Friday, July 21, 2023

கண் மருத்துவம்

கண் மருத்துவம் என்றதும் என் நினைவிற்கு வருவது சிறு வயதில் தந்தை திரு வேணுகோபால் அவர்களுடன் டாக்டர் எம் ஆர் எஸ் வாஸ் அவர்களின் வீட்டிற்குச் சென்றது. டாக்டர் வாஸ் அவர்களின் ராம பக்தி, ஆஞ்சநேய பிரேமை. அவர் என் தந்தையிடம் காட்டிய வாத்ஸல்யம், என் தந்தை அவரிடம் கொண்டிருந்த மிகுந்த அன்பும். மதிப்பும். அடுத்தது டாக்டர் அவர்களின் மகன் டாக்டர் ராமகிருஷ்ணன். அவர் என் தந்தையைத் தன் அண்ணனைப் போல் கருதிக் காட்டிய (இன்றும் அந்த நினைவு மாறாமல் பசுமையான) பாசம். டாக்டர் வாஸ் தொடங்கி வழிவழியாக இன்று டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்களின் மகன் டாக்டர் ஸ்ரீராம்கோபால், அவரது துணைவியார் டாக்டர் சுப்ரஜா வரையில் எல்லாம் கண் மருத்துவர். 

நாற்பத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு வழியாக வெற்றிகரமாக என் தந்தையிடம் எனக்குக் கண்ணாடி போட வேண்டிய தேவையை வலியுறுத்தி, அவரை ஒப்புக்கொள்ள வைத்து, டாக்டர் ராமகிருஷ்ணனைச் சென்று பார்த்தது இப்பொழுது அதே இடத்தில், நவீனக் கட்டிடத்தில் பீரியாடிகல் செக்கப் செய்ய அமர்ந்திருக்கும் பொழுது நினைவிற்கு வருகிறது. நான்கு வருஷங்களுக்கு முன்னர் செக்கப் செய்தது டாக்டர் ஸ்ரீராம்கோபால். இப்பொழுது செக்கப் அவரது துணைவியார் டாக்டர் சுப்ரஜா. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி. ஆனால் பல கட்டங்களில் நடைபெறும் பரிசோதனைகளின் வேலைத்திறனில். அந்தத் தடங்கலே இல்லாத எஃபிஷியண்ட் நகர்வில் ஒரு மாற்றமும் இல்லை. கூடுதலாக நிறைய மின்னணு யந்திர ஆக்கம் கூடுதல் துணை அவ்வளவே. 

ஹாலில் மாட்டியிருக்கும் டாக்டர் வாஸ் அவர்களின் படம் வெறும் படமாக இல்லை. பிரஸன்னமாகவும் இருக்கிறது என்பதைத்தான் உணர முடிகிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***