Friday, January 19, 2024

ராம்போலாவின் துளஸி நிழல் - மூன்றாவது பகுதி

பக்தி பெரியதா? ஞானம் பெரியதா? 

ராம்போலா! 

முக்தி பெரியதா? பக்தி பெரியதா? 

ராம்போலா!

 

நாமம் பெரியதா? நாயகன் பெரியனா? 

ராம்போலா? 

சேமம் பெரியதா? சேவகம் பெரியதா? 

ராம்போலா! 

 

ஹோமம் பெரியதா? கானம் பெரியதா? 

ராம்போலா! 

பிரேமை பெரியதா? பிரயத்னம் பெரியதா? 

ராம்போலா! 

 

ராமன் பெரியனா? நாமம் பெரியதா? 

ராம்போலா! 

தியானம் பெரியதா? சரணம் பெரியதா? 

ராம்போலா! 

 

* 

பக்தியின் ஒரு துளி பார்த்தவர் அமிழ்ந்தார் 

பிரேமையில் மூழ்கியே முனிவரர் துறந்தார் 

ஜனகரும் தன்னைப் பக்தியில் இழந்தார் 

நன்மதி நலம்மிக நனிதிகழ் பக்தியே 

துளஸியின் உள்ளத்தில் சுடர்விடும் அறிவாய் 

 

பரதனின் பெருமையைப் பார்த்தது அறிவே 

திறமையில் சிறியது திகைத்தது நடுவே 

கவிமரபென்றே கவிழ்ந்தது தலையே 

பெருகிய ருசியந்த பரதனின் குணங்களில் 

பேச்சினை இழந்தது குழந்தைபோல் ஆனதே. 

 

மாசிலா மாப்புகழ் மதியெனக் கொண்டான் 

ஆசிலா பரதனின் சகோரமிவ் அறிவே 

தேசுடைச் சந்திரன் உதித்தது இதயத்தில் 

தேக்கிய காட்சியில் திறனழிந் ததுவே. 

 

பரதனின் இயல்வைப் புகலுதல் அரிதே 

பாரநல் வேதமும் பகரவொண் ணாதே 

அறிவின் ஆசையில் அடங்கவொண் ணாதே 

அண்ணலின் பக்தியை அடக்கவொண் ணாதே 

 

பரதனநற் புகழினைத் தியானிப் பதாலே 

பரமனின் பக்தியும் சித்திப் பதாலே 

பெரியவர் யாரெனப் பேதுற் றதாலே 

தெரியாத சிறுவன்நான் கேட்டேன் தன்னாலே 

 

* 

பக்தி பெரியதா? ஞானம் பெரியதா? 

ராம்போலா! 

முக்தி பெரியதா? பக்தி பெரியதா? 

ராம்போலா! 

ப்ரேமை பெரியதா? பரமன் பெரியனா? 

ராம்போலா! 

 

* 

நின் கருணை பெரியதே! கடைக்கண் பெரியதே! 

ராம்போலா! 

என் சிறுமை மறையுதே! சிந்தை தெளியுதே! 

ராம்போலா! 

உன் பெருமை நிழலிலே பரமன் வதியுமே 

ராம்போலா! 

என் ஒருவன் நுழைவினால் என்ன குறைந்திடும்? 

ராம்போலா! 

மன்னுல கெங்கணும் நிழலும் இல்லையே! 

ராம்போலா! 

கல்மனத்தினில் போட்டி நமக்குள் ஏன்? 

ராம்போலா! 

அன்பு உன்னதும் வன்பு என்னதும் 

பாகப் பிரிவினை ராம்போலா! 

அருளும் நின்னதே! அளியும் நின்னதே! 

அறியாமை என்னதே ராம்போலா! 

நீயும் வெறுப்பையேல் நிழலும் மறுப்பையேல் 

நடப்பது நடக்கட்டும் ராம்போலா! 

சேயும் அநாதையாய்ச் சகமெலாம் சுற்றிடச் 

சுகிப்பீரோ நீவிர் ராம்போலா! எனில்

சுகித்தே இருங்கள் ராம்போலா! 

 


துளஸியின் பேரைச் சொல் 

துவளாதென் மனமே 

அளப்பரும் துன்பென்றாலும் 

அவக்கடல் விழுந்துவிட்டாலும் 

களங்கமில்லாது நீ எழுந்திடலாகும்  

துளஸியின் பெயரைச் சொல் மனமே! 

 

தனுவொன்று ஏந்திய வீரன் 

அவன் தடமொத்தும் தனிப்பெருந் தீரன் 

அனுக்கிரகமே ஒரு வடிவாய் 

அவன் அன்பிற்குமே ஒரு பொலிவாய் 

மனிதர்கள் விலங்குகள் புட்கள் 

உயிர்க்குலம் முழுதுக்கும் புகலாய் 

அன்னையின் அண்மையங் கிருக்கும் 

அவன் அருளுக்கும் வண்மை தந்திருக்கும். 

 

இறப்பெனும் அச்சமிங் கெதற்கோ? 

இராகவன் வில்லொலி எதற்கோ? 

மறப்பெனும் மறலியில் விழுந்தோம் - அவன் 

நினைத்திட நிமிர்ந்து இன் றெழுந்தோம். 

துறந்தவர் தூயர்கள் எல்லாம் 

திடமுறச் சொன்னதும் பதர்க்கோ? 

அறம் தவம் அனைத்துமே அருளில் 

நிறம்பெறும் எனில் உயிர் விலக்கோ? 

 

துளஸியின் தருநிழல் அடைவோம் 

களிப்பெனும் கங்கையுள் குடைவோம் 

அளப்பரும் நன்மைசால் நாமம் 

அளிதவன் உரைத்திடு சேமம் 

நளிர்மதிச் சடையர்க்கும் நேமம் 

தளருயிர் தளைகளை தாமம் 

களரெனப் போனசில் காலம் 

உளரென ஆக்கிடும் நாமம். 

 

சொல்லிடு விடு எழு சுயநிலை உற்றிடு 

வில்விடு கணையென ராம்போலா 

மல்லிடு தடைகெடு மனநிலை பெற்றிடு 

கல்லிடு அணையென ராம்போலா 

அல்லிடு நிறம்கெடு அண்ணலை உற்றிடு 

புல்லிடும் காந்தமாய் ராம்போலா 

சில்லிடு பவக்குளிர் சிதறிடு சொல்லிடு 

நல்லடிக் காலமாய் ராம்போலா 

உள்ளிடு நல்லடி உண்மையின் பொன்னடி 

கள்ளமில் திருவடி ராம்போலா 

அள்ளிடு கரமெடு எனப்பரன் தூண்டிடு 

உள்ளத்தின் தாய்மையே ராம்போலா 

நள்ளிருள் பள்ளமாய்த் தள்ளிடும் மரணத்துள் 

அள்ளிடும் ஒளிக்கரம் ராம்போலா 

விள்ளற் கரியது வள்ளன்மை பெரியது 

தள்ளற் கரியன் நான் ராம்போலா 

உள்ளற் குரியது உவட்டாம லினியது 

உலகிலுன் பேரொன்றே ராம்போலா



உலகை மூடும் இருளைக் கண்டேன் 

உதயம் ஆகும் ஒளியைக் கண்டேன் 

அலகில் வானம் விரியக் கண்டேன் 

அகத்தில் நாணம் கவிழக் கண்டேன் 

உலகம் மறையும் ஒளியைக் காணேன் 

உயிரை மூடும் இருளைக் காணேன் 

விலகிப் போகும் விரகும் காணேன் 

வாழ்வே விரயமோ ராம்போலா 

 

காமம் என்பது கவரக் கண்டேன் 

கர்மம் என்பது தொடரக் கண்டேன் 

நேமம் என்பது நழுவக் கண்டேன் 

நாமம் ஒன்று நவிலக் கண்டேன் 

சேமம் என்றும் காக்கக் கண்டேன் 

சாமம் கடந்தும் செபிக்கக் கண்டேன் 

ஓமம் ஒன்றினை உளத்தில் கண்டேன் 

தாமம் உன்னது ராம்போலா 

 

ராமன் உன்னொடு பேசக் கண்டால் 

இளவல் அவனொடு நிற்கக் கண்டால் 

தூமொழி அன்னை துணையெனக் கண்டால் 

தொண்டர் குலாதிபன் காக்கக் கண்டால் 

ஏமம் அடைந்ததென் வாழ்வெனக் கண்டால் 

என்றும் உன்நிழல் ஒண்டிடக் கண்டால் 

ஆம்வகை அதுவே ஆம் ராம்போலா 

ஓம்பொருள் உவந்திட உரைக்கும் ராம்போலா. 

 

எங்கோ கிளம்பி எங்கோ போகும் நதியாய் ஆனது 

வாழ்க்கை இங்கு ராம்போலா 

எங்கு போனாலும் மங்காத நாமம் துணையாய் ஆனது 

உன்னால் இங்கு ராம்போலா 

எந்தெந்த தேசம் எந்தெந்த பிழைப்பு இளைப்பாறிடவே 

தண்ணிழலற்றோம் ராம்போலா 

வந்துன் துளசித் தருநிழல் அடைந்தோம் வாட்டமிலாது

தந்தருள் இன்னருள் ராம்போலா. 

 


மானதப் பொய்கை ஒன்று 

மானிடர் நன்மைக் கென்று 

மக்களின் மொழியில் தேக்கி 

மகத்தான வாழ்வ ளித்தாய் 

மங்காத புகழ்வி ளைத்தாய் 

 

எங்குலக் கோனாய் நின்றாய் 

கங்குலில் பகலாய் ஆனாய் 

காக்கின்ற கரமே யானாய் 

கனிந்தருள் புரிந்து நின்றாய் 

 

காகுத்தன் பரிந்து நோக்க 

இளவலும் இணைந்து நோக்க 

அகமகிழ்ந்து அன்னை நோக்க 

ஐயநீ மனம் கனிந்தால் 

பையல் நான் பிழைத்துப் போவேன் 

வெய்யவீண் பிறப்பிற்கே - என்னை 

விற்றதும் போதும் ஐயா 

கற்றதும் கபடம் கள்ளம் 

குற்றமோ குறைவிலாதாம் 

பற்றுகள் பறித்துத் தின்னும் 

உற்றநல் துணை ஒன்றேதான் 

உயிர்மொழி உரைத்தாய் ராம்போலா ! 

பயிர்தழை மழையாம் நாமம் 

ராமவென் றிரண்டெழுத்தில் 

சேமமே செய்தாய் ராம்போலா ! 

 


பொய்கை அமைத்தவன் 

பினாகபாணியா ராம்போலா ! 

அவன் உள்ளத்தில் உறைந்தது 

உன்மொழி கொண்டதோ ராம்போலா ! 

 

நன்மதி நிலத்தில் இதயத்தின் ஆழம் 

ராம்போலா ! 

வேத புராணங்கள் கடலெனச் சூழும் 

ராம்போலா ! 

ஸாதுக்கள் என்னும் கார்மேகம் பொழியும் 

ராம்போலா ! 

ராமலீலையே நீர்வளம் ஆகும் 

ராம்போலா !

 

புத்தி நிலத்தில் பொழிந்தது நன்னீர் 

ராம்போலா !

செவிவழி கொண்டது சிந்தையில் சிறந்தது 

ராம்போலா !

புவிக்குணவாகிட இதயப் பொய்கையில் 

கவிவடிவாகி நிறைந்த கற்கண்டது.  

ராம்போலா ! 

 

பொய்கையின் துறைகளோ நான்குரையாடல் 

ராம்போலா !

பறவைகள், முனிவர்கள், பார்வதி சிவத்துடன், 

துளஸி சாதுக்கள் தோய்ந்தவை நான்கு 

ராம்போலா ! 

காண்டங்கள் ஏழும் ஏழுபடிக்கட்டு 

காண்போம் ஞானக் கண்ணினால் அகத்தில்

ராம்போலா !

ஸ்ரீராமனின் மஹிமை அடியிலா ஆழம் 

ராம்போலா 

நின்மொழி அதுவே மீன்வடிவாகும் 

ராம்போலா !

 

சந்த மலர்கள் நடை மகரந்தம் 

சதுர்புருஷார்த்தம் ஞான விக்ஞானம் 

ராம்போலா !

நவரஸ ஜப தப யோக வைராக்யம் 

பொய்கைநீர் வாழும் உயிரினம் ஆகும் 

ராம்போலா ! 

 

நாமகானமே பட்சிகள் ஜாலம் 

ராம்போலா !

கரைகளில் சாதுக்கள் மாமரத் தோட்டம் 

ராம்போலா !

மக்களின் ஊக்கமே வசந்த பொற்காலம் 

ராம்போலா !

 

சமம் தமம் சுத்தி ஓதுதல் தவத்துடன் 

மனம் நிறை த்யானம் மலர்களாய் ஆகும் 

ராம்போலா !

ஞானமே பழமாம் 

ஹரிபத ப்ரேமை ரஸமாம் 

வேதங்கள் பாடும் 

பேதங்கள் ஓடும் 

ராம்போலா ! 

 

பற்பல கதைகள் 

கிளிகுயில் பட்சிகள் 

ரோமாஞ்சன மாக்கும் 

பட்சி யுல்லாஸம். 

ராம்போலா ! 

 

நிர்மல மனமே தோட்டக்காரன் 

நீர் எனும் ப்ரேமை பாய்ச்சும் வழியே 

நிமல நிதர்சந கண்கள் தாமே 

ராம்போலா ! 

 

திறம்படப் பாடும் சிரத்தை மிகுந்தோர் 

பொய்கையின் காவலோ ராம்போலா ! 

ஆதுரமுடனிதை அனுதினம் கேட்போர் 

தேவர்கள் உண்மையில் ராம்போலா !! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

 

***