Monday, November 11, 2019

பொங்கும் நினைவுகளில் பொங்கல்

வலமாக முதல் படம் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ அண்ணங்கராசாரியர். நடுவில் படம் ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாசாரியர். வலப்பக்கம் மூன்றாவது படம் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனர் ஸ்ரீ  உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். இப்படி ஒரு படம் முகநூலில் பார்த்தேன்.

இதில் ஸ்ரீஅண்ணங்கராசாரியாரின் உரைகளை ஸ்ரீரங்கத்தில் சிறுவயதில் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். நேரில் சந்தித்து உரையாடியதில்லை. ஆனால் அவருடைய மகத்தான பணிகளின் பலன்களை வாழ்வில் அனுபவிக்காத நாள் இல்லை. அவர் நடத்திவந்த இதழான ஸ்ரீராமாநுஜன் என்பது இதழ் வடிவில் இருக்கும் ஒரு பல்கலைக் கழகம் எனலாம். வடமொழி காவியங்கள், சாத்திரங்கள், தமிழ் மொழியின் நயங்கள், ஆழ்வார்களின் பாசுர நுட்பங்கள், வேதங்களில், வேத பாடங்களில், வேதாந்த வியாக்கியானங்களில் என்று எங்கெங்கோ மறைந்திருக்கும் மிக நுட்பமான குறிப்புகளை கடல் பொங்கினால் போல் அவருடைய நூல்களில், அந்தப் பழைய இதழ்களில் பரந்திருக்கக் காணலாம். வடமொழி, தமிழ்மொழி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் அபரிமிதமான பாண்டித்யம் மிக்கவர். அனைத்து மொழிகளிலும் அவர் இயற்றியிருக்கும் நூல்களே, அதாவது பிரதியே கிடைக்காமல் போனவை போக, கணக்குக் கிடைத்தவை 500க்கும் மேல் என்று ஒரு கேடலாக் என்னிடம்  இருக்கிறது. வடமொழி, வேதம், வேதாந்தம் என்று பெரும் பாண்டித்யம் மிக்கவராக இருந்தும் ஆழ்வார்களின் ஈரத்தமிழை அநவரதம் முழங்குவதிலேயே, கோயில்களில் விடாமல் கூடித் தமிழ் வேதங்களை முழங்குவதையே தனது ஜீவாதுவாக (உயிர்ப்பற்று) கொண்டிருந்தார் தம் கடைசி வாழ்நாள் வரையில். அவருடைய கடைசி நாளைய பிரார்த்தனை, அவரே எழுதியது, 'அடுத்த பிறவி வேண்டும். அதுவும் அரையர் சுவாமியாகப் பிறக்க வேண்டும். கோயில்களில் ஆண்டவனின் முன்பு ஆழ்வார்களின் அமுதத் தீந்தமிழை கானம் செய்து ஆடிப்பாடித் தொண்டு செய்து, அப்படி ஒரு பிறவி தமக்குத் தந்துவிட்டுத்தான் ஆண்டவன் தமக்கு திருநாடு எனும் பேற்றை அறுதியாகத் தர வேண்டும்.' என்னும் உளப்பூர்வமான வேண்டுதலைக் கொண்டிருந்தார் என்றால் அவருடைய பெருமையை என்னென்று சொல்வது!

அடுத்து நடுவில் படத்தில் இருப்பவரோ வேளுக்குடி வரதாசாரியர் என்னும் பெருந்தகையான பேரறிஞர். வாக்கில் அமுதம் பொழியும் கடல் போன்ற அழகிய பேச்சு எழில் கொண்டவர் என்று அவருக்கு ஒரு பட்டம் உண்டு - வாக் அம்ருத வர்ஷி - என்று. இது எழுத்துக்கு எழுத்து உண்மை என்பதைச் சிறுவயது முதற்கொண்டே உணர்ந்து அநுபவித்தவன் நான். ஸ்ரீரங்கத்தில் மேலச்சித்திரை வீதி பூர்வ சிகை ஸ்ரீவைஷ்ணவ சபையின் புண்ணியம், இவர்களின் சொற்பொழிவுகளை நட்ட நடு வீதியில் அமர்ந்து கேட்கும் படி அவ்வளவு சுலபமான பாக்கியம்! உண்மையான பாண்டித்யம் என்றால் என்ன, அதுவும் பண்டைய கல்விமுறையின்படிக் கசடறக் கற்ற குரவோர் என்பவரின் படிப்பு எவ்வண்ணம் இருக்கும் என்று நேரடியாக ஒருவரைக் காண வேண்டும் என்றால் அது இந்த சுவாமிதான். இவரோடு எனக்கு நன்கு பரிச்சயமும் உண்டு. வாக்குவாதம், ஆர்க்யுமண்ட் எல்லாமும் உண்டு. அதையெல்லாம் சகித்துக்கொண்டு, அப்படியிருந்தும் என்னிடம் அன்பு காட்டினார் என்றால் இவருடைய உளப்பாங்கை என்ன என்று சொல்ல! தம்புச் செட்டித் தெருவில் இருந்தார் என்று நினைவு. திடீரென்று ஒரு நாள் ஆபீஸுக்கு போன் வந்தது. யார் என்றால் சுவாமி. எனக்கு அதிர்ச்சி. 'என்ன பேச்சு காணும்? ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் பற்றி இங்கு சாரிடீஸ் ஒன்றில் உபந்யாஸம். அதான் உமக்குச் சொல்லலாம் என்று பண்ணேன்'. ஆஹா வந்து விடுகிறேன் என்று சீக்கிரம் கிளம்பிப் போய் விட்டேன். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைக் குறித்து ஒரு புதிய உலகமே திறந்ததுபோல் இருந்தது. உபந்யாஸம் முடிந்ததும் நேரடியாக வந்தார். 'எப்படி இருந்தது?' நான் அவர் பேசும் பொழுது கூறிய சிறப்புக் குறிப்புகளைச் சிலவற்றைக் குறிப்பிட்டு, 'இதையெல்லாம் கவனித்தேன்' என்று சொன்னதும் பெரும் உவகைச் சிரிப்பு ஒன்று. ஆழ்பொருள் சொல்வோருக்கு அவற்றைக் கவனிக்க ஆள்  இருக்கிறது என்னும் போதுதான் என்ன உவகை! அதைப் பார்க்கக் கொடுத்து வைத்தேன். அவருடைய கடைசி காலத்திற்கு முன் ஓரிரு தினங்கள் முன்புதான் அவருடைய வீட்டில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய நூலகத்தை நன்கு செப்பனாக முறைப் படுத்த வேண்டும் என்று. 'ஸ்ரீரங்கத்திற்குப் போகிறேன். போய்விட்டு வந்து விடுகிறேன். ஆரம்பிச்சுடுவோம்' என்றார். அவ்வளவுதான் அந்த யுகம் முடிந்தது.

சிறு வயதிலிருந்து எனக்கு ஒரு கெட்ட பழக்கம். இது போல் வயதானவர்களுடன் பெரியோர்களுடன் பழகுவது. அதனால் அவர்கள் போகும் போதெல்லாம் என் வாழ்க்கை வெறுமை அடித்துப் போய் என்னுடைய ஏதோ ஒன்றை இழந்த துக்கம் கவியும் நிலை மீண்டும் மீண்டும் தொடர்ந்த வண்ணம்! தஞ்சை திரு டி என் ஆர் சொன்னார் ஒரு முறை.- அவருக்கு கவிஞர் பெருமான் திருலோக சீதாராம் கூறினாராம். - 'நீங்க வயதானவர்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டால் ஒரு தொல்லை. இழப்புகளின் துயரத்தை மீண்டும் மீண்டும் அடைய வேண்டியிருக்கும். அதற்கு நெஞ்சத்தை என்றும் தயார் பண்ணிக் கொள்ளுங்கள்' என்று. என்ன தயார் பண்ணிக் கொண்டால் என்ன அந்தத் துயரம் அடிக்கும் போது வேதனைதான். பாருங்கள்! இவர்களுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? என் வாழ்க்கையும், சிந்தனைகளும், பாதைகளும் எங்கே! இவர்களின் சம்ப்ரதாய ரீதியான வித்வத்தும், வாழ்நெறியும், அவர்களின் உலகமும் எங்கே! ஆனால் இன்று இவர்களின் படங்களை ஃபெஸ் புக்கில் பார்த்ததும் என்னவோ தெரியவில்லை. நெஞ்சைப் பிசைந்துகொண்டு வருகிறது. இவரைப் போலவே இவர் கூடவே கல்வி கற்று அபரிமிதமான வித்வானாக விளங்கியவர் சதாபிஷேகம் சுவாமி என்று சொல்லப்பட்டவர். ஆழ்வார் திருநகரி கோயிலில் நம்மாழ்வாரை உள்ளபடியான விக்கிரக அழகை வெளிக்கொணர்ந்தவர். சாத்திரங்களில் மிக நெருடலான நுணுக்கங்களுக்கும் மிக அழகாகவும் எளிமையாகவும் விளக்கம் சொல்லிப் புரிய வைக்கும் பொறுமையும், கனிவும் மிக்கவர் என்பது எனது அநுபவம். அவர் கடைசி காலங்களில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த பொழுது நான் அலுவலகத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விட்டேன் அவரைப் பார்க்க. அதுவரை முடியாமல் பேசவும் இயலாமல் இருந்தவர் என்னைப் பார்த்ததும், 'எங்கடா வந்த?' என்றார். நீங்கள் மருத்துமனையில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதான் லீவு சொல்லிவிட்டு வந்து விட்டேன்' என்றேன். மனிதர் அழாக்குறை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தொடர்ந்து சாத்திர நுணுக்கங்களை எனக்கு விளக்கிய வண்ணம் எழுந்து உட்கார்ந்து விட்டார். அவருடைய மனைவிக்கோ ஒரே ஆச்சரியம்! என்னது இது என்னது இது என்றவண்ணம் இருந்தார். கமல்ஹாஸனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தின் காட்சி மாதிரிதான் இருந்தது. இந்த சுவாமியோடு, அதாவது சதாபிஷேகம் சுவாமியோடு ஒரு சமயம் கிட்டத்தட்ட ஒரு வாரம் மாலை 6 மணி தொடங்கி இரவு 12 மணிவரையிலும் கூட சாத்திர விஷயங்களில் வாதம், கேள்வி, ஐயம் தெளிதல்.

மூன்றாவது படத்தில் காண்பவர் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் என்னும் இதழை அவருடைய தகப்பனார் ஸ்ரீ உ வே ஸ்ரீநிவாஸய்யங்கார் ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தவர். இன்று ஸ்ரீவைஷ்ணவத்தின் சான்று நூல்கள், உரை நூல்கள் மிகக் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைத்தவண்ணம் இருப்பதற்கான காரணமே இந்தப் பெருந்தகையாளர்தான். ஆம். தமது தந்தை பெரும் மூலதனத்தை உண்டாக்கி ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திற்காக என்று ட்ரஸ்ட் உண்டாக்கி, அதன் மூலமாக ஸ்ரீவைஷ்ணவ நூல்களை வெளியிட்டுப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரு முயற்சி இவரால்தான் நன்கு வளர்ந்து செழிக்கும் விதத்தில் பாதுகாக்கப்பட்டு நடைபெற்றது என்பது பலரும் அறிந்ததே. புத்தகங்களை மிகவும் திறமையாக திறனாய்வுப் பதிப்பாக வெளிக்கொணருவதில் இவருக்கு இணை வேறு எவரும் இலர். ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர் பதிப்பு என்பது ஹால்மார்க். அதை வைத்துக்கொண்டு இனி மேலே ஆய்வுகள் செய்யலாம் என்று அறிஞர் குழாம்கொண்டாடும் தன்மைத்து அவருடைய பதிப்புத் திறமை. அவரோடு மிக நெருங்கிய பழக்கம் எனக்கு. கல்லூரி படிக்கும் காலம் தொட்டே, ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த இயக்க ஈடுபாடு காரணமாக அவரோடு எனக்கு வாக்குவாதங்கள், (உண்மையாகச் சொல்லப் போனால் அவருடைய அறிவுரைகள்) நிகழ்ந்த காலம் தொடங்கியே நல்ல பழக்கம் உண்டு. அந்த வாக்குவாதங்களைத் தனியே எழுதியிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர்தான் திருநாடு அடைந்தார். அவரோடு பழகிய நாட்கள், பேசிய பேச்சுகள், கருத்தாடல்கள், இவற்றைத்தவிர அவருடைய விளக்க நூல்களும் பதிப்பு நூல்களுமே எனக்கு மட்டுமின்றி பலருக்கும் புகலாக இருக்கும் நிலை எல்லாம் சேர்ந்து அவர் போன போது என்னைச் செயலிழக்கச் செய்து விட்டது. மீண்டும் அதே தொடரும் துயரம்.

ஒரு காலத்தில் பொங்கல் என்றால், போகிப் பண்டிகை என்றால் என்னைப் பொறுத்தவரையில் இது போன்ற பெரியோர்களைச் சென்று வணங்கி, பேசிக் கொண்டிருப்பதும், வாழ்த்து பெற்று வருவதுமாக இருந்தது. இன்று யாரிடம் போவது யாரைப் பார்ப்பது...! வெறுமனே பொங்கல் மட்டும் வந்து பார்த்து விட்டுப் போகிறது. தேஹி நோ திவசம் கதா: - பார்த்துக் கொண்டிருக்கும் போதே போயின நாட்கள் - என்று உத்தரராம சரித சம்புவில் வரும் என்று ஸ்ரீஅண்ணங்கராசாரியார் எழுத்துகளில் படித்த நினைவு.

'எங்கடா வந்த..' என்று நினைவுகள் கேட்ட வண்ணம் இருக்கின்றன. எவ்வளவோ நூல்களை படியெடுப்பார் நாளொரு பொழுதும் படியெடுக்க நிறுத்திச் சொல்லியவண்ணம் அவர் சாய்ந்து இருந்த மரக்கட்டில் இன்று போனாலும் அந்த உறையூரில் இருக்குமோ. ஆனால் அதுவும் நினைவுகளைச் சுமந்த வெறும் கட்டிலாகத்தான் இருக்கப் போகிறது. ஒரு வேளை நினைவுகளின் பொங்குவதும் ஒரு விதப் பொங்கல்தானே! 'எங்கடா வந்த..' என்று காலம் கேட்கும் வரையில் இப்படித்தான் இருக்குமோ...!

***

கடவுள் என்னும் வலை

கடவுளை ஒவ்வொருவர் ஒவ்வொன்றாக உருவகம் செய்துப் பேசியிருக்கின்றனர். ஆனால் கடவுளை யாரேனும் 'வலை' என்று உருவகம் செய்து பேசியிருக்கிறார்களா தெரியவில்லை. பேசியிருக்கக் கூடும்.

ஆனால் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பேசியிருக்கின்றார்கள்.

அது போல் ஆழ்வார்கள் பேசியிருக்கின்றார்கள்.

ஸுதந்து: , தந்துவர்த்தன: என்று இரண்டு திருநாமங்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உண்டு எனச் சொல்கிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். ஸுதந்து: அழகிய வலை, தந்து வர்த்தன: - வலையை வளரச் செய்வோன், பெருகச் செய்வோன். அல்லது பெருகிய, வளர்ந்த, நீளும் வலையே அவன் என்கிறது.

யோசித்துப் பாருங்கள் - GOD IS A WEB and that too A WEB THAT IS GOING STRONGER AND STRONGER.

ஆழ்வாருடைய பாடல் -

தன்னுள்ளே திரைத்தெழும்
தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து
அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து
நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற
நீர்மை நின்கண் நின்றதே.

(திருச்சந்தவிருத்தம்)

பீட்டர் ஸ்டெர்ரி என்பார் கூறுவார் - படைப்பு என்பது கடவுளின் முகம் போர்த்திய சலாகை. சலாகையில் அந்த முகத்தின் சாயல் படிந்துள்ளது.

ஷபிஸ்தாரி கூறுவது - புள்ளியில் இருந்து கோடு; கோட்டில் இருந்து வட்டம்; வட்டம் முடிந்தால் கடையும் முதலும் இணையும்.

ஷ்வாங்ஸீ கூறுகிறார் தாவோ பற்றி -

கடலினும் அளத்தற்கரியது
கணம் தொறும் முடிவில் தொடக்கம்
அனைத்துக்கும் அறிவீந்தும் அந்தம் அறியா நெறி
முழுமையானவரின் தாவோ
இயல்பு மங்காது திகழும் தன் இயக்கத்தில்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*



திருவரங்கர் திருத்தாளச்சதி

திரு சந்தக்கவி ராமசாமி (ஸ்ரீரங்கம்) அவர்கள் ஒரு கூட்டத்தில் சொன்னார். -- "திருத்தாளச்சதி என்ற சந்தத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே பதிகம் பாடியிருப்பது திருஞானசம்பந்தர் மட்டுமே. அந்தச் சந்தம் அமைந்திருக்கும் விதம் இந்தப் பாடலில் தெரியும்.

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
 தாமேபேணா தேநாளுஞ் சமணொடு உழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
 கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
 போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
 காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

வேறு யாரும் அந்தச் சந்தத்தில் முயற்சி செய்யவில்லை".-- என்றார்.

கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்து அதே சந்தத்தில் ஒரு பதிகம் பாடி அவருக்குப் போனிலேயே பாடிக் காண்பித்தேன். உடனே மெயிலில் அனுப்பும்படிக் கூறியவர் பல கூட்டங்களிலும் தமிழில் சந்தங்கள் பற்றி உரையாற்றும் போதெல்லாம் திருஞானசம்பந்தர் பதிகத்தை ஒட்டி இந்தப் பதிகத்தையும் பாடிக்காட்டி அவருக்கு அடுத்து இவர்தான் இந்தச் சந்தத்தில் பாடியிருக்கிறார் என்கிறாராம். பாவம் கள்ளம் கபடம் இல்லாத நல்ல மனிதர்!. )

திருத்தாளச்சதி என்ற அந்தச் சந்தத்தில் பாடிய பதிகம்தான் 'திருவரங்கர் திருத்தாளச்சதி' என்னும் பத்து பாட்டு. அதை இவண் பெரியோரும், நண்பர்களும் தாம் உகப்பர் என்ற நசையாலே இடுகின்றேன். பிழையென்று கருதின் முனியாது பொறுத்தருள்க.

*** 
1)
ஸ்ரீரங்க மாறெங்கும் திருவளர்சோ லைகளாம்
ஆறேபாயா ஊற்றேயாய்த் தடமணல் திடரிடவும்
சேரங்க மாறோடு நலந்திகழ்வே தங்களாம்
தாமேகாணா காட்டேயாய் தரிசனம் தருவதுவாம்
வாருங்கள் மாலோடு வலமிடமாய்ச் சுற்றுணா
வாராமாறா வேவாநோய் வருவினைத் துரிசறவும்
சேருங்கள் சேலோடு கயலயல்பாய்ப் பைங்கணாள்
நேரேமாலே சேர்ப்பாளாய்த் தருமருள் திருமகளே.



2)
போகாமல் தேடாமல் பொறுமையுடன் புங்கமார்
பாகார்தேன்வாய்ப் பேராச்சொல் பிதற்றிடும் புரிவளையீர்
வாகான கோல்நாடிப் படர்கொடியும் பற்றுமே
ஏகாதேநீ நேர்ந்தேயுன் உளந்தனை விடுத்தனையே
சோகாத்தென் காவாதென் சுடரடிக்கே சுந்தரீ
சேர்ந்தேயேகாய் சேராத இழவெலாம் இனித்தீர
மீகாமன் கைசேர்ந்த கலமெனவே காத்திராய்
மோகாவேசம் மீறாதே மனமருள் திருமகளே.

3)
அட்டிட்ட பால்சூடு பொறுக்குமென்று பாங்கராய்
தாமேதேராத் தாயாகித் தருவுளக் கனிவினிலே
தொட்டிட்ட தொல்லார்வம் தொடரவும் தாங்கொணாத்
தோயாநின்ற மாயற்கே தொடர்ந்தநம் வழிபடலே
விட்டிட்டு முற்றும்நம் உளமயல்சேர் பற்றெலாம்
தாளேநேர்கோள் என்றேயாம் தடங்கடல் கிடந்திடுமால்
மட்டிட்ட செம்பாத மலரடிக்கே ஆட்களாய்
மாலேயாகி மாயாத உளம்தரும் திருமகளே.


4)
பட்டர்கோன் ஆண்டாளும் பரமனருள் மாறனும்
சேர்ந்தேகண்டார் மூவர்தாம் திருவருள் நெருக்குறவே
இட்டத்தால் ஈசன்தான் சுருட்டியதன் பாம்பணை
மாலேதானே மாலாகித் தொடர்ந்திடும் மழிசையர்கோன்
கட்டிட்டே பூத்தொண்டு கதியருள்தாள் தூளியும்
விட்டேமாற்றிக் கட்டிட்ட மதிள்திருக் கலியனையே
கொட்டிட்டுப் போருக்கே புறப்படும் குலப்பெருமாள்
மீண்டேவந்த சேனைக்கே திரும்பிடு திருவருளே 
5)
பாணர்கோன் பண்ணிற்கே குலமுனிவன் தோளுலாய்
நேரேசென்றே ஆழ்ந்தாராய் அரங்கன தரவணையில்
காணில்நல் சோதிக்கே கதிதனைத்தான் தேடியே
தெற்கேவந்தே சேர்ந்தாராய்ப் புளிமரத் திருநிழலில்
மாண்சேயாம் மாறன்முன் மதுரகவி கேட்டதால்
கேள்விக்கேதான் மாறாடி அரும்பொருள் அளித்தனரே
சேண்நீண்ட மேல்நாட்டில் குழுமிடுநல் நித்தராம்
தாமேவேண்டிக் கேட்பாராய்ச் செவிமகிழ் திருமொழியே.

6)
கேட்டிட்ட கேள்விக்கே தலைகவிழும் வித்தனாய்த்
தானேகேட்ட கேள்விக்கே தகும்பதில் பெறுபவனாய்ப்
போட்டிக்கே வந்திட்டுப் புவியரசிப் பார்வையால்
ஆளத்தானே வந்தாராய் அரசினில் பகுதிபெற்றே
நாட்டிற்கு நன்மைக்கே நலந்திகழும் சேர்ப்பராய்ச்
சென்றேசென்றே தந்தாராம் தழையுடன் திருநிதியே
வாட்டங்கள் போக்கும்நல் வரமருளும் வார்த்தையால்
ஆறேசூழ்ந்த தீவத்தில் தரிசனம் திருவருளே 
7)
நானென்னும் எண்ணத்தில் எனதெனுமாம் எண்ணமாய்ப்
பாடேயாகிப் பந்தத்தில் படுமிடர்ப் பெருந்துயராய்
வானென்னும் வீடேயாய் விரசையிலே வந்ததாம்
ஆன்மாதானே ஈடேற இரங்கிடும் இறையவனே
கோனாகிக் குன்றத்தில் பவக்கடலும் மட்டமாய்
வானோர்தாமே காண்பாராய் மருவிடும் திருமலையே
தானாகி நின்றிட்ட திருவுருவில் இட்டமாய்த்
தேனேபாலே நேராகி உகந்தருள் திருவருளே. 

8)
ஏழான சுற்றுக்கள் மதிளெனவே காக்குமாம்
தாழாதேநல் சார்ங்கம்தான் உதைத்திடு சரமழைபோல்
பாழைத்தான் நெல்செய்யும் பரமனது பற்றெனா
பாரேயான மூர்த்திக்கே அடங்குக நமதுளமே
ஊழாகி ஊட்டும்வல் இருவினையாம் கட்டிலா
ஒன்றேயான ஆன்மாவே இறந்திட விடிலிழவே
மாழாந்து நம்நெஞ்சம் மருவியதோர் நன்மையாய்
மாலேயாக மாலுக்கே அருள்செயும் திருமகளே 

9)
தேரோடும் வீதிக்கே வடம்பிடிக்கும் நெஞ்சமாம்
நீராயோடும் வேர்வைக்கே நிலமகள் குடமுழுக்காம்
ஏரோடும் நன்செய்க்கே உழவுசெயும் மக்களால்
கூடிப்பாடிக் கோவிந்தா குழுமிய பெருந்திருத்தேர்
பேர்பாடும் நாவாயும் பெருகியதோர் அன்பெலாம்
நேரேகொள்வான் கோவிந்தன் நெருக்கிய இடைகழியாய்ச்
சீராடும் ஊரெல்லாம் சிறப்பனைத்தும் பொங்கிடா
வேரேயாகி வீட்டிற்கே விளைநிலம் திருவருளே. 

10)
மாலுக்கே ஆசானாய் மயர்வறநல் லீட்டினால்
வீடேயிங்கே போந்தாற்போல் விளக்கிய விரிவுரையே
சேலோடும் போராடும் கயற்கணாளர் கண்டிடா
கண்ணேதானே ஆனந்தம் அரங்கரின் அடைக்கலம்யாம்
பாலோடும் பொன்மேனி பரிவுடைநல் பாங்கெனா
யோகுக்கேயாய் நல்போகி நலந்திகழ் முனிவரனாய்
மாலுக்கே வையத்தை உரிமையென ஆக்கிடா
ஈடேகொண்டே ஆக்கும்பேர் வரமுனி திருவருளே.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

பதிகம் பாடினால் போதுமா? சாற்றுக்கவி யார் பாடுவது? நல்ல கேள்வி.

அதையும் பாடிவிட்டால் போகிறது. இதோ --

11)
தட்டிட்டே முட்டிக்கைப் பதிகமொன்றே செப்பினார்
மேடைமேலே சந்தத்தார் புகலியர் எனவுரைத்தார்
மட்டில்லா ஆர்வத்தால் மடமையெதும் அஞ்சாதே
மானாவாரிப் பாட்டாகப் பதிகமி தனைமுயன்றேன்
விட்டிட்டே வாயாரச் சிரிப்பதுவே செய்வதால்
வாதைநோவே போகும்மே வழக்கமும் சிறப்பதுவாம்
இட்டத்தால் மோகன்தான் அரங்கரையே பாடினான்
நாணேயின்றித் திண்ணத்தால் நகைத்திடும் திருமகளே.

***
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்!


கல்பதரு தினம்

ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு தினம் என்பது கல்பதரு தினம் என்று கொண்டாடப்படும் ஆன்மிக நாளாகும். அன்றுதான் தம் நிறைவுக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி பரவசத்தில் நின்றவராய், யார் யார் என்ன ஆன்மிக நிலையை அடைய வரம் விழைந்தார்களோ அதையெல்லாம் கொடுத்தார் என்று அவரது சரிதம் கூறுகிறது. அதுமுதல் அன்றைய நாளை கல்பதரு நாள் என்று கொண்டாடுகிறது பக்த உலகம்.

கல்ப தருவாகிக்
காலம் கனிய நின்றாய்.
அல்பன் எனக்கும் அங்கு
இடம் உண்டா தெரியவில்லை.
விகல்பம் கூடியும் கூடாதும்
ஆழ்ந்த நிலை உன் இயல்பு.
விகல்பமே இல்லாது செல்லும்
விரசமாகிப் போன மயலது என் வாழ்வு.
அகண்ட ஆகாரமாகி
அருள்நிறை மாமர நிழல்கனிந்தாய்.
அப்பொழுதும் எனையொதுக்கும்
அக்கறைதான் எங்கு பயின்றாய்?
அருளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டென்றால்
மருளுக்கு விடிவேது?
மயலுக்கு முடிவேது?
அயல்தள்ளி வைத்த பயல்
முயல்கின்ற மொய்கழற்குப்
பயனற்ற வேட்கையோ அன்பு?
கயல்கண்ணிக் கோபப்
புயல்கண்ணிகாளி
செயல்தீர்ந்த சிவமீது ஆடி
உயக்கொண்ட நாளில்
உதவாத வாளும்
உதவிக்கு இன்றும் வருமோ?
உதவாத சேயென்று
மிதவாதம் அற்றெனையே
பிடிவாதமாக அருளா
உனையெண்ணி நிற்க ஒரு நாள்
எனைக் கண்ணில் படுகின்ற திருநாள்
மனப்புண்கள் தீருகின்ற பெருநாள்
நின்னடிக்கீழ் அமர்கின்ற அந்நாள்
இந்நாளே ஆகட்டும் நன்னாள்.

***

ஸ்ரீராமாநுஜர் இருபது

ம்பெரு மானார்க்கே தோய்ந்த இதயத்துச் 
செம்பொருள் நாட்டம் சமைந்ததுவால் - நம்பெருமாள் 
ஈந்தவருள் ஈண்டு திருவருளாம் என்றிங்குப் 
போந்த இருபதுவெண் பா. 

*

தெண்ணீர பொன்னித் திரைகலங்கும் காலத்தே 
உண்ணீர்மை ஊட்ட உலகிதனைக் - கண்ணீரால் 
காத்த குணவாளன் கோத்தநெறி கூர்வதினால் 
பூத்துவரும் புத்துலகு பார். 

பாரோர் பலரோய்ந்து பானாள் விளக்கானார் 
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் காதலித்த 
ஏரார் எதிராசர் எங்கள் கதியானார் 
ஓரார் எவரிதனை ஓர்ந்து. 

ஓர்ந்து உவப்புற்றார் உத்தமர்க்கே ஆளானார் 
சோர்ந்து தவிப்புற்றால் செய்வதெவன் - சீராரும் 
செந்நெல் கவரியிடும் சங்கத் தமிழ்ச்செல்வர் 
இந்நாளில் இன்புற்றார் ஈண்டு. 

ஈண்டு புலர்ந்ததுவோ ஈருலகம் ஒன்றாமோ 
மீண்டும் சிறந்திடுமோ மாநெறியும் - நீண்டதன் 
தாளால் உலகளந்த தண்மைதான் இவ்வுலகில் 
வாளா விருந்திடுமோ தான். 

தானாய்த் திரிவார் தறுகண்மை யால்தரணி 
பான்மை இழந்த பசப்பறவே - பூன்றநற் 
பொற்குணத்தான் சிற்குணத்தின் செம்மை புலத்தி 
நற்குணர்த்தும் ஏந்தலவன் நூல். 

நூல்நுவன்ற மாட்சியோ மால்பயின்ற நெஞ்சதோ 
ஆல்துயின்ற சேய்வயிற்றில் அண்டமெல்லாம் ஆன்றபோல் 
கால்பயின்ற திக்கெலாம் கார்பயின்ற ஓரருள் 
கோல்பயின்று நின்றதாம் கோயில். 

கோயில் மணவாளர் கொள்ளைகொளும் நெஞ்சத்தை 
வாய்மொழியில் தாமிழந்தார் வார்த்தைக்கே - ஆயும் 
அறிவுடையார் அந்தண்மை ஆளும் தமிழில் 
செறிவுடையார் செய்தவமே தாம். 

தாமுகந்த தெவ்வுருவம் நன்றாய்த் தமருக்கே 
தோமற்ற ஓருருவில் தோன்றியிவண் - தாமாய்த் 
திரமாய்த் திருவரங்கம் தீர்ந்த நிலையாய்
வரம்தரும் வான்குரு வந்து. 

வந்தார் வருகவென்று வாராரும் வந்துவப்ப 
செந்தமிழ்க் கோதையும் செப்பினாள் - அந்தமிலா 
ஆர்வத் தமிழ்க்காதல் ஆன்றமறை அண்ணர்தாம் 
ஓர்ந்திட்ட திட்டம் உரை. 

உரைகொள் திருமொழிகள் உள்ளுவக்கும் ஈடால் 
உரைசால் திருவாய் மொழிக்கே - கரைகடந்த 
அன்புற்றார் ஆன்றதமிழ்ச் சொல்லுற்றார் சிந்தையினில் 
மன்னிடவே இங்குற்றார் மீண்டு. 

மீண்டுவந்த ஊமன் மொழிந்திட்ட வார்த்தையே 
யாண்டும்கொள் நெஞ்சேநீ யெவ்விடத்தும் - பாண்டவர்க்காய்த் 
தேர்நடத்தும் தாமோ தரனார்ப் பெருவார்த்தை 
நேர்நடத்தும் ஆசிரியன் நன்று. 

நன்றுரைத்தான் தீந்தமிழைத் தெய்வ மொழியென்றான் 
மன்றுரைத்து மண்ணுலகில் மன்னவைத்தான் - என்னுரைப்போம் 
கன்றுரைத்த கால்மாற்றும் தீங்குழலார் கண்ணற்கே 
அன்பூறும் பண்புடையோ மால். 

மாலாகி நெஞ்சம் மகிழ்ந்திடவே மன்னுதமிழ்க் 
கோலோச்சும் கொள்கைத்தாய்க் கொண்டாட்டம் - வேலோச்சும் 
வீசுவிழி மாதர் விறல்நேச மாமல்லர் 
ஆசறவே கொண்டான்தான் ஆள். 

ஆட்கொண்டான் ஓரரங்க மாளிகையை அன்புகொண்டே 
ஆட்கொண்டான் ஊமைதனை ஆர்கழலால் - வேட்டிருந்த 
மாமறையோர் கூரேசர் மன்னும் சொலவுகற்றார் 
காமுறுவர் கல்லா நெறி. 

நெறிநின்ற நின்மலர்க்கே போயொளித்துக் காட்டில் 
முறிவெண்ணை உண்டொளிக்கும் பத்தி - வெறிகமழும் 
நம்மாழ்வார் சொல்லாரும் நற்பொருளே நாட்டியெழும் 
அம்மாநல் பாடியத்தின் மாண்பு. 

மாண்புறுநல் சிந்தை மகிதலத்தின் வாழ்ச்சிக்கே 
சேண்குன்ற நாடர் சிறந்தவரம் - பாண்மிழற்றும் 
வண்டூது போதலரும் வாய்ப்பினால் வாய்மொழிக்குள் 
கண்டுழாய்க் கோலம் பயில். 

பயின்றும் துயின்றும் பயந்தும் புலர்ந்தும் 
செயிர்க்கும் உயிர்கட்கே சேமம் - நயக்கின்ற 
தாயாய்த் தமப்பனாய் எல்லாம் திருமாலாய் 
ஆய்ந்துரைத்தான் ஐயன் இனிது. 

இனிதாகும் இவ்வுலகு அவ்வுலகும் நன்றே 
புனிதராய்ப் போந்தார் பொலிய - மனிதரே 
வாழ்ந்தார் எனநயக்கும் விண்ணும் வரக்கண்டு 
வாழ்த்தும் முதல்தாய்ப் பொலிவு. 

பொலிந்தது பூதூர் புகழ்மலி கச்சி 
பொலிந்தது பொன்னரங்கம் வேங்கடம் பூத்துப் 
பொலிந்தது பூமி புலர்ந்தது வாழ்வு
பொலிந்தது பாரத நாடு. 

நாடுவார் நாற்பயன் தேடுவார் நன்மையே 
கூடுவார் கோயின்மை கொள்ளுவார் - பாடிய 
சேண்பொருள் சிந்தை அருளிச் செயலதாம் 
கோனெதி ராசர்தம் காப்பு. 

***

சதாபிஷேகம்

நூறாண்டு முடிந்த வைபவத்தைக் கொண்டாடுவதை இந்த சதாபிஷேகம் என்பது குறிக்கிறது. ஆண்டுகள் நூறு எண்ணி, அதுவரை இல்லை என்றாலும் 80 வயதையே 100 ஆனதாகக் கொண்டும் இந்த வைபவம் நடக்கிறது. ஆனால் ஒருவருக்கு, இந்த மாதிரி உலக வாழ்க்கை ஆண்டுக்கணக்கில் எண்ணிக் கொண்டாடுவது உசிதமாகப் படவில்லை. என்ன செய்தார்? நூறு முறை திருவாய்மொழிக்குப் பொருள் சொன்னார். அதன் நிறைவை சதாபிஷேகமாகக் கொண்டாடிக் கொண்டார். ஆம் ஆழ்வார் வாக்கும் என்ன சொல்கிறது?

அன்றுநான் பிறந்திலேன்.
பிறந்தபின் மறந்திலேன்.

உலகில் பிறந்த நாள் நான் பிறந்த நாளா? இல்லை இல்லை. என் ஆத்மாவின் இயல்பு மறந்த நாள் அன்றோ அது! என்று என் ஆத்ம ஸ்வரூபம் எனக்கு உணர்வில் மீண்டதோ அன்றுதான் நான் பிறந்ததாக அர்த்தம். அவன் அருளால் அதற்குப்பின் மறக்கவில்லை. ஆழ்வாரின் இந்த மனோபாவத்தைக் கொண்டு சதாபிஷேகம் செய்த அந்த ஆசாரியர் நஞ்சீயர் என்பர். மேல்கோட் பிராந்தியத்தில் ஆறு தர்சனங்களுக்கும் ஆறு ஆசனங்கள் இட்டு அதன் மேல் அமரும் விருது படைத்திருந்த மஹாவித்வான் மாதவ வேதாந்தி என்று பூர்வாச்ரமத்தில் திகழ்ந்த நஞ்சீயர். பராசர பட்டர் தடுத்தாட்கொண்டபின் துறவறம் பூண்டு ஸ்ரீரங்க வாசமே கதியாய், பராசர பட்டருக்குத் தொண்டு புரிதலே தம் வாழ்வின் நெறியாய் வாழ்ந்தார்.

சதாபிஷேகம் கோவிந்த நரஸிம்ஹாச்சாரியார் என்று ஒரு மகத்தான விதவான். வியாகரணம், நியாயம், வேதாந்தம் ஆகியவற்றில் கரைகண்டவர். கரைகண்டவர் என்றால் ஏதோ வார்த்தைக்காக அன்று. கசடறக் கற்று என்று சொல்வார்கள். எந்த வித ஐயமும் பின்னொரு காலத்திலும் தோன்றுவதற்கு இடமில்லாதபடிக் கற்பது. அப்படிக் கற்றவர் சதாபிஷேகம் ஸ்வாமி. ஆனால் எப்பொழுதும் கற்றுக்கொள்ளும் மன நிலையை விடாமல் கைக்கொண்டிருந்தார். அதுதான் ஆச்சரியம்.
பொறுமையாக, அமைதியாக எடுத்து விளக்குவார். அலகு அலகாக அலசி அவர் எடுத்து வைக்கும் அழகே தனி. ஆனால் வெள்ளம் போல் கொட்டுகின்ற வேளுக்குடி வரதாச்சாரியார் ஸ்வாமியின் வாக் வேகத்தில் பழகியவர்கள் இவருடைய பாணியில் பொருந்திக் கேட்க முடியாமல் சிரமப் படுவார்கள்.
ஆனால் கற்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்குப் பெரும் நிதி சதாபிஷேகம் ஸ்வாமி.

ஸம்ஸ்க்ருத வியாகரணத்தில் அஷ்டாத்யாயி, வ்ருத்தி, பாஷ்யம் என்று பார்த்தால் மட்டும் அனைத்து உள் மர்மங்களும் புரிந்துவிடாது. இதைப் போன்ற ஆசிரியர்கள் அந்த மர்மங்களை எடுத்துச் சொல்லி விளக்கும் போதுதான் ஏன் எதற்கு என்று புரியவரும். அவ்வாறு வியாகரணம், நியாயம் ஆகிய துறைகளில் உள் சூட்சுமங்கள் அனைத்தும் நன்கு வல்லவர்கள் நம் காலங்களில் மிகக் குறைவு. அப்படிக் குறைந்த பேர்களில் ஒருவராக இருந்தவர் சதாபிஷேகம் ஸ்வாமி. எனக்கு இவருடன் வினோதமான பரிச்சயம். திருவல்லிக்கேணி கீதாசார்யன் டாக்டர் எம் ஏ வேங்கடகிருஷ்ணன் வீட்டில்தான் முதலில் நேரடிப் பழக்கம். அவர் வந்திருந்தார். அவருக்கு முன்னால் போய் நானும் உட்கார்ந்தேன். காரப்பங்காடு ஸ்வாமியின் குமாரர் திரு வரதராஜனும் இருந்தார். என் தோற்றம் ஸ்ரீவைஷ்ணவ அடையாளங்கள் எதுவுமில்லாத அலுவலகத் தோற்றம். கொஞ்சம் 'யாரடா இவன்?' என்று நினைத்திருப்பார் போல.

பேசும் பொழுது துறைவேறு இடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகவர் வார்த்தையைப் பற்றி வந்தது. யூயம் யூயம் வயம் வயம் என்று ஆரம்பிக்கும் ச்லோகமொன்று. நினைவில் சட்டென்று வராமல் கொஞ்சம் சிரமப்பட்டார். இதுதானோ என்று எடுத்துக் கொடுத்தேன். ஆங் என்று முழுதும் சொல்லிவிட்டு ஆச்சர்யத்துடன் என்பக்கம் திரும்பினார். 'என்னப்பா? நீ பார்க்க ஒன்றும் தெரியவில்லையே. ஆனால் இதையெல்லாம் எப்படிச் சொல்லுகிறாய்? யாரிடம் காலக்ஷேபம்? ' என்று கேட்டார். ஓர் ஆர்வத்தில் நானாக நுழைந்தது என்று சொல்லிவைத்தேன். அன்றுமுதல் பழக்கம் அதிகமாகியது. பின்னர் ஸ்ரீபாஷ்யத்தில் ஜீவ அநுப்ரவேசம் சம்பந்தமாக ஒரு சர்ச்சை. கிட்டத்தட்ட ஒரு வாரம் அவரோடு பல நூல்களைக் கொண்டு போய் விவாதம், சந்தேகம் தெளிதல், மாலை 6 தொடங்கி இரவு 11 மணி வரையில்.
அது ஒரு காலம்.

அப்பொழுது ஆழ்வார் திருநகரி கைங்கர்யம் எடுத்துச் செய்துகொண்டிருந்தார். பின்னர் ஸ்ரீரங்கத்தில் நோவு சாத்தியிருந்ததாகக் கேள்விப்பட்டு, ஆபீஸுக்கு லீவு சொல்லிவிட்டுப் போய் பார்த்தேன்.
அதுவரையில் பேசாமல் கொள்ளாமல் ஆஸ்பத்திரியில் இருந்தவர் என்னைப் பார்த்ததும், 'எங்கடா வந்த?' என்றார்.

'கேள்விப்பட்டேன். உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.'

'ஆபீஸ் வேலையா வந்தியா?'

'இல்லை. ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு வந்தேன்'

உடனே எழுந்து உட்கார்ந்துவிட்டார். தழுதழுத்தபடி, இந்த ஆகாத காலத்தில் எனக்காக என்று லீவு போட்டுப் பார்க்க வேண்டுமென்று வந்தாயே என்று சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தார். உபயலிங்காதிகரணம் பற்றி ஸ்ரீபிரம்ம ஸூத்திரத்தில் ஒரு சந்தேகம் கேட்டேன். 'இவரும் என்ன சொல்லிவிடப் போகிறார்?' என்று சின்ன நினைவு. ஆனால் சுமார் இரண்டு மணி நேரம் அவர் அன்று கொடுத்த விளக்கம் வேறு எங்கும் நான் காணாதது.

மாமியோ வாயடைத்துப் போனபடி இருந்தார். 'என்ன மாமி?' என்றேன்.

'இல்லை. நேற்று எல்லாம் பேச்சு மூச்சு இல்லை. மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இன்று உங்களைப் பார்த்ததும் இப்படி ஸ்வஸ்தமாகப் பேச்சும் செய்கையும்...என்னது இது?' 

ஆம். அந்தக் காலத்து விதவான்களுக்கு உயிர்நிலையே அவர்கள் தோய்ந்த கல்வியில் இருந்தது. இது தழைத்தால் அது தழைக்கும் என்றபடி. அவர்கள் எல்லாம் போன பின்பு ஆட்களே இல்லாமல் வெறிச்சொடிப் போய்விட்டது. ஏதாவது நுட்பங்கள் கேட்க என்றால் என்ன செய்வது? இவ்வளவு வறட்சி கூடாது. என்ன செய்வது? குளிர்ந்த தூய ஜலத்தின் அருமை கோடை காயும் போதுதான் உறைக்கிறது. வாசுதேவ தருச்சாயா தான் கொஞ்சம் மனசு வைக்கவேண்டும்.

***

கங்கா மாதா

சச்சிதாநந்த ப்ரம்மம் என்றால் தெரியுமா? தெரியாதா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி. பரவாயில்லை. ஆனால் Liquid Brahmam என்றால் என்ன என்று தெரியுமா? அல்லது Aqua Brahmam.அதாவது அந்த ப்ரஹ்மமே ஜல ப்ரவாஹமாக உருவெடுத்தால் அதற்குப் பெயர்தான் ப்ரஹ்ம வாரி. ப்ரஹ்ம வாரி என்று கங்கைக்குப் பெயர். சர்வ பாபங்களையும் போக்கும் புனித மாதா கங்கை.

ஸ்ரீராமகிருஷ்ணருக்குக் கங்கை என்றால் ஆழ்ந்த நிஷ்டை கூடிவிடும். நம் யோகிகளோ நதி, மலை என்று எல்லாவற்றையும் பெரும் ஆட்களாகவே யோக தர்சனத்தில் கண்டு சொல்லிவிட்டுப் போகிறார்கள். அதற்கு என்ன அர்த்தம்? புரியவில்லை. கங்கை நதி சிவனார் தலையில் வந்து இறங்கியதாமே, பகீரதன் தவத்திற்காக? என்ன அர்த்தம்? தெரியவில்லை.
கங்கை நதி சந்தனுவிற்கு மனைவியாக ஆனதாமே? என்ன பொருள்? ம் ம்.

கங்கையைக் காட்டிலும் சத்சங்கம் என்ன இருக்கிறது? கங்கையின் ஜலம் மருந்து. வைத்தியரோ நாராயணனாகிய ஹரி என்கிறது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம்.

கங்கா ஜலம்.
கீதா படனம்.
ஸ்ரீமந்நாராயண ஸ்மரணம்.

போதுமே என்று போய்க்கொண்டே இருக்கிறார்கள் சாதுக்கள். 

***

ஸ்ரீராமகிருஷ்ணர் மீது சில பாடல்கள்

அனுஷ்டுப் என்னும் சந்தம் இரண்டு வரிகள் கொண்டது. ஒவ்வொரு வரியிலும் இரண்டு பாதங்கள். ஒவ்வொரு பாதத்திலும் எட்டு உயிரெழுத்துகள் இருக்க வேண்டும். இந்த ஓர் அம்சத்தை வைத்துத் தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணர் மீது ஒரு செய்யுள் செய்து பார்த்தேன். 

*
ஸ்ரீராமக்ருஷ்ணரை நினை
என்றென்றும் மாறாத நன்மை |
யாமங்களில் அவர் நாமம்
இருள் கடியும் நல்தீபம் ||

உலகாசைகள் மறையும்
உள்ளத் தூய்மையே விளையும் |
பகவத் பக்தி கனியும்
பரமஞானம் பொலியும் ||

பிரிவினைகள் அகலும்
பரிவுணர்வே திகழும் |
விரிந்த மனம் விளங்கும்
விவேகமதில் துலங்கும் ||


குறுகிய நோக்கம் மாறும்
குவலய நோக்கம் சேரும் |
வறுமை வறுமையாகும்
வாழ்வதே பெருமை ஆகும் ||

ராமக்ருஷ்ணரை நினைத்தால்
உள்ளப் பகைகள் ஒழியும் |
சேமம் அவர் திரு நாமம்
சிறப்புகள் எல்லாம் சேர்க்கும் ||

ஸ்ரீராமக்ருஷ்ணரை நினை
என்றென்றும் மாறாத நன்மை |
யாமங்களில் அவர் நாமம்
இருள் கடியும் நல்தீபம் ||

*
மனமே!
இன்று உனக்கு விடுமுறை.
தக்ஷிணேஸ்வரம், பஞ்சவடி,
குருதேவர் அறை,
அம்மா பவதாரிணியின் திருமுன்னர்,
ராதாகாந்தன் கோயில்,
பன்னிரு சிவனார்ச் சந்நிதி,
என்று சுற்றித் திரி;
சாண்ட்னித் துறையில் அமர்ந்து கொள்;
நள்ளிரவில் கங்கா நதியில்
அநாகத த்வனி கேட்கிறதா என்று பார்!
இருட்டில் எங்கு பார்த்தாலும்
பூசியிருக்கும் அந்தத்
தெய்விக முறுவல்;
பரநிலைப் பூவிதழ்
கசிந்த தேன் சொல்;
அஞ்சாதே!
பரவச நிலைகள் வரும் போகும்
வந்து கொண்டுமிருக்கும்;
கடல் பொங்கும்;

கரையாக இரு;
அன்றேல் கடலாக இரு.
கரை கிடந்த கிளிஞ்சல் பொறுக்கும்
அகங்காரத்தின் வாலில் கட்டிய
தகரமாய் அவதிப்படாதே!
பொறு! பொறு!
பொறுத்தார் பூமி ஆழ்வார்;
சப்த பூமிகளிலும்.

வானுக்கும், பூமிக்குமாக 
இன்று போக்கும் வரத்தும் இருக்கும்;
கமார் குளத்தின் கரையில்
குழந்தை ஒன்று சிரிக்கும்.

***

ஒரு மஹா சிவராத்திரி

ஒரு மஹா சிவராத்திரி.
பல்லாண்டுகள் முன்பு.
கமார் குளத்தின் கரையில்
கிராம நாட்டியக் குழுக்கள்
கண்விழிப்பைத் தெய்விமாக ஆக்க
எண்ணமிட்டபடிச் சுறுசுறுப்பில்;
சிவனாராய் வேடம் கட்டும் ஆள்
உடல் அசுகத்தில் படுத்துவிட்டார்.
கூத்து நடக்க வழியில்லை என்று
மக்கள் கவலுங்கால்
கதாயின் நினைவு வரச்
சிறுவனைக் கெஞ்சிக் கேட்டுச்
சம்மதிக்க வைத்தனர்.
மஹாபாவமும், ரஸராஜனும்
கைவந்த சிறுவனுக்குக் கேட்கவா வேண்டும்?
புலித்தோலை அரைக்கசைத்து,
மின்னார் செஞ்சடை மேல்
மிளிர் கொன்றை வைத்து,
இளமதியும், முதுநதியும்
தலையலங்காரமாக,
உடல் முழுதும் பூசிய திருவெண்ணீறு
கடலெனப் பொங்கும் பரவசத்தின்
கசிவாய்த் திகழ்ந்திருக்க,
கைகளில் எங்கும் அரவம் அணிசெய்ய,
ராம என்னும் தாரகம்
பூவிதழ் விரியும் சுரும்பார்க்க,
பொன்னார் மேனியனின்
மூன்றாம் விழி கண்வளர,
பொங்கும் அலைக்கேசம்
நம்முள்ளத்துள் ஊதியெழ,
நட்ட திருவடியும்,
நடமாடும் பேரடியும்
துட்டம் ஒழித்துத் தூய்மைதனை நாட்டிவர,
உள்ளப் பெருங்கோயில் 
ஊர்ப்பொதுவின் மேடையென,
கள்ளப் புலனைந்தும்
காளாமணி விளக்காகித்
தெள்ளத் தெளிந்தாரின்
சீவன் எனும் சிவலிங்கம்
சிற்றம்பல புளகத்தில்,
சிந்தையடங்கிச்
சைதன்யப் பெருவெளியில்,
அதிரும் பதம் வாங்கி
ஆடிவரும் ஐயன்,
மூவிலை வேல் தாங்கி,
முக்காலத்தின் மேலோங்கிக்
கூட்டத்தின் முன் நின்றவன் தான்,
வேட்ட மனிதகுலத்
தேட்டத்தின் விடையேறும் வல்லவனோ
விரியாப் புலர் முறுவல்,
விரிந்த கடைக்கண்ணில் புனலிழிய,
தெரிந்த கதாய்
தெரியாப் பெருநிலைக்கே
அறிந்த புலன் தாண்டி
ஆன்மிகத்தில் தான் நிலைத்தான்
நடிக்கவந்த நாதன்
நடிக்காத நடிப்பினிலே
நடிக்கும் எந்தன் உள்ளம்தான்
நடிக்கவே மறந்ததுவால் !

*
ஒன்று சொல்வாய்

ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்
வாடிவரும் என்மனத்தின் மருந்தாகித்
தேடிவரும் என் உயிர்க்கு விருந்தாகி
நாடிவரும் நற்கணத்தின் உருவாகிப்
பாடிவரும் பரமஹம்ஸத் திருவாகிப்
பையநடை இட்டுச்செல்லும் பாவனத்தின்
உய்வகையின் வார்த்தைகளில்
ஒன்று சொல்வாய் 

மெய்விதந்த பரவசச் சோபனத்தில்
தைவந்தத் தெய்விகத்தண் சொல்லமுதில்
ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்
ஓங்கிநிற்கும் உயர்தருவே ஒன்றுசொல்வாய் 
ஓங்காரப் பொருளாகி உலவிநின்ற
ரீங்கார வண்டாகிக் குலவுகின்ற
நீங்காத நன்மைதிகழ் நல்வாக்கருளி
ஏங்கும் எமதுள்ளப் பாலைமாற
தாங்குகின்ற அமுதமொழி ஒன்றைச்சொல்வாய்
ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்

***

ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகாநந்தர் பேரில் கட்டளைக் கலித்துறை

1)
துங்க மிகுத்திடு தேச பரப்பிதில் தீர்வெனவே
எங்கணும் ஓங்கிய ஏக்கமும் ஏற்றிடு ஏருருவாய்
கங்கையும் தங்கிடும் பிஞ்ஞகன் கூடவே காப்பிடவும்
வங்கமும் பெற்றது நல்வர மாமென வந்தவனே.

2)
வந்தனம் தந்து வரம்பல நல்கும் வளரிமையோர்
எந்தனம் என்று இயற்றிய மாதவம் எழிலுருவாய்
பந்தனை தீர பரதநல் நாட்டின் பரங்கதியாய்
வந்தனை அம்மா வரதனே ராம கிருட்டினனே

3)
கிருட்டினன் எங்கே விசயனும் அங்கே கலியுகத்தில்
உருவென வந்தார் உலகைப் புரந்தார் உணர்வெழவே
பருவடி வாகிப் பாரெலாம் காணப் பரமஹம்ஸ
குருவெனக் குலவும் குணவடி வாம்விவே கானந்தா

4)
அந்தமி லாதியில் அப்பரம் பொருளும் ஒன்றெனவும்
தந்தம் மதத்தினில் வந்தவர் செல்வதும் அங்கெனவும்
எந்த வழியிலும் எவ்வெவர் நிற்பதும் ஏற்பெனவும்
இந்த உலகில் இன்றுமே உணர இயம்பினனே

5)
இயம்பிய நற்பொருள் எங்கும் விதைத்த நரேந்திரனும்
தயங்கிய துய்ப்பினைத் தந்தவன் பின்னர் தடைவிதித்து
மயங்கிய மானிடம் வாழ்ந்திட வந்த மருந்தெனவே
அயன்படைப் பிங்கே அரியுரு என்றுணர் வித்தனனே.

6)
வித்தென இட்டவன் காளியின் பத்தன் விதிவசத்தால்
பித்தம் பிடித்ததும் பாரத மக்கள் சதிவசத்தால்
நித்தம் படும்பல அல்லலுக் கிங்கே மதியொளியாய்
உத்தமன் வந்தனன் உணமை உணர்த்தும் கதிரொளியே

7)
ஒளிக்குலம் ஓங்கிட ஓங்கிடும் உண்மையில் வேதமெலாம்
அளிக்குணம் ஓங்கிட ஓங்கிடும் தண்மையில் போதமெலாம்
நளிர்மதி ஓங்கிட ஓங்கிடும் கங்கைச் சடையினிலே
களிப்புனல் ஓங்கிட ஓங்கிடும் எங்கள் கதிப்பயனே

8)
பயனாய் பரதமா நாட்டிடைப் போந்தப் பழந்தவமாய்
அயனாய் அவதியில் வீழ்ந்திடும் நாட்டின் புனர்விதியாய்
சயமாய் சகமெலாம் ஆன்மிகம் நந்தும் சனாதனமாய்
தயையாய் உவந்தருள் தாகுர் நரேனின் திருவரவே.

***

மாமுனிவன் இருபது

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவன் பெருமை அஸாதாரணமானது. பக்தி என்பதை மிகத்துல்லியமாகக் காட்டிநிற்கும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை சிறிதேனும் ஐயம், மயக்கம், திரிபு என்பவற்றிற்கு இடமின்றிக் கலைவடிவில் நிலைநாட்டியது நம்பிள்ளை அளித்து, வடக்குத்திருவீதிப்பிள்ளை ஏடுபடுத்திய ஈடு என்னும் பகவத் விஷயம். அந்த அரும்பொக்கிஷம் ஆரம்பத்தில் சிலகாலம் பலருக்கும் போய்ச்சேரா வண்ணம் இருந்தது. அந்நிலையை மாற்றித் திருவரங்கனின் அருளப்பாடு அனைவரும் கற்பதற்குரிய வாய்ப்பினை ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவனின் மூலம் நல்கியது. அரங்கன் தன் பரிசனங்களுடன் அனைத்து உற்சவாதிகளையும் ஒரு வருட காலம் நிறுத்திவைத்து இந்த ஈடு ஒன்றினையே மாமுனிவன் எடுத்து விளக்கச் செவி மடுத்தனன் என்னும் செய்தி நம்மவர்க்குப் புரிந்துகொளற்கரிதாம் ஒன்று.

நம்பிள்ளை காலத்திலேயே அவருடைய காலக்ஷேபம் கேட்க அக்கம் பக்கம் ஊரிலிருந்தெல்லாம் அனேக ஜனங்கள் திரள்வர். காலக்ஷேப கோஷ்டி கலைந்து மக்கள் செல்கையில் பார்த்த ஸ்ரீவைஷ்ணவனான ஒரு ராஜா, 'நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ? நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ?' என்று வியந்தான் என்பது பின்பழகிய பெருமாள் ஜீயர் தரும் குறிப்பு. அதுவுமின்றி நம்பிள்ளைக் குறட்டில் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைக் கேட்க அரங்கனும் அர்ச்சா சமாதி கடந்து வந்து கேட்டான்; திருவிளக்குப் பிச்சன் அதட்டி உள்ளனுப்பினான் என்னும் செய்தியும் ஈட்டின் அருமை பெருமையை விளக்கும். அத்தகைய ஈடு என்ற பகவத் விஷயத்தை அனைவர்க்கும் அரங்கன் முன்னிலையில் விநியோகம் செய்தது எத்தகைய நுட்பமிகு செயல் என்பது வரலாறு, வரவாறு, அருளிச்செயல் என்பதன் உண்மையான தாத்பர்யம் இவையெல்லாம் நன்குணர்ந்தவர்க்கே நிலமாகும். நம்போல்வார் இதனை நன்குணர முயல்வதே கடன்.

ஞானம், பக்தி, அனுஷ்டானம், ஆத்மகுணங்கள், பூததயை முதலிய ஆசார்ய இலக்கணத்திற்கே இலக்கியமாய்த் திகழ்பவர் மாமுனிகள். இவருடைய காலத்தில்தான் ஸம்ப்ரதாய ஏடுகள் பலவற்றைப் புதிதாகப் படியெடுத்து, ஒப்பு நோக்கி, செவ்வனே பல படிகளை ஏற்படுத்திவைத்தார். இந்தச் செயலை சீடர்களிடம் நியமித்ததோடு விட்டுவிடாமல் தாமே இரவெல்லாம் தீப்பந்தம் ஏற்றிவைத்துக்கொண்டு தம் கைப்பட படியெடுத்ததைப் பார்த்த ஒரு சீடர், 'சீயா! தாமே இவ்வளவும் சிரமப்பட வேண்டுமோ?' என்று கேட்டதற்கு, 'எனக்காகச் சிரமப்படவில்லை. உம்முடைய சந்ததிகளுக்காகச் செய்கின்றேன் காணும்!' என்றாராம் மாமுனிகள். அன்னவர்க்கே இந்த விம்சதியாம் இருபது. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


மாமுனிவன் இருபது

1)
எந்தக் கருத்தால் திருவரங்கர் தாம்பணித்தார்
எந்தக் கருத்தால் தனியனிட்டார் -- அந்தமிலா
நான்மறையின் நற்பொருளை நற்றமிழின் உட்பொருளைத்
தேன்மறையாய் ஆக்கிடவே தந்து.

2)
தந்ததமிழ் கண்டு தரணியெலாம் மிக்குயர
நந்தமிழ்த மிவ்வமுதைக் கண்டயர -- முந்துமுகிழ்
மொக்குள் படைப்பாற்றும் முன்னவனும் கேட்டயர்ந்தான்
சிக்கில் கிடாரத்தான் மாண்பு.

3)
மாண்பெரிய வைய மகத்துவ மேதென்பீர்
காண்பெரிய நம்பெருமாள் கட்டளையே -- சேண்பெரிய
நாட்டோனும் நற்குருவின் நற்திதியைத் தன்செலவால்
கூட்டியிங்குத் தானியற்றும் தீர்வு.

4)
தீராத ஐயமெல்லாம் தீர்த்தான் தெளிபொருளைப்
பேராமல் நெஞ்சினிலே தான்விதைத்தான் -- சோராமல்
வையமெல்லாம் காக்கின்ற வாசுதேவன் பொங்கரவில்
பையத் துயிலும் மகிழ்ந்து.

5)
மகிழ்மாறன் வந்தனனோ மாதவனோ மீண்டான்
முகிழ்த்தநகை எம்பெருமா னாரோ -- புகழீட்டில்
போந்தபொருள் தான்விரித்தான் பொன்றுமறம் தான்தடுத்தான்
வேந்தனவன் கொண்டசெங்கோல் தண்டு.

6)
தண்டிரைசூழ் வையம் திருமாலுக் கேயாகி
எண்டிசையும் ஏத்துகின்ற இன்னொலிக்கே -- விண்டே
சுருதியார்க்கும் செந்தமிழ்த்தேன் வண்டயரும் விண்பூ
கருதியார்க்கும் ஓர்தல் அரிது.

7)
அரிதாமால் வையத்தில் நற்பிறவி இன்னும்
அரிதாமால் ஆன்றகலை அத்தனையும் கற்றல்
அரிதாமால் நாரணர்க்கே ஆளாகி நிற்றல்
அரிதாமால் மாமுனியின் சீர்.

8)
சீர்மல்கும் பொன்னித் திருவரங்கச் செல்வர்க்கே
பார்மல்கும் ஈடளித்தான் மாமுனிவன் -- கார்மல்கும்
ஆரருளே ஓருருவாம் ஆன்றயதி ராசன்தான்
பேரருளாய் மீண்டுவந்தா னிங்கு.

9)
இங்கேனும் ஆகவன்றி அங்கேனும் ஆகட்டும்
எங்கேனும் நம்முயிர்க்காம் ஈடுளதேல் -- மங்காத
ஞானத்தில் மாசில்லா பக்தியில் மாதவற்குப்
போனகமாய் ஆகிநிற்கும் பண்டு.

10)
பண்டே உலகும் அறிந்ததுகொல் பாரதர்க்குச்
சண்டை நடத்தி முடித்தபிரான் -- விண்டநெறி
பாருலகு தானறிய வந்தயதி ராசர்தாம்
ஈருருவாய் வந்தவருள் மீண்டு.

11)
மீண்டுமிங்கு வந்ததுகொல் பொன்னூழி மாதவற்கே
ஈண்டு விளைந்ததுகொல் பொற்காதல் -- யாண்டும்
அரங்கேசர் தாமரங்கில் தந்துவந்த வாழ்த்தே
சிரங்கொள்ளும் பூவுலகம் இன்று.

12)
இன்றோ அவன்மூலம் ஈருலகும் ஒன்றாமோ
சென்றோ அவனும் சுருள்படியும் இட்டதுவும்
வென்றோ கலியெல்லாம் மாமுனிவன் வாழிடத்தைப்
பொன்றாமல் காக்கும் அருள்.

13)
அருள்கொண்டோ ராயிரமாய் ஆன்றமறை ஈந்தான்
பொருள்கொண்டு பாடியமாய்ப் பிள்ளானால் தந்தான்
மருளகற்றி மக்களுய்ய நம்பிள்ளை ஈட்டை
அருளப்பா டந்தணனாய் வந்து.

14)
வந்தணைந்த செய்யதவம் சீர்வசனத் தாழ்பொருளை
மந்தணமாம் முப்பொருளைப் பேராமல் -- அந்தமிலா
தத்துவ முப்பொருளைத் தண்குருகூர் தீந்தமிழை
நித்தமும்நாம் கற்கச்செய் தான்.

15)
தானுகந்த அந்தாதி பாடும் அமுதனவன்
வானுகந்த போகம் விடுத்தானோ -- தேனுகந்த
தெள்ளுரையால் சீரடியார் காயத்ரி தான்விளக்கும்
அள்ளுசுவை ஆசைக்காட் பட்டு.

16)
பட்ட சிரமம் பெரிதால் பயில்வோர்க்கே
இட்டகலை யேடும் கிடைப்பரிதால் -- நிட்டையாய்
நீள்வயதில் ஆழ்நிசியில் நூல்பெருக்கும் மாமுனிவன்
வேள்வியில்நம் உள்ளம் அவிசு.

17)
அவிசன்னம் நாய்நுகர்தல் ஒத்ததே மாலின்
புவிமக்கள் மற்றவைபின் னேகல் -- கவிக்கோதை
சொல்லில்வாழ் தூயனுக்கே நம்வாழ்வைச் சொத்தாக்கும்
வல்லமையால் வென்றான் முனி.

18)
முனிந்தமுனிப் பின்னேகிக் கற்றான் பெருமாள்
முனிவில்லா அந்தணன்பால் கற்றதுவும் கண்ணன்
கனிந்தநல் லாசிரியன் கிட்டாமல் ஏங்கி
முனிவன்பால் கற்றானோ ஈடு.

19)
ஈடும் எடுப்புமில் ஈசன் உவந்திங்கே
ஈடளித்த பெற்றிக்கே என்னுள்ளம் தானுருகும்
காடுவாழ் சாதியுமாய்க் காகுத்தன் தோன்றலாய்
நீடுபுகழ் பெற்றிமையும் விஞ்சு.

20)
விஞ்சுமிருள் தானகல வீறுடன் ஆன்றவுயிர்
துஞ்சுங்கால் நற்றுணையா தான்வருமே -- மிஞ்சுகுணம்
வான்பொலியும் நம்மின் மணவாள மாமுனிவன்
தேன்பிலிற்றும் தாளிணையே நந்து.

*** 

கலியன் மீது கலிப்பா

வந்தார் எனநினைந்தே வந்தவழி பார்த்திட
மந்தநகை பூத்தவர் மன்னனவன் மங்கைக்கு
மந்திரத்தை ஓதி வழியான மாதவற்கு
தந்திறமும் தானிழந்து தத்துவ மாயினரே

ஆயின காலங்கள் ஆகுநற் காலங்கள்
போயின எண்ணாமல் போனதென் நெஞ்சமே
வாயின நாமங்கள் வாழ்க்கை அவன்தஞ்சம்
சேயன நானெனது சேர்கதி யாரருளே

ஆரருள் கொண்டாடும் அன்பர்தம் தாள்சேர்த்து
காரிருள் போயகல கண்ணன் கழல்திண்ணம்
வேருடன் வீயவினை நற்கதி தானாகும்
பேருடன் மூர்த்தியினைப் போற்றுமின் நீரே

நீர்நும தென்றிவையும் நாரணர்க் காக்கிட
சீர்பெற சிந்தை சிதையாமல் வைமின்கள்
யாரே கடைக்காலம் கண்ணிமை காப்பென
தேருவன் தேவன் அவனொரு வன்தானே.


***

உருவம் அருவம் மஹாகுணம்

அதாவது உருவம் உள்ளதெல்லாம் அவயவங்களால் ஆனது. அவயவக் கூட்டாக இருப்பதெல்லாம் அழியும்.மேலும் உருவம் அருவம் என்பன உண்மையில் நிலை மாற்றங்கள். எதை நாம் உருவம் என்கிறோம்? எது புலப்படும் நிலையில் இருக்கிறதோ அதை. புலப்படா நிலைக்குப் போனவை அருவம் நம்மைப் பொறுத்தவரையில். 

ஆனால் சூக்ஷ்ம நிலையில் உள்ளவற்றை புலன் கொண்டு கிரகிக்கும் அவற்றிற்கு அதே அருவம் உருவமாக ஆகிறது. நாமே சூக்ஷ்ம த்ருஷ்டிக்கு உபகரணம் கொண்டு பார்த்தால் அருவம் உருவமாகக் காட்சியளிக்கிறது.
எல்லா நிலையிலும் எக்காலத்தும் முற்றிலும் அருவமாகவே இருந்தது இருக்கிறது இருக்கப் போகிறது எதுவும் மனித அறிவுக்குள்ளேயே ஏன் எண்ணத்திற்குள்ளேயே வராத விஷயம். எனவே அதைப் பற்றிப் பேச்சே எழுவதில்லை. அருவம் என்பதைப் பற்றிய பெரும் கருத்து ஆக்கம் எல்லாம் உருவம் என்பதை மனத்தில் கொண்டே அதன் மாற்றாகச் செய்யப்படுகின்றவை. 

அப்பொழுது நம் உலகமே புலன்களால் மொண்ட அளவுதான் என்று இருக்கும் பொழுது அனைத்து உருவங்களையும் புழங்க இடமாகவும், காலமாகவும், வர்த்தமானமாகவும் தன் சரீரத்தில் இயன்றுச் செல்ல வாய்ப்பாக இருக்கும் பரம்பொருளை அருவம் என்பது எங்ஙனே? நம் சிந்தைக்கரியன் புலன்களுக்கு எட்டான் என்று மட்டுமே கூற இயலும்.
அப்பொழுது அவன் உருவம் உடையவன் என்றால் அவயவங்கள் உடையவன்தானே? அப்பொழுது தோன்றி மறையும் அல்லவா? என்றால் இல்லை. அவன் உருவம் உடையவன் என்பது ஏன் சொல்லுகிறோம்? அருவமாக இருக்கவே முடியாது என்பதால். அவனை ஓர் உருவம் என்று சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுதும் நமக்குத் தோல்வியே. ஏனெனில் நாம் உருவம் என்று அறிந்ததெல்லாம் நம் புலன்கள் காட்டும் இளைத்த புன் உலகத்தில் பயிலும் உருவ நினைப்புகளையே. 

இவற்றைப் போன்று அவன் ஓர் உருவம் எனில் அப்பொழுது நம் புலன்களுக்கும் சிந்தைக்கும் எப்படியேனும் அகப்படுவான். அப்பொழுது இடம் காலம் நிகழ்வு என்னும் எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு பொருள்தான் அவன் என்பது ஆகிவிடும். அவன் ஒரு நாளும் இந்திரிய கோசரன் அன்று என்று வேதாந்தம் நிர்ணயிக்கிறது. எனவேதான் அவனை பொருட்களிலிருந்து வேறுபடுத்தி 'பரம்பொருள்' என்று அழைக்கிறது வேதாந்தம். பின் அவன் யார் என்று எப்படி நமக்குத் தெரிய வருகிறது? ஒரே வழி வேதத்தினால். எனவேதான் அவனை வேதைக வேத்யன் -- வேதத்தினால் மட்டுமே அறியக் கிடப்பவன். வேதாந்த பிரதிபாத்யன் -- வேதாந்தத்தினால் விளக்கப்படுபவன் என்று முன்னோர் முடிவுக்கு வந்தனர்.

அந்த வேதமானது அவனுக்கு உருவம் இல்லை, வடிவம் இல்லை என்று கூறுகின்ற நிஷ்கலம் நிராகாரம் என்ற இடங்களில் எல்லாம் என்ன சொல்ல வருகிறது? நாம் பழகிப் பழகி உடனே உருவம் உண்டு என்று படித்ததும் வழக்கமான உருவம் வடிவம் என்பதைக் கற்பனை செய்வோமே அந்த மாதிரியான பழக்கங்களைத் தள்ளுபடி செய்கிறது. நீ பார்த்த உருவம் போல் இல்லை. நீ அறிந்த வடிவம் போல் இல்லை. ---

சரி அதற்கு ஒரேயடியாக அருவம் என்று சொல்லிப்போகலாமே? என்றால் அது அசம்பாவிதத்தில் கொண்டு போய் விடும். அசம்பாவிதம் -- Impossibility;

அதுவுமின்றி ஸ்ரீவைஷ்ணவத்தில் சித், ஜடம், ஈச்வரன் என்று தத்வங்கள் மூன்று. மூன்றும் நித்யம். சித் -- ஜீவன்; ஜடம் -- அசித்; ஈசுவரன் -- பரம சேதனன்.

பரம்பொருளுக்கு ஐந்து வ்யூஹ நிலைகள் உண்டு. பரத்வம், வியூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை.

பரத்வ நிலையைச் சுட்டும் வியன்விண் பெருமானார் இங்கு சாடலுக்கு இலக்காகிறார். பரம்பொருளின் பரத்வ நிலையாகிய பெரும் மேன்மை நிலைக்கு என்ன மதிப்பு? அது எப்படி உண்மையான சிறப்பைப் பெறுகிறது? தான் மேன்மை என்று அங்கேயே பீடு திகழக் கிடந்தால் யாருக்கு என்ன போயிற்று? அவ்வளவு பெரியவன் தன்னை தாழ விட்டுக்கொண்டு மனிச்சரும், குரங்கும், கானக் கழுகும், சலமிலா அணிலும், ஆனும், கன்றும், இடைச்சியரும், வேடரும், தயிர் வைத்த பாண்டமும், நின்ற மரங்களும் அனைத்தும் என்னுடையவன் இவன் என்று மெய்யே நினைக்கலாம்படி வந்து பழகும் எளிமைதான் அவனுடைய பரத்வத்திற்கே நிறைவைத் தருகிறது.

இல்லையென்றால் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். பரம்பொருள் வந்து 'நான் எவ்வளவு பெரிசு தெரியுமா? நீ ஒரு நாளும் என்னை அண்டக் கூட முடியாது. நீ ஓர் அற்பப் புழு. நீ எங்கே? நான் எங்கே?' இப்படியே பலவாறாக நிரூபித்தபடியே இருந்தது என்னில் நாமே என்ன சொல்வோம்? ஆம். உண்மை உனக்கும் எனக்கும் எந்த விதத்திலும் பொருததம் இல்லை. உன்னை நான் நினைப்பதுவும் வீண். அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை. ஏதோ எனக்குப் பொழுது போகாமல் இருக்கும் பொழுது எப்பொழுதாவது உன் நிலையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன். அதுவும் வேறு ஏதும் பயனுள்ள வேலையே இல்லை என்னும் போது. -- இப்படித்தான் சொல்லி அனுப்பிவிடுவோம்.

ஆனால் அவனுக்காகத் துடிதுடித்து அழுது அரற்றி பக்தி, கண்ணநீர் கைகளால் இறைக்கும் என்றபடியும், மண்ணை இருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும் என்றும், பனிவாடை ஈர்கின்றது, மணிமாமை தளர்ந்தோம் யாம் என்றும் கடல் புரைய ஆசை விளைய விண்ணைப் புரட்டும் வகையில் எழும் ஏக்கம் எல்லாம் எப்படி சாத்யமாகிறது? அவனுடைய சௌலப்யம் என்ற மஹாகுணம் ஒன்றினால்தான். ஏன் இது மஹாகுணம்? அவனுடைய மற்ற குணங்களையெல்லாம் அர்த்தம் உடையதாகச் செய்யும் பெருத்த மஹிமை வாய்ந்தது ஆகையாலே இஃது மஹாகுணம்.

இந்த மஹாகுணத்தை உள்ளபடி யோசித்தவர்கள் எல்லாம் இஃது ஒன்றிற்கே அடிமையானார்கள். பேச்சு மூச்சு இன்றி ஆறுமாசம் மோகித்துக் கிடந்தார் நம்மாழ்வார் 'வெண்ணையைக் கடைந்தவாறும்' எனற பாசுரத்தில். அதே பாசுரத்தை விளக்க வந்த கூரத்தாழ்வான் நெடும் போது கண்ணநீர் சொரிந்து, 'ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே ஆழ்வாருடைய பாவமும் இல்லாதே, நாம் அவருடைய பாசுரத்திற்கு என் சொல்வோம் ஆயினோம்? இற்றைக்கு விடல் ஆகாதோ?' என்று ஆரம்பித்த காலக்ஷேபத்தை அப்படியே நிறுத்திக் கண்ணீரும் கம்பலையுமானான் என்பதைக் கேட்ட ஸ்ரீராமானுஜர் 'ஆழ்வான் என்ன பரம சேதனனோ?' என்று வியந்தாராம்.

பக்தியின் முதிர்ந்த நிலைகளில் அவனுடைய பரத்வத்தைச் சுட்டிக்காட்டுவது கூட அவனுக்கு சகிக்கவொண்ணா பேச்சாக ஆகிறது என்பது ஆசார்யர்களின் திருவுள்ளம். திருப்பாவையில் 'உன் தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே' என்று ஆண்டாள் குறிக்கின்ற சிறுபேர் என்ன என்று கேட்ட ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் (ஆசார்ய ஹ்ருதயக் காரர்) கண்ணனின் பரத்வ நிலையைக் குறிப்பதான ஸ்ரீமந்நாராயணன் என்ற பெயர்தான் சிறுபெயராம். கோவிந்தா கோபாலா என்று இடையர் கூப்பாடாய்க் கூப்பிடுவதற்குப் பதில் தன்னை பரத்வ நிலையாக்கி அந்நியப் படுத்துவது அவன் முகம் கன்றிப்போகச் செய்கிறது என்று அனுபவிக்கிறார் ஆசார்ய ஸார்வபௌமர்.

*** 

பரம்பொருளை உணர்த்த ஒரு குறியீடு

கம்பன் கவிதையின் மாட்சிக்கு உரைகல்லாக ஓர் இடம் இராமகாதையில்.

கவிதையை கவிஞன் எழுதுவது என்பது மாறிக் கவிஞனைக் கொண்டு கவிதை தன்னை எழுதிச் செல்லும் இடங்கள் கவியின் பூரிப்பு பூரணம் அடையும் இடங்கள். அப்படி ஓர் இடம் --

யுத்த காண்டத்தில் அனுமன் மருந்து கொணர அனுப்பப்படும் கட்டம். அனுமன் மருத்து மலையைக் கொணரச் செல்லும் காட்சி.

அண்ணலுக்கான குற்றேவல் என்றதும் தொண்டுக்கே நிலைத்தவன் விரையும் விரைவு எப்படிப்பட்டது என்பதைச் சொல்லவந்த கம்பர், 'மேகத்தின் பதம் கடந்து, வெங்கதிரும், தண்கதிரும் விரைவில் செல்லும் மாகத்தின் நெறிக்கு அப்பால்' செல்லும் வெகத்துடன் செல்லும் சொல்லின் செல்வனைக் கண்டு வியக்கின்றார்கள் வானவர்கள் என்கிறார்.

வானவரினும் மேல் நிலையில் உள்ளவர்களோ அனுமனைப் பார்த்து 'யாரிவன்?' என மயங்குகிறார்கள். அதைக் கம்பன் விவரிக்கும் கம்பீரம் அழகியது.

உலகப் பொருட்களை உவமையாக்கி தத்துவப் பொருட்களை உவமேயமாய் விளக்குதல் வழக்கம். ஆனால் இங்கே கம்பனோ தத்துவப் பொருட்களை உவமானம் ஆக்கி அனுமன் என்னும் உவமேயத்தை விளக்குகிறான்.

அனுமன் சென்ற வேகத்தில் அந்த விரைவும், பொலிவும் மிக்க காட்சியைக் கண்டவர்கள் சிலர் அந்தக் காட்சிக்கு உரு உண்டு என்றார்கள். எதைப்போல்? கடவுள் காட்சிக்கு உரு உண்டு என்று சில முனிவர்கள் சொல்வது போல்.

உரு என்று சொல்ல முடியுமா? அது ஒரே ஒளிமயம் அல்லவா? கடவுளைப் பற்றியும் இப்படித்தானே சொல்வார்கள். அனுமன் சென்ற வேகத்தில் அவனைப் பற்றியும் இப்படித்தான் சொன்னார்கள்.

உரு என்றோ ஒளி என்றோ கூறுவதினும் 'ஒளிர்கின்ற அருவ மேனி' எனலாம் என்றார்கள். கடவுளா? அனுமனா?

சிலர் சொன்னார்கள் - அண்டத்துக்கு அப்புறம் நின்று, அதாவது அண்ட இயக்கத்தில் உள்ளே பற்றாமல் சுதந்திரமாய் நின்று, இந்த உலகத்தை ஆக்குகின்ற மூல காரணமான 'கரு' என்றார்கள். கடவுளையா? அனுமனையா?

சிலரோ 'ம் ம் ம் இதெல்லாம் இல்லை. நாம் சொல்லும் அனைத்தைக் காட்டிலும் வேறான மற்று ஒன்று என்றார்கள்.

சொன்னவர்கள் எல்லாம் யார்? இந்த உலகம் அனைத்தையும் தெரிந்தவர்கள், வான நாட்டினர்க்கும் மேல் உறையும் பெருமை மிக்கோர்.

இவர்களே கடலைக் கடந்து சென்று செரு வென்ற அனுமனைப் பற்றி அவன் நிலை ஒன்றும் தெரியாதவர்களாகிச் சொல்பவர்கள்.

உலக காரணமான பரம்பொருளைக் காட்டி அனுமனின் பொலிவையும், வேகத்தையும், அவன் தொண்டின் சிறப்பையும் விளக்குவதில் கம்பரின் உள் கருத்து என்னவாக இருக்கும்?

*
உரு என்றார் சிலர் சிலர்கள்;
ஒளி என்றார் சிலர் சிலர்கள்;
ஒளிரும் மேனி அரு என்றார்
சிலர் சிலர்கள்;
அண்டத்துக்கு அப்புறம் நின்று,
உலகை ஆக்கும் 'கரு' என்றார்
சிலர் சிலர்கள்;
'மற்று' என்றார் சிலர் சிலர்கள்;
கடலைத் தாவிச் செரு வென்றான்
நிலை ஒன்றும் தெரியகில்லார் -
உலகு அனைத்தும் தெரியும் செல்வர். 

*
(யுத்த காண்டம், மருத்துமலைப் படலம் )


***

சங்கத் தமிழ் மூன்றும் தா!

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை. பிராட்வேயில் பாரி நிலையத்தில் போய்த் தேடி அரிய பழம்பதிப்புகள் சில சங்க இலக்கிய நூல்களையெல்லாம் ஒரு சிறு பண்டிலாகக் கட்டி, பாரிஸ் கார்னரில் பஸ் ஏறினேன். ஏறிப் போய் உட்கார்ந்து, பஸ் கிளம்பும்வரை நூலைப் பார்க்கலாம் என்றால் மேலே வைத்திருந்த பண்டில் அபேஸ்!. நூல்கள் கிடைத்த கிறக்கத்தில் ஏற்பட்ட கவனப் பிசகு. ஆனாலும் ஆற்றவில்லை. மனமோ புலம்பிக் கொண்டிருந்தது. மனப் பாரத்தை இறக்கச் சிறிது கற்பனையைக் கலந்து இதைச் சில ஆண்டுகள் முன்னர் எழுதியிருந்தேன். அதாவது அந்த நூல்களின் கட்டைத் திருடிக் கொண்டு போனவன் ஏதோ என்னவோ என்று பார்க்கையில் என்ன பாடு பட்டிருப்பான் என்று என் கையாலாகாத்தனத்திற்கு ஒரு மாற்று உற்சாகமான தொனியில் எழுதி வருத்தத்தைப் போக்கிக் கொண்டேன். இலக்கியத்தின் பலமே அதுதானே!

அப்போது தி நகரில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தேன். அக்கம்பக்கத்து அறைகளில் இருந்தோர் யாராவது பேச்சுத் துணைக்கு இருந்து கொண்டே இருப்பார்கள். அன்றைக்கு என்று பார்த்து யாரும் இல்லை. சரி தமிழில் சுக்ல யஜுர் வேதம் புத்தகம் வாங்கி நாளாகிறது. ஓர் ஓட்டு ஓட்டுவோம் என்றால், சுருவம், வாஜஸ், சோமம், யூபம் என்று ரகஸ்யப் பேச்சாகப் போய்க் கொண்டிருந்தது. வெளியிலும் மாலை மயக்கம். படிப்பதும் ரகஸ்யம் என்றால், என்னவோ ஒரு மாற்று இருந்தால் தேவலை என்று எண்ணி இரண்டு தெரு தாண்டி இருக்கும் பிள்ளையார் கோவில் வரை போய்விட்டு வரலாம் என்று சென்றேன்.

உங்களுக்கு இப்பொழுதே ஒன்று சொல்லிவிடுகிறேன். பிள்ளையார் எனக்கு ப்ரத்யக்ஷம். அதாவது ஊர்க்கதை எல்லாம் வம்பளக்கும் அளவிற்கு பேச்சுத் தொடர்பு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஏதோ நீங்கள் நல்லவர்கள் ஆகையால் உங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறேன். யாரிடமும் சொல்லாதீர்கள். அப்படி மீறி நீங்கள் சொன்னால் உங்கள் வீட்டில் மூஞ்சூறு வந்து பயமுறுத்தும். ஜாக்கிரதை. இதெல்லாம் தேவ ரகசியம். யாருக்கும் சொல்லக் கூடாது.

போய் அமர்ந்ததும் பிள்ளையார் என்னைக் கண்டுகொள்ளவில்லை. நான் கொஞ்சம் கனைத்து, ஏதோ சுலோகம் எல்லாம் முணுமுணுத்துப் பார்த்தேன். ம் ம் ஆனை முகனார் பாரா முகமாய் இருந்தார். சரி ஏதோ தேவ காரிய அவசரம். ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று நான் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு பல யோசனையில் ஆழ்ந்தேன்.

அப்பொழுது சிறிது நேரம் கழித்து, பூஜகரிடம் ஒரு குரல் கூறியது. அதோ அந்தக் கம்பத்துப் பிள்ளையாண்டானிடம் இந்த ப்ரஸாதத்தைக் கொடு என்று. நம்மவர் குரல் என்று தட்டியதும் திடீர் என்று திரும்பிப் பார்த்தேன். பூஜகர் 'இந்தாங்கோ! ப்ரஸாதம்' என்று கொண்டு வந்தார். 'யாராவது உமக்குச் சொன்னாரா ப்ரஸாதம் கொடுக்கச் சொல்லி?' என்றேன். 'யாரும் சொல்லலையே. நேக்குத் தோணித்து. அடிக்கடி வருவேள் பார்த்திருக்கேன். பிரதக்ஷிணம் பண்ணிட்டு பிள்ளையாரப்பனை நெடுநேரம் பார்த்துக் கொண்டு நின்று விட்டு தூணில் சாய்ந்து விடுவீர்கள். சரி அதான் கொடுக்கலாமேன்னு தோணித்து'. கணபதி குறும்பாகச் சிரித்தார்.

இங்க தானே இருப்பேள். சித்த பார்த்துக்கோங்கோ.தோ கடைவரைக்கும் போய்ட்டு வந்துட்றேன். இங்க விபூதி பிரஸாதம் வச்சுருக்கேன். யராவது வந்தா எடுத்துக்கட்டும்.

சரி.

பூஜகர் போனதும் 'என்ன இப்பத்தான் மூடுக்கு வந்தாப்புல இருக்கு' என்றேன்.

ஆமாம். ரொம்ப பெரிய மனுஷன் ஆயிட்டே போல இருக்கு. ஆளையே காணும்.

இல்லங்காணும் வெட்டி அலைச்சல். அயர்ச்சி. அதான் வந்து உம்ம தொந்தரவு பண்ண வேணாமேன்னு.....

சரி ஏதாவது கதை சொல்லுய்யா கேட்போம் - என்றார் கணபதி.

ஓய்! உம்ம கிட்ட கதை சொல்றதுக்கு வியாசராலத்தான் முடியும். நான் ஒரு நடந்த சம்பவம் சொல்றேன்.

ம் ம் பேஷ் பேஷ்...என்னது அது?

அந்தச் சம்பவத்துக்குத் தலைப்பு கூட வைத்திருக்கேனே...'தமிழைத் திருடாதே!'

சூப்பர்! ஆரம்பமே களை கட்றது....என்ன சம்பவம்?

அதாவது ஒரு நாள் கடற்கரைக்குப் போயிருந்தேன். ஓர் ஓரமா உட்கார்ந்திருந்தப்ப சில அடிகள் தள்ளி கட்டுமரங்களுக்குப் பின் சில ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இரு இரு ஏதாவது காதல் கத்திரிக்கான்னு ஆரம்பிக்காத....

சுவாமி நான் தான் கற்பனை இல்ல, நடந்த சம்பவம்னு சொல்ரேனே....அப்புறம் எப்படிக் காதல் பத்தி வரும்.?

சரி சொல்லு....

அவர்களில் ஒரு பேர்வழி சொல்கிறான் --

டேய்! ஒயிங்கா மருவாதியா அன்னிக்கு எத்தினி தேரிச்சுன்னு சொல்லிடி...அல்லாங்காட்டி மவனே டங்குவார் அந்துடும்...

தமிழ் எவ்வளவு அழகான மொழி தெரியுமா...சங்கப் புலவர்கள் வளர்த்த தமிழ்...

தோ பாரும் குறுக்கப் பேசக் கூடாது...அப்புறம் எனக்குக் கதை சொல்ர மூடே போயிடும்....

சரி சரி தொடர்ந்து சொல்லு....

அப்ப அந்தப் பதில் மருவாதி சொல்கிறான் --

ரெஸம்மாலும்டா..புல்லயார் சத்யமா...அத்தினியும் பொஸ்தகம்டா...

இன்னொரு மருவாதி --- ஏன் இன்னா மேட்டரு?...த பாரு....இந்த டபாய்க்கரதெல்லாம் நம்குல்வே வச்சுக்கினன்னு வய்யி..பேஜாராப் பூடும்...பார்த்துக்கொ...

இல்லடா அவந்தான் லூஸு கன்கா ஒளர்ரான்னா நீயும்...அத்தைனியும் பொத்தகம்டா....அந்தப் பேமானி மட்டும் என் கயில்ல கெட்ச்சான்,...மாவ்னெ....

சரி சரி நீ இரு....தோ பாரு...இன்னா பொத்தகம் சொல்லு...

நான் சரியாப் பார்க்கல்லடா.....அந்தக் கட்டை பிரிச்சா என்னன்னவோ கீது...ஏதோ சங்கொ லெக்கியம்...

அக்ஹஹஹஹ்ஹா டேய் நாயி...சொல்ரதுன்னா பொய்யி சோக்கா சொல்னும்....இன்னா...எங்க திருப்பி சொல்லி...

ச்ங்கொ லெக்கியம்....

டேய் பார்ரா தெருவல்வரு சங்கொலக்கியம் பட்சாராண்டா....ஏய்...ஏய் இங்கன பாரு...அப்டியே மூஞ்சில குத்தினன்னு வய்யி....

டேய்....ரெஸமாலும்டா...சொன்னா நம்புடா...

சரி..நீ இரு.....இரு இரு...

நீ இன்னா இதுக்கு உல்லார வர்ர?...தோ பாரு நீயும் இவன் கூட்டா/...

இல்லடா இரு...டேய் மச்சி...இங்க பாரு...இங்ஜ்க பார்ரான்னா ...அந்தப் பொத்தகம் பேரெல்லாம் 5நிமிட் டைம் தரேன்...நாவம் படுத்திச் சொல்லி....

இன்னா/....

அகநானூறு....

டேய்...கன்க்குல வய்யி ..வருதா இப்ப உன்மை...ஒரு 400 ரூவா இல்ல கன்க்குல வய்யி அப்பரம் பார்ப்போம்/// சொல்டா மேல 

பொரநானூரு.....

இப்ப ஒரு 400ஆ/// எவ்வலவோச்சி...800 ம் மேல

ஐங்குருநூரு...

டேய் செம துட்டு...நாயி புலுகுது பாரு...ம் ம்

எட்டுத்தொக...

சரி 8000...அப்டியே மூஞ்சில போட்ரா நாயை...

பத்துப்பாட்டு...

யம்மா...10000 மா? டேய்...

அப்ரம் பத்துப்பத்து...குர்ந்தொகை...

ஓ பத்து பத்தா சில்ரை காசா?

டேய் கில்லாடிடா நீ? அப்டியே கேட்டு உன்மையை வாங்கிட்டியே....

இல்ல இல்ல இரு....400...ஒரு நானூரு...800..அப்ப்ரம் 500....1300ஆச்சா...அப்ரம் 8000....9300 ரா?..அப்பறம் 10000....19300 ஆ? அப்பரம் சிலரை பத்து பத்தா சரி விடு அந்த நாயே எடுத்துண்டு ஒழியட்டும்....

டேய் இந்தப் பார்ரா...20000 ஆச்சு...நம்ம கண்டிசன்படி எங்க ஷேரைக் கொண்டு வந்து கொட்த்தீன்னா இனிமே நீ எங்களோட பிக்பாக்கட்டுக்கு வரலாம்...இல்லைன்னு வய்யி..நீ எங்க பொயக்கறன்னு பார்த்துட்ரோம்...

டேய் அதல்லாம் பொத்தகம்டா....நம்புடா...

தோ பாரு வீன் பேச்சு வேனாம்...எங்ஜ்க தொழில்லாம் விட்டு உன்கிட்ட கூவிக்கின்னு இருக்க முடியாது...ஷேர் வந்தா மவ்னே நீ பொழச்ச...இல்லன்னு வய்யி...பார்த்துக்க,....வாடா இவன்கிட்ட நின்னு மன்னாடிக்கின்னு....

இவன விட்டுவிட்டு மத்த மருவாதியெல்லாம் எழுந்து நடந்தாங்க. இவன் தனியாவோ கூட ஒரு கூட்டாளியோ...பொலம்பிக்கிட்டு இருந்தான்...

அந்த தாடிக் காரன் எங் கைல கெட்சான்னு வய்யி..அவன...இல்ல மச்சி பொத்தகம்தானே எவன் எடுக்கப் போரான்? பேசாம அப்டியே இருந்துச்சுன்னு வய்யி நாம் உசாரா போய்டுவோம்...இது என்னவோ பொட்டலம் கட்டி வச்சுருக்கோ சொல்ல...என்னவோ ரூபா கட்டுதான்னு நெனச்சி எடுத்துடேன்பா....எல்லாம் தமிய்லெக்கியம் பொத்தகம்...நம்ம பிரனன வாங்குதுங்க....

ஒன்னு முடிவு பன்னிட்டேண்டா...மவ்னே தமிழ மாத்திரம் திருடக் கூடாது...பாரு படா பேஜாரு.....

பிள்ளையாரப்பன் குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டிருந்தார். 'கவலப் படாதே...அந்த சங்க இலக்கியம் எல்லாம் வேற புத்தகங்கள் உனக்குக் கிடைக்கப் பண்ணுகிறேன்.'

ஆஹா தன்யோஸ்மி...

சம்பவம் உண்மைதானே?

உண்மை மாதிரிதான். இல்லையென்றால் வரம் கிடைத்திருக்குமா?...

அடப் போக்கிரி....

அதற்குள் பூஜகர் வந்துவிட்டார். எங்கள் சங்கேதமும் நின்றது.

***

பக்தியின் மகிமை

ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்:

அழகின் மயக்கு

அனைவரும் எனக்கு ஏங்கிடுவர்
அழகின் உருவெனத் தாம்புகழ்வர்
ஆயினும் உன்னை அணைதலே வாழ்வென
ஆயிழை வந்தேன் ஹரிதாஸா !
அன்பெனை ஏற்பாய் ஹரிதாஸா !

நிச்சயம் ஏற்பேன் பெண்மணியே !
தீக்ஷை இதுவும் முடிந்தவுடன்
மூன்று லக்ஷம் ஜபம் ஹரிநாமம்
முடிந்ததும் உன்மனம் நிறைவேறும்.
அதுவரை பெண்ணே துளஸியை வணங்கி
அமர்ந்து உரைத்திடு ஹரிநாமம்

ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல்
ஹரி ஹரி ஹரி போல் ஹரி போல் போல்

முனிவனே உன் ஜபம் முடிந்ததுவா?
கனிந்திட நேரம் பிறந்ததுவா ?

பெண்ணே ! பொறுமை. முடிந்துவிடும்.
எண்ணத்தில் நீயும் ஹரிபோல் போல்.

மூன்று நாட்களும் கழிந்தன
முதல்வன் நாமமே ஒலித்தது
முனிவன் எழுந்தான்
மாதவ முரளியின் ப்ரேமையினில்

மங்கை எழுந்தாள்
மனமாசு அகன்றாள்
முனிவன் திருப்பதம் தான் பணிந்தாள்

'ஐயனே ! என்னை மன்னிப்பாய்.
ஆசைக்கும் காசுக்கும் விலையானேன்
வேசையெனும் சொலுக்கிலக்கானேன்.
பொறாமைகே நான் பணியானேன்.
பொறுத்தருள்க எம் புண்ணியனே !'

ஹரியின்நாமம் உரைத்ததும் உன்னை
கோவிந்தன் ஏற்றான் அஞ்சாதே !
பொய்மை அகன்றது புண்ணியம் பிறந்தது
உய்வகை ஆகும் ஹரிநாமம்
தெய்வத் திருவருள் வாழ்வு தொடர்ந்திட
தொடர்ந்திடு என்றும் ஹரிநாமம்
இவ்விடம் உன்னிடம் ஆகிட என்றும்
பவபயம் பொன்றப் பாவனம் ஆம்.

ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல்
ஹரிஹரி ஹரிஹரி ஹரிபோல்போல்

***
(ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் மிகுந்த அன்புக்கும், மதிப்பிற்கும் பாத்திரமான ஹரிதாஸர் ஒரு யவனர் )


கண்ணை மூடு! கண்ணைத் திற !

பக்தி என்றால்
அது கண்ணை மூடிக்கொண்டு செய்வதா?

அல்லது கண்ணைத்
திறந்து கொண்டு செய்வதா?

அனைத்து உலகும் அவனுடைய திருமேனி என்றால் கண்ணை மூடினால் என்ன? கண்ணைத் திறந்தால் என்ன?

கண்ணுக்குப் புலப்படும் காட்சி ப்ரபஞ்சம்; அகத்தில் துலங்கும் மானத ப்ரபஞ்சம்
எல்லாம் அவன் விபூதிதானே.
இங்கு விபூதி என்றால் சாம்பல் அன்று. விபவம் என்றால் அவனுடைய வெளிப்படையான தோற்றம்.
விபூதி என்றால் அவனுடைய
வெளிப்பட்ட சம்பத்து. 

உலகம் என்ற அவன் உருவைக் காணப் பயின்றுவிட்டால்
பின்னர் வாழ்பவன்,
வாழப்படும் உலகம்,
உலகத்துப் பொருள்கள் எல்லாம்
அவன் ஆகிய ஒன்றில் அமிழ்ந்து விடுகின்றன.

*

(ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் அந்திம லீலையில், அவர் ஸ்ரீகிருஷ்ண விரஹ தாபத்தால் (ஸ்ரீ கிருஷ்ணைக் காணாத பிரிவின் வேதனை) ராதையின் மனோபாவத்தில் முற்றித் தன்னை மறந்து துடித்துக் கொண்டிருந்தார். அணுக்கச் சீடர்கள், பக்தர்கள் கண்ணில் வைத்துக் காப்பாற்றிய பொழுதினும் ஒரு நாள் காணவில்லை.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அணுக்கன் கோவிந்தனுக்கும், ஸ்வரூப தாமோதரருக்கும் ஒரு சந்தேகம். கடலின் கருமை வண்ணத்தைக் கண்டு கிருஷ்ணன் என்று மயங்கி கடலில் விழுந்து விட்டாரோ என்று துணுக் என்றது.

கடல் பக்கம் பார்க்கலாம் என்று வரும் பொழுது பீதியடைந்து ஒரு மீனவன் வாய் குழறியபடித் தனனை மறந்து கிருஷ்ண நாமம் உரக்கக் கூவியவாறு ஏதேதோ உளறியபடித் தள்ளாடி வந்ததை நின்று கேட்கின்ற சமயம்......)

*
வலையில் சிக்கிய பூதம்

கட்டுமரம் செலுத்திவந்தோம்
ஏலேலோ எலேலோ
கண்ணிவலை வீசிநின்றோம்
ஏலேலோ எலேலோ
பெரியமீனு சிக்கிருச்சோ
ஏலேலோ எலேலோ
அரியபரிசு நமக்கல்லவோ
ஏலேலோ எலேலோ

சாதுமீனு போல இருக்கு
ஏலேலோ எலேலோ
ஏதும்வம்பு பண்ணலையே
ஏலேலோ எலேலோ
கள்ளவகை மீன்தானோ
ஏலேலோ எலேலோ
உள்ளமெல்லாம் துள்ளுவதேன்
ஏலேலோ எலேலோ

வயிறுநிறைஞ்சு பார்த்ததில்ல
ஏலேலோ எலேலோ
வாழ்க்கைநிறைஞ்சு காண்பதென்ன
ஏலேலோ எலேலோ
உயிருக்குள்ள ஒளிர்வதென்ன
ஏலேலோ எலேலோ
மயிலிறகு ஆடக்கண்டால்
ஏலேலோ எலேலோ

வச்சிரம் வயிரமீனு கெண்ட கெளுத்தியினு
வாய்வார்த்தை போனதென்ன
ஏலேலோ எலேலோ

உச்சி குளிர்ந்திடவே ஒருபேரு கிருஷ்ணாவென
உயிரூத்தாய் பாய்வதென்ன
ஏலேலோ எலேலோ

தாகம் எடுக்கல்லியே வயிறும் பசிக்கல்லியே
தவிப்புமட்டும் ஏறுவதேன்
ஏலேலோ எலேலோ

தன்னை மறந்தநிலை தான் அவர்க்கே ஏங்கும் நிலை
என்னிடத்தில் எழுந்ததென்ன
ஏலேலோ எலேலோ

கண்ணன் என்னும் கரும்பூதம்
கடலில்வந்து பிடித்ததய்யோ
உடலில் புகுந்து நின்று
உள்ளெல்லாம் ஆட்டுதய்யோ

ஊராரே உறவினரே
உற்றவரே மற்றவரே

கடலில் நான் பிடிக்க
வலையில் அது கிடக்க
உடலில் புகுந்ததென்ன
உள்ளத்திலே மிகுந்ததென்ன

ஒருகோடி நாமசெபம்
கிருஷ்ணனை உரைக்கும்வரை
உள்ளிருந்து ஆட்டுகின்ற
ஒருபூதம் விரட்டிடவே
உருவேத்தும் மாந்திரிகன்
உள்ளானோ இல்லானோ

கள்ளம் கபடு எல்லாம்
கால்பறந்து போகையிலே
விள்ளாத ரகசியங்கள்
விளங்குகின்ற வேளையிலே..

ஐயய்யோ சாமீமாரே
அம்மா அய்யாமாரே
மையிருட்டு வேளையிலே
கைவலையில் சூனியந்தான்
எய்தவன்யார் எனக்குள்ளே
மெய்யெழுந்து ஆடுகின்ற
மயிற்பீலி பேயிதற்கே
மருத்துவனை நாடியேநான்
போயாகணும் சாமீ -- நாளை
போணியாகணும் சாமீ !

*
ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தன் நிலை இழந்து ஸ்ரீகிருஷ்ணனுக்காக ஏங்கி, ஸ்ரீஜகந்நாதனின் கொடிமரத்தின் பக்கமாக நின்றபடி பாடிக்கொண்டிருக்கிறார். 

*

என்று உனைக் காண்பேன் ஜகந்நாதா?
இன்று எனக்கருளாய் மமநாதா 

ராதாகாந்தா வ்ரஜ பாலா
கேசவ முகுந்த முரளி மனோஹரா

அன்று நீ திரிந்தாய் பன்னிருவனங்களில்
கன்று காலிகள் மேய்த்துத் திரிந்தாய்
என்றும் துலாலியின் இனிமையுகந்தாய்
இன்று எனை நீயும் ஏனோ மறந்தாய் ?

பிரிவினில் துடிப்பேன் கோவிந்தா
பரிவுடன் அருள்வாய் கோபாலா
எரிகின்றது உடலெங்கும் கோவிந்தா
என் கண்காண வருவாய் ஸ்ரீகிருஷ்ணா

கிருஷ்ண முராரீ ! முகுந்த முராரீ !
கோபால கோவிந்த ராதா விஹாரீ !

*

(பட்டிக்காட்டுப் பெண் ஒருத்தி ஸ்ரீஜகந்நாதனைப் பார்க்க வேண்டி ப்ரயாசை பட்டுக் கூட்டமாக இருந்ததால், அங்கு ஏறி இங்கு ஏறி, ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் தோளில் கால் வைத்துக் கொண்டு கொடிமரத்தின் பக்கம் எம்பி ஜகந்நாதனை தரிசிக்கிறாள்.....)

ஐயா கன்னய்யா
சுகமா சொல்லய்யா?
வெய்யில் கொளுத்தையிலே
காடு மேடு திரியாமல்
எண்ணை தேச்சு குளிக்கிறியா?
என்னைக் கொஞ்சம் நினைக்கிறியா?
மண்ணைக் கொஞ்சம் தின்னுப்பிட்டு
மாமிகிட்ட உதை வாங்குறியா?

ஐயா கன்னய்யா !
அண்ணாரு தான் சுகமா?
ஒய்யாரமாக நீரு
எங்க காட்டுப்பக்கம் வருவியளே !
ஏனய்யா காணவில்ல?
எங்க எண்ணம் தோணவில்ல?

வேகாத வெய்யில்ல நான்
உனக்காக இங்கு வந்தா
ஊர்கூடி வச்சுகிட்டே
ஓராட்டம் போடுறீரு
மாராப்பு போடையிலே
உன் நினைப்பு குத்துதய்யா
என் நினைப்பு முள்ளாச்சோ?
எங்களை நீ வெறுத்தாச்சொ?
கண்களையே வெறுத்துகிட்டுக்
காணத்தான் ஆகிடுமோ?

கூட்டத்துல கூட்ட குரல்
கேட்டதுவோ கேக்கலையோ
வாட்டத்துல பாட்ட மழை
உன்முகத்தைப் பார்த்துப் புட்டேன்
ஏட்டெழுதி படிக்காக
என்னமோ உனைப் பாடுறாக
காட்டுமணல் குஞ்சத்துல
கண்டதெல்லாம் மறக்காத
வாட்டம் மிகுந்திருச்சா
வாருமய்யா வாஞ்சையில.... 

*
(அணுக்கன் கோவிந்தன் விரட்டப் போக, ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தடுத்துத் தம் தோளை அலுங்காமல் வைத்திருந்து தீனசுரத்தில் பாடுகிறார்)

கார்மேக வண்ணைக் கண்டாயோ அம்மா?
பார்புகழும் மன்னனைப் பார்த்தாயோ அம்மா?
யார்பெற்ற புண்ணியளோ?
எங்குற்ற விண்ணியலோ?
நின்பாத தூளிதனை
நான் பெறவே கொடுத்துவைத்தேன்.

*
ஐயய்யோ சாமீ ! அபசாரம் சாமீ !
அடியள் நான் பாக்கலையே, ஆகாது சாமீ !
மன்னிக்கணும் சாமீ!
மனமறிஞ்ச குத்தமில்ல
கன்னய்யாவைக் காணவேண்டி
கண்மறைச்சக் குத்தமிது

பெரும்பெரிய பண்டிதரு
அரும்பெரிய ஞானியரு
தருமதுரை செல்வந்தரு
தரணிவேந்தர் வீரர் எல்லாம்
கூடி யிருக்கையிலே
கோவாலு உள்ளிருக்க
பட்டிக்காட்டாள் நானும் வந்து
எட்டிஎட்டிப் பார்த்திருக்க
கன்னய்யன் கண்டுகிட்டான்
கண்ணடிச்சுப் போகச் சொன்னான்
எண்ணம்போல் வருவமின்னான்
என்னிக்குன்னு சொல்லல்லியே
உன்னிடம் ஏதும் சொன்னா -- சாமீ
ஊருக்கு சேதி சொல்லு
கண்ணனைக் கண்ணிமையா
கவனிச்சுக்க சாமீ நீயும்
கண்ணு முண்ணு தெரியாம
காலு வச்சு நின்னுப்புட்டேன்
கால்விழுந்து கும்பிடுறேன்
கருணை வையி சாமீ !
கண்ணின் இமையாகக்
கண்ணனைக் கருத்து வையி சாமீ !

***

உணர்வெனும் பெரும்பதம்

கவிதைகளில் பெரும்பாலும் ஒரு சொற்றொடர் ஈர்ப்பெல்லாம் கொண்டு விளங்கும். படித்தபின் மனம் அதைச்சுற்றியே வரும். வெறும் நேரத்திலும் வாய் அதை அசை போடும். சங்கப்பாடல்களில் அத்தகைய சொற்றொடர்களையே அந்தப் பாடல்களுக்குப் பெயராக வைத்திருக்கின்றனர். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் முதல் பாட்டு. அதில் அத்தகைய ஒரு சொற்றொடர். பாட்டு என்னவென்றால் 

வாடினேன், வாடி...
வருந்தினேன் மனத்தால்..
பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன்
கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி ஓடினேன். ஓடி.....
உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம்
தெரிந்து, நாடினேன்
நாடி, நான்
கண்டு கொண்டேன் நாராயணா என்னும்
நாமம்.

இந்தப் பாட்டில் 'உணர்வெனும் பெரும்பதம்' மிக அருமையான சொற்றொடர். உணர்வு என்னும் பெரிய பதம்-- இந்த இடத்தில் பெரியவாச்சான் பிள்ளை காட்டுகின்ற பொருள் மிக அருமையானது. அவர் காட்டுகின்ற மேற்கோள் ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் 11வது ஸ்லோகம் விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாநமார்ஜிதம் ப்ராப்தம் என்றால் அயத்ந லப்தம் தானாகவே முயற்சியின்றி கிடைத்தது என்று பொருள். விஜ்ஞானமாகிய இந்த உணர்வு முயற்சியின்றி தானே கிட்டுகின்ற ஒரு ஸ்தாநம், ஒரு நிலை; இந்த உணர்வால் வேறு ஒன்று அடையப்படவேண்டியது என்று இல்லாமல் இந்த உணர்வே சென்றடைய வேண்டிய பெருநிலை. சென்றடையும் வரை உணர்வு இல்லாமலா இருக்கிறோம்? அஃதன்று. தானே கிட்டவேண்டிய ஒரு நிலையை முயற்சியால் சாதிக்க நினைப்பது, தானே பெரும்பயனான ஒன்றை மற்றொன்றை அடையும் சாதனமாக நினைத்தல், இவை நீங்கி உணர்வை உள்ளபடியே உணர்வது, அதுவே 'தெரிந்து' என்பது.