Monday, November 11, 2019

பரம்பொருளை உணர்த்த ஒரு குறியீடு

கம்பன் கவிதையின் மாட்சிக்கு உரைகல்லாக ஓர் இடம் இராமகாதையில்.

கவிதையை கவிஞன் எழுதுவது என்பது மாறிக் கவிஞனைக் கொண்டு கவிதை தன்னை எழுதிச் செல்லும் இடங்கள் கவியின் பூரிப்பு பூரணம் அடையும் இடங்கள். அப்படி ஓர் இடம் --

யுத்த காண்டத்தில் அனுமன் மருந்து கொணர அனுப்பப்படும் கட்டம். அனுமன் மருத்து மலையைக் கொணரச் செல்லும் காட்சி.

அண்ணலுக்கான குற்றேவல் என்றதும் தொண்டுக்கே நிலைத்தவன் விரையும் விரைவு எப்படிப்பட்டது என்பதைச் சொல்லவந்த கம்பர், 'மேகத்தின் பதம் கடந்து, வெங்கதிரும், தண்கதிரும் விரைவில் செல்லும் மாகத்தின் நெறிக்கு அப்பால்' செல்லும் வெகத்துடன் செல்லும் சொல்லின் செல்வனைக் கண்டு வியக்கின்றார்கள் வானவர்கள் என்கிறார்.

வானவரினும் மேல் நிலையில் உள்ளவர்களோ அனுமனைப் பார்த்து 'யாரிவன்?' என மயங்குகிறார்கள். அதைக் கம்பன் விவரிக்கும் கம்பீரம் அழகியது.

உலகப் பொருட்களை உவமையாக்கி தத்துவப் பொருட்களை உவமேயமாய் விளக்குதல் வழக்கம். ஆனால் இங்கே கம்பனோ தத்துவப் பொருட்களை உவமானம் ஆக்கி அனுமன் என்னும் உவமேயத்தை விளக்குகிறான்.

அனுமன் சென்ற வேகத்தில் அந்த விரைவும், பொலிவும் மிக்க காட்சியைக் கண்டவர்கள் சிலர் அந்தக் காட்சிக்கு உரு உண்டு என்றார்கள். எதைப்போல்? கடவுள் காட்சிக்கு உரு உண்டு என்று சில முனிவர்கள் சொல்வது போல்.

உரு என்று சொல்ல முடியுமா? அது ஒரே ஒளிமயம் அல்லவா? கடவுளைப் பற்றியும் இப்படித்தானே சொல்வார்கள். அனுமன் சென்ற வேகத்தில் அவனைப் பற்றியும் இப்படித்தான் சொன்னார்கள்.

உரு என்றோ ஒளி என்றோ கூறுவதினும் 'ஒளிர்கின்ற அருவ மேனி' எனலாம் என்றார்கள். கடவுளா? அனுமனா?

சிலர் சொன்னார்கள் - அண்டத்துக்கு அப்புறம் நின்று, அதாவது அண்ட இயக்கத்தில் உள்ளே பற்றாமல் சுதந்திரமாய் நின்று, இந்த உலகத்தை ஆக்குகின்ற மூல காரணமான 'கரு' என்றார்கள். கடவுளையா? அனுமனையா?

சிலரோ 'ம் ம் ம் இதெல்லாம் இல்லை. நாம் சொல்லும் அனைத்தைக் காட்டிலும் வேறான மற்று ஒன்று என்றார்கள்.

சொன்னவர்கள் எல்லாம் யார்? இந்த உலகம் அனைத்தையும் தெரிந்தவர்கள், வான நாட்டினர்க்கும் மேல் உறையும் பெருமை மிக்கோர்.

இவர்களே கடலைக் கடந்து சென்று செரு வென்ற அனுமனைப் பற்றி அவன் நிலை ஒன்றும் தெரியாதவர்களாகிச் சொல்பவர்கள்.

உலக காரணமான பரம்பொருளைக் காட்டி அனுமனின் பொலிவையும், வேகத்தையும், அவன் தொண்டின் சிறப்பையும் விளக்குவதில் கம்பரின் உள் கருத்து என்னவாக இருக்கும்?

*
உரு என்றார் சிலர் சிலர்கள்;
ஒளி என்றார் சிலர் சிலர்கள்;
ஒளிரும் மேனி அரு என்றார்
சிலர் சிலர்கள்;
அண்டத்துக்கு அப்புறம் நின்று,
உலகை ஆக்கும் 'கரு' என்றார்
சிலர் சிலர்கள்;
'மற்று' என்றார் சிலர் சிலர்கள்;
கடலைத் தாவிச் செரு வென்றான்
நிலை ஒன்றும் தெரியகில்லார் -
உலகு அனைத்தும் தெரியும் செல்வர். 

*
(யுத்த காண்டம், மருத்துமலைப் படலம் )


***