Monday, November 11, 2019

ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகாநந்தர் பேரில் கட்டளைக் கலித்துறை

1)
துங்க மிகுத்திடு தேச பரப்பிதில் தீர்வெனவே
எங்கணும் ஓங்கிய ஏக்கமும் ஏற்றிடு ஏருருவாய்
கங்கையும் தங்கிடும் பிஞ்ஞகன் கூடவே காப்பிடவும்
வங்கமும் பெற்றது நல்வர மாமென வந்தவனே.

2)
வந்தனம் தந்து வரம்பல நல்கும் வளரிமையோர்
எந்தனம் என்று இயற்றிய மாதவம் எழிலுருவாய்
பந்தனை தீர பரதநல் நாட்டின் பரங்கதியாய்
வந்தனை அம்மா வரதனே ராம கிருட்டினனே

3)
கிருட்டினன் எங்கே விசயனும் அங்கே கலியுகத்தில்
உருவென வந்தார் உலகைப் புரந்தார் உணர்வெழவே
பருவடி வாகிப் பாரெலாம் காணப் பரமஹம்ஸ
குருவெனக் குலவும் குணவடி வாம்விவே கானந்தா

4)
அந்தமி லாதியில் அப்பரம் பொருளும் ஒன்றெனவும்
தந்தம் மதத்தினில் வந்தவர் செல்வதும் அங்கெனவும்
எந்த வழியிலும் எவ்வெவர் நிற்பதும் ஏற்பெனவும்
இந்த உலகில் இன்றுமே உணர இயம்பினனே

5)
இயம்பிய நற்பொருள் எங்கும் விதைத்த நரேந்திரனும்
தயங்கிய துய்ப்பினைத் தந்தவன் பின்னர் தடைவிதித்து
மயங்கிய மானிடம் வாழ்ந்திட வந்த மருந்தெனவே
அயன்படைப் பிங்கே அரியுரு என்றுணர் வித்தனனே.

6)
வித்தென இட்டவன் காளியின் பத்தன் விதிவசத்தால்
பித்தம் பிடித்ததும் பாரத மக்கள் சதிவசத்தால்
நித்தம் படும்பல அல்லலுக் கிங்கே மதியொளியாய்
உத்தமன் வந்தனன் உணமை உணர்த்தும் கதிரொளியே

7)
ஒளிக்குலம் ஓங்கிட ஓங்கிடும் உண்மையில் வேதமெலாம்
அளிக்குணம் ஓங்கிட ஓங்கிடும் தண்மையில் போதமெலாம்
நளிர்மதி ஓங்கிட ஓங்கிடும் கங்கைச் சடையினிலே
களிப்புனல் ஓங்கிட ஓங்கிடும் எங்கள் கதிப்பயனே

8)
பயனாய் பரதமா நாட்டிடைப் போந்தப் பழந்தவமாய்
அயனாய் அவதியில் வீழ்ந்திடும் நாட்டின் புனர்விதியாய்
சயமாய் சகமெலாம் ஆன்மிகம் நந்தும் சனாதனமாய்
தயையாய் உவந்தருள் தாகுர் நரேனின் திருவரவே.

***