Friday, April 06, 2007

காற்றுகளின் குரல் -- உலகக் கவிதை


உலகக் கவிதைகளில் 4000 கி மு விலிருந்து இன்றுவரை, சுமார் 25 நாடுகளிலிருந்து
ஒரு நூறு கவிதைகள் எதேச்சையாக தொகுத்த ஒரு மொழிபெயர்ப்பு நூல். தமிழினியின் பதிப்பாக வந்திருக்கிறது. கவிதை இயலைச் சார்ந்த என்னுடைய கருத்துகள் கட்டுரையாக 'ஒரு தூவான வெயில்' என்ற தலைப்பில் நூலின் இறுதியில் தரப்பட்டிருக்கின்றன. உடுக்குறி இட்ட கவிதைகளுக்கு என்னுடைய சிந்தனைக் குறிப்புகள் 'கவிச்சாரல்' என்ற தலைப்பில் வருகின்றன.
முன்னுரை:
'கிழக்கில் சூரியன் உதிக்கிறான்' என்று சொன்ன முதற்கணத்திலேயே மனிதன் கவிஞனாகி விட்டான். அதாவது, உருவகம் அவன் மொழிகருத்து என்ற கூட்டியக்கத்தில் முன்னரே ஒரு காரணியாகச் செயல்படுவதை அவன் சொற்கள் சுட்டுகின்றன. உலகம் மனித மனத்திற்கு அர்த்தமாகும் போது கவிதையின் அம்சம் கலந்தே இருக்கின்றது. ஒரு வேளை, கவிதை ரீதியிலிருந்து உரைநடை ரீதிக்கு முற்றிலும் அவன் மனம் மாறி அமைவதுதான் அவன் விஞ்ஞான வளர்ச்சி போலும். இது மிக மேம்போக்காகப் பார்க்கும் பொழுது தோன்றுகிற கருத்து என்றாலும், உண்மை நிலையின் ஒரு சாயலைப் பெற்றிருக்கிறது. தொடக்க நிலையில் மனிதன் தன் மொழியில், தன் மனத்தில் கவிதையின் புழக்கத்தை, அது கவிதைதான் என்ற அடையாளத்தை உணர்ந்திருந்தானா என்பதும் ஒரு கேள்வி. வெளியுலகின்பால் சென்று கவிந்த அவன் மனம், தன் இயக்கத்தையே உய்த்துணரப் பெற்றது ஓரளவிற்கு அனுபவச் செறிவு சேர்ந்த பின்னரே என்பது நம்மால் ஊகிக்க முடிகிறது. மனத்தின் சுய கவனம், மொழியின் சுய கவனமாக, கவிதையை அடையாளம் காண்பதாக ஆவதற்கு வெகுகாலம் ஆயிருக்குமா என்பதை நாம் அறியக் கூடுமா தெரியவில்லை. ஏனென்றால், நெட்ஸிலிக் எஸ்கிமோ இனத்தில் எழுதாப் பாட்டு ஒன்று, 'சொற்களில் அமைத்திட விரும்பும் அதனை உள்ளே உணர்கிறேன்' என்று கூறுகிறது.
சரி, அவன் தான், அந்த தொடக்க கால மனிதன்தான் கவிதை என்பதை உணர்வுபூர்வமாக அறிந்தானா இல்லையா என்பது இருக்கட்டும், நாம்தான் கவிதை என்றால் என்னவென்று ஒரு முடிவுக்கு வந்தோமா என்றால், கொஞ்சம் பார்த்துவிட்டுத்தான் சொல்லவேண்டும் என்ற அளவில் இருக்கிறோம். ஆனால் கவிதை எது என்பதை நம் ரசனை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. இது கவிதை என்று நம் உணர்வுக்குச் சொல்ல கோட்பாடுகள் தேவையில்லை. ஆனால் நம் அறிவுக்குச் சொல்லிக்கொள்ள எந்த கோட்பாடும் நமக்குப் போதவில்லை. யாப்பில் நன்கு பூட்டி வைத்துவிட்டு, அப்பாடா இனி தொல்லைப் படுத்தாது என்று நினைத்தோம். ஆனால் பூட்டு அப்படியேதான் இருக்கிறது. இதுதான் அதில் அடங்காமல் வெளியே வந்து மறுபடியும் நம்முன் நிற்கிறது. செய்யுள் செயற்கை என்று சொல்லி வந்த புதுக்கவிதை, கவிதையே இல்லாமல் நீர்த்துப் போயிருக்கிறது. இத்தனைக்கும், எதுகை, மோனை, அடி, தளை, யாப்பு என்ற செங்கல், ஜல்லி வேலையிலிருந்து கவிதையின் முழு சுதந்திர வெளியை மீட்டதாக ஆரம்பம். ஆனால் அது என்னவோ உண்மைதான். கவிதையின் முழு சுதந்திரத்திற்கான சாத்தியத்தை ஏற்படுத்திக்கொடுத்தது நல்ல ஆரம்பமே. உலகெங்கணும் இந்த சுதந்திரத்தை மிகத் திறமையான முறையில் பயன்கொண்டிருக்கிறார்கள் என்பது உலகக் கவிதை வரலாற்றை ஆராய்ந்தால் தெரியவருகின்ற நடப்பு. 'உலகப் போர்கள் நடந்தன!' 'அங்கு பல சித்தாந்தங்கள் பொடியாயின', 'மானிடத்தைப் பற்றிய நம்பிக்கை வறண்டு போயிற்று', என்று சொல்லி அதன் மூலம் புதுக்கவிதை அங்கு சிறப்படைந்ததற்கு காரணம் தேடப்புகுதல் முனையாதவன் வென்றவனிடம் காட்டும் கடுப்பாகத்தான் முடியும்.
எந்தத் தளைகளும், கட்டுப்பாடுகளும் கூடாது என்று யாப்பிலிருந்து விடுதலைக் குரலெழுப்பிக் கிளம்பிய தமிழ்ப் புதுக்கவிதை, தன் விடுதலை வெளியில் என்ன சாதித்திருக்கிறது என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும், தன் விடுதலைக் குரல் போலிக் குரல்தான் என்று நினைக்கவேண்டிய அளவிற்கு சில சித்தாந்தங்கள் போன்ற பாவனைகளில் அது ஈடுபடுங்கால், நகைச்சுவைக்கு இலக்காகிறது. 'புதுக் கவிதையில் இந்த வார்த்தைகளெல்லாம் பயன்படுத்துவதில்லை', 'புதுக்கவிதை இப்படியெல்லாம் எழுதப்படுவதில்லை', 'இந்த இந்த லட்சணங்கள் இருந்தால்தான் புதுக்கவிதை', 'புதுக்கவிதைக்கென்று ஒரு பாணி இருக்கிறது' -- இவ்வாறெல்லாம் புதுக்கவிதை எழுதுபவர்களாக பலகாலம் தங்கள் அடையாளங்களை வளர்த்துக்கொண்டிருப்பவர்கள் கருத்து தெரிவிக்கும்பொழுது, 'யாப்பிலிருந்து வழி தவறி புதுக்கவிதைக்குள் புகுந்துவிட்ட புரோகிதர்கள் இவர்கள், பழைய பஞ்சாங்கத்தை எடுத்து விரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்' என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. ஏனென்றால், புதுக்கவிதை இப்படித்தான் எழுதவேண்டும் என்பதுதான் புதுக்கவிதையின் கல்லறை. வடிவம், வகையறா, வார்த்தைகள் என்ற புறக்காரணிகளைச் சாராமல் முழுக்க முழுக்க தன் அக அடக்கத்தில் கவிதையாய் இருந்தால் மட்டுமே தன்னைத் தக்க வைத்துக்கொள்ளும் இயல்பான சான்றாண்மை உடையதுதான் புதுக்கவிதை என்று உணரப்படுவது. இந்த முழு சுதந்திரம்தான் புதுக்கவிதைக்குத் தரப்பட்டிருக்கும் சவாலும் கூட. இந்த சுதந்திரத்தை ஏற்று, எதிர்நோக்கி எதுவும் சாதிக்கத் திராணியற்றவர்கள், தாங்கள் இதுவரை ஒப்பேத்தி வந்துள்ள தங்கள் வெற்று பாவனைகளை புதுக்கவிதையாக நிலைக்கச் செய்யும் அதீதமான எதிர்பார்ப்பில், தங்கள் இயலாமையை இலக்கணமாக்கத் துடிக்கும் தடயங்கள்தாம் இவை.
வெற்று நுரைகளாக இடத்தை ஆக்கிரமித்திருக்கும் இவர்கள் கிடக்கட்டும், புதுக்கவிதை என்பதே ஓர் உச்சக் கட்டமான சாதனைக்கான உள் இயல்பைப் பெற்றிருந்தும் ஏன் சராசரி என்பதற்கும் கீழே மருகிக் கிடக்கிறது, நாம் முன்னரே சொல்லியதுபோல் நீர்த்துப் போயிருக்கிறது என்பது நாம் கவலைப்பட வேண்டிய விஷயம். இதற்கான காரணம், தமிழைப் பொறுத்தவரை, புதுக்கவிதை தான் எதனுடைய பொலிவாகச் செயல்பட வேண்டுமோ அந்த மொழியையே, தான் கிளர்ந்தெழுந்த தன் வேரையே முற்றும் புறக்கணித்ததுதான். மற்ற மொழிகளில், குறிப்பாக, ஆங்கிலம், ப்ரென்ச், ஜர்மன் போன்றவற்றில், மொழியின் விடுதலையாக உணரப்பட்ட புதுக்கவிதை, தமிழில் மொழியிலிருந்து விடுதலையாக தடக்களவு செய்யப்பட்டிருப்பது வேதனையான ஒன்று. இங்கு மரபையே தங்கள் எதிரியாகக் கருதும் பாவனைதான் புதுக்கவிதைக்கான அடையாளமாக தொடக்க காலத்திலிருந்தே பயிலப்பட்டு வந்திருக்கிறது. இங்கு மரபு என்பது மொழியின் மரபை, சொற்களின் மரபை, சொல்லாடல்களின் மரபை. யாப்பிலிருந்து விடுதலை என்பது வேறு, மொழியினின்று விடுதலை என்பது வேறு. யாப்பினின்று விடுதலை என்பது தளையினின்றும் விடுதலை. மொழியினின்றும் விடுதலை என்பது உயிர்நிலையினின்றும் விடுதலை. மரபு என்பது அந்த உயிர்நிலையின் வரலாறு. யாப்பு சார்ந்த செய்யுளாகட்டும், புதுக்கவிதையாகட்டும் மொழியின் மரபு என்பது அனைத்திற்கும் பொது. இரண்டிற்கான இருப்பின் தளத்தை அமைத்துக்கொடுப்பதே மொழியின் மரபுதான். சமுதாய மரபுகள் வேண்டுமானால் பொதுவாகப் பார்க்குமிடத்து புதுமையை வெறுப்பனவாக இருக்கலாம். ஆனால் மொழியின் மரபு என்பது புதுமையை நோக்கி விரிவது. ஏனெனில் அது மொழியின் அடிப்படை இயல்பொன்றைத் தன் வேராகக் கொண்டிருக்கிறது. உலகத்தை மனம் உணர்வதின் பதிவாக்கம் மொழி என்பதை உள்ளடக்கிய மரபு, உணரப்படும் உலகத்தின்பால் மொழி அடையும் புதுமைக்கேற்ப விரிந்துகொண்டே போவது. சொல்லப்போனால், ஒருவிதத்தில், மொழியின் மரபு என்பதே புதுமையின் மரபு என்று சொல்லலாம். இந்த மரபின் வரலாற்றை புதுமையின் வரலாறு என்று நாம் அறிந்துகொள்ள நல்ல வரலாற்று ரீதியான மொழி அகராதிகள் தேவை. அப்பொழுதுதான் காலப் போக்கில் மொழி எப்படி விடாது புதுமையை தன் சொற்தொகையுள் குடியமர்த்தி வந்திருக்கிறது என்பது புலனாகும். மேலும் மரபு புதுமையின் மரபாக இருக்கும் காரணத்தால்தான், எந்தப் புதுமையும் ஏற்கனவே அடைந்த புதுமையை இல்லையாக்கிவிடுவதில்லை. புல விரிவாகவும், பொருட் செறிவாகவும் ஆகி வளம் சேர்க்கிறது. எனவேதான் ஒரு சொல், ஒருவித சூழல் சார்ந்த புலத்தில் ஒரு பொருளையும், மற்றொரு சூழல் சார்ந்த புலத்தில் வேறொரு பொருளையும் கொண்டு ஒரு சொல்லிலேயே பல்விதச் சூழல்களையும், பலபொருட்களையும் உணர்த்தும் பெற்றியதாய் கவிதையின் சுதந்திர இயக்கத்திற்கு தன்னை ஏற்புடையதாக ஆக்கிக்கொள்கிறது. எனவேதான் மொழியை ஒதுக்கிப் பிதிர்ந்த, மரபே அறியாத சொல்லாட்சிகள் குற்றுயிர்களாகவும், குறைப்பிறப்புகளாகவும் அருவருப்பிற்கும், அனுதாபத்திற்கும் உரியவைகளாக முடிந்துவிடுகின்றன.
மிகப்பண்டைய நாகரிகங்கள் பலவும் மொழி, வாக்கு இவற்றைப் பற்றிய உணர்வை தங்கள் சொல்லாடல் பதிவுகளில் வெளிப்படுத்துகின்றன. எழுதாப் பாடல்கள் உடைய இனங்களும் இத்தகைய மொழியைப் பற்றிய சுயநினைவைப் பதிவுசெய்கின்றன என்று சொல்லிக்கொண்டிருந்தேன். உலகம் தழுவிய பரப்பில் கவிதையை தரிசிக்க முயலும்போது மொழியே கவிதைதானோ என்ற பிரமையைத் தவிர்க்க முடியவில்லை. இந்த பிரமையில் எது கவிதை, எது கவிதையில்லை என்று பிரித்தறிவதே கடினமாக ஆகிவிடுகிறது. அதையும் மீறி நான் ஈடுபட்டு ரசித்தவைகளை, ஏதோ அவ்வப்பொழுது தமிழில் சொல்லிப்பார்க்கவேண்டும் என்ற 'கெட்ட பழக்கத்தின்' காரணமாக எழுதிப் போட்டுவைத்தவைகள் துண்டுக் காகிதங்களாக என்னை வெருட்ட ஆரம்பித்துவிட்டன. அதிலிருந்து தப்பித்துக்கொள்ளத் தமிழினி ஒரு வழியைத் தந்திருக்கிறது. காலத்தாலும், இடத்தாலும், மொழியாலும், இனத்தாலும், பண்பாட்டினாலும் வேறுபட்ட மலர்களில் ஒரு நூறு இங்கு கதம்பமாகச் செண்டுபுடைத்திருக்கின்றன, களிகூரும் கவிதை நேயர்தம் கண்ணுக்கும், கருத்திற்கும் விருந்தாய். இந்த உலக தரிசனம் தொடரும் என்றே நினைக்கிறேன்.
இந்த உலகம் தழீஇய கவிதையின் பார்வை அநேகமாக எனக்கு ஆங்கிலத்தின் வழியேதான் கிடைக்கிறது. வடமொழியிலிருந்து நேரடியாகவும், ஓரளவிற்கு ப்ரென்சிலிருந்து நேரடியாகவும் தெரிய வாய்ப்பிருப்பினும் பெரும்பாலும் ஆங்கிலம்தான் நடுத்தரகு. இந்தச் சூழ்நிலையில் மொழிபெயர்ப்பு மட்டுமல்ல, மொழிகளின் பெயர்ப்பைப் பற்றியும் சிறிது சொல்லவேண்டும். எது நல்ல மொழிபெயர்ப்பு என்ற கேள்வி எது கவிதை என்ற கேள்விக்குச் சற்றும் சளைத்ததல்ல. தருமொழி, பெறுமொழி என்ற இரண்டின் சொற்தொகை மட்டுமல்ல, கலாச்சார, சமுதாய, வாழ்வியல் சம்பந்தமான தனிப்பட்ட புலங்களும் போய்ச்சேரும் பனுவலின் தன்மைகளை நிர்ணயிக்கின்றன. தருமொழியில் இருக்கும் பனுவலின் சொற்களுக்கேற்ற சொற்களைத் தேடி பெறுமொழியில் இட்டு வைத்தால் அது சரிக்குச்சரி நேரான மொழிபெயர்ப்பாக இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு அது அமைவதில்லை என்பது மொழிபெயர்ப்பியலின் அனுபவக் குறிப்பிலிருந்து தெரியவருகிறது. சரிக்குச் சரியாக இல்லாமல், தருமொழியின் வாழ்வியல் சூழலில் அந்தப் பனுவல் எத்தகைய படிப்பின் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதே தாக்கத்தை பெறுமொழியில் அந்தப் பனுவல் ஏற்படுத்தும் விதமாகச் செய்யப்படும் மொழிபெயர்ப்பே சிறந்ததா என்றால் ஆம் இல்லை என்று இரண்டு விதமாகச் சொல்லவேண்டும். ஏனெனில் தருமொழியில் அது ஏற்படுத்தும் தாக்கம் தன்னளவோடு அமையாமல், அம்மொழி புழங்கும் வாழ்வுச் சூழலின் பலவேறு அம்சங்களோடு தொடர்புகள் கொண்டது. அந்தப் பின்புலத்தையும் சேர்த்து எந்த மொழிபெயர்ப்பும் தர நினைக்கக்கூட முடியாது. அவ்வாறு தர நினைத்தால் அது மொழிபெயர்ப்பாக அன்றி விளக்கவுரையாக அமைந்துவிடும். அவ்வாறு மொழிபெயர்க்கவே மிகவும் கடினமான மொழியின் பிரத்யேகமான அம்சங்களை விளக்கி விரிவுரையாகத் தரப்படும் மொழிபெயர்ப்பே சிறந்தது என்பது ஜ்யார்ஜ் ஸ்டீனர் முதலியோரது கொள்கை. மொழிபெயர்ப்பை எதிர்க்கும் தருமொழியின் தனிப்பட்டக் கூறுகளை விளக்கத்தால் துல்லியமாக காட்டவேண்டும். இன்னும் சொல்லப்போனால் மொழிபெயர்ப்பின் முக்கிய வேலையே இத்தகைய விளக்கந்தான் என்பது ஸ்டீனரின் வாதம்.
மொழிபெயர்ப்புக் கொள்கைகள் மேற்கில் பலவாறு வகைப்படுபவை. அவையெல்லாம் பொதுவாக மொழியைப் பற்றிய இருவேறு கருத்துகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டவை. மொழி என்பது கருவியாகச் செயல்படுவதா, அன்றேல் விளக்கமாகச் செயல்படுவதா? விளக்கமாகச் செயல்படுவது என்ற அடிப்படையில் ஸ்டீனர் போன்றவர்கள் தங்கள் கொள்கைகளை அமைப்பதுபோல செயிம் ராபின் முதலியவர்கள் மொழி என்பது கருவி மாத்திரமே, பொருள் என்பது புற உலகில் இருப்பது, அதைச் சுமந்து வந்து தருவதுதான் மொழி, தான் சுமந்து வருகின்ற பொருளின் உருவாக்கத்தில் மொழி எந்தப் பங்கும் வகிப்பது இல்லை, தேர்ந்த மொழியறிவு, தெளிந்த பொருளை இருமொழிகளினிடையே கடத்துவதில் எந்த இழப்பும் இல்லை, என்று இத்தகைய ரீதியில் தங்கள் கொள்கைகளை எழுப்புகின்றனர்.
இதைத் தவிர மொழிபெயர்ப்புக் கொள்கைகளின் பொதுவான மூன்று முக்கிய கருத்துகள் என்று தன்னிச்சை, ஒன்றிய ஒப்பீடு, செயற்பாடு என்பனவற்றைக் கூறுகிறது மேற்கின் மொழிபெயர்ப்பியல். பொதுவாகக் கூறவேண்டுமானால் தன்னிச்சை என்பது மொழிப்பிரத்யேகமான அம்சங்களை முன்னிலைப்படுத்துவதில் நோக்குடையது. ஒன்றிய ஒப்பீடு என்பது சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள நேருக்கு நேர் தொடர்பு, தருமொழியின் பொருள்படு திறனுக்கும், பெறுமொழியின் பொருள்படு திறனுக்கும் உள்ள துல்லியமான இணைப்பு என்பதில் கருத்தைச் செலுத்துகிறது. செயற்பாடு என்பதோ வேறுபட்ட சூழல்களில் பனுவல் மனத்தில் வாங்கப்படும் விதங்களையும், தருமொழியில் பனுவல் தரும் தாக்கத்தை பெறுமொழியில் ஏற்படுத்தத் தகுந்த காரணிகளையும் கருத்தில் மையப்படுத்துவது. இவையன்றி, கவிதை, உரைநடை, விஞ்ஞானத் தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள் என்ற அடிப்படைகளாலும் மொழிபெயர்ப்புக் கொள்கைகள் வேறுபடுகின்றன.
இதில் நான் எந்தக் கொள்கையைப் பின்பற்றி மொழிபெயர்த்துள்ளேன் என்றால் எதையும் பின்பற்றி அன்று, அனைத்தையும் பயன்கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், பல்வேறு மனோநிலைகளில் அவ்வப்பொழுது ரசித்தவற்றைத் தமிழில் சொல்லிப் பார்க்கும் ஓர் ஊக்கம்தான் காரணமேவொழிய வேறொன்றும் இல்லை. ஏன்? தமிழுக்கு ஏதோ தொண்டு செய்யவேண்டும் என்றோ, மக்களுக்கு ஏதோ உலகக் கவிதைகளைப் பற்றியெல்லாம் எடுத்துக்காட்ட வேண்டுமென்றோ எந்த நோக்கமும் கூட கிடையாது. ஏதோ உற்சாகத்தில் செய்து வைத்திருந்தேன். யார் கண்டார்கள் நூல் வடிவாகும் என்று? நூல்வடிவில் இனிமையாகத்தான் இருக்கிறது. இந்த நூலைப் பொறுத்தமட்டில் துணைநூல்கள் பட்டியல் தரவேண்டும் என்றால் மிக நீளும். அதுவுமின்றி எப்பொழுதோ படித்தவை, செய்தவை. அவை அத்தனைக்கும் நூற்குறிப்புகள் தருவது நூலை மிக்க புலமை சார்ந்ததாகக் காட்டுமே அன்றி, மக்கள் உலகக் கவிதைகளைத் துய்ப்பதற்குத் துணையாகுமா என்ற ஐயம் எழுகிறது. இருக்கட்டும். வேண்டுமென்றால் இந்தக் கவிப்பேருலகுத் தொடரின் கடைசியில் தந்தால் போயிற்று. இருப்பினும் சில முக்கியமான தொகுப்பு நூல்கள் ஆங்கிலத்திலும், வடமொழியிலும் நினைவில் நிற்கின்றன. உதாரணத்திற்கு, கொலம்பியா தொகுப்பான 'தி டாப் 500 பொயம்ஸ்', மார்க் வான் டோரெனின் 'உலகக் கவிதைகள் ஒரு தொகுப்பு', வித்தியாகரனின் 'சுபாஷித ரத்ன கோசம்', சீனாவின் பழங்காலக் கவிதைத் தொகுப்புகள், ஜப்பானியக் கவிதைத் தொகுப்பான தொமோஷிபி லைட், 'அண்டர்ஸ்டாண்டிங் பொயெற்றி (வால்டர் கலைட்ஜியன்)', 'லிடரேச்சர் அமங் தி ப்ரிமிடிவ்ஸ்'. எந்தை ஆர் வேணுகோபாலின் நினைவு அடிக்கடி நிழலாடிக்கொண்டிருக்கிறது இந்த நூலுருவாக்கத்தின் பொழுதுகளில். இறப்பு என்பது மூடநம்பிக்கை என்கிற வேதாந்தத்தை நடைமுறைப்படுத்தக் கவிதையைக் காட்டிலும் சிறந்த வழி தற்சயம் இல்லை.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 5-12-2006.