம்பத்துப் பிள்ளையாண்டானிடம் இந்த ப்ரஸாதத்தைக் கொடு என்று. நம்மவர் குரல் என்று தட்டியதும் திடீர் என்று திரும்பிப் பார்த்தேன். பூஜகர் 'இந்தாங்கோ! ப்ரஸாதம்' என்று கொண்டு வந்தார். 'யாராவது உமக்குச் சொன்னாரா ப்ரஸாதம் கொடுக்கச் சொல்லி?' என்றேன். 'யாரும் சொல்லலையே. நேக்குத் தோணித்து. அடிக்கடி வருவேள் பார்த்திருக்கேன். பிரதக்ஷிணம் பண்ணிட்டு பிள்ளையாரப்பனை நெடுநேரம் பார்த்துக் கொண்டு நின்று விட்டு தூணில் சாய்ந்து விடுவீர்கள். சரி அதான் கொடுக்கலாமேன்னு தோணித்து'. கணபதி குறும்பாகச் சிரித்தார்.

இங்க தானே இருப்பேள். சித்த பார்த்துக்கோங்கோ.தோ கடைவரைக்கும் போய்ட்டு வந்துட்றேன். இங்க விபூதி பிரஸாதம் வச்சுருக்கேன். யராவது வந்தா எடுத்துக்கட்டும்.

சரி.

பூஜகர் போனதும் 'என்ன இப்பத்தான் மூடுக்கு வந்தாப்புல இருக்கு' என்றேன்.

ஆமாம். ரொம்ப பெரிய மனுஷன் ஆயிட்டே போல இருக்கு. ஆளையே காணும்.

இல்லங்காணும் வெட்டி அலைச்சல். அயர்ச்சி. அதான் வந்து உம்ம தொந்தரவு பண்ண வேணாமேன்னு.....

சரி ஏதாவது கதை சொல்லுய்யா கேட்போம் - என்றார் கணபதி.

ஓய்! உம்ம கிட்ட கதை சொல்றதுக்கு வியாசராலத்தான் முடியும். நான் ஒரு நடந்த சம்பவம் சொல்றேன்.

ம் ம் பேஷ் பேஷ்...என்னது அது?

அந்தச் சம்பவத்துக்குத் தலைப்பு கூட வைத்திருக்கேனே...'தமிழைத் திருடாதே!'

சூப்பர்! ஆரம்பமே களை கட்றது....என்ன சம்பவம்?

அதாவது ஒரு நாள் கடற்கரைக்குப் போயிருந்தேன். ஓர் ஓரமா உட்கார்ந்திருந்தப்ப சில அடிகள் தள்ளி கட்டுமரங்களுக்குப் பின் சில ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இரு இரு ஏதாவது காதல் கத்திரிக்கான்னு ஆரம்பிக்காத....

சுவாமி நான் தான் கற்பனை இல்ல, நடந்த சம்பவம்னு சொல்ரேனே....அப்புறம் எப்படிக் காதல் பத்தி வரும்.?

சரி சொல்லு....

அவர்களில் ஒரு பேர்வழி சொல்கிறான் --

டேய்! ஒயிங்கா மருவாதியா அன்னிக்கு எத்தினி தேரிச்சுன்னு சொல்லிடி...அல்லாங்காட்டி மவனே டங்குவார் அந்துடும்...

தமிழ் எவ்வளவு அழகான மொழி தெரியுமா...சங்கப் புலவர்கள் வளர்த்த தமிழ்...

தோ பாரும் குறுக்கப் பேசக் கூடாது...அப்புறம் எனக்குக் கதை சொல்ர மூடே போயிடும்....

சரி சரி தொடர்ந்து சொல்லு....

அப்ப அந்தப் பதில் மருவாதி சொல்கிறான் --

ரெஸம்மாலும்டா..புல்லயார் சத்யமா...அத்தினியும் பொஸ்தகம்டா...

இன்னொரு மருவாதி --- ஏன் இன்னா மேட்டரு?...த பாரு....இந்த டபாய்க்கரதெல்லாம் நம்குல்வே வச்சுக்கினன்னு வய்யி..பேஜாராப் பூடும்...பார்த்துக்கொ...

இல்லடா அவந்தான் லூஸு கன்கா ஒளர்ரான்னா நீயும்...அத்தைனியும் பொத்தகம்டா....அந்தப் பேமானி மட்டும் என் கயில்ல கெட்ச்சான்,...மாவ்னெ....

சரி சரி நீ இரு....தோ பாரு...இன்னா பொத்தகம் சொல்லு...

நான் சரியாப் பார்க்கல்லடா.....அந்தக் கட்டை பிரிச்சா என்னன்னவோ கீது...ஏதோ சங்கொ லெக்கியம்...

அக்ஹஹஹஹ்ஹா டேய் நாயி...சொல்ரதுன்னா பொய்யி சோக்கா சொல்னும்....இன்னா...எங்க திருப்பி சொல்லி...

ச்ங்கொ லெக்கியம்....

டேய் பார்ரா தெருவல்வரு சங்கொலக்கியம் பட்சாராண்டா....ஏய்...ஏய் இங்கன பாரு...அப்டியே மூஞ்சில குத்தினன்னு வய்யி....

டேய்....ரெஸமாலும்டா...சொன்னா நம்புடா...

சரி..நீ இரு.....இரு இரு...

நீ இன்னா இதுக்கு உல்லார வர்ர?...தோ பாரு நீயும் இவன் கூட்டா/...

இல்லடா இரு...டேய் மச்சி...இங்க பாரு...இங்ஜ்க பார்ரான்னா ...அந்தப் பொத்தகம் பேரெல்லாம் 5நிமிட் டைம் தரேன்...நாவம் படுத்திச் சொல்லி....

இன்னா/....

அகநானூறு....

டேய்...கன்க்குல வய்யி ..வருதா இப்ப உன்மை...ஒரு 400 ரூவா இல்ல கன்க்குல வய்யி அப்பரம் பார்ப்போம்/// சொல்டா மேல 

பொரநானூரு.....

இப்ப ஒரு 400ஆ/// எவ்வலவோச்சி...800 ம் மேல

ஐங்குருநூரு...

டேய் செம துட்டு...நாயி புலுகுது பாரு...ம் ம்

எட்டுத்தொக...

சரி 8000...அப்டியே மூஞ்சில போட்ரா நாயை...

பத்துப்பாட்டு...

யம்மா...10000 மா? டேய்...

அப்ரம் பத்துப்பத்து...குர்ந்தொகை...

ஓ பத்து பத்தா சில்ரை காசா?

டேய் கில்லாடிடா நீ? அப்டியே கேட்டு உன்மையை வாங்கிட்டியே....

இல்ல இல்ல இரு....400...ஒரு நானூரு...800..அப்ப்ரம் 500....1300ஆச்சா...அப்ரம் 8000....9300 ரா?..அப்பறம் 10000....19300 ஆ? அப்பரம் சிலரை பத்து பத்தா சரி விடு அந்த நாயே எடுத்துண்டு ஒழியட்டும்....

டேய் இந்தப் பார்ரா...20000 ஆச்சு...நம்ம கண்டிசன்படி எங்க ஷேரைக் கொண்டு வந்து கொட்த்தீன்னா இனிமே நீ எங்களோட பிக்பாக்கட்டுக்கு வரலாம்...இல்லைன்னு வய்யி..நீ எங்க பொயக்கறன்னு பார்த்துட்ரோம்...

டேய் அதல்லாம் பொத்தகம்டா....நம்புடா...

தோ பாரு வீன் பேச்சு வேனாம்...எங்ஜ்க தொழில்லாம் விட்டு உன்கிட்ட கூவிக்கின்னு இருக்க முடியாது...ஷேர் வந்தா மவ்னே நீ பொழச்ச...இல்லன்னு வய்யி...பார்த்துக்க,....வாடா இவன்கிட்ட நின்னு மன்னாடிக்கின்னு....

இவன விட்டுவிட்டு மத்த மருவாதியெல்லாம் எழுந்து நடந்தாங்க. இவன் தனியாவோ கூட ஒரு கூட்டாளியோ...பொலம்பிக்கிட்டு இருந்தான்...

அந்த தாடிக் காரன் எங் கைல கெட்சான்னு வய்யி..அவன...இல்ல மச்சி பொத்தகம்தானே எவன் எடுக்கப் போரான்? பேசாம அப்டியே இருந்துச்சுன்னு வய்யி நாம் உசாரா போய்டுவோம்...இது என்னவோ பொட்டலம் கட்டி வச்சுருக்கோ சொல்ல...என்னவோ ரூபா கட்டுதான்னு நெனச்சி எடுத்துடேன்பா....எல்லாம் தமிய்லெக்கியம் பொத்தகம்...நம்ம பிரனன வாங்குதுங்க....

ஒன்னு முடிவு பன்னிட்டேண்டா...மவ்னே தமிழ மாத்திரம் திருடக் கூடாது...பாரு படா பேஜாரு.....

பிள்ளையாரப்பன் குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டிருந்தார். 'கவலப் படாதே...அந்த சங்க இலக்கியம் எல்லாம் வேற புத்தகங்கள் உனக்குக் கிடைக்கப் பண்ணுகிறேன்.'

ஆஹா தன்யோஸ்மி...

சம்பவம் உண்மைதானே?

உண்மை மாதிரிதான். இல்லையென்றால் வரம் கிடைத்திருக்குமா?...

அடப் போக்கிரி....

அதற்குள் பூஜகர் வந்துவிட்டார். எங்கள் சங்கேதமும் நின்றது.

***