Tuesday, January 14, 2020

எதிராஜுலு செட்டியார்


                              என்றோ   ஒருவர்  வெட்டிய  கேணி   வழிச்செல்வோர்   தாகம்  தணித்துக் கொண்டே   இருக்கும்.  யாரோ  ஒரு  மகராசன்  என்று  பொது  நன்றியாக  மாறி   தனிப்  பெயர்   மறைந்தாலும்  அந்த  நன்மை   மறைவதில்லை.  ஆனால்   தீமை  புரிபவரை   அந்தப்  படுபாவி என்று   கால  காலத்திற்கும்   தனிப் பெயராகவே    இகழ்தல்   நிலைபெறுகிறது.  ஊருண்  கேணியாக   வாழ்ந்தவர்களையும்   தனித்தனியாக   நினைவு  கொண்டு   வாழ்த்தினால்  என்ன?  வாழ்த்துவதில்  என்ன  சோம்பேறித்தனம்?
                                விசிஷ்டாத்வைத  தரிசனம்   ஸ்ரீராமானுஜர்  காலம்   தொடங்கி  எம்பெருமானார்  தரிசனம்  என்று  கொண்டாடப்பட்டது.  பின் வந்த  பெரியோர்கள்   ஸ்ரீவைஷ்ணவ  தரிசனத்தை  74  துறைகள்  கொண்ட  தொண்டனூர் ஏரி என்று  உருவகமாகச்  சொன்னார்கள்.   ஸ்ரீராமானுஜர்   தொண்டனூரில்   வெட்டிய  ஏரிக்கு   74   படித்துறைகளாம்.   அதேபோல்  74   சிம்ஹாஸனாதிபதிகள் என்னும்   ஆசாரியர்கள்   மூலம்   பரப்பப்பட்ட  ஸ்ரீவைஷ்ணவமும்  ஊருக்குப்  பொதுவில்   வைத்த ஏரியாக   உருவகித்தார்கள்.
                                திருவாய்மொழிக்கு   வ்யாக்கியானமாக  அமைந்த   பகவத் விஷயத்  தொகுதியும்   பின்  வரும்  சந்ததிக்காக  வைத்த   ஊருண்  கேணிதான்.  அதை   அச்சில் ஏற்றிய   ஆரம்பகாலத்து  அரையர்  பதிப்பு   முதலியவையும்  ஊர்ப்பொது  நீர்நிலைகளே.  1870ல்  வந்த   தெலுங்குலிபி   பதிப்பு  பகவத் விஷயம்,  15நூல்கள்   அடங்கியது  மிகப் பெரிய  ஊர்ப் பொதுக்  குளம். 1925ல்  ஸ்ரீ  சே.கிருஷ்ணமாச்சாரியாராலும்,   ஸ்ரீ வை மு  சடகோபராமானுஜாசாரியாராலும்  பதிப்பிக்கப்பட்ட   பகவத் விஷயம்   பிரஸித்தியானது.  ஊருண்  கேணியான  பதிப்பு.   இதைப்   பெற  நான்  முயன்ற  காலத்தில்,  எனது  நண்பர்   டி. ரமேஷ்   தமது   அத்தைவீட்டில்   அந்த   ஸெட்  இருப்பதாகவும்,  அத்தையிடம்  கேட்டு  பெற்றுத்   தருவதாகவும்  சொல்லி  அதன்படியே   பெற்றுத்  தந்தார்.   அந்த   ஸெட்   ஸ்ரீ  வி.  ஆர். எதிராஜுலு  செட்டியார்  அவர்களுடையது.   ஸ்ரீ  செட்டியார்  அவர்கள்   பேப்பர்  கம்பெனியில்  பெரிய  பதவியில்  இருந்தவர்.  உலகப் போர்  காலங்களில்   ஸ்ரீ அண்ணங்கராச்சாரியாருக்கு  பேப்பர்  தட்டுப்பாடு  இல்லாமல்  கவனித்துக் கொண்டவர்.    ஸ்ரீ  பகவத்  விஷயம்  காலக்ஷேப  கோஷ்டிகளை   1940,  1950  களில்   சைதாப்பேட்டை  வட்டாரங்களில்  நன்கு  நடத்தி   வைணவ  உணர்வை   வளர்த்தவர்.  என்றோ  இவர்  வாங்கிப்   பயன் படுத்திய   பகவத்  விஷயம்  நூல்  தொகுதி   இன்றும் என்  பயன் பாட்டில்   இருக்கிறதென்றால்,   அதற்குக்  காரணமான   ரமேஷின்  அத்தையை   நினைக்கவேண்டும்.   ஸ்ரீ  செட்டியார்  அவர்களது   மருமகள்  ரமேஷின்  அத்தை.  நன்மை என்னும்   ஜீவநதி  என்றும்   வற்றுவதில்லை.  ரமேஷுக்குத்தான்   பெரும்  நன்றி  உரித்தானது.  ஆனாலும்   அவருக்கு  நன்றி  சொல்லி   அந்நியப்படுத்திக்கொள்ள  என்  சுயநலம்  விடவில்லை.

மின்வெளிப் பரம்

மின்னாடும் பரவெளியில்
முன்னாடும் பரமனவன்
பின்நாடிப் பயின்றுவர
என்னாடிக் கண்ணகலக்
கிண்ணகமாய் ககனமுற
எண்ணாத வகையெல்லாம்
என்னாகத் தூறிவர
விண்ணாரும் வீதிகளில்
விரைசந்தில் விசைமுடிக்கி
விந்தை விரிநிகழாய்
வளையவரும் சொல்சொடுக்கி
திளைக்கத்தான் தீர்மானம்

மார்களித்த மகத்துவத்தில்
தைவந்த தீர்க்கத்தில்
மாசில்லா மோகத்தில்
பல்குணியாய்ப் பரமாகி
சித்தத்தின் திரையவிழ
வைகல் விடியொளியில்
ஆனின்ற தத்துவமாய்
ஆடிவரும் சித்துருவாய்
ஆவணிந்த அரனுக்கும் போட்டிக்கடை போடும்
ஐப்பசியால்
புரட்டி வரும் வாசியினை
கார் திகையா தீபமென காத்த கையால்
தயங்காத திறனில் திறக்கின்ற தெருவூடே
தட்டழுத்தித் தடை தாண்டி
தெரிகின்ற காட்சியினில்
தெரியாத விடை வேண்டி
புரிகின்ற சாலமெல்லாம் புன்கோலமாகிவிட
அறிகின்ற புலனருவி அறியாத புலமுருவி
ஆர்வத்தீ முனையுமிழும்
ஆகத்தேன் மலர்த் துளியில்
பாழ்குடித்த மிச்சமிது பக்குவமாய் வைத்திடுவீர்!
ஆழ்ந்திருக்கும் பொருளுமுண்டு அகழ்ந்து கொள வாழ்ந்திடுவீர் !!

எது தவம் ?

'தபித்தல்' 'வேகுதல்' என்ற சொல்லடியாகப் பிறந்தது தவம். மிகுந்த முயற்சியையும், சிரமத்தையும், பொறுமையையும், அதற்கெல்லாம் வேராக தொடர்ந்த ஆர்வத்தையும் சுட்டி நிற்பது தவம் என்ற சொல். நோக்கமும், திசையும், நசையும் முன்னிடு பொருளாய்க் கொண்டு முனையும் மானத வியாபாரம் தவம். இலக்கை நோக்கி வளைத்த வில் விடுத்த கணையாய் தைப்பது தவம். இனிவருங்காலம், இயலுமிக்காலம், கரந்துசெல் காலம் எனப்படு மூன்றையும் கணத்தினில் நிறுத்தி, காரண காரிய உருளையின் அச்சில், கற்பனை ஆணி கொண்டடித்திடும் கொல்லமை தவம். கணம் ஒன்றில் கட்டுண்ட முப்புரி காலம், கணக்கெடுத்தால் காட்சி கடந்த கற்பனையே என்ற கொள்கை புரிவது தவத்தின் விளைவு. தன்மயமாய் நிற்கும் ஒன்று தானடையத் தகுந்தது எது என்று தேடி தள்ளும் கோலங்கள் குவியும் களத்து மேடாகித் தோற்றுகிறது உலகம். தேடித் திரிந்த சிற்றுயிர், நாடி நயந்த நோக்கமும், அதற்கு ஆடிச் சுமந்த கோலமும், ஆதிப் புள்ளியில், தான் நின்றவாறே இயற்றும் கற்பனை என்று புரிந்து கொள்ளும் கணத்தின் அகநிலை ஞானமென்றால், புறநிலை சொல்கதுவிச்சூழா சுகமென்னும் இலக்கியத்தின் விதைப்பற்று. அந்த சொல்லொணா மர்மம் அவிழ்ந்ததில் விளைந்த ஆதி நகையில் முகிழ்த்த ஹாஸ்யத்தின் விரிவாய்ப் பெருகுவன இலக்கியங்கள். ஞானம் செயல் மடிந்து சையோகித்த மௌனம் விளைநிலமாய் முப்போகம் காண்பது கலை. ' பேசாப் பொருளைப் பேச நான்துணிந்தேன்' என்று கவி கூறுவதும் அப்பொழுதே.
படைப்பின் தத்துவத்தில் பட்டு, புறநிலையில் கொண்ட தாக்கம் மறைய, மனத்தடத்தில் மடங்கா கற்பனையில் ஒரு படைப்பே நிகழ, முத்தியும் வேண்டா முனைப்பில் ஒரு கணமே காலமாய்க் கோலம் கொள்ள, கலை விரித்த சொல்லரங்கில் வட்டாடிப் பொழுதயரும் கடைவாயின் அடைக்காயில் ஏறிய செம்மை விளக்கும் சிருஷ்டியின் மர்மம் தவத்தின் ஆணிவேர். போ போ போ வாயாட நேரமில்லை. வந்தவரை பற்றில் வை. அது போதும்.
பி.கு.
'தவம்'என்றதிருலோக சீதாராமின் பாடல் கடைவாய் மெல்ல இதோ:
கோலம் மிகுந்து ஒளிகூட்டி மயக்கமும் காட்டிஎழும்
காலம்என்றே பெருங் கற்பனைக்கே மயலாகி நின்று
சாலப் பலபல நாடகஞ் சார்ந்து சதாசிவமாய்
ஞாலத்திசை வெளியே படர்ந்தேங்கும்
உயிரினமே!!!
கூட்டிப் பெருக்கிக் கழித்து வகுத்தும் கணக்கறியாப் பாட்டில்
படுதுயராயின ஏதும் பகுத்தறியாது
ஏட்டில்பெருக்கிஎழுதியஎல்லாம்
இலக்கியமாய்ப் போட்டுவைப்போம்.
இது போதும்.
இதே நாம் புரிதவமே!

} ஒரு தவத்தின் குரல் {

Monday, November 11, 2019

பொங்கும் நினைவுகளில் பொங்கல்

வலமாக முதல் படம் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ அண்ணங்கராசாரியர். நடுவில் படம் ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாசாரியர். வலப்பக்கம் மூன்றாவது படம் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனர் ஸ்ரீ  உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். இப்படி ஒரு படம் முகநூலில் பார்த்தேன்.

இதில் ஸ்ரீஅண்ணங்கராசாரியாரின் உரைகளை ஸ்ரீரங்கத்தில் சிறுவயதில் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். நேரில் சந்தித்து உரையாடியதில்லை. ஆனால் அவருடைய மகத்தான பணிகளின் பலன்களை வாழ்வில் அனுபவிக்காத நாள் இல்லை. அவர் நடத்திவந்த இதழான ஸ்ரீராமாநுஜன் என்பது இதழ் வடிவில் இருக்கும் ஒரு பல்கலைக் கழகம் எனலாம். வடமொழி காவியங்கள், சாத்திரங்கள், தமிழ் மொழியின் நயங்கள், ஆழ்வார்களின் பாசுர நுட்பங்கள், வேதங்களில், வேத பாடங்களில், வேதாந்த வியாக்கியானங்களில் என்று எங்கெங்கோ மறைந்திருக்கும் மிக நுட்பமான குறிப்புகளை கடல் பொங்கினால் போல் அவருடைய நூல்களில், அந்தப் பழைய இதழ்களில் பரந்திருக்கக் காணலாம். வடமொழி, தமிழ்மொழி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் அபரிமிதமான பாண்டித்யம் மிக்கவர். அனைத்து மொழிகளிலும் அவர் இயற்றியிருக்கும் நூல்களே, அதாவது பிரதியே கிடைக்காமல் போனவை போக, கணக்குக் கிடைத்தவை 500க்கும் மேல் என்று ஒரு கேடலாக் என்னிடம்  இருக்கிறது. வடமொழி, வேதம், வேதாந்தம் என்று பெரும் பாண்டித்யம் மிக்கவராக இருந்தும் ஆழ்வார்களின் ஈரத்தமிழை அநவரதம் முழங்குவதிலேயே, கோயில்களில் விடாமல் கூடித் தமிழ் வேதங்களை முழங்குவதையே தனது ஜீவாதுவாக (உயிர்ப்பற்று) கொண்டிருந்தார் தம் கடைசி வாழ்நாள் வரையில். அவருடைய கடைசி நாளைய பிரார்த்தனை, அவரே எழுதியது, 'அடுத்த பிறவி வேண்டும். அதுவும் அரையர் சுவாமியாகப் பிறக்க வேண்டும். கோயில்களில் ஆண்டவனின் முன்பு ஆழ்வார்களின் அமுதத் தீந்தமிழை கானம் செய்து ஆடிப்பாடித் தொண்டு செய்து, அப்படி ஒரு பிறவி தமக்குத் தந்துவிட்டுத்தான் ஆண்டவன் தமக்கு திருநாடு எனும் பேற்றை அறுதியாகத் தர வேண்டும்.' என்னும் உளப்பூர்வமான வேண்டுதலைக் கொண்டிருந்தார் என்றால் அவருடைய பெருமையை என்னென்று சொல்வது!

அடுத்து நடுவில் படத்தில் இருப்பவரோ வேளுக்குடி வரதாசாரியர் என்னும் பெருந்தகையான பேரறிஞர். வாக்கில் அமுதம் பொழியும் கடல் போன்ற அழகிய பேச்சு எழில் கொண்டவர் என்று அவருக்கு ஒரு பட்டம் உண்டு - வாக் அம்ருத வர்ஷி - என்று. இது எழுத்துக்கு எழுத்து உண்மை என்பதைச் சிறுவயது முதற்கொண்டே உணர்ந்து அநுபவித்தவன் நான். ஸ்ரீரங்கத்தில் மேலச்சித்திரை வீதி பூர்வ சிகை ஸ்ரீவைஷ்ணவ சபையின் புண்ணியம், இவர்களின் சொற்பொழிவுகளை நட்ட நடு வீதியில் அமர்ந்து கேட்கும் படி அவ்வளவு சுலபமான பாக்கியம்! உண்மையான பாண்டித்யம் என்றால் என்ன, அதுவும் பண்டைய கல்விமுறையின்படிக் கசடறக் கற்ற குரவோர் என்பவரின் படிப்பு எவ்வண்ணம் இருக்கும் என்று நேரடியாக ஒருவரைக் காண வேண்டும் என்றால் அது இந்த சுவாமிதான். இவரோடு எனக்கு நன்கு பரிச்சயமும் உண்டு. வாக்குவாதம், ஆர்க்யுமண்ட் எல்லாமும் உண்டு. அதையெல்லாம் சகித்துக்கொண்டு, அப்படியிருந்தும் என்னிடம் அன்பு காட்டினார் என்றால் இவருடைய உளப்பாங்கை என்ன என்று சொல்ல! தம்புச் செட்டித் தெருவில் இருந்தார் என்று நினைவு. திடீரென்று ஒரு நாள் ஆபீஸுக்கு போன் வந்தது. யார் என்றால் சுவாமி. எனக்கு அதிர்ச்சி. 'என்ன பேச்சு காணும்? ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் பற்றி இங்கு சாரிடீஸ் ஒன்றில் உபந்யாஸம். அதான் உமக்குச் சொல்லலாம் என்று பண்ணேன்'. ஆஹா வந்து விடுகிறேன் என்று சீக்கிரம் கிளம்பிப் போய் விட்டேன். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைக் குறித்து ஒரு புதிய உலகமே திறந்ததுபோல் இருந்தது. உபந்யாஸம் முடிந்ததும் நேரடியாக வந்தார். 'எப்படி இருந்தது?' நான் அவர் பேசும் பொழுது கூறிய சிறப்புக் குறிப்புகளைச் சிலவற்றைக் குறிப்பிட்டு, 'இதையெல்லாம் கவனித்தேன்' என்று சொன்னதும் பெரும் உவகைச் சிரிப்பு ஒன்று. ஆழ்பொருள் சொல்வோருக்கு அவற்றைக் கவனிக்க ஆள்  இருக்கிறது என்னும் போதுதான் என்ன உவகை! அதைப் பார்க்கக் கொடுத்து வைத்தேன். அவருடைய கடைசி காலத்திற்கு முன் ஓரிரு தினங்கள் முன்புதான் அவருடைய வீட்டில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய நூலகத்தை நன்கு செப்பனாக முறைப் படுத்த வேண்டும் என்று. 'ஸ்ரீரங்கத்திற்குப் போகிறேன். போய்விட்டு வந்து விடுகிறேன். ஆரம்பிச்சுடுவோம்' என்றார். அவ்வளவுதான் அந்த யுகம் முடிந்தது.

சிறு வயதிலிருந்து எனக்கு ஒரு கெட்ட பழக்கம். இது போல் வயதானவர்களுடன் பெரியோர்களுடன் பழகுவது. அதனால் அவர்கள் போகும் போதெல்லாம் என் வாழ்க்கை வெறுமை அடித்துப் போய் என்னுடைய ஏதோ ஒன்றை இழந்த துக்கம் கவியும் நிலை மீண்டும் மீண்டும் தொடர்ந்த வண்ணம்! தஞ்சை திரு டி என் ஆர் சொன்னார் ஒரு முறை.- அவருக்கு கவிஞர் பெருமான் திருலோக சீதாராம் கூறினாராம். - 'நீங்க வயதானவர்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டால் ஒரு தொல்லை. இழப்புகளின் துயரத்தை மீண்டும் மீண்டும் அடைய வேண்டியிருக்கும். அதற்கு நெஞ்சத்தை என்றும் தயார் பண்ணிக் கொள்ளுங்கள்' என்று. என்ன தயார் பண்ணிக் கொண்டால் என்ன அந்தத் துயரம் அடிக்கும் போது வேதனைதான். பாருங்கள்! இவர்களுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? என் வாழ்க்கையும், சிந்தனைகளும், பாதைகளும் எங்கே! இவர்களின் சம்ப்ரதாய ரீதியான வித்வத்தும், வாழ்நெறியும், அவர்களின் உலகமும் எங்கே! ஆனால் இன்று இவர்களின் படங்களை ஃபெஸ் புக்கில் பார்த்ததும் என்னவோ தெரியவில்லை. நெஞ்சைப் பிசைந்துகொண்டு வருகிறது. இவரைப் போலவே இவர் கூடவே கல்வி கற்று அபரிமிதமான வித்வானாக விளங்கியவர் சதாபிஷேகம் சுவாமி என்று சொல்லப்பட்டவர். ஆழ்வார் திருநகரி கோயிலில் நம்மாழ்வாரை உள்ளபடியான விக்கிரக அழகை வெளிக்கொணர்ந்தவர். சாத்திரங்களில் மிக நெருடலான நுணுக்கங்களுக்கும் மிக அழகாகவும் எளிமையாகவும் விளக்கம் சொல்லிப் புரிய வைக்கும் பொறுமையும், கனிவும் மிக்கவர் என்பது எனது அநுபவம். அவர் கடைசி காலங்களில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த பொழுது நான் அலுவலகத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விட்டேன் அவரைப் பார்க்க. அதுவரை முடியாமல் பேசவும் இயலாமல் இருந்தவர் என்னைப் பார்த்ததும், 'எங்கடா வந்த?' என்றார். நீங்கள் மருத்துமனையில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதான் லீவு சொல்லிவிட்டு வந்து விட்டேன்' என்றேன். மனிதர் அழாக்குறை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தொடர்ந்து சாத்திர நுணுக்கங்களை எனக்கு விளக்கிய வண்ணம் எழுந்து உட்கார்ந்து விட்டார். அவருடைய மனைவிக்கோ ஒரே ஆச்சரியம்! என்னது இது என்னது இது என்றவண்ணம் இருந்தார். கமல்ஹாஸனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தின் காட்சி மாதிரிதான் இருந்தது. இந்த சுவாமியோடு, அதாவது சதாபிஷேகம் சுவாமியோடு ஒரு சமயம் கிட்டத்தட்ட ஒரு வாரம் மாலை 6 மணி தொடங்கி இரவு 12 மணிவரையிலும் கூட சாத்திர விஷயங்களில் வாதம், கேள்வி, ஐயம் தெளிதல்.

மூன்றாவது படத்தில் காண்பவர் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் என்னும் இதழை அவருடைய தகப்பனார் ஸ்ரீ உ வே ஸ்ரீநிவாஸய்யங்கார் ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தவர். இன்று ஸ்ரீவைஷ்ணவத்தின் சான்று நூல்கள், உரை நூல்கள் மிகக் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைத்தவண்ணம் இருப்பதற்கான காரணமே இந்தப் பெருந்தகையாளர்தான். ஆம். தமது தந்தை பெரும் மூலதனத்தை உண்டாக்கி ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திற்காக என்று ட்ரஸ்ட் உண்டாக்கி, அதன் மூலமாக ஸ்ரீவைஷ்ணவ நூல்களை வெளியிட்டுப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரு முயற்சி இவரால்தான் நன்கு வளர்ந்து செழிக்கும் விதத்தில் பாதுகாக்கப்பட்டு நடைபெற்றது என்பது பலரும் அறிந்ததே. புத்தகங்களை மிகவும் திறமையாக திறனாய்வுப் பதிப்பாக வெளிக்கொணருவதில் இவருக்கு இணை வேறு எவரும் இலர். ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர் பதிப்பு என்பது ஹால்மார்க். அதை வைத்துக்கொண்டு இனி மேலே ஆய்வுகள் செய்யலாம் என்று அறிஞர் குழாம்கொண்டாடும் தன்மைத்து அவருடைய பதிப்புத் திறமை. அவரோடு மிக நெருங்கிய பழக்கம் எனக்கு. கல்லூரி படிக்கும் காலம் தொட்டே, ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த இயக்க ஈடுபாடு காரணமாக அவரோடு எனக்கு வாக்குவாதங்கள், (உண்மையாகச் சொல்லப் போனால் அவருடைய அறிவுரைகள்) நிகழ்ந்த காலம் தொடங்கியே நல்ல பழக்கம் உண்டு. அந்த வாக்குவாதங்களைத் தனியே எழுதியிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர்தான் திருநாடு அடைந்தார். அவரோடு பழகிய நாட்கள், பேசிய பேச்சுகள், கருத்தாடல்கள், இவற்றைத்தவிர அவருடைய விளக்க நூல்களும் பதிப்பு நூல்களுமே எனக்கு மட்டுமின்றி பலருக்கும் புகலாக இருக்கும் நிலை எல்லாம் சேர்ந்து அவர் போன போது என்னைச் செயலிழக்கச் செய்து விட்டது. மீண்டும் அதே தொடரும் துயரம்.

ஒரு காலத்தில் பொங்கல் என்றால், போகிப் பண்டிகை என்றால் என்னைப் பொறுத்தவரையில் இது போன்ற பெரியோர்களைச் சென்று வணங்கி, பேசிக் கொண்டிருப்பதும், வாழ்த்து பெற்று வருவதுமாக இருந்தது. இன்று யாரிடம் போவது யாரைப் பார்ப்பது...! வெறுமனே பொங்கல் மட்டும் வந்து பார்த்து விட்டுப் போகிறது. தேஹி நோ திவசம் கதா: - பார்த்துக் கொண்டிருக்கும் போதே போயின நாட்கள் - என்று உத்தரராம சரித சம்புவில் வரும் என்று ஸ்ரீஅண்ணங்கராசாரியார் எழுத்துகளில் படித்த நினைவு.

'எங்கடா வந்த..' என்று நினைவுகள் கேட்ட வண்ணம் இருக்கின்றன. எவ்வளவோ நூல்களை படியெடுப்பார் நாளொரு பொழுதும் படியெடுக்க நிறுத்திச் சொல்லியவண்ணம் அவர் சாய்ந்து இருந்த மரக்கட்டில் இன்று போனாலும் அந்த உறையூரில் இருக்குமோ. ஆனால் அதுவும் நினைவுகளைச் சுமந்த வெறும் கட்டிலாகத்தான் இருக்கப் போகிறது. ஒரு வேளை நினைவுகளின் பொங்குவதும் ஒரு விதப் பொங்கல்தானே! 'எங்கடா வந்த..' என்று காலம் கேட்கும் வரையில் இப்படித்தான் இருக்குமோ...!

***

கடவுள் என்னும் வலை

கடவுளை ஒவ்வொருவர் ஒவ்வொன்றாக உருவகம் செய்துப் பேசியிருக்கின்றனர். ஆனால் கடவுளை யாரேனும் 'வலை' என்று உருவகம் செய்து பேசியிருக்கிறார்களா தெரியவில்லை. பேசியிருக்கக் கூடும்.

ஆனால் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பேசியிருக்கின்றார்கள்.

அது போல் ஆழ்வார்கள் பேசியிருக்கின்றார்கள்.

ஸுதந்து: , தந்துவர்த்தன: என்று இரண்டு திருநாமங்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உண்டு எனச் சொல்கிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். ஸுதந்து: அழகிய வலை, தந்து வர்த்தன: - வலையை வளரச் செய்வோன், பெருகச் செய்வோன். அல்லது பெருகிய, வளர்ந்த, நீளும் வலையே அவன் என்கிறது.

யோசித்துப் பாருங்கள் - GOD IS A WEB and that too A WEB THAT IS GOING STRONGER AND STRONGER.

ஆழ்வாருடைய பாடல் -

தன்னுள்ளே திரைத்தெழும்
தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து
அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து
நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற
நீர்மை நின்கண் நின்றதே.

(திருச்சந்தவிருத்தம்)

பீட்டர் ஸ்டெர்ரி என்பார் கூறுவார் - படைப்பு என்பது கடவுளின் முகம் போர்த்திய சலாகை. சலாகையில் அந்த முகத்தின் சாயல் படிந்துள்ளது.

ஷபிஸ்தாரி கூறுவது - புள்ளியில் இருந்து கோடு; கோட்டில் இருந்து வட்டம்; வட்டம் முடிந்தால் கடையும் முதலும் இணையும்.

ஷ்வாங்ஸீ கூறுகிறார் தாவோ பற்றி -

கடலினும் அளத்தற்கரியது
கணம் தொறும் முடிவில் தொடக்கம்
அனைத்துக்கும் அறிவீந்தும் அந்தம் அறியா நெறி
முழுமையானவரின் தாவோ
இயல்பு மங்காது திகழும் தன் இயக்கத்தில்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*திருவரங்கர் திருத்தாளச்சதி

திரு சந்தக்கவி ராமசாமி (ஸ்ரீரங்கம்) அவர்கள் ஒரு கூட்டத்தில் சொன்னார். -- "திருத்தாளச்சதி என்ற சந்தத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே பதிகம் பாடியிருப்பது திருஞானசம்பந்தர் மட்டுமே. அந்தச் சந்தம் அமைந்திருக்கும் விதம் இந்தப் பாடலில் தெரியும்.

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
 தாமேபேணா தேநாளுஞ் சமணொடு உழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
 கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
 போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
 காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

வேறு யாரும் அந்தச் சந்தத்தில் முயற்சி செய்யவில்லை".-- என்றார்.

கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்து அதே சந்தத்தில் ஒரு பதிகம் பாடி அவருக்குப் போனிலேயே பாடிக் காண்பித்தேன். உடனே மெயிலில் அனுப்பும்படிக் கூறியவர் பல கூட்டங்களிலும் தமிழில் சந்தங்கள் பற்றி உரையாற்றும் போதெல்லாம் திருஞானசம்பந்தர் பதிகத்தை ஒட்டி இந்தப் பதிகத்தையும் பாடிக்காட்டி அவருக்கு அடுத்து இவர்தான் இந்தச் சந்தத்தில் பாடியிருக்கிறார் என்கிறாராம். பாவம் கள்ளம் கபடம் இல்லாத நல்ல மனிதர்!. )

திருத்தாளச்சதி என்ற அந்தச் சந்தத்தில் பாடிய பதிகம்தான் 'திருவரங்கர் திருத்தாளச்சதி' என்னும் பத்து பாட்டு. அதை இவண் பெரியோரும், நண்பர்களும் தாம் உகப்பர் என்ற நசையாலே இடுகின்றேன். பிழையென்று கருதின் முனியாது பொறுத்தருள்க.

*** 
1)
ஸ்ரீரங்க மாறெங்கும் திருவளர்சோ லைகளாம்
ஆறேபாயா ஊற்றேயாய்த் தடமணல் திடரிடவும்
சேரங்க மாறோடு நலந்திகழ்வே தங்களாம்
தாமேகாணா காட்டேயாய் தரிசனம் தருவதுவாம்
வாருங்கள் மாலோடு வலமிடமாய்ச் சுற்றுணா
வாராமாறா வேவாநோய் வருவினைத் துரிசறவும்
சேருங்கள் சேலோடு கயலயல்பாய்ப் பைங்கணாள்
நேரேமாலே சேர்ப்பாளாய்த் தருமருள் திருமகளே.2)
போகாமல் தேடாமல் பொறுமையுடன் புங்கமார்
பாகார்தேன்வாய்ப் பேராச்சொல் பிதற்றிடும் புரிவளையீர்
வாகான கோல்நாடிப் படர்கொடியும் பற்றுமே
ஏகாதேநீ நேர்ந்தேயுன் உளந்தனை விடுத்தனையே
சோகாத்தென் காவாதென் சுடரடிக்கே சுந்தரீ
சேர்ந்தேயேகாய் சேராத இழவெலாம் இனித்தீர
மீகாமன் கைசேர்ந்த கலமெனவே காத்திராய்
மோகாவேசம் மீறாதே மனமருள் திருமகளே.

3)
அட்டிட்ட பால்சூடு பொறுக்குமென்று பாங்கராய்
தாமேதேராத் தாயாகித் தருவுளக் கனிவினிலே
தொட்டிட்ட தொல்லார்வம் தொடரவும் தாங்கொணாத்
தோயாநின்ற மாயற்கே தொடர்ந்தநம் வழிபடலே
விட்டிட்டு முற்றும்நம் உளமயல்சேர் பற்றெலாம்
தாளேநேர்கோள் என்றேயாம் தடங்கடல் கிடந்திடுமால்
மட்டிட்ட செம்பாத மலரடிக்கே ஆட்களாய்
மாலேயாகி மாயாத உளம்தரும் திருமகளே.


4)
பட்டர்கோன் ஆண்டாளும் பரமனருள் மாறனும்
சேர்ந்தேகண்டார் மூவர்தாம் திருவருள் நெருக்குறவே
இட்டத்தால் ஈசன்தான் சுருட்டியதன் பாம்பணை
மாலேதானே மாலாகித் தொடர்ந்திடும் மழிசையர்கோன்
கட்டிட்டே பூத்தொண்டு கதியருள்தாள் தூளியும்
விட்டேமாற்றிக் கட்டிட்ட மதிள்திருக் கலியனையே
கொட்டிட்டுப் போருக்கே புறப்படும் குலப்பெருமாள்
மீண்டேவந்த சேனைக்கே திரும்பிடு திருவருளே 
5)
பாணர்கோன் பண்ணிற்கே குலமுனிவன் தோளுலாய்
நேரேசென்றே ஆழ்ந்தாராய் அரங்கன தரவணையில்
காணில்நல் சோதிக்கே கதிதனைத்தான் தேடியே
தெற்கேவந்தே சேர்ந்தாராய்ப் புளிமரத் திருநிழலில்
மாண்சேயாம் மாறன்முன் மதுரகவி கேட்டதால்
கேள்விக்கேதான் மாறாடி அரும்பொருள் அளித்தனரே
சேண்நீண்ட மேல்நாட்டில் குழுமிடுநல் நித்தராம்
தாமேவேண்டிக் கேட்பாராய்ச் செவிமகிழ் திருமொழியே.

6)
கேட்டிட்ட கேள்விக்கே தலைகவிழும் வித்தனாய்த்
தானேகேட்ட கேள்விக்கே தகும்பதில் பெறுபவனாய்ப்
போட்டிக்கே வந்திட்டுப் புவியரசிப் பார்வையால்
ஆளத்தானே வந்தாராய் அரசினில் பகுதிபெற்றே
நாட்டிற்கு நன்மைக்கே நலந்திகழும் சேர்ப்பராய்ச்
சென்றேசென்றே தந்தாராம் தழையுடன் திருநிதியே
வாட்டங்கள் போக்கும்நல் வரமருளும் வார்த்தையால்
ஆறேசூழ்ந்த தீவத்தில் தரிசனம் திருவருளே 
7)
நானென்னும் எண்ணத்தில் எனதெனுமாம் எண்ணமாய்ப்
பாடேயாகிப் பந்தத்தில் படுமிடர்ப் பெருந்துயராய்
வானென்னும் வீடேயாய் விரசையிலே வந்ததாம்
ஆன்மாதானே ஈடேற இரங்கிடும் இறையவனே
கோனாகிக் குன்றத்தில் பவக்கடலும் மட்டமாய்
வானோர்தாமே காண்பாராய் மருவிடும் திருமலையே
தானாகி நின்றிட்ட திருவுருவில் இட்டமாய்த்
தேனேபாலே நேராகி உகந்தருள் திருவருளே. 

8)
ஏழான சுற்றுக்கள் மதிளெனவே காக்குமாம்
தாழாதேநல் சார்ங்கம்தான் உதைத்திடு சரமழைபோல்
பாழைத்தான் நெல்செய்யும் பரமனது பற்றெனா
பாரேயான மூர்த்திக்கே அடங்குக நமதுளமே
ஊழாகி ஊட்டும்வல் இருவினையாம் கட்டிலா
ஒன்றேயான ஆன்மாவே இறந்திட விடிலிழவே
மாழாந்து நம்நெஞ்சம் மருவியதோர் நன்மையாய்
மாலேயாக மாலுக்கே அருள்செயும் திருமகளே 

9)
தேரோடும் வீதிக்கே வடம்பிடிக்கும் நெஞ்சமாம்
நீராயோடும் வேர்வைக்கே நிலமகள் குடமுழுக்காம்
ஏரோடும் நன்செய்க்கே உழவுசெயும் மக்களால்
கூடிப்பாடிக் கோவிந்தா குழுமிய பெருந்திருத்தேர்
பேர்பாடும் நாவாயும் பெருகியதோர் அன்பெலாம்
நேரேகொள்வான் கோவிந்தன் நெருக்கிய இடைகழியாய்ச்
சீராடும் ஊரெல்லாம் சிறப்பனைத்தும் பொங்கிடா
வேரேயாகி வீட்டிற்கே விளைநிலம் திருவருளே. 

10)
மாலுக்கே ஆசானாய் மயர்வறநல் லீட்டினால்
வீடேயிங்கே போந்தாற்போல் விளக்கிய விரிவுரையே
சேலோடும் போராடும் கயற்கணாளர் கண்டிடா
கண்ணேதானே ஆனந்தம் அரங்கரின் அடைக்கலம்யாம்
பாலோடும் பொன்மேனி பரிவுடைநல் பாங்கெனா
யோகுக்கேயாய் நல்போகி நலந்திகழ் முனிவரனாய்
மாலுக்கே வையத்தை உரிமையென ஆக்கிடா
ஈடேகொண்டே ஆக்கும்பேர் வரமுனி திருவருளே.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

பதிகம் பாடினால் போதுமா? சாற்றுக்கவி யார் பாடுவது? நல்ல கேள்வி.

அதையும் பாடிவிட்டால் போகிறது. இதோ --

11)
தட்டிட்டே முட்டிக்கைப் பதிகமொன்றே செப்பினார்
மேடைமேலே சந்தத்தார் புகலியர் எனவுரைத்தார்
மட்டில்லா ஆர்வத்தால் மடமையெதும் அஞ்சாதே
மானாவாரிப் பாட்டாகப் பதிகமி தனைமுயன்றேன்
விட்டிட்டே வாயாரச் சிரிப்பதுவே செய்வதால்
வாதைநோவே போகும்மே வழக்கமும் சிறப்பதுவாம்
இட்டத்தால் மோகன்தான் அரங்கரையே பாடினான்
நாணேயின்றித் திண்ணத்தால் நகைத்திடும் திருமகளே.

***
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்!


கல்பதரு தினம்

ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு தினம் என்பது கல்பதரு தினம் என்று கொண்டாடப்படும் ஆன்மிக நாளாகும். அன்றுதான் தம் நிறைவுக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி பரவசத்தில் நின்றவராய், யார் யார் என்ன ஆன்மிக நிலையை அடைய வரம் விழைந்தார்களோ அதையெல்லாம் கொடுத்தார் என்று அவரது சரிதம் கூறுகிறது. அதுமுதல் அன்றைய நாளை கல்பதரு நாள் என்று கொண்டாடுகிறது பக்த உலகம்.

கல்ப தருவாகிக்
காலம் கனிய நின்றாய்.
அல்பன் எனக்கும் அங்கு
இடம் உண்டா தெரியவில்லை.
விகல்பம் கூடியும் கூடாதும்
ஆழ்ந்த நிலை உன் இயல்பு.
விகல்பமே இல்லாது செல்லும்
விரசமாகிப் போன மயலது என் வாழ்வு.
அகண்ட ஆகாரமாகி
அருள்நிறை மாமர நிழல்கனிந்தாய்.
அப்பொழுதும் எனையொதுக்கும்
அக்கறைதான் எங்கு பயின்றாய்?
அருளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டென்றால்
மருளுக்கு விடிவேது?
மயலுக்கு முடிவேது?
அயல்தள்ளி வைத்த பயல்
முயல்கின்ற மொய்கழற்குப்
பயனற்ற வேட்கையோ அன்பு?
கயல்கண்ணிக் கோபப்
புயல்கண்ணிகாளி
செயல்தீர்ந்த சிவமீது ஆடி
உயக்கொண்ட நாளில்
உதவாத வாளும்
உதவிக்கு இன்றும் வருமோ?
உதவாத சேயென்று
மிதவாதம் அற்றெனையே
பிடிவாதமாக அருளா
உனையெண்ணி நிற்க ஒரு நாள்
எனைக் கண்ணில் படுகின்ற திருநாள்
மனப்புண்கள் தீருகின்ற பெருநாள்
நின்னடிக்கீழ் அமர்கின்ற அந்நாள்
இந்நாளே ஆகட்டும் நன்னாள்.

***