Monday, November 11, 2019

ஸ்ரீராமகிருஷ்ணர் மீது சில பாடல்கள்

அனுஷ்டுப் என்னும் சந்தம் இரண்டு வரிகள் கொண்டது. ஒவ்வொரு வரியிலும் இரண்டு பாதங்கள். ஒவ்வொரு பாதத்திலும் எட்டு உயிரெழுத்துகள் இருக்க வேண்டும். இந்த ஓர் அம்சத்தை வைத்துத் தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணர் மீது ஒரு செய்யுள் செய்து பார்த்தேன். 

*
ஸ்ரீராமக்ருஷ்ணரை நினை
என்றென்றும் மாறாத நன்மை |
யாமங்களில் அவர் நாமம்
இருள் கடியும் நல்தீபம் ||

உலகாசைகள் மறையும்
உள்ளத் தூய்மையே விளையும் |
பகவத் பக்தி கனியும்
பரமஞானம் பொலியும் ||

பிரிவினைகள் அகலும்
பரிவுணர்வே திகழும் |
விரிந்த மனம் விளங்கும்
விவேகமதில் துலங்கும் ||


குறுகிய நோக்கம் மாறும்
குவலய நோக்கம் சேரும் |
வறுமை வறுமையாகும்
வாழ்வதே பெருமை ஆகும் ||

ராமக்ருஷ்ணரை நினைத்தால்
உள்ளப் பகைகள் ஒழியும் |
சேமம் அவர் திரு நாமம்
சிறப்புகள் எல்லாம் சேர்க்கும் ||

ஸ்ரீராமக்ருஷ்ணரை நினை
என்றென்றும் மாறாத நன்மை |
யாமங்களில் அவர் நாமம்
இருள் கடியும் நல்தீபம் ||

*
மனமே!
இன்று உனக்கு விடுமுறை.
தக்ஷிணேஸ்வரம், பஞ்சவடி,
குருதேவர் அறை,
அம்மா பவதாரிணியின் திருமுன்னர்,
ராதாகாந்தன் கோயில்,
பன்னிரு சிவனார்ச் சந்நிதி,
என்று சுற்றித் திரி;
சாண்ட்னித் துறையில் அமர்ந்து கொள்;
நள்ளிரவில் கங்கா நதியில்
அநாகத த்வனி கேட்கிறதா என்று பார்!
இருட்டில் எங்கு பார்த்தாலும்
பூசியிருக்கும் அந்தத்
தெய்விக முறுவல்;
பரநிலைப் பூவிதழ்
கசிந்த தேன் சொல்;
அஞ்சாதே!
பரவச நிலைகள் வரும் போகும்
வந்து கொண்டுமிருக்கும்;
கடல் பொங்கும்;

கரையாக இரு;
அன்றேல் கடலாக இரு.
கரை கிடந்த கிளிஞ்சல் பொறுக்கும்
அகங்காரத்தின் வாலில் கட்டிய
தகரமாய் அவதிப்படாதே!
பொறு! பொறு!
பொறுத்தார் பூமி ஆழ்வார்;
சப்த பூமிகளிலும்.

வானுக்கும், பூமிக்குமாக 
இன்று போக்கும் வரத்தும் இருக்கும்;
கமார் குளத்தின் கரையில்
குழந்தை ஒன்று சிரிக்கும்.

***

ஒரு மஹா சிவராத்திரி

ஒரு மஹா சிவராத்திரி.
பல்லாண்டுகள் முன்பு.
கமார் குளத்தின் கரையில்
கிராம நாட்டியக் குழுக்கள்
கண்விழிப்பைத் தெய்விமாக ஆக்க
எண்ணமிட்டபடிச் சுறுசுறுப்பில்;
சிவனாராய் வேடம் கட்டும் ஆள்
உடல் அசுகத்தில் படுத்துவிட்டார்.
கூத்து நடக்க வழியில்லை என்று
மக்கள் கவலுங்கால்
கதாயின் நினைவு வரச்
சிறுவனைக் கெஞ்சிக் கேட்டுச்
சம்மதிக்க வைத்தனர்.
மஹாபாவமும், ரஸராஜனும்
கைவந்த சிறுவனுக்குக் கேட்கவா வேண்டும்?
புலித்தோலை அரைக்கசைத்து,
மின்னார் செஞ்சடை மேல்
மிளிர் கொன்றை வைத்து,
இளமதியும், முதுநதியும்
தலையலங்காரமாக,
உடல் முழுதும் பூசிய திருவெண்ணீறு
கடலெனப் பொங்கும் பரவசத்தின்
கசிவாய்த் திகழ்ந்திருக்க,
கைகளில் எங்கும் அரவம் அணிசெய்ய,
ராம என்னும் தாரகம்
பூவிதழ் விரியும் சுரும்பார்க்க,
பொன்னார் மேனியனின்
மூன்றாம் விழி கண்வளர,
பொங்கும் அலைக்கேசம்
நம்முள்ளத்துள் ஊதியெழ,
நட்ட திருவடியும்,
நடமாடும் பேரடியும்
துட்டம் ஒழித்துத் தூய்மைதனை நாட்டிவர,
உள்ளப் பெருங்கோயில் 
ஊர்ப்பொதுவின் மேடையென,
கள்ளப் புலனைந்தும்
காளாமணி விளக்காகித்
தெள்ளத் தெளிந்தாரின்
சீவன் எனும் சிவலிங்கம்
சிற்றம்பல புளகத்தில்,
சிந்தையடங்கிச்
சைதன்யப் பெருவெளியில்,
அதிரும் பதம் வாங்கி
ஆடிவரும் ஐயன்,
மூவிலை வேல் தாங்கி,
முக்காலத்தின் மேலோங்கிக்
கூட்டத்தின் முன் நின்றவன் தான்,
வேட்ட மனிதகுலத்
தேட்டத்தின் விடையேறும் வல்லவனோ
விரியாப் புலர் முறுவல்,
விரிந்த கடைக்கண்ணில் புனலிழிய,
தெரிந்த கதாய்
தெரியாப் பெருநிலைக்கே
அறிந்த புலன் தாண்டி
ஆன்மிகத்தில் தான் நிலைத்தான்
நடிக்கவந்த நாதன்
நடிக்காத நடிப்பினிலே
நடிக்கும் எந்தன் உள்ளம்தான்
நடிக்கவே மறந்ததுவால் !

*
ஒன்று சொல்வாய்

ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்
வாடிவரும் என்மனத்தின் மருந்தாகித்
தேடிவரும் என் உயிர்க்கு விருந்தாகி
நாடிவரும் நற்கணத்தின் உருவாகிப்
பாடிவரும் பரமஹம்ஸத் திருவாகிப்
பையநடை இட்டுச்செல்லும் பாவனத்தின்
உய்வகையின் வார்த்தைகளில்
ஒன்று சொல்வாய் 

மெய்விதந்த பரவசச் சோபனத்தில்
தைவந்தத் தெய்விகத்தண் சொல்லமுதில்
ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்
ஓங்கிநிற்கும் உயர்தருவே ஒன்றுசொல்வாய் 
ஓங்காரப் பொருளாகி உலவிநின்ற
ரீங்கார வண்டாகிக் குலவுகின்ற
நீங்காத நன்மைதிகழ் நல்வாக்கருளி
ஏங்கும் எமதுள்ளப் பாலைமாற
தாங்குகின்ற அமுதமொழி ஒன்றைச்சொல்வாய்
ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்

***