Sunday, October 18, 2026

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் - 01

ஜ்ஞாநாநந்தமயம் தேவம்

பல வருஷங்களுக்கு முந்தைய கதை. (அமரர்) ஸ்ரீ ஏ எஸ் ராகவன் அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். தமிழ் நாவலாசிரியர். ‘மனிதன்’ என்ற நாவல் அந்தக் காலத்தில் பரிசு பெற்றது. என் தந்தைக்கு இனிய தோழர். பேச்சுவாக்கில் கூறினார். ‘ ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை மொழிபெயர்த்துத் தருகிறாயா? கூடவே ஆங்கிலம், விளக்கங்கள் என்று அனைத்தும் எழுதினாலும் நல்லது. நூலாகப் போடலாம் என்று எண்ணம் ‘

ஆனால் ஒரு கண்டிஷன் என்றேன். நாம் இருவரும் ஒவ்வொரு சுலோகமாக அமர்ந்து ரசித்து முடிக்க வேண்டும் முதலில். பின்பு மொழிபெயர்க்கிறேன். கூடவே நாம் அதைச் சிறிது சிறிதாக ரசிப்பதற்கும் தோதாக இருக்கும் -- என்றேன். மனிதர் நல்ல ரசிகர். ஆஹா என்று ஒப்புக்கொண்டு விட்டார். அந்த ஸ்தோத்திரத்தைக் கூடச் சேர்ந்து ரசிக்க எனக்குக் கூட்டாளி தேவை. அதற்குத்தான் இந்த ஏற்பாடு. பாவம் அந்தக் காலத்து மனிதர். ஏற்றார். பலன், இருவருக்கும் பல பொன்னான பொழுதுகள்.

‘இவ்வளவு கவிநயமா இருக்கிறது இதில்? ஏதோ சின்ன வயசிலேந்து மனப்பாடமா நெட்டுரு போட்டுப் பாராயணம் சொல்றதுன்னு நினைச்சா இவ்வளவு பரிமாணங்கள்!! இவ்வளவு கருத்துச் செறிவுகள்!!’ என்று வாய்க்கு வாய் வியந்துகொண்டிருந்தார். திரு ஏ எஸ் ஆருக்கும், எனக்கும் ஒரு நல்ல திருப்தி. ஆனால் ரசனையின் நேரங்கள் முடிந்து விட்டனவே என்று எனக்குச் சின்ன ஆதங்கம். ஆம். ஏ எஸ் ஆர் ஐ இன்று போய்ப் பார்க்க முடியாது. அவர் இவ்வாறு எழுதுவதைப் பார்த்துக் கொண்டிருப்பாரா எனக்குத் தெரியாது. பார்க்கலாம். பார்க்க வேண்டும். ஹலஹல என்ற குதிரையின் கனைப்புதான் கேட்கிறது.

தூப்புல் பிள்ளை என்றும், வேதாந்தாசாரியர் என்றும், வேங்கட நாதன் என்றும், ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் என்றும் ஸ்ரீவைஷ்ணவ உலகம் குலவாநின்ற பெரியவர் தேசிகன். வடமொழி, பிராக்ருதம், மணிபிரவாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் நூல்கள் இயற்றிய வள்ளல். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் மிக நுணுக்கமாக உள்பொதி கருத்தாய்க் கூறிச்செல்வர். பின் வந்தோர்க்குச் சில சமயம் பொருள் விளங்க சிரமப்படும். ஆனால் தேசிகரோ தமக்குத் தோன்றுமவையெல்லாம் எழுத்தில் விளக்கமாக இட்டு வைத்துவிடுவார். நல்ல காவியத் திறமை கொண்ட வடமொழி பத்யங்களை அருளியவர். அத்வைத பரமான பத்ய நாடகம் பிரபோத சந்த்ரோதயம் என்பதைப் போலவே விசிஷ்டாத்வைத பரமான நாடகமாக சங்கல்ப சூர்யோதயம் என்பதை எழுதியவர் சுவாமி தேசிகன். அவர் தம் ஆரம்ப காலங்களில் வித்யைக்கு அதிபதி தெய்வமான ஸ்ரீஹயக்ரீவரை உபாஸனை செய்தே பெரும் வித்வத்தும், கவி சாமர்த்தியமும் பெற்றதாகக் கூறுவர். ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரத்தில் தம் உபாஸனா மூர்த்தியினிடத்தில் தமக்குள்ள ஈடுபாட்டை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த பேராசிரியர்களில் ஒருவர் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன். இனி ஸ்ரீஹயவதந ஹேஷா ஹலஹல த்வனி நம்மைக் காப்பாற்றட்டும்.


*

திருமல்கு தன்மை வேங்கடநாத ஆசிரியன்
கவிகட்கும் தார்க்கிகர்க்கும் சிங்கமெனத் திகழ்வோன்
வேதாந்தக் குரவரிலே விஞ்சு புகழாளன்
எப்பொழுதும் சந்நிதியாய் என்னுளத்தில் விளங்குகவே.

ஸ்ரீமாந் வேங்கடநாதா2ர்ய:
கவிதார்க்கிக கேஸரீ |
வேதா3ந்தாசார்ய வர்யோ மே
ஸந்நித4த்தாம் ஸதா3 ஹ்ருதி3 ||

 

श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी ।

वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि ॥

***
1)

ஜ்நாநாநந்த3மயம் தே3வம் நிர்மலஸ்ப2டிகாக்ருதிம் |
ஆதா4ரம் ஸர்வவித்3யானாம் ஹயக்3ரீவ முபாஸ்மஹே ||

ஞானமா னந்தமே உருவா னவனை வானவனை
மாசெலா மகற்றும் படிகமாம் துய்யநல் வடிவினனை
வித்தைகள் அனைத்தும் விளங்குமாதாரம் ஆனவனை
பரிமுகன் அவனையே பத்தர்யாம் தொழுதுப் பணிந்திடுவாம்.

 

ज्ञानानन्दमयं देवं निर्मलस्फटिकाकृतिम् ।

आधारं सर्वविद्यानां हयग्रीवमुपास्महे ॥

 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்