Par Lagerkvist ன், க நா சு மொழிபெயர்த்த ‘அன்புவழி’
ஸ்வீடன் நாட்டு மகத்தான இலக்கிய கர்த்தர் பார் லேகர்க்விஸ்ட். நோபல் பரிசு பெற்ற அவரது சிறுநாவல் ‘பாரப்பஸ்’ ஆங்கிலத்தில் ஆலன் ப்ளேர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு லூசியன் மோரி என்பவர் முகவுரை எழுதியிருந்தார். பார் லேகர்க்விஸ்ட் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது லூசியன் மோரி ஒரு கருத்தைக் கூறுகிறார்,
“There is scarcely a single aesthetic problem in the realm of literature which Lagerkvist has not striven to define and resolve - not only theoretically, but in the practice of his art - whether in the theatre, the short story, or works of meditation, and verse.”
(லேகர்க்விஸ்ட் தமது முனைப்பால் வரையறுக்கவும், தெளிவிக்கவும் செய்யாத ஒரு கலைரஸ நுணுக்கமும் இலக்கியப் பரப்பில் இல்லை; கருத்தியல் விளக்கங்களால் மட்டுமன்றித் தமது கலையை அவர் கையாளும் நேர்த்தியினாலும், அஃது நாடக உலகிலோ, சிறுகதைப் பரப்பிலோ, ஆழ்ந்த சிந்தனை எழுத்துக்களிலோ, செய்யுள் வரிகளிலோ அவரால் விளக்கம் பெறாத துறை இல்லை) லூசியன் மோரிக்கு ஆந்த்ரே ழீட் எழுதிய கடிதத்துடனும் நூல் வெளிவந்தது. 1951ல் பார் லேகர்க்விஸ்டுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.
இந்த நூல் 1956ல் திரு ஏ கே கோபாலனால் திரு க நா சுப்ரமணியம் அவர்களுடைய தமிழ் மொழிபெயர்ப்புடன் தமிழில் முதல் பதிப்பாகக் கொண்டுவரப்பட்டது ’அன்பு வழி’ என்னும் தலைப்பில். நான் முதலில் படித்தது திரு க நா சு அவர்களின் அற்புதமான மொழிபெயர்ப்பில்தான். பிறகுதான் ஆங்கில மொழிபெயர்ப்பையும் படித்தேன். மொழிபெயர்ப்பு என்றால் கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் சித்தார்த்தன், கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இளிச்ச வாயன், ஏழைபடும் பாடு போன்றவற்றை நிலையான மாதிரி நிரலாகக் கொண்டிருந்த என் மனத்தில் திரு க நா சு உம் அந்த நிரலில் சேர்ந்து கொண்டார். திரு க நா சு அவர்களின் மொழி ஆளுமை பற்றிய பெரும் கண் திறப்பாகவும் எனக்கு இந்த நூல் அமைந்தது. பல சமயத்தில் மொழிபெயர்ப்பில் ஆங்கிலம் விஞ்சுகிறதா அல்லது ‘அன்பு வழி’ விஞ்சுகிறதா என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று.
உண்மையில் இந்த நூலுக்கு ‘மரணத்தின் முன்னால்’ என்பதுதான் பொருத்தமான தலைப்பு என்று படிக்கும் சில நேரம் தோன்றுகிறது. ஏனெனில் ரோம அதிகாரிகளால் சிலுவையில் அறையப்பட வேண்டி நிறுத்தப்பட்ட கடுங்குற்றவாளிகளில் ஒருவனான பாரப்பஸ் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மரணத்தை எதிர்நோக்கித்தான் நிற்கிறான். இவ்வளவுநாள் அதிகாரி ஏமாந்தான் என்பதுதான் அவன் எண்ணம். அதைக் காட்டிலும் பெரிதும் அவன் கவலையுறும் வகையில் அவன் வாழ்க்கையோ, வழியோ அமையவில்லை. ஆனால் திடீரென்று புதிய முடிவுகள் பிறந்து தான் விடுவிக்கப்பட்டு, தான் அறையப்பட வேண்டிய இடத்தில் குற்றம் இல்லாத ஒருவன், துவண்ட உடலும் தூய வாழ்வும் கொண்ட ஒருவன் அறையப்படப் போகிறான் என்று சூழ்நிலைகள் மாறும் போது அவனைக் கடுமையாக எதிர்நோக்கி நின்றது மரணம், மரிக்கும் யேசுவின் உருவத்தில். இயல்பாகத் தனக்கு நடந்தேறியிருக்க வேண்டிய மரணம் தன்னை நீக்கி தனக்குப் பதிலாகக் குற்றம் இல்லாதவனின் மேல் இறங்கும் போது, அந்தப் புதிரில், புரியாத அந்த மர்மத்தில் அதுவரை வாழும் போதே மரித்துக் கிடந்த மனிதன், பாரப்பஸினுள் விழித்துக் கொள்கிறான். மரணத்தின் விழியற்ற கூரிய இருட்பார்வை அவனைக் கடைசி வரையில் துரத்துகிறது. அவனும் அதை எதிர்நோக்கியே ஓடுகிறான் தன் இறுதிவரையில்.
இந்த மர்மத்தை முடிச்சாக வைத்து வாழ்வின் யதார்த்தமான மரணத்தின் நிஜத்தை ஒரு கோட்டிலும், பக்கத்திலேயே நெடுகக் கடைசி வரையிலும் இணைக்கோடாக நம்பிக்கையின் கண்ணுக்கு மட்டுமே ஆதரவு நல்கும் மீட்பின் வழியையும், நூலின் இறுதிவரையில் ஒன்று சேராத ஆனால் ஒன்றிற்கு ஒன்று இணையாகவே பக்கத்திற்குப் பக்கம் ஓடும் நுணுக்கமான ஓட்டம் லேகர்க்விஸ்டின் அபார திறமை என்றால், அதைச் சிறிதும் சேதாரம் இன்றி, ஆங்கிலத்திற்கும் போட்டியாகத் தமிழைச் செலுத்தியிருக்கும் திரு க நா சு அவர்களின் மொழிபெயர்ப்பு படிக்கப் படிக்க வியப்பு. நல்ல நூல்களை நெகிழ விடாமல் தமிழுக்கும் வாசகர்க்கும் அணித்தாக்கி வைக்கும் சந்தியா பதிப்பகத்தார்க்கு என்றும் நன்றி.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***