Monday, October 23, 2023

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை என்றதுமே அன்று புத்தகம் படிக்கக்கூடாது. பூஜை அறையில் வைக்கவேண்டும். என்ற ஒரு வழக்கம் நடைமுறையில் எப்படி ஏற்பட்டது? இதே லக்ஷ்மி பூஜை என்றால் அன்று காசையே வெளியில் எடுக்கக்கூடாது. பயன்படுத்தக்கூடாது. சக்தி பூஜை அன்று ஆற்றல் இழந்துவிட்டு பலவீனத்தைக் கொண்டாட வேண்டும் என்றால் கேட்பதற்கே சரியாக இருக்குமா? பின் ஏனோ படிப்பும் அறிவும் சம்பந்தப்பட்ட சரஸ்வதி பூஜையில் அன்று முழுவதும் படிக்காமல், புத்தகம் தொடாமல்( ஏதோ வருடம் முழுவதும் படித்துக் கிழித்துவிடுகிறார்ப்போல்) இருப்பதுதான் சரஸ்வதியை வணங்கும் வழி என்று சொன்னால பொருத்தமாக இருக்கிறதா? 

மற்ற நாட்களில் சிறிது நேரம்தான் படிக்கமுடிகிறது. அவகாசம் இல்லை. ஏதோ இன்று ஒரு நாளாவது முழுக்க முழுக்க படிப்புக்கும், அறிவுக்குமே செலவழிக்கப் போகிறேன் - என்று சொல்வதுதானே சரஸ்வதி பூஜையாக இருக்கமுடியும். பின் இந்த வழக்கம் வந்தது எப்படி? இதைக் கொஞ்சம் யோசிப்போம். 

இப்பொழுது இருப்பதுபோல் அந்தக் காலத்தில் அச்சுப் புத்தகம் இல்லை. ஓலை, சுருள் இப்படி வகையறாதான். இவற்றைக் கட்டிக் கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள். வேண்டும் என்ற சுவடிதான் வெளியில் புழங்கிக் கொண்டிருக்கும். வாரம் ஒரு முறை, பக்ஷம் ஒரு முறை, மாதம் ஒரு முறை, அயனம் ஒரு முறை, வருடம் ஒரு முறை எடுத்துத் துடைத்துத் தகுந்த எண்ணையிட்டுத் தடவி, நாளானவற்றிற்கு மைபூசித் துடைத்துக் காய வைக்கவேண்டிய நியமங்கள் வீடுகளில் சரியாகக் கைவராது. எனவே ஒருநாளாவது நூல்களைப் பராமரிக்கும் பணியாக இருக்கட்டும், ஓலைகளை பாதுகாக்கும் பணியாக இருக்கட்டும் என்று சரஸ்வதி பூஜையில் அந்தக் கடமையை இணைத்தார்கள். 
 
காலம் மாறிவிட்டது. அச்சு வந்தது. கேடு அகன்றது. வெற்றிடத் தூய்மைப் பொறி பெரும் வசதியைத் தந்தது. மின்படு நூலுருவம் வந்ததும் நிலைமையே முற்றிலும் வேறு. எங்கிருக்கிறது என்று தெரியாத பரவெளியில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கமுடியும். 'சார் நூல்கள் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. எனவே எதுவும் வாங்கமுடிவதில்லை. என்ன செய்வது?' தெரியும் சரஸ்வதிக்கு மக்களைப் பற்றி. ஏதாவது அசௌகரியம் என்றால் முதலில் தன்னைத்தான் காவு கொடுப்பார்கள். என்று மக்கள் தயவில்லாமலேயே புத்தகம் பாதுகாப்பாக இருக்கும் வழியை அவள் கண்டுபிடித்துக் கொண்டுவந்துவிட்டாள். இனிமேல் பழைய பஜனை நடக்காது.
 
படி படி சிந்தி. நாள்முழுதும் படி. வாரம் முழுதும் மாதம் முழுதும் ஆண்டு முழுதும். ஆண்டிற்கு ஒரு முறையேனும். சரஸ்வதி பூஜை அன்றாவது நாள் முழுதும் படி. வேகு வேகு என்று காசு பின்னால் ஓடாமல், வேலை வேலை என்று பேயாய் அலையாமல், சம்பாத்தியம் என்ற தவிர்க்கமுடியாத இயந்திரப் பிடியில் சிக்கிச் சுய நினைவே தப்பிவிடுவதிலிருந்து ஒரு நாள் 'ஐய்யா ஜாலி விடுமுறை. இன்று முழுவதும் படிப்பு. சிந்தனை. விவாதம். ஆய்வு என்று ஜமாய்க்கலாம்' என்று எண்ணு. அன்று படித்தால் ஐயோ சரஸ்வதி கோபிப்பாளே! என்று யோசிக்காதே. கேட்டால் நான் சொன்னேன் என்று சொல்.
 
சரஸ்வதி பூஜை எப்படிக் கொண்டாடலாம் என்று யோசித்துப் பாருங்கள். அன்று முழுவதும் அனைத்து மக்களும் காலை தொடங்கி நாள் முழுவதும் படிப்பு, சிந்தனை, கல்வி, நூல் பேணுதல் நூல் ஆய்வு, அதாவது இந்த நூல் அந்த நூல் என்றில்லை, ஆன்மிகம் புராணம் என்றில்லை, என்ன நூலாயிருந்தாலும், ஏதாவது நூல் ஏதாவது துறை. அன்றைக்கும் காசு பண்ணுவதற்கு என்று இல்லாமல் இருந்தால் சரி. உலகம் முழுதும் இந்த படிப்புத் திருநாள் அமுலில் வந்தால், நாமே ஒரு வெறி கொண்டு புத்தகப் படிப்புக்கென்றே நமது வாழ்நாளில் ஒரு நாளை விடுப்பு நாளாகப் பேணினால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

போயும் போயும் கிரிக்கட் மாட்சுக்கென்று எவ்வளவு நாள் லீவு போடுகிறார்கள். என்ன சாதித்து விட்டது கிரிக்கட் மனித குல வரலாற்றில்? ஆனால் புத்தகம் மனிதனிடம் வந்து எத்தனை நாட்களாகிவிட்டது. என்ன சாதிக்கவில்லை புத்தகங்கள்? நமது பேச்சு, செய்கை, வாழும் வாழ்க்கை இதோ பார்க்கும் கணினி, இணையம் ஈமெயில் ஏன் என்ன இல்லை அனைத்தும் அதோ அந்த ஐயோ பாவம் என்று அமர்ந்திருக்கும் அந்தப் புத்தகத்தால்தானே! அந்த அச்சுப் போட்ட சரஸ்வதியால்தானே! அந்த மின்வலையில் லயமான கலைமகளால்தானே நமக்குக் கிடைத்தது !!!!
 
புத்தகம் அனைத்து மனித குல வரம் அல்லவா? அன்று ஒரு நாள் படி படிக்கச் செய். புத்தகம் இல்லாதோர்க்குப் புத்தகம் கொடு. முதலில் அன்று எவரும் வயிற்று பிழைப்பு என்று படிக்கமுடியாமல் போகக்கூடாது. எனவே அன்று முழுவதும் உணவு எல்லோருக்கும் பரிபாலிக்கப் படுதல் வேண்டும். தனியாக படிப்பு. கூட்டமாக சேர்ந்து படிப்பு. படிப்பில் கலந்து கொள்வோருக்கெல்லாம் உணவு, எழுத்து எழுதும் கருவிகள். குழந்தைகள், சிறுவர், இளைஞர் மனிதர் முதியோர் அனைவரும் அன்று நூலும் கையுமாக இருக்கும் காட்சியை எண்ணிப் பாருங்கள். இப்படி ஒரு நாள் நடந்தால் போதும். மறுநாள் எழுந்திருக்கும் போது உலகம் பல மைல்கள் முன்னேறிப் போயிருக்கும். 

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்
ஊனமின்று பெரிதிழைக்கின்றீர்
ஓங்கு கல்வியுழைப்பை மறந்தீர்
செந்தமிழ் மணி நாட்டிடை வந்தீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்
வந்தனம் இவட்கே செய்வது என்றால்
வாழி அஃது எளிதென்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை அன்றாம்
வீடுதோறும் கலையின் விளக்கம். 
வீதிதோறும் இரண்டொரு பள்ளி 
நாடுமுற்றிலும் உள்ளன ஊர்கள் 
நகர்கள் எங்கும் பலபல பள்ளி 
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் 
கல்வித் தேவின் ஒளிமிகுத் தோங்க 
போனதற்கு வருந்துதல் வேண்டா 
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் ! 
(பாரதியார் பாடலின் வரிகளைத் தேர்ந்து சேர்த்தது) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***