Monday, November 11, 2019

உருவம் அருவம் மஹாகுணம்

அதாவது உருவம் உள்ளதெல்லாம் அவயவங்களால் ஆனது. அவயவக் கூட்டாக இருப்பதெல்லாம் அழியும்.மேலும் உருவம் அருவம் என்பன உண்மையில் நிலை மாற்றங்கள். எதை நாம் உருவம் என்கிறோம்? எது புலப்படும் நிலையில் இருக்கிறதோ அதை. புலப்படா நிலைக்குப் போனவை அருவம் நம்மைப் பொறுத்தவரையில். 

ஆனால் சூக்ஷ்ம நிலையில் உள்ளவற்றை புலன் கொண்டு கிரகிக்கும் அவற்றிற்கு அதே அருவம் உருவமாக ஆகிறது. நாமே சூக்ஷ்ம த்ருஷ்டிக்கு உபகரணம் கொண்டு பார்த்தால் அருவம் உருவமாகக் காட்சியளிக்கிறது.
எல்லா நிலையிலும் எக்காலத்தும் முற்றிலும் அருவமாகவே இருந்தது இருக்கிறது இருக்கப் போகிறது எதுவும் மனித அறிவுக்குள்ளேயே ஏன் எண்ணத்திற்குள்ளேயே வராத விஷயம். எனவே அதைப் பற்றிப் பேச்சே எழுவதில்லை. அருவம் என்பதைப் பற்றிய பெரும் கருத்து ஆக்கம் எல்லாம் உருவம் என்பதை மனத்தில் கொண்டே அதன் மாற்றாகச் செய்யப்படுகின்றவை. 

அப்பொழுது நம் உலகமே புலன்களால் மொண்ட அளவுதான் என்று இருக்கும் பொழுது அனைத்து உருவங்களையும் புழங்க இடமாகவும், காலமாகவும், வர்த்தமானமாகவும் தன் சரீரத்தில் இயன்றுச் செல்ல வாய்ப்பாக இருக்கும் பரம்பொருளை அருவம் என்பது எங்ஙனே? நம் சிந்தைக்கரியன் புலன்களுக்கு எட்டான் என்று மட்டுமே கூற இயலும்.
அப்பொழுது அவன் உருவம் உடையவன் என்றால் அவயவங்கள் உடையவன்தானே? அப்பொழுது தோன்றி மறையும் அல்லவா? என்றால் இல்லை. அவன் உருவம் உடையவன் என்பது ஏன் சொல்லுகிறோம்? அருவமாக இருக்கவே முடியாது என்பதால். அவனை ஓர் உருவம் என்று சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுதும் நமக்குத் தோல்வியே. ஏனெனில் நாம் உருவம் என்று அறிந்ததெல்லாம் நம் புலன்கள் காட்டும் இளைத்த புன் உலகத்தில் பயிலும் உருவ நினைப்புகளையே. 

இவற்றைப் போன்று அவன் ஓர் உருவம் எனில் அப்பொழுது நம் புலன்களுக்கும் சிந்தைக்கும் எப்படியேனும் அகப்படுவான். அப்பொழுது இடம் காலம் நிகழ்வு என்னும் எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு பொருள்தான் அவன் என்பது ஆகிவிடும். அவன் ஒரு நாளும் இந்திரிய கோசரன் அன்று என்று வேதாந்தம் நிர்ணயிக்கிறது. எனவேதான் அவனை பொருட்களிலிருந்து வேறுபடுத்தி 'பரம்பொருள்' என்று அழைக்கிறது வேதாந்தம். பின் அவன் யார் என்று எப்படி நமக்குத் தெரிய வருகிறது? ஒரே வழி வேதத்தினால். எனவேதான் அவனை வேதைக வேத்யன் -- வேதத்தினால் மட்டுமே அறியக் கிடப்பவன். வேதாந்த பிரதிபாத்யன் -- வேதாந்தத்தினால் விளக்கப்படுபவன் என்று முன்னோர் முடிவுக்கு வந்தனர்.

அந்த வேதமானது அவனுக்கு உருவம் இல்லை, வடிவம் இல்லை என்று கூறுகின்ற நிஷ்கலம் நிராகாரம் என்ற இடங்களில் எல்லாம் என்ன சொல்ல வருகிறது? நாம் பழகிப் பழகி உடனே உருவம் உண்டு என்று படித்ததும் வழக்கமான உருவம் வடிவம் என்பதைக் கற்பனை செய்வோமே அந்த மாதிரியான பழக்கங்களைத் தள்ளுபடி செய்கிறது. நீ பார்த்த உருவம் போல் இல்லை. நீ அறிந்த வடிவம் போல் இல்லை. ---

சரி அதற்கு ஒரேயடியாக அருவம் என்று சொல்லிப்போகலாமே? என்றால் அது அசம்பாவிதத்தில் கொண்டு போய் விடும். அசம்பாவிதம் -- Impossibility;

அதுவுமின்றி ஸ்ரீவைஷ்ணவத்தில் சித், ஜடம், ஈச்வரன் என்று தத்வங்கள் மூன்று. மூன்றும் நித்யம். சித் -- ஜீவன்; ஜடம் -- அசித்; ஈசுவரன் -- பரம சேதனன்.

பரம்பொருளுக்கு ஐந்து வ்யூஹ நிலைகள் உண்டு. பரத்வம், வியூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை.

பரத்வ நிலையைச் சுட்டும் வியன்விண் பெருமானார் இங்கு சாடலுக்கு இலக்காகிறார். பரம்பொருளின் பரத்வ நிலையாகிய பெரும் மேன்மை நிலைக்கு என்ன மதிப்பு? அது எப்படி உண்மையான சிறப்பைப் பெறுகிறது? தான் மேன்மை என்று அங்கேயே பீடு திகழக் கிடந்தால் யாருக்கு என்ன போயிற்று? அவ்வளவு பெரியவன் தன்னை தாழ விட்டுக்கொண்டு மனிச்சரும், குரங்கும், கானக் கழுகும், சலமிலா அணிலும், ஆனும், கன்றும், இடைச்சியரும், வேடரும், தயிர் வைத்த பாண்டமும், நின்ற மரங்களும் அனைத்தும் என்னுடையவன் இவன் என்று மெய்யே நினைக்கலாம்படி வந்து பழகும் எளிமைதான் அவனுடைய பரத்வத்திற்கே நிறைவைத் தருகிறது.

இல்லையென்றால் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். பரம்பொருள் வந்து 'நான் எவ்வளவு பெரிசு தெரியுமா? நீ ஒரு நாளும் என்னை அண்டக் கூட முடியாது. நீ ஓர் அற்பப் புழு. நீ எங்கே? நான் எங்கே?' இப்படியே பலவாறாக நிரூபித்தபடியே இருந்தது என்னில் நாமே என்ன சொல்வோம்? ஆம். உண்மை உனக்கும் எனக்கும் எந்த விதத்திலும் பொருததம் இல்லை. உன்னை நான் நினைப்பதுவும் வீண். அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை. ஏதோ எனக்குப் பொழுது போகாமல் இருக்கும் பொழுது எப்பொழுதாவது உன் நிலையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன். அதுவும் வேறு ஏதும் பயனுள்ள வேலையே இல்லை என்னும் போது. -- இப்படித்தான் சொல்லி அனுப்பிவிடுவோம்.

ஆனால் அவனுக்காகத் துடிதுடித்து அழுது அரற்றி பக்தி, கண்ணநீர் கைகளால் இறைக்கும் என்றபடியும், மண்ணை இருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும் என்றும், பனிவாடை ஈர்கின்றது, மணிமாமை தளர்ந்தோம் யாம் என்றும் கடல் புரைய ஆசை விளைய விண்ணைப் புரட்டும் வகையில் எழும் ஏக்கம் எல்லாம் எப்படி சாத்யமாகிறது? அவனுடைய சௌலப்யம் என்ற மஹாகுணம் ஒன்றினால்தான். ஏன் இது மஹாகுணம்? அவனுடைய மற்ற குணங்களையெல்லாம் அர்த்தம் உடையதாகச் செய்யும் பெருத்த மஹிமை வாய்ந்தது ஆகையாலே இஃது மஹாகுணம்.

இந்த மஹாகுணத்தை உள்ளபடி யோசித்தவர்கள் எல்லாம் இஃது ஒன்றிற்கே அடிமையானார்கள். பேச்சு மூச்சு இன்றி ஆறுமாசம் மோகித்துக் கிடந்தார் நம்மாழ்வார் 'வெண்ணையைக் கடைந்தவாறும்' எனற பாசுரத்தில். அதே பாசுரத்தை விளக்க வந்த கூரத்தாழ்வான் நெடும் போது கண்ணநீர் சொரிந்து, 'ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே ஆழ்வாருடைய பாவமும் இல்லாதே, நாம் அவருடைய பாசுரத்திற்கு என் சொல்வோம் ஆயினோம்? இற்றைக்கு விடல் ஆகாதோ?' என்று ஆரம்பித்த காலக்ஷேபத்தை அப்படியே நிறுத்திக் கண்ணீரும் கம்பலையுமானான் என்பதைக் கேட்ட ஸ்ரீராமானுஜர் 'ஆழ்வான் என்ன பரம சேதனனோ?' என்று வியந்தாராம்.

பக்தியின் முதிர்ந்த நிலைகளில் அவனுடைய பரத்வத்தைச் சுட்டிக்காட்டுவது கூட அவனுக்கு சகிக்கவொண்ணா பேச்சாக ஆகிறது என்பது ஆசார்யர்களின் திருவுள்ளம். திருப்பாவையில் 'உன் தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே' என்று ஆண்டாள் குறிக்கின்ற சிறுபேர் என்ன என்று கேட்ட ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் (ஆசார்ய ஹ்ருதயக் காரர்) கண்ணனின் பரத்வ நிலையைக் குறிப்பதான ஸ்ரீமந்நாராயணன் என்ற பெயர்தான் சிறுபெயராம். கோவிந்தா கோபாலா என்று இடையர் கூப்பாடாய்க் கூப்பிடுவதற்குப் பதில் தன்னை பரத்வ நிலையாக்கி அந்நியப் படுத்துவது அவன் முகம் கன்றிப்போகச் செய்கிறது என்று அனுபவிக்கிறார் ஆசார்ய ஸார்வபௌமர்.

***