Saturday, May 06, 2006

காமமும், கண்ணனும்

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்காமமும் என்றிவை நான்கென்பர். நான்கினும்கண்ணனுக்கே ஆமது காமம். அறம் பொருள் வீடு இதற்கென்றுரைத்தான்வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே சேம நல் வீடு---திரும்பி வருதல் இல்லாத, தன்னுகப்பு முக்கியமற்று அவனுகப்பே முக்கியமான வீடு;சீரிய நற்காமம்----மனம் போன படி காமத்தில் ஈடுபடுதலின்றிக்கே ஒரு முறையாக இல்லறத்தில் காணும் இன்பம்;கண்ணனுக்கே ஆமது காமம்---- அடையத் தகுந்த பொருளாகவும், அனுபவிக்கத் தகுந்த பொருளாகவும், இன்புறத்தகுந்த ஒன்றாகவும் கண்ணனே ஆதல். ஐயா ! வெறும் காமத்திற்கும் இந்த காமத்திற்கும் எதிரும் புதிருமான சம்பந்தம். காமம் இருக்குமிடத்தில் கண்ணனில்லை.காமத்தின் மூலமாக கடவுள் என்பதெல்லாம் தந்திர வழிபாடு கொண்டு வந்த கருத்துகள். வேத வேதாந்தங்களில் இதற்கு இடமில்லை. அதாவது வெறும் காம உணர்ச்சியின் மூலம் கடவுள் என்பதெற்கெல்லாம். காமினி காஞ்சனம் இருக்குமிடத்தில் கடவுள் இல்லை என்று ராமக்ருஷ்ணர் சொன்னது வேத வேதாந்த அடிப்படை கொண்ட மத மரபுகள் அனைத்துக்கும் பொருந்தும். இதை மீறி புறத்தே நிற்பவை வாமாச்சாரம் முதலியன. இதற்கு ப்யூரிடானிசம் என்று பெயர் கட்டினால் அது உங்கள் பாடு. இலட்சிய பக்தர்களை நோக்கித்தான் ஆவேசப் பனுவல்கள் கடை திறக்கின்றன. மற்றவர்கள் அதை பொறுப்போடும், ஆர்வத்தோடும் உள்ளபடி புரிந்து கொள்வதுதான் செய்யவேண்டிய செயல். அந்த பொறுப்பும் ஆர்வமும் இல்லையென்றால் மரியாதையாக வேறு ஜோலி இருந்தால் பார்ப்பது உத்தமம்.

இலக்கியம் என்பது என்ன

இலக்கியம் என்பது என்ன? என்ற கேள்வியும் எது இலக்கியம் இல்லை? என்ற கேள்வியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஏனென்றால் இரண்டுமே மிகத்தெரிந்த ஒன்றை தெரியாததுபோல் பாவனையில் பேசுகிறது. எழுத்தின் எந்த நிலையிலும் இலக்கியம் சம்பவிக்கலாம் என்பதைத்தான் இந்த நிச்சயமின்மை குறிப்பதாகக் கொள்ளவேண்டும். ஏனென்றால் எழுதுவதெல்லாம் இலக்கியமாக ஆகிவிடாது.
எழுத்து, எழுதுபவன், படிப்பவன் என்ற மூன்று அம்சங்களை உள்ளடக்கிய இலக்கியம், மூன்றில் எந்த ஒன்றாலும் தனிப்பட விளக்கிவிட முடியாததாய் இருக்கிறது. மூன்றும் சேர்ந்த முழுமையிலும் விஞ்சி, அந்த முழுமைக்கே பொருள் தருவதாய், தான் அந்த முழுமையாலும் முடிந்த முடிபாக அறுதியிடவொண்ணாததாய் இருக்கிறது. பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் ஒரு மொழியில் , ஒரு சமுதாயத்தில் பிறக்கிறது. வெளி உலகோடு ஒத்தும் வேறுபட்டும் இயங்கும் மனத்தின் வெளிப்பட்டு பதிவு பெற்ற குறிப்புகளாலும் ஆன உலகில்தான் உயிர் பிறக்கிறது. எனவே பின்பு வளர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்படும் இலக்கியம் என்ற மொழியின் செயல்பட்ட வகையின் வேர்களுடைய துவங்கு நுனிகள், சமுதாயத்தின் முன்னோட்ட நிலையிலேயே பதிந்திருக்கின்றன. எனவே இலக்கியம் என்ற முழுமைக்குள் எழுத்து, எழுதுபவன், படிப்பவன் என்ற மூன்றையும் சௌகரியமாக அடையாளம் காணமுடிவதுபோல், இந்த மூன்றிலும், எந்த ஒன்றிலும் தீர்ந்தபடியாக இலக்கியத்தை அறிதியிட முடிவதில்லை.