Thursday, May 02, 2019

விவேகாநந்தரின் பிறந்தநாள்

கிழக்கின் கடலொன்று கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம் அலையெறிந்து பொங்குது
போர்வான நாடுகளில் பக்திப் புயல் அடிக்குது
சோர்வான உள்ளமெல்லாம் ஸோஹம் என்று பாடுது
சொந்த நாட்டு சோதரரின் சோகம் உள்ளே வாட்டுது
எந்தக் காட்டுள் போனாலும் சிந்தாகுலம் ஆகுது
பந்தம் அறுத்துப் பற்றறுத்துப் பார்சுற்றியாய் ஆனாலும்
பாரதத்தின் சொந்தம் மட்டும் பாரமாக கனக்குது
கிழக்கின் கடலொன்று கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம் அலையெறிந்து பொங்குது

காளி கோவில் பூசாரி கர்ப்பம் தரித்த கனவிது
காலமெல்லாம் தொட்டில் கட்டித் தாலாட்டும் விதியிது
ஞாலமெங்கும் ஞானமாகிக் கோலம் கொண்ட கொள்கையில்
சீலம் மிக்க தெய்வம் வந்து சீர்படுத்தும் சதுரிது
மேலை நாட்டு மோஹமும் தெரிந்ததுபோல் மத வேகமும்
கூலமாகிப் பிரிவினையில் மாச்சரியப் புன்யூகமும்
புலனுகர்வில் காமமும் பொறாமையால் பெருங் கோபமும்
அன்றாடம் ஓடும் வாழ்வில் அமைந்துவிட்ட லோபமும்
பொன்ற எழும் புலரியென புறப்பட்டு வரு தீரமும்
மன்பதைக்கு மனம் உருக மடை திறந்த ஈரமும்
மனிதர் எல்லாம் நடைபயின்ற கடவுள் என்ற தேற்றமும்
புனிதமாக்கப் பாமரத்தை நட்ட வித்தின் விளைச்சலாய்க்
கனிந்த காலக் கடைக்கண் ஓடி குவிந்த காதின் குழையொலி
சினுசினுங்க சீவனோங்க சுருதியின் கீதம் பாடியே
கிழக்கின் கடலொன்று கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம் அலையெறிந்து பொங்குது 


***

சத்சங்கம் காண்போம்

சத் சங்கம் என்பது என்ன என்றால் திருக்கோவலூர் இடைகழி.

ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்க இடம் தந்து, இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்க விரிந்து, நால்வரும் நல்ல கூட்டுறவாய் ஆகும் உணர்வு ஸ்தானம் என்பதுதான் சத் சங்கம்.

சாதுக்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு தெய்வம் முன்னாலேயே வந்து துண்டு போட்டு உட்கார்ந்துவிடுகிறது. 


ஆன்மிகத்தின் முதல் நுழைவாயிலே சாது சங்கம் தான்.

சத் சங்கத்தின் மஹிமை சொல்லும் அளவன்று.

பகவத் பாதர்கள் பாடும்பொழுது 'சத் சங்கத்தினால் பற்றுகளின் சங்கம் விட்டுப் போகிறது. பற்றுகள் விட்டால் நிலைத்த தத்துவம் தூய மனத்தில் தெரிகிறது. தத்வ தரிசனத்தால் வாழும் போதே ஒருவன் முக்தி அடைந்தவனாய் ஆகிவிடுகிறான்'.

விண்ணுலகை மண்ணுலகில் கொண்டு வரும் வல்லமை சத் சங்கத்திற்குத்தான் உண்டு.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் நம் அகந்தை என்னும் காளியன் தலையில் ஆடி அடக்கும் பரம்பொருளின் அடிகள்தாம் சாதுக்கள் சங்கம்.

ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஓர் உரையில் கூறுவார் --

"சொந்த பந்தம் இல்லை. நண்பர்கள் கூட்டம் இல்லை. கூட துணைக்கு ஆளில்லை என்று ஏன் வருத்தப் படுகிறாய்? சாதுக்களின் நூல்களை எடுத்துப் படி. அதில் தோய்ந்திருக்கக் கற்றுக் கொள். பாகவதத்தை எடுத்துப் படி. சுகர் வந்து அருகில் அமர்ந்து உன்னிடம் பேசுவார். உன் கஷ்டங்களையெல்லாம் கேட்பார். சமயத்தில் உனக்கு வேண்டிய வழிகளைக் காட்டுவார். ஸ்ரீராமாயணத்தை எடுத்துப் படி. ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் சங்கம் உனக்குக் கிட்டும். ஸ்ரீஹனுமானின் சஹவாஸம் உனக்குக் கிட்டும்."

ஸ்ரீ ப்ரேமிகள் சத்தியத்தைத்தான் பேசியிருக்கிறார்.

அந்தக் காலத்திலாவது நூல்கள் மட்டும்தான். ஆனால் நம் காலத்திலோ சத் சங்கத்திற்கு எவ்வளவு சௌகரியங்கள் !! அடேயப்பா !!

கலிகாலத்திற்கு என்று சர்வ மங்களமான முகம் ஒன்று உண்டு. அதைத் தேடிப்பிடித்துப் பார்க்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் சத் சங்க மஹிமை.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்னும் நிமாய் பண்டிதர். அவரிடம் போனால் மஹாபாவம், பிரேமை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

துளஸிதாஸரிடம் போனால் ஸ்ரீராம நாம மஹிமை என்ன என்று புரியும்.

துக்கா ராம், விட்டோபா, மீராபாய் என்று எவ்வளவு மஹான்கள் !!!

இந்த விதத்தில் சினிமா நல்ல அருந்துணையாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் காலப் படங்கள்.

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் என்னும் நிமாய் பண்டிதரைப் பற்றி அருமையான படங்கள் 'நடேர் நிமாய்' என்பதும், 'நீலாச்சலத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்' என்பதும்.


பிருந்தாவனத்தே கண்டோமே - என்கிறாள் ஆண்டாள்.

ஸ்ரீகிருஷ்ணனுடைய வீக்ஷண்யம் பட்டவாறே வெறும் நெருஞ்சிக்காடாய் இருந்த ப்ருந்தாவனம், பசுகு பசுகு என்று அறுக்கத்தொலையாத பசும்புல் மண்டிய நிலமாக ஆகிப்போயிற்று - என்கிறார்கள் வ்யாக்யானக் காரர்கள்.

ப்ருந்தாவனத்து மண்ணைக் கொண்டு வந்து தக்ஷிணேஸ்வரத் தவத்தோட்டத்தில் போட்டுக் கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

நாம் பார்த்தால் நமக்கு அங்கு ஓடும் கார், பஸ், ஒய்யாரமாகச் சாய்ந்திருக்கும் குரங்கு இவை கண்ணில் படுகின்றன. 

ஒன்றுமில்லை அகக்கண்ணை மூடிக் கொண்டுவிட்டோம். திறக்கவும் மறந்துவிட்டோம்.

உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உள் நின்று அறியும் பிரான் ஊதி மலர்த்தும் பொழுது

'போது மலர்ந்தோங்கி வரட்டும் - கண்ணா
போதுதயமாகி வரட்டும்'

என்று அகக்கண் மலரும். மலர வேண்டும். மலரட்டும். விருந்தாவனத்தைக் காணும் அகக்கண் மலர்த்தும் மந்திரம்தான் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தந்த மஹாமந்திரம்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே!

அந்த மஹாமந்திரத்தை மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டிருந்தால் போதும், அகக்கண் தானாக மலர்ந்து ப்ருந்தாவனத்தையும் அதில் அவனையும், அவனே காண ஏங்கும் பிரேமையின் மஹாராணியையும் நமக்குத் தரிசனம் செய்து வைக்கும் என்கிறார்கள் அவ்வாறு கண்டு காலம் எல்லாம் களித்து வந்திருக்கும் பெரியவர்கள்.

***

நம்மாழ்வார் காதலும் திருக்குருகூர்வரியும்

சமீபத்தில் சில பழம் மாநாட்டு மலர்களைப் பார்த்த பொழுது கண்ணில் பட்டது. ஆழ்வார் திருநகரி பெரியன் வெ நா ஸ்ரீநிவாசன் அவர்கள் பிரசுரித்தது என்று சொல்லிப் பழம் ஏட்டுச் சுவடியில் கண்டபடி ஒரு பிரபந்தம், மாறன் செந்தமிழ் மாநாடு சிறப்பு மலர்,, ஆழ்வார் திருநகரி, 17-2-68 என்னும் மலரில் அச்சிடப்பட்டிருக்கிறது. மிக இனிய தமிழ். விஷயம் நம்மாழ்வார் மீது பாடப்பட்ட காதல் பிரபந்தம். யார் பாடினார்கள் தெரியவில்லை. ஆரம்பமே களை கட்டுகிறது.

சீரார் செழுங்கமலத் தேனே திருமகளே!
வாராழித் தெள்ளமுதின் வந்துதித்த மாமகளே !

மண்மகளாய்ப் பின்னை மடமகளாய் வாழ்சனகன்
பெண்மகளாய் வந்து பிறந்தகுலப் பெய்வளையே!

சிட்டர் மகிழ்ந் தேத்தத் திருப்பல்லாண் டோதியநற்
பட்டர்பிரான் பெற்றெடுத்த பைந்தொடியே ! பாமாலை

பாடிக் கொடுத்தவளே! பாரதியே! பைந்தாமம்
சூடிக் கொடுத்தவளே! தூண்டா மணிவிளக்கே !

தென்னரங் கேசற்கும் திருவேங் கடவற்கும்
மன்னற்கும் சோலை மலைவாழ் அழகற்கும்

ஆலவிடப் பாம்பின் அணைமீது கண் துயிலும்
கோல வடபெருங் கோயி லுடையாற்கும்

மாமால் எனும் பேர் வழுவாமலே யளித்த
பூமாதே! வாழ்வில்லி புத்தூர்க்கு நாயகமே !

மானனையார் தங்கள் வயிற்றில் பிறவாமல்
ஆனதுழாய் நீழல் அவதரித்த ஆரமிழ்தே !

பாமகளே ! ஆழ்வார் பதின்மருக்கும் நன்மகளே !
நாமகளே ! உன்னை நயந்து தொழுதேன் அடியேன். ...

என்று ஆரம்பிக்கிறது இந்தக் காதல் பிரபந்தம். நம்மாழ்வாரைக் குறிப்பிடும் போது,

நான்மறையும் செந்தமிழ் நூல் நாலாகவே விரித்துத்
தான் உலகிலே உரைத்துத் தாபித்த தாளாளன்,
நாவலர்கள் தம்பிரான், நாதமுனி தம்பிரான்,
பூவலயம் போற்று பெரும்பூதூரன் தம்பிரான்,
காமாதி வென்ற கருணேசன், கார்மேனி
மாமால் இதயம் மலக்குதிரு நாவுடையான்,
தக்கிலமே என்றுரைத்த தண் தமிழ்நூற் பாடலிலே
அக்கமலம் பாடவல்லான், ஆழ்வார்கள் தம்பிரான்,
வஞ்சப் பரசமய வாதியரை வென்றபிரான்,
செஞ்சொல் தமிழ்தேர் திருவாய்மொழிப் பெருமாள்
தண்ணார் மகிழ்வாசத் தாமம் அணி மார்பன்,
பண்ணார் தமிழ்ச் சீர்ப் பராங்குச மாமுனிவன்,
செங்கயல்கள் தாவும் திருச்சங்கணித் துறைசேர்
பொங்குதிரை வீசும் பொருநைத் துறையுடையான்,
நாதன், சடகோபன், நாவீறு டையபிரான்,
வேதம் தமிழாய் விரித்த கவிராசன்,
அன்னக் கொடியுடையான், அம்போருகா சனத்தான்,
செந்நெல் கழனித் திருவழுதி நாடுடையான்,
பொங்குமறைத் தமிழ்முனிவன், பொதியமலைக் காவலவன்,
கொங்கலர்பூத் தங்கும் குமரித் துறையுடையான்..

என்று முழுதும் ஊற்றெழுந்த செழுந்தமிழின் உவகைப் பெருக்காய்ப் பாய்கிறது முழு பிரபந்தமும். எந்தக் காலம் தெரியவில்லை. யார் எழுதியது தெரியவில்லை. இது போல் மொத்தம் 155 கண்ணிகள். அததனையும் ஆழ்வார் மேல் அருங்காதலில் ஊறும் நறுந்தேன். 


*
இப்பொழுது ஒரு நூலைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அது என்னவென்றால்... நீங்கள் சிலப்பதிகாரத்துக் கானல் வரிப் பாட்டுகளைப் படித்திருக்கிறீர்கள்தானே! அது போலவே ஆற்றுவரி, சார்த்துவரி, முகமில்வரி, கானல் வரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி என்று அப்ப்டியே இளங்கோ அடிகள் மீண்டும் யாத்தது போன்று ஒருவர் நம்மாழ்வாரின் பேரில் பாடியிருக்கிறார்.

நூல் - திருக்குருகூர்வரி
பாடியவர் - கி பக்ஷிராஜன், வழக்குரைஞர், திருநெல்வேலிக் கூடல்

நாணல் என்று முன்னம் நான் குறிப்பிட்ட பேராசிரியர் திரு ஏ சீநிவாசராகவன், இவர் எல்லாம் நண்பர்கள் என்று நினைக்கிறேன். சென்னையில் வாழும் ஆங்கிலப் பேராசிரியர் திரு அரங்கநாதன் அவர்கள் திரு பக்ஷிராஜனைப் பற்றிக் குறிப்பிடும் போது சொன்ன நினைவு - சம்பிரதாயத்தில் மிக ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்று. தொடக்கமே பாருங்கள் -

கண்ணன் கருணைத் தனைமொண்டு ககன மணிந்த நீறாடி 

வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்தாய் வாழி தண்பொருநை ! 

வண்ணப் பொதிகை மேற்சொரிய நடந்த வெல்லாம் தென்பாண்டி

அண்ணல் நெடியோன் அருள்பெறவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

நிலைநின் றிலகு கோலமென நெளிந்து நெளிந்து பாய்ந்தோடி

மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்தாய் வாழி தண்பொருநை!

மலைநின் றிழிந்து கீழ்போந்து நட்ந்த வெல்லாம் மால்நின்ற

தலமா குருகூர் வலஞ்செயவென் றறிந்தேன் வாழி தண்பொருநை!

நிலைவரி -

கருணை அலையெறியக் கரையிரண்டும் ஓடும்
அருளின் இணைநோக்கோ அம்புயமோ காணீர் !
அம்புயமோ காணீர்! அறிவுடையார் சீறூர்க்கே
இம்பர் உயிர்க்கெல்லாம் இறைவந்திங் கெய்தியதே !

முரிவரி -

பொருநையின் கரையிடமே பொழிலிடை மகிழ்நிழலே
திருவுறை அகலமதே திருமணி யிமையொளியே
பருமணி வடவரையே பணையிணை யிருகரமே
இருவிழி யருளொளியே எனையிடர் செய்தவையே

திணை நிலைவரி - 

தன்னுடைய ஆழியும் தனிப்புள்ளும் சங்கமும்
என்னை யருளாதே விட்டாரோ விட்டகல்க!
மன்னும் அவர்பொழிலில் வாழும் அடியீர்காள்
என்னை மறந்தாரை யான்மறக்க மாட்டேனால்!

காரார் நிறத்தானைக் கைக்கொண்டே வேகப்புள்
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் பிறப்போதம் !
ஊரும் சுவடழித்தே ஊர்வாய் மற்றெம் மோடீங்
கூரா தொழிந்திலையால் வாழி பிறப்போதம் !

மயங்கு திணை நிலைவரி -

மூரி முல்லை நகைகாட்டி முதிர்செம் பவள வாய்திறந்து
பார்!எத் தனை என் வடிவழகென் றெனைப்பே யாக்கும் பரஞ்சோதீ!
மாரிச் சோரி என்கண்ணீர் மாழ்கிக் குழறும் வாய்மொழிகண்
டாரிவ் வண்ணம் செய்தாரென் றயலார் வினவில் என்செய்கோ?

வேறு

மாழ்கும் மாய மயக்கில் வந்தென்
தாழ்வை யழித்துத் தணந்தார் ஒருவர்
தாழ்வை யழித்துத் தணந்தார் அவர்நம்
ஆழும் அன்பை அறியார் அல்லர்

முகமில்வரி --

சேரல் குருகே! சேரலெம் சிற்றூர்!
சேரல் குருகே ! செரலெம் சிற்றூர் !
ஊரும்புள் ளேகொடியாய் உயர்த்தார்க்கென் நோய்கூறாய்,
சேரல் குருகே ! சேரலெம் சிற்றூர்!

எல்லாம் ஒவ்வொரு மாதிரிதான் காட்டுகிறேன் இங்கு. ஏகப்பட்ட பாடல்கள். கடைசியில் கானல்வரியில் போன்றே கட்டுரை என்னும் பகுதி பின்னி எடுத்துவிட்டார் பக்ஷியார் ! வரிப்பாடல்களே பொதுவாக வீணைக்கு அமைத்துப் பாடுவது. இந்தப் பாடல்களை வீணையில் அமைத்துப் பாடினால் அப்படியே வீடு விள்ளும் விரல் சொடுக்கில் சொகுசாகப் போய் அமர்ந்து கொள்ளும் பாக்கள் இவை. இன்று எத்தனை பேர் இதனை அறிவார்கள்? ஏதோ மலரில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு பக்ஷி பறந்துவிட்டதோ தெரியாது. ஆனால் என் கண்ணில் படவேண்டும் என்று உய்த்த தமிழ்பின் சென்ற பெருமாள்தான் எவ்வளவு கள்ளவிழ்ப் புன்னகையன்!

***

பெரிய திருமொழி நூற்றந்தாதி - திரு பக்ஷிராஜன்

உயிர் விளங்கும் பிராணியை நாம் பார்த்தால் அங்கு உடல் இருக்கிறது. அந்த உடலுக்கு உறுப்புகள் இருக்கின்றன. உடல் இயங்குவதை, உடலுக்கு வேண்டும் என்பதைச் சாதித்துத் தருவதற்கு உறுப்புகள் வேலை செய்கின்றன. தனித்தனி உறுப்புகளாக இருந்தால் அதில் பொருள் இல்லை. அனைத்து உறுப்புகளும் ஒருங்கிணைந்து உடலாக நிற்கும் போது அங்கு உயிர் விளக்கத்திற்கான சரீரம் என்பது சாத்தியம் ஆகிறது. இந்த உயிர்ப்பியல் உண்மையை பண்டைய காலத்தில் வடமொழியிலும், தமிழிலும் உடலும் உடல் சார் உறுப்புகளுக்குமான தொடர்பு, அங்க அங்கி பாவம் என்று கவிதைத் திறனாய்வியலில் துணைக் கருத்தாகக் கையாண்டுள்ளார்கள். அதாவது முக்கியமான ஒரு டாக்யுமண்ட் எழுதுகிறீர்கள். எந்தத் துறையிலாவது இருக்கட்டும். அதற்கு மிக அத்யாவசியமான பொருள்களை உள்ளடக்கிய ஒரு சப்ப்ளிமண்டும் கூடவே சேர்த்து வைக்கிறீர்கள். அந்த அனுபந்தத்திற்கான வேலையே மூலப் பனுவலை நன்கு விளக்கும் கருவியாய் இருப்பதுதானே.? கிட்டத்தட்ட இதைப் போன்ற பரஸ்பர பனுவல் சமப்ந்தங்களை ஒரு வகையாக அன்றைய காவிய சாத்திரக் காரர்கள் அங்காங்கி பாவம் என்றார்கள். எதற்கு இந்த பீடிகை என்கிறீர்களா?

நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர். திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர். அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன. இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து. இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள். இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள் திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும். பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன. மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும், ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப் பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது. முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன. அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.

இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள்பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ? அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள். முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும். ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும். அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும். ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும். இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள். இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும். இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது. வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.

பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில் கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி. வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில் அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.

அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள். அவர்தான் திருக்குருகூர்வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர். அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா? அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை. ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள். ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார். மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப்பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.

முன்னுரையில் எழுதுகிறார் -

"திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து, ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப்பொருளையும் பொதுவாக நோக்கி அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்"

கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.

மாலை வழிமறித்தே மந்திரங்கொள் வாட்கலியன்
கோலத் திருமொழியால் கூறுபொருள் - ஞாலத்தார்க்
கந்தாதி யில்சுருக்கி ஆக்க முயல்பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.

மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் - வீறுடைய
நீலன் இருவரது நீள்பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

திருமொழி அந்தாதி பேசுகிறது -

வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென - நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசைமொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.

அடுத்த திருமொழி ஆரம்பம்

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட 

வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே

திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது -

வாலி மதனழித்த வல்வில்லி நம்வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் - கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.

அடுத்த திருமொழி தொடக்கம்

முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

திருமொழி நூற்றந்தாதி -

முற்ற மூத்து மொய்குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை - நற்றவன் தன்
தாளையவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீளவுரை தந்தே நமக்கு

இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.

ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் - ஊனில்
நலிநெஞ்சே நாளும் தொழுதெழுகென் றேசொல்
கலியனுரை வேதக் கலை.

கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்தான் - நிலவிடுசீர்ச்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்
வாளுழவன் சொல்வினைக்கு வாள்.

வாணிலவு மாதர்நகை தப்பி நிமிவனத்தே
சேணுயர்வான் சேவடியே சேர்தியெனப் - பேணுநெஞ்சை
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.

அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே - பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரைதேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு

கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே
இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து - மங்கையர்கோன்
செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்
தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.

தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்
வேயுயரும் வேங்கடமே மேவினேன் - மாயா
புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்
கவிநமக்கு வாழ்வருளும் கண்

கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர்களைந்து நல்கெனவே - பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட்கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.

இப்படி அமுதக் கலை நூறு என்றால் இவரை என் சொல்ல! இது நூலாக வந்துள்ளதா தெரியவில்லை. இவருடைய அருந்தமிழ் ஆக்கங்கள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டால் தமிழுக்கு அது பெரிய வரவு அன்றோ! நூல் முடிந்தாலும் நுவலும் தமிழ் ஆல்விட்டுத் தழைக்கும் தகவுடையார் திரு பக்ஷிராஜன் என்பதில் என்ன சந்தேகம்! 

*** 

வேதக் கதைகளால் ஒரு நீதி மஞ்சரி! Neethi Manjari by Dya Dviveda

அதாவது அறநெறிச்சாரம், நீதிநெறி விளக்கம் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். மாரல் ஸ்டோரீஸ் என்று ஆங்கிலத்தில் உண்டு. புராணக் கதைகள், இதிகாசக் கதைகள் ஆகியவற்றைக் கொண்டு உதாரணம் காட்டி நீதிச் செய்யுட்களை இயற்றிய நூல்கள் வடமொழியில் பொதுவாக சாருசர்யை, உபதேசசதகம் ஆகியவற்றைச் சொல்வார்கள்.

ஆனால் முழுக்க வேதங்களில், பிராம்மணங்களில், ஆரண்யகங்களில், பிருஹத் தேவதா என்னும் நூலில் வரக் கூடிய வேதக் கதைகளைக் கொண்டு மட்டும் ஒரு 166 நீதிக் கருத்துகளை வடமொழிச் செய்யுட்களாக ஆக்கி, அந்த நீதிகளுக்கு உதாரணக் கதைகளாய் வேதக் கதைகளைக் கொடுத்து இன்று கூட யாரும் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் த்யா த்விவேதர் என்னும் வேத அறிஞர் இவ்வண்ணம் அழகுறச் செய்த நூலுக்குப் பெயர் நீதிமஞ்சரி, அதாவது த்யா த்விவேதரின் நீதி மஞ்சரி.

சரியாக அவர் அந்த நூலை எழுதி முடித்த தேதி, 1494 கி பிக்குச் சரியாக 1550 சம்வத், மாக மாதம், சுக்ல பக்ஷம், பிரதமை திதி அன்று. என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? தேதிவாரியாகச் சொல்கிறானே என்றா? நல்ல வேளையாக அபூர்வமாக இந்த நூலின் ஓலைச் சுவடியில் அவ்வளவு விரிவாக முடித்த தேதியைக் குறிப்பிட்டுள்ளனர்.

1184 கி பி சத்குருசிஷ்யர் எழுதிய வேதார்த்ததீபிகை, 14ஆம் நூற் சாயனர் எழுதிய வேத பாஷ்யம் ஆகியவற்றைப் பயன்கொண்டு த்யா த்விவேதர் தமது நீதிமஞ்சரியைச் செய்துள்ளார். ஆனால் அவர்களின் நூல்களுக்கு அப்படியே தம்மைக் காவு கொடுத்துவிடாமல், வேண்டிய இடத்தில் தமது பொருத்தமான விளக்கங்களையும், யாஸ்கர் நிருக்தம், நிகண்டு, சௌனகரின் பிருஹத் தேவதா ஆகிய நூல்களையும் சார்ந்து வேண்டுவன தேர்ந்தே எழுதியுள்ளார் என்றே பதிப்பித்தவரான திரு சீதாராம் ஜயராம் ஜோஷி, வாரணாசிப் பல்கலைக் கழகம், கூறுகிறார்.

நீதிகளையும், அதற்கான உதாரணக் கதைகளையும் எழுதும் போது த்யா த்விவேதர் நான்கு உறுதிப் பொருள்களான தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் அறம், பொருள், இன்பம் வீடு என்னும் விழுமிய வகையை மனத்தில் கொண்டுள்ளார் என்று பட்டியலிட்டுக் காட்டுகிறார் பதிப்பாசிரியர். க்ஷேமேந்திரரின் சாருசர்யை என்னும் நூலுக்கும், நீதிமஞ்சரிக்கும் சில செய்யுட்களின் தொடக்கங்களில் காணப்படும் ஒற்றுமையையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

வேத ரிக்குகளுக்கான பாஷ்யங்களைக் கையாளுமிடத்து, என்னதான் சாயனரைச் சார்ந்தே எழுதினாலும், நீதி போதனைக்குத் தொடர்பான அம்சத்தை மட்டுமே த்யா த்விவேதர் பயன்கொண்டுள்ளார் என்பதைச் சுட்டுகிறார். ஆனால் இந்தத் தேர்வு புரியாத சில அறிஞர்கள், த்யா த்விவேதரை சாயனரைப் பொறுப்பற்ற விதத்தில் பயன் கொண்டாராகப் பேசுவது கவனக் குறைவினால்தான் என்பது புலனாகிறது.

நீதி மஞ்சரியால் வேதக் கல்விக்கு என்ன பயன்? இந்தக் கேள்வியை அனைத்து வேத இயல் ஆய்வுகள், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி, பல மொழிகளில் மொழிபெயர்ப்புகளும் அலசல்களும் ஆகியவற்றைப் பற்றியும் கேட்க முடியும் என்று வாதாடும் பதிப்பாசிரியர் நீதி மஞ்சரியை வேத ரிக்குகளுக்கான ஒரு வித விளக்கக் குறிப்புகள் என்று கருதுகிறார்.

ஆம். ஆழ்ந்து வேத ரிக்குகளை அலசாமல் ஒருவர் அதனால் அறியக் கூடிய நீதிகளுக்கான பயன்பாட்டைக் காட்ட முடியுமா? அவ்வண்ணம் காட்டும் போதே, அந்த வேதப் பாசுரங்கள் பொருள் விரிக்கவே படுகின்றன அன்றோ! ஆனால் இது போல் ஒருவர் 15 ஆம் நூற் மத்தியில் யோசித்துச் செய்யவும் செய்தார் என்பது விளக்கம் மட்டும் அன்று, அவர் கையாண்ட வேதப் பகுதிகளுக்கான சான்றுகளாகவும் கூட த்யா த்விவேதரின் எழுத்துகள் அமைந்து விடுகின்றன. ஆச்சரியம்தான்!

எழுதுபவர் சலித்துக் கொள்கிறார், ஆனால் எழுத்து தனக்கென்று ஓர் ஆயுளும், கதியும் தன்னிச்சையாகக் கொண்டது என்ற நம்பிக்கை வருவது இல்லை லேசில். ஆனாலும் வரலாறு நம்பிக்கைக்குத்தான் சான்று பகர்கிறது.

த்யா த்விவேதரின் அமைப்பு மிகத் தெளிவானது - நீதிச் செய்யுட்கள், அதற்கான விளக்கம், வேத ரிக்குகள், அவற்றுக்கான பாஷ்யம். காவியங்களிலிருந்து ஒப்பீட்டளவில் குறைந்த அளவுதான் விஷயங்களைக் கையாள்கிறார் என்பதால் அவர் முக்கியமாக வேதக் கல்வியில்தான் கவனம் செலுத்தியவர் என்பதும் புலனாகிறது. வடக்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அநந்தபுர் என்னும் இடத்தைச் சேர்ந்தவர், லக்ஷ்மி, லக்ஷ்மிதரர் ஆகியோருக்குப் பிறந்தவர், வேதச் சாகையில் சாங்க்யாயன சாகையைச் சேர்ந்தவர்.

வேத இண்டாலஜி துறைகளிலேயே மிக அபூர்வமான நூல் என்று கருதப்படும் நூல்களில் இதுவும் ஒன்று. 1933ல் அச்சு கண்டது. 350 சொச்சம் பக்கங்கள். மறுஅச்சு - சௌகம்பா சான்ஸ்க்ரிட் சீரீஸ் ஆபீஸ் 1998.

*
உதாரணச் செய்யுள் --
அதாவது

நல்லோர் பெருநிலை எய்தினும் நயக்கும் உதவி மறுப்பதில்லை.
ரிஷிகளின் கன்றை உயிர்ப்பித்தார் ரிபுக்கள் என்போர்
தாம் தேவராய் ஆகிவிட்ட போதிலும் கூட

என்னும் பொருள்பட ஒரு சுலோகம் -

ஸந்த: ப்ரபுத்வம் ஆபந்நா நோபகாரம் த்யஜந்தி ஹி |
ரிபவ: ப்ராப்ய தேவத்வம் ரிஷேர் வதஸம் அஜீவயந் || -

இதில் ரிபுக்கள் என்பார் யார்? அவர்கள் எப்படி தேவர்களாக ஆனார்கள்? முன்னால் தேவர்களாக இல்லாதிருந்தார்களா? அப்படி ஆன போதிலும் கூட அவர்கள் ரிஷிகளை மறக்காமல் அவர்கல் கன்றை உயிர்ப்பித்த வரலாறு என்ன? இதையெல்லாம் விரிவாகச் சொல்லி எனவே நல்லோர் பெருநிலை எய்தினும் நயக்கும் உதவி மறுப்பதில்லை என்னும் நீதியை உணர்த்துவதாக வரும்.

*

’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா?

பாப்பா பாட்டு என்று ஒரு பாட்டு பாரதி பாடியிருப்பது அனைவரும் அறிந்தது. அதில்

சாதிகள் இல்லையடி பாப்பா  - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய வுடையவர்கள் மேலோர்.

என்ற பாட்டில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியாரின் வரியாகப் படித்துப் பழக்கம்.

ஆனால் திரு சீனி விசுவநாதன் அவர்களது பதிப்பில்

சாதி பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாவம்

என்று வருகிறது. கீழ்க்குறிப்பில் சாதிகளில்லையடி பாப்பா - என்பது 1917ல் வந்த நெல்லையப்பர் பதிப்பு என்கிறார். அப்படியென்றாலும் பாரதியார் இருந்த பொழுதே அவர் சம்மதத்துடன் வந்த பதிப்புதானே அது? கையெழுத்துப் பிரதியில் இருந்தாலும் பாரதியார் பதிப்பிற்குக் கொண்ட பாடத்தைத்தானே பாரதி பாடலாகக் கொள்ள வேண்டும்? இல்லை அவருடைய கையெழுத்துப் பிரதியில் கண்டதுதான் மிக்க சான்று என்றால், அப்படியென்றால் பாரதியார் சாதிகள் உண்டு, ஆனால் அவற்றில் பெருமை இல்லை. உயர்வு தாழ்வு சொல்லக் கூடாது. அவ்வளவுதான் எனும் கொள்கை உடையவரா? சாதிகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தர்ம சாத்திரங்கள் சாதி பற்றிக் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பாரதியின் எண்ணமா? இல்லையெனில் சாதிகள் இல்லையடி பாப்பா என்பதுதான் பாரதியின் முடிந்த எண்ணமா?

பாரதி பாடல்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பிலும்

சாதி பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி யுயர்ச்சிசெய்தல் பாவம்

என்று போட்டிருக்கிறது. அதன் கீழ்க் குறிப்பில் 1917 பரலி சு நெல்லையப்பர் பதிப்பைக் குறிப்பிட்டு, மேற்படிப் பதிப்பில் என்று சுட்டிக்காட்டி

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய வுடையவர்கள் மேலோர்.

என்று பாடலின் வடிவமும் தரப்பட்டு, மேலும்,

" பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர் நெல்லையப்பர்; கவிஞர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்த பதிப்பாதலின் பாரதியார் திருத்திக்கொடுத்த வண்ணமே வெளிவந்தது என்றே கொள்ளுதல் வேண்டும்."

என்றும் மிகத் தெளிவாக அடிக்குறிப்பும் வரையப் பட்டுள்ளது. எனக்கு எழும் சந்தேகம் என்னவெனில் இவ்வளவு தெளிவாக அடிக்குறிப்பில் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பதே பாரதியார் திருத்திக்கொடுத்த வடிவம் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அந்தப் பாடத்தை முக்கியமான பாடல் அமைப்பிற்குள் காட்டாமல் ஏனோ கீழ்க் குறிப்புக்குத் தள்ளியிருக்கின்றனர்? சாதிகளைப் பாரதியார் உடன்பட்டது போன்ற தொனியைத் தரும் வரியான 'சாதி பெருமையில்லை பாப்பா' என்ற வரியை ஏனோ பிரதான பாடல் அமைப்பிற்குள் பெய்துள்ளனர்? பாரதியார் காலத்திற்குப் பின்னர் வந்த பாடல் வடிவம் என்றால் அவ்வாறு கீழ்க் குறிப்பில் காட்டி, பாரதியின் கையெழுத்துப் பிரதியில் என்ன வடிவம் உள்ளதோ அதைப் பிரதானமாகக் காட்டுதல் முறை. ஆனால் இங்கு திருத்தப்பட்ட வரி வடிவம் பாரதி காலத்திலேயே பாரதியாராலேயே திருத்தப்பட்டது என்று அடிக்குறிப்பும் தெரிவித்து விட்டு அவரால் விடப்பட்ட ஒரு வடிவத்தைப் பேணி, பிரதான அமைப்பில் தந்திருப்பது ஏன் என்றே புரியவில்லை.

தஞ்சை திரு தி ந ராமசந்திரன் அவர்கள் தாம் எழுதிய வழிவழி பாரதி என்னும் பாரதியார் பற்றிய நூலில் பாரதியார் எழுதியது சாதி பெருமையில்லை பாப்பா என்பதுதான். சாதியை அழிக்க முடியாது. சாதி வேற்றுமைகளைக் களைய முடியும் சாதியைக் கடக்கத்தான் முடியும் என்னும் பொருள்பட எழுதுகிறார்.

பாரதியாரின் பாடல்களைக் கால வரிசையில் தந்த திரு சீனி விசுவநாதனோ பாடலின் வடிவத்தில் 'சாதி பெருமையில்லை பாப்பா' என்னும் பாடத்தையே முக்கிய பாடமாகக் காட்டிவிட்டுக் கீழ்க் குறிப்பில் 1917ல் வந்த பதிப்பில் பாடமான 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்னும் பாடத்தைக் காட்டுகிறார். அப்படியென்றால் பதிப்பாசிரியராகிய திரு சீனி விசுவநாதன் பாரதியாரின் அறுதியான பாடல் வரி 'சாதி பெருமை இல்லை பாப்பா' என்றுதான் நினைக்கிறார் என்று பொருளாகிறது. அப்படி இல்லையேல் அவர் இந்த வரியைக் கீழ்க் குறிப்பில் காட்டி 1917ஆம் ஆண்டு பதிப்பின் படி 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்னும் வரியை பிரதானமாகக் காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை.

ஆனால் 'பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்' என்னும் நூலில் எழுதும் போது இதே பாப்பா பாட்டைப் பற்றியே ஓர் அத்யாயம் ஒதுக்கி இதன் சிக்கல்களை என்றைக்குமாகத் தீர்க்க வேண்டும் என்று எழுதி வரும் போது புதுமைப் பித்தனின் விமரிசனம் ஒன்றிற்குப் பதில் எழுதுகிறார்.

புதுமைப் பித்தன் 1925 ஆம் ஆண்டு வந்த பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பாப்பா பாட்டில் பதிப்பித்தவர்கள் பலவித மாறுதல்களுக்கு உட்படுத்திவிட்டார்கள் என்றும், பாட்டுகளைச் சரியான பாடங்களுடன் ஏன் பிரசுரிக்கலாகாது என்றும் கேட்டிருந்தாராம். அதற்குப் பதில் எழுதும் போது திரு சீனி விசுவநாதன் கூறுவது:

"புதுமைப் பித்தனின் நியாயமான (?) கேள்வியின் தன்மையைச் சற்றே உரசிப் பார்க்க வேண்டும். ஞான பாநு பத்திரிக்கையிலே பாட்டு பிரசுரமான போது, பதினான்கு செய்யுள்களே இடம் பெற்றிருந்தன. 1917 ஆம் ஆண்டிலே பாட்டைச் சிறு பிரசுரமாக நெல்லையப்பர் வெளியிட்ட போது இரு செய்யுள்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டன. பாட பேதங்களும் இடம் பெற்றன. 1917 ஆம் ஆண்டிஎலே செய்யப்பட்ட பாட பேத மாறுதல்களே 1919, 1922, 1925 ஆகிய ஆண்டுகளிலே மறுபிரசுரமான "பாப்பா பாட்"டில் தொடர்ந்து இடம் பெற்றன. பாரதி காலத்திலேயே நிகழ்ந்துவிட்ட மாறுதல்களுக்கு அடிப்படை உண்மைகளை ஆராயப் புதுமைப் பித்தன் தவறி விட்டார்.; 'இலக்கியத்தைப் பிரசுரிக்க முயலும் முறை வேறு' என்று சொன்னவர், அந்த இலக்கியம் பிரசுரம் செய்யப்பட்ட காலப் பகுதிகளையும் ஆராய முற்பட்டிருக்க வேண்டும்."

இவ்வளவும் புதுமைப் பித்தனுக்குப் பதிலாக எழுதுகின்ற திரு சீனி விசுவநாதன் தாம் பிரசுரித்திருக்கும் கால வரிசையிலான பாரதி பாடல்களில், பாப்பா பாட்டில், 1917 ஆம் ஆண்டில், அதாவது பாரதியார் வாழ்ந்திருந்த காலத்திலேயே வந்த பாடல் வரியின் வடிவமான 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பதை பாப்பா பாட்டில் முக்கியமான பாடமாகக் காட்டாமல், 'சாதி பெருமை இல்லை பாப்பா' என்னும் வரியைக் காட்டியது ஏன் என்று புரியவில்லை.

சரி. பாரதியாரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று அவரது மற்ற பாடல் வரிகளை நாம் கவனித்தால் மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

'முரசு' என்ற பாடலில்,

"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம் - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்"

என்று மிகத் தெளிவாகப் பாரதியார் பாடுகிறார்.

அது போல் 'பாரத தேசம்' என்னும் பாடலிலும் இன்னும் தெளிவாகக் காட்டிவிடுகிறார்:

"சாதி இரண்டொழிய வேறில்லையென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதிநெறியில் நின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்."

ஔவை சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியது வர்ண தர்மத்தை அல்லவே!

இவ்வளவு தெளிவாக பாரதியின் இதயத்தைப் பாரதியே கல்வெட்டாகப் பல இடங்களிலும் தெளிவுறப் பதிந்து வைத்திருந்த போதிலும், ஏன் அவன் கைவிடுத்த பாடம் தலை தூக்குகிறது?

***